இக்கட்டுரை, நாம் எழுதும் நூறாவது கட்டுரையாகும். கடந்த 99 கட்டுரைகளில் நாம் வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்தின் பெரும்பகுதியைச் சுருக்கமாகத் தந்திருக்கின்றோம். ஜாதகங்களை எப்படி ஆராய்ச்சி மனப்பான்மையோடு அணுக வேண்டும் என்பதைச் சொல்லி, அதற்காக உதாரண ஜாதகங்களையும் தந்திருக்கின்றோம். கூர்மையான கவனிப்பும், பல ஜாதகங்களைத் திரும்பத் திரும்ப அலசிப் பார்க்க அதிகமான நேரம் செலவழிக்கும் ஆர்வமும் கொண்ட வாசகருக்கு கடந்த 99 கட்டுரைகளில் நிச்சயமாகச் சில விசயங்கள் கிடைத்திருக்கும். ஆனால், பெரும்பாலான வாசகர்கள் தங்களது லக்னத்துக்கும், ராசிக்கும் என்ன பலன்கள் சொல்லப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவே வலைத்தளக் கட்டுரைகளைப் படிப்பார்கள். அவர்களுக்காகவும், சோதிடர்களை அணுக விரும்பாதவர்களுக்காகவும், அல்லது எந்த சோதிடரை அணுகிப் பலன் கேட்பது என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்காகவும் இந்தக் கட்டுரை மூலம் சில விசயங்களைத் தருகின்றோம்.
- குருப் பெயர்ச்சிப் பலன்கள், சனிப் பெயர்ச்சிப் பலன்கள் என்று வெளிவரும் புத்தகங்களில் கூறப்படுபவற்றை நீங்கள் நூறு சதவீதம் ஒதுக்கிவிடலாம்.
- சுக்கிர தசை வரப்போகிறது இனி நல்லதுதான், சனி தசை வரப்போகிறது இனி கஷ்டகாலம்தான், என்று சோதிடர்கள் கூறுவதையும் நீங்கள் நூறு சதவீதம் ஒதுக்கிவிடலாம்.
- குலதெய்வ வழிபாடு, கிரகங்களுக்கான பரிகாரங்கள் இவைகளால் உங்களுக்கு வரவிருக்கும், இன்னல்களைத் தடுத்துவிட முடியாது. அதே போல இவைகளையெல்லாம் செய்யாமலிருப்பதால், உங்களுக்கு வரும் நற்பலன்களையும் தடுத்துவிட முடியாது.
- வியாழன், சூரியன் இவர்கள் இரண்டு, பத்து ஆகிய இடங்களில் இருந்தால் பெரும்பாலும் சுகமான வாழ்க்கையே கிடைக்கும்.
- சூரியன் வேறு கிரகச் சேர்க்கையின்றி எட்டாமிடத்திலோ, அல்லது கும்ப ராசியிலோ, இருப்பவர்கள் 50 வயதுக்கு மேல் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
- வியாழன், ரிசபம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளில் இருப்பவர்கள் கையில் அதிகமாகப் பணம் புழங்குகின்றது. சிம்மத்தில் வியாழன் இருக்கும் போது ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கின்றன.
- சூர்யன், செவ்வாய் அல்லது சனியின் பார்வையைப் பெற்றுக் கேந்திரங்களில் இருக்குமானால், இந்த ஜாதகர்களுக்குப் பிள்ளைகளால் அதிக நன்மை கிடைக்காது. இவர்கள் தங்களுக்காகச் சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.
- சனி பத்தில் இருப்பவர்கள், அந்திம காலத்தில் தனிமையில் இருக்க நேரிடும். அல்லது தாங்கள் தனிமைப் படுத்தப்படுவதாக அவர்கள் நினைத்துக் கவலையோடு வாழக்கூடும்.
- லக்ன ஸ்புடத்துக்குச் சரியான பாகைகளில் லக்னம், நான்கு, ஏழு, பத்தாமிடங்களில் சனி சஞ்சரிக்கும் போது அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு மாற்றங்கள், அரசியல்வாதிகளுக்கு திடீர்ச் சிக்கல்கள், வியாபாரிகளுக்குப் பொருளாதாரச் சிக்கல்கள், தந்தை, தாயாரின் மரணம் அல்லது பிரிவு, ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்குக் குழந்தைகளால் பிரச்னைகள், இவை வரக்கூடும்.
- மேலே கூறப்பட்டவை யாவும் சூரியனுக்குக் கேந்திர ஸ்தானங்களில் சனி வந்தாலும் நடக்கக் கூடும்.
- அட்டமாதிபதி இருக்கும் ராசி அம்சத் திரிகோண ராசிகளில் சனி வரும் போது நோய்கள் தாக்கலாம்.
பெண்களுக்கான சில விஷயங்கள்
- சூரியன் இருக்கும் ராசிக்கு 3, 7, 11 ராசிகளில் சந்திரன் இருந்தால் இல்வாழ்க்கையில் அதிகப் பிரச்னைகள் வருகின்றன. பெரும்பாலும் விவாகரத்து வரை போகின்றது.
- வேறு கிரகங்களின் சம்பந்தமில்லாத சுக்கிரன், சந்திரன் இவர்கள் ஒருவருக்கொருவர் ஏழில் இருந்தால்,பிள்ளைப் பேறு கிடைப்பதில்லை. சிலருக்குத் தோல் வியாதிகள் வருகின்றன. கர்ப்பப்பை கோளாறுகள் இவர்களுக்கு அதிகமாக இருக்கின்றன.
- சுக்கிரன், வியாழன் இவர்கள் ஒருவருக்கொருவர் ஏழில் இருக்கும் போது இருவரில் ஒருவர் அட்டமாதிபதியாக இருந்தால் திருமணம் மிகவும் தாமதமாக நடக்கின்றது. சில திருமணங்கள் முறிந்து போகின்றன.
- சுக்கிரன் கடக ராசியில் கடைசி நவாம்சத்தில் இருக்கும் பெண்கள் தாங்களே திருமண வாழ்க்கையை தேர்ந்தெடுத்துத் தோற்றுப் போகும் வாய்ப்பு அதிகம்.
- சந்திரன் எட்டில் இருக்கும் பெண்கள், ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், தங்களது பிடிவாத குணத்தால் வாழ்க்கையில் பெரும் பிரச்னைகளைச் சந்திக்கின்றார்கள்.
- சந்திரன் கடக, விருச்சிக, மீனராசிகளில் இருக்கப் பிறந்த பெண்கள் விரைவில் தாயாகி விடுகின்றார்கள்.நேர்மாறாகச் சிலருக்குக் குழந்தைப் பேறு கிடைப்பதில்லை.
மேலேயுள்ளவை யாவும் எமது தந்தையார் சேகரித்து வைத்திருந்த ஜாதகங்களைப் பார்த்தும், படித்தும் நாம் சேகரித்த விசயங்கள். லக்னத்தையோ, ஏழாம் பாவத்தைப் பற்றியோ எதுவும் சொல்லாமல் பொதுவான கிரகநிலைகளை வைத்துப் பலன் சொல்வதில் நமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட விசயங்கள் பொதுவாக நாம் கண்ட உண்மைகளாக இருப்பதால் அவைகளை வாசகர்களின் பார்வைக்கு வைத்திருக்கின்றோம்.
லக்னாதிபதி கோசார ரீதியாகத் துர்ஸ்தானங்களில் சஞ்சரிக்கும் போது கெட்ட பலன்களும், நல்ல இடங்களில் சஞ்சரிக்கும் போது நல்ல பலன்களும் கிடைக்கின்றன. ஐந்து, ஒன்பது இவை நல்ல இடங்களாகக் கூறப்பட்டுள்ளன என்றாலும், சில நேரங்களில் இவையும் நம்மை ஏமாற்றுகின்றன. நமது நீண்டகால அனுபவத்தில் வியாழன் தான் ஏமாற்றுகின்ற கிரகங்களில் முதலிடம் வகிக்கின்றது.
இக்கட்டுரையை முற்றாக மறுக்க யாவருக்கும் உரிமையுண்டு. ஆனால் அவ்வாறு மறுப்பவர்கள் ஒரு நூறு ஜாதகங்களையாவது பரிசோதித்துப் பார்த்து அதன் பிறகு மறுக்கும் முடிவுக்கு வந்தால், நமக்கு மகிழ்ச்சிதான்.
This Week’s Quote:
I'm not interested in preserving the status quo; I want to overthrow it.
- Niccolo Machiavelli
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.