தங்களது மகளின் மணவாழ்க்கையை அவளே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் அன்னையர்களுக்காக எழுதப்படும் கட்டுரை அல்ல இது. ‘அவள் உணர்ச்சி வேகத்தில் தவறான முடிவு எடுக்கக் கூடும், எனவே நமது விருப்பப்படிதான் அவளது மணவாழ்க்கை அமைய வேண்டும்’ என்று எண்ணும் அன்னையர்களுக்கான கட்டுரை இது. மகள் கல்லூரி அல்லது அலுவலகத்திலிருந்து வீடு வந்து சேரும் வரை (சினிமா அல்லது சீரியல்படி சொல்லப்போனால்) வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டதைப் போலப் பதைபதைக்கும் அன்னையர்கள் படிக்க வேண்டிய கட்டுரை இது.

திருமணம் செய்ய விழைகின்ற நேரத்தில் மட்டுமே தங்களது மகளின் ஜாதகத்தைப் பார்க்கத் தொடங்கும் பெற்றோர்கள்தாம் இங்கு அதிகம். ஜாதகம் பெட்டிக்குள் வைத்துப் பூஜிக்க வேண்டிய ஒன்று அல்ல. மெத்தப் படித்த மேதாவிச் சோதிடர் மட்டுமே பார்க்கக் கூடியதும் அல்ல. ஓரளவுக்குக் கணிதம் தெரிந்த யாருமே தங்களது ஜாதகத்தைப் பரிசீலனை செய்ய முடியும் என்பதே எமது எண்ணம். அப்படி எல்லோரும் முடிந்த அளவுக்குத் தாங்களே ஜாதகம் பார்க்க வேண்டும் என்பதே எமது ஆசை. அதற்காகத்தான் நாம் இக்கட்டுரைகள் மூலம் சிறுசிறு குறிப்புக்களை கொடுத்து வருகின்றோம். இந்த வாரம் தங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும், அவர்களது திருமணம் காதல் திருமணமாக அமையுமா, நிச்சயிக்கப்படும் திருமணமாக அமையுமா என்பது பற்றியும் கவலைப்படும் அம்மாக்களுக்காகச் சில குறிப்புக்களைத் தருகின்றோம்.

  • உங்கள் மகளின் ஜாதகத்தைத் ‘திருக்’ கணித முறைப்படி கணித்து வாங்கிக் கொள்ளுங்கள்.
  • முடிந்தால் உங்கள் மகள் எந்த ஆண்டு பிறந்தாளோ அந்த வருடத்திய ‘திருக்’ பஞ்சாங்கம் ஒன்றை வாங்குங்கள். தினசரி கிரகஸ்புடங்கள் கணித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் பஞ்சாங்கம் மட்டுமே உபயோகப்படும். மத்திய அரசு மூலம் வெளியிடப்படும் ராஷ்ட்ரீய பஞ்சாங்கம் மிகவும் உபயோகமாக இருக்கும்.
  • உங்களது மகளின் பிறந்த நாளன்று எந்த வருடம் அமாவாசை வருகின்றதோ, அந்த வருடம் மிகமுக்கியமான ஆண்டாக அமையக்கூடும். பிறந்த நாள் என்பது ஜன்ம நட்சத்திரம் வரும் நாளல்ல. 20.08.2001ல் பிறந்த பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 20 தான் பிறந்தநாள். எனவே பிறந்த ஆங்கில தேதியன்று அமாவாசை வரும் வருடம் அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டாக அமையலாம்.
  • முக்கியமான ஆண்டு என்பது பொதுவாகச் சில இழப்புக்களைக் குறிக்கலாம். சிலவேளைகளில் நல்ல பலன்களையும் குறிக்கலாம். (அமாவாசையன்று பிறந்த நாள் வந்த வருடத்தில், எமது தந்தையாரை இழந்தோம். அதே வருடம் நாம் அரசுப் பணியிலும் சேர்ந்தோம்.)
  • இதேபோலப் பௌர்ணமி, அஷ்டமி திதிகளிலும் பிறந்த நாள் வந்தால் அந்த ஆண்டு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைகின்றது. 
  • உங்களது மகளின் ராசிக்கு 1, 4, 7,10 ஆகிய இடங்களில் பிறந்த நாளன்று செவ்வாய் இருக்குமானால் அந்த வருடத்தில் ஆண்களின் நட்பு கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
  • நீங்களே ஜாதகம் பார்க்கலாம்’ என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முறைப்படி சந்திரன் எத்தனையாவது நாளில் யுரேனஸ் கிரகத்தோடு சம்பந்தப்படுகின்றதோ அத்தனையாவது வயதில் காதல், கவிதை, கற்பனைகள் ஆகியவை வரக்கூடும். (கணிணி மூலம் கணிக்கப்படும் திருக் முறைப்படியான ஜாதகத்தில் யுரேனஸ், நெப்சூன், புளுட்டோ ஆகியவையும் இடம்பெறும். நீங்கள் ‘யுரேனஸ்’ கிரகத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்).
  • சில சோதிடர்கள் லக்னத்துக்கு ஏழில் ராகு அல்லது கேது இருந்தால் காதல் திருமணம் என்று சொல்வதுண்டு. இரண்டிலோ அல்லது ஏழிலோ குரு இருந்தால் பாரம்பரியமான திருமணம் என்றும் சொல்வதுண்டு. இவைகளையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாம். 
  • சந்திரன் நவாம்ச சக்கரத்தில், கடகம் மகரத்தில் இருக்கும் பெண்கள் விரைவில் ஏமாற்றப்படக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

இந்தக் குறிப்புக்கள் தரப்பட்டிருப்பதன் நோக்கம், நீங்கள் மேலே குறிப்பிட்ட வருடங்களில் உங்கள் மகளைக் கண்காணிக்க வேண்டும் என்பதற்கு அல்ல. அந்த வருடங்களில் எது நடந்தாலும் நீங்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இவை முழுமையான குறிப்புக்கள் அல்ல. சில ஜாதகங்களில் மேற்குறிப்பிட்ட வருடங்கள் எந்தச் சம்பவமும் இல்லாமலேயே கழியக் கூடும். காதல் ,திருமணம் போன்ற விஷயங்களில் ஏழாமிடம், ஏழாமிடத்து அதிபதி இவைகளையும் கணக்கில் கொள்ளாத குறிப்புக்கள் முழுமையானதாக இருக்க முடியாது. ஆனாலும் எந்த வருடங்களில் இந்த மாதிரியான மனக்குழப்பங்கள் ஒரு பெண்ணுக்கு வரக்கூடும் என்பதை நிச்சயிப்பதற்கு இவை துணைபுரியலாம்.

இவைகள் போதாது இன்னமும் சில குறிப்புக்கள் வேண்டும் என்பவர்களும், வேறு சந்தேகங்கள் உள்ளவர்களும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். ஆனால் பெண்களின் ஒழுக்கம் குறித்த எந்தக் கேள்விக்கும் நாம் பதில் அளிப்பதில்லை. சந்திரனின் நவாம்ச ராசி பற்றிய கடைசிக் குறிப்பைத் தவிர மற்ற யாவும் உங்கள் மகனுக்கும் பொருந்தும்.

 

This Week’s Quote:

To make us love our country, our country ought to be lovely

-  Edmund Burke

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.