காதலிக்கும் பெண்களுக்கு ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வி வாசகர்களுக்கு வரக்கூடும். உண்மைதான். ஜாதி, மதம், மொழி போன்றவற்றை மட்டுமல்ல, ஜாதகத்தையும் கடந்ததுதான் காதல். ஆனால் காதலையும் சிறைப்படுத்தும் வல்லமை கொண்டவை, காதலர்கள் திருமணத்துக்குப்பின் சந்திக்கும் பிரச்னைகள். அதனால்தானோ என்னவோ இன்றைய இளம்பெண்கள் மிக விழிப்புடன் இருக்கின்றார்கள். எமக்கு வரும் மின்னஞ்சல்களில் பெரும்பான்மையானவை காதல்வயப்பட்ட பெண்களின் கேள்விகளைத்தான் சுமந்து வருகின்றன. தான் காதலிக்கும் ஆணின் ஜாதகத்தையும், தனது ஜாதகத்தையும் அனுப்பி எங்கள் வாழ்க்கை எவ்விதத் தடங்கல்களும் இன்றி இனிமையாகக் கழியுமா என்று கேட்கும் மின்னஞ்சல்கள் நிறைய வருகின்றன. சிலர் இம்மாதிரிக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமா? ஜாதகத்தை அனுப்பட்டுமா? என்று கேட்கின்றார்கள். அனுப்புங்கள் பதிலளிப்போம் என நாம் தகவல் அனுப்பினால் அதன் பின்னர் ஜாதகங்கள் அனுப்பாமல் மௌனமாக இருந்து விடுகின்றார்கள்.
இந்தத் தயக்கத்தை நாம் புரிந்து கொள்கின்றோம். பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணத்துக்காகக் காத்திருக்கும் பெண்கள் கூடத் தங்களது ஜாதகத்தை எடுத்துச் சென்று சோதிடரிடம் காட்டிப் பலன் கேட்கும் வழக்கம் இங்கு இல்லை. எனவே காதல் வயப்பட்ட பெண்களின் தயக்கத்தையும், திருமணத்துக்காகக் காத்திருக்கும் பெண்களின் எதிர்காலம் பற்றிய அச்சத்தையும், போக்கவே இந்தக் கட்டுரையை எழுதுகின்றோம். கீழே கொடுக்கப்படும் குறிப்புக்கள் எந்தச் சோதிட நூலிலும் இல்லை. எமது தந்தையாரின் ஐம்பதாண்டு கால அனுபவமும், எமது நாற்பதாண்டு கால அனுபவமும் சேர்ந்து தந்த குறிப்புக்கள்தாம் இவை. இவற்றை ஏற்றுக்கொண்டு சோதித்துப் பார்க்கவும், ஏற்காமலேயே மறுக்கவும் ,யாவருக்கும் உரிமையுண்டு.
- உங்களது பிறந்த தேதியும், நேரமும், பிறந்த ஊரின் பெயரும் கொடுத்துக் கணிணி மூலம் கணிக்கப்பட்ட ‘திருக்’முறைப்படியான ஜாதகத்தையும் நீங்கள் விரும்பும் நபரின் ஜாதகத்தையும் வைத்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் ஜாதகத்தில் சூரியன் எந்த ராசியில் இருக்கின்றது எனப் பாருங்கள் அதற்கு ஆறு, எட்டு, பன்னிரண்டு ராசிகளின் பெயர்களைக் குறித்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் விரும்பும் நபரின் ஜாதகத்தை எடுங்கள். நீங்கள் குறித்துக்கொண்ட ராசிகளில் ஏதேனும் ஒன்றில் சூரியன் இருக்குமானால், உங்களுக்கிடையே பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம். உதாரணமாக உங்கள் ஜாதகத்தில் மேச ராசியில் சூரியன் இருக்குமானால், அதற்கு ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களான கன்னி, விருச்சிகம், மீனம் இந்த ராசிகளில் ஏதேனும் ஒன்றில் சூரியன் இருக்கும் போது பிறந்த நபரை நீங்கள் தவிர்த்துவிடலாம்.
- உங்கள் ஜாதகத்தில் சந்திரன் எந்த இராசியில் உள்ளதோ அதற்கு நான்கு, ஏழு, பத்து ராசிகளிலோ, அல்லது உங்களது ஜன்ம ராசியிலேயோ நீங்கள் விரும்பும் நபரின் சந்திரன் இருக்குமானால் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வரலாம். நீங்கள் ரிசபராசியில் பிறந்துள்ளீர்கள் என்றால் ரிசபம், அதற்கு நான்காம் ராசியான சிம்மம், ஏழாம் ராசியான விருச்சிகம், பத்தாம் ராசியான கும்பம் ஆகியவற்றுள் ஒன்றில் சந்திரன் இருக்கப் பிறந்தவரை நீங்கள் தவிர்த்து விடலாம். இருவரது ஜாதகங்களிலும் சந்திரன் வேறு கிரகங்களின் சேர்க்கையின்றித் தனித்து இருந்தால் நிச்சயம் பிரிவு வருகின்றது. சந்திரனோடு வேறு கிரகங்களின் சேர்க்கை இருந்தால், பிரச்னைகள் பெரிதாவதில்லை. உங்களது ஜாதகத்தில் சந்திரன் எத்தனையாவது பாகையில் இருக்கின்றதோ அதற்குச் சமமான அல்லது இரண்டு பாகைகள் கூடுதல்குறைவான பாகைகளில் நீங்கள் விரும்பும் நபரின் ஜாதகத்தில் சந்திரன் இருந்தால் மட்டுமே இப்பலன் சித்திக்கும். நீங்கள் ரிசபத்தில் சந்திரன் 8 பாகையில் இருக்கும் போது பிறந்துள்ளீர்கள் என்றால், ரிசபம், சிம்மம் விருச்சிகம், கும்பம் இராசிகளில் சந்திரன் 6 முதல் 10 பாகைகளுக்குள் இருக்கப் பிறந்தவரை மட்டுமே நீங்கள் தவிர்க்கலாம்.
- உங்கள் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் எந்த இராசிகளில் இருக்கின்றனவோ அதற்குக் கேந்திரங்களான ஒன்று, நான்கு, ஏழு, பத்தாமிடங்களில், சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் இருக்கப் பிறந்தவர்களின் ஜாதகம் உங்களுக்குப் பொருந்தாது. இங்கேயும் கூட்டுக்கிரகங்களைவிடத் தனித்திருக்கும் கிரகமே பெரிய தீமைகளைச் செய்கின்றது. கிரகங்களின் பாகைளும் சமமாகவோ, அல்லது 2 பாகையளவு வித்தியாசத்தில் மட்டுமோ, இருந்தால்தான் இப்பலன் நடக்கும்.
- உங்களது ஜாதகத்தில் எட்டுக்குடைய கிரகம் எந்த இராசியில் இருக்கின்றது எனப் பாருங்கள். அந்த ராசியிலோ, அதற்கு ஐந்து, ஒன்பதாம் ராசிகளிலோ ஒருவர் பிறந்துள்ளார் என்றால் நீங்கள் அவரைத் தவிர்க்கலாம். உதாரணமாக உங்களது ஜாதகத்திற்கு லக்னத்துக்கு எட்டுக்குடைய கிரகம் சந்திரனாக இருந்து, அச்சந்திரன் மேச ராசியில் இருந்தால் அந்த மேசம், அதன் ஐந்து, ஒன்பதாம் இடங்களான சிம்மம், தனுசு ஆகிய லக்னங்களில் பிறந்துள்ளவரை நீங்கள் விலக்கிவிடலாம்.
- உங்களது லக்னத்துக்கு எட்டாமிடம் எந்த ராசி எனப் பாருங்கள். நீங்கள் விரும்பும் நபரின் ஜாதகத்தில் அந்த ராசியில் தனித்த புதன், குரு, அல்லது சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகம் உங்களுக்குப் பொருந்தாது.
இவை சில முக்கியமான குறிப்புக்கள். இவைகளைக் கவனத்தில் வைத்துக்கொள்வதும், விலக்கி வைப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் எல்லோருக்கும் உள்ளுணர்வு என்ற ஒன்று உண்டு. முதல் சந்திப்பிலேயே அது ஒரு விசயத்தைச் சொல்லும். அதன்படி நடப்பவர்கள் பொதுவாகக் கஷ்டப்படுவதில்லை. இன்னும் சில குறிப்புக்கள் பரிசீலனையில் உள்ளன. இக்கட்டுரைக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அவை வெளிவரும். பஞ்சாங்கங்களில் உள்ள பத்துப் பொருத்தங்களை விட இவை அறிவியல்பூர்வமானவை என்ற உத்தரவாதத்தை நாம் உங்களுக்குத் தருகின்றோம்.
This Week’s Quote:
You can preach a better sermon with your life than with your lips
- Oliver Goldsmith
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.