நாம் எழுதிய கட்டுரைகளில் அதிகம் பேரால் வாசிக்கப்படும் கட்டுரை ராஜயோகம் யாருக்கு? என்ற கட்டுரையே. யோகங்களைத் தேடி அலைந்தே தமது வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளும் சோதிட ஆர்வலர்கள் பலரை நாம் அறிவோம். யோகங்கள் ஜாதகத்தால் மட்டுமின்றிப் பிறந்து வளர்ந்த சூழ்நிலைகளாலும் அமையும். இதற்கு நல்ல உதாரணம், மறைந்த பாரதப் பிரதமர் திருமதி.இந்திராகாந்தியின் ஜாதகம். இந்த வாரம் அவரது ஜாதகத்தை நமது கணக்குகளின்படி பார்ப்போம்.




அதிகாரத்தைக் கொடுக்கும் மேச, சிம்ம, தனுசு ராசிகளின் அதிபதிகளான செவ்வாய், சூர்யன், வியாழன் இவை ஒன்றுக்கொன்று கேந்திரங்களில் இருப்பதும், வியாழன், செவ்வாய் இவர்கள் வர்க்கோத்தமமாக இருப்பதும், சூர்யன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சொந்த நவாம்சத்தில் இருப்பதும், ஏற்கனவே ஒரு தேசியத் தலைவராக உருவாகி வந்தவரின் மகளாகப் பிறந்த இவருக்கு யோகத்தைக் கொண்டுவரப் போதுமான காரணங்களாகும். திருமதி.காந்தியின் ஜாதகத்தில் பத்தாமிடத்ததிபதி செவ்வாய் சிம்மத்தில் இருக்கிறது. பத்தாமிடத்தில் கிரகங்கள் ஏதும் இல்லை. பத்தாம் பாவத்தின் நவாம்சம் விருச்சிகத்தில் விழுகின்றது. எனவே விருச்சிகத்தின் அதிபதியான செவ்வாய்க்கு ராஜயோகம் கொண்டு வரக்கூடிய பலம் அதிகமாகக் கிடைக்கின்றது. ராஜயோகத்தைக் கொடுக்கும் ராஜ்ய ஸஹம் என்ற புள்ளி விருச்சிகத்தில் 9 பாகை 56 கலையில் உள்ளது. இதன் மூலமும் செவ்வாய்க்கு ராஜயோகத்தைக் கொடுக்கும் தகுதி கூடுகிறது. மேலும் துவாதசாம்சச் சக்கரத்திலும், செவ்வாய் துவாதசாம்ச லக்னமான ரிசபத்துக்குப் பத்தில் இருக்கின்றது. இவை செவ்வாய் தசை அல்லது அந்தர்த்தசையில், திருமதி.காந்திக்கு ராஜ்யப்ராப்தி அல்லது ராஜ்யாதிகாரம் கிடைக்கும் என்பதைச் சொல்லுகின்றன.
நைசர்க்கிக தசை முறைப்படி செவ்வாய் தசை, இரண்டு வயது முதல் மூன்று வயது முடிய நடக்கும். எனவே வேறு கிரகங்களின் தசையில், செவ்வாய் அந்தர்த்தசையில்தான் இந்த யோகம் சம்பவிக்கும். திருமதி.இந்திராகாந்தியின் 33வயது முதல் 50 வயது முடிய உள்ள குரு தசையில், குருவுக்கு 4ல் உள்ள செவ்வாயின் அந்தர்த்தசை 14.4.1964 முதல் 20.11.1967 முடிய நடந்தது. இந்தக் கால கட்டத்தில்தான் முதலில் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும் பின்னர் 1966ல் பிரதமராகவும் அவர் பதவி ஏற்றார்.
திருமதி.காந்தி அவரது 49வது வயதில் பாரதப் பிரதமராகப் பதவியேற்றார். எனவே அவரது 49வது வயதுக்கான வருச ஜாதகத்தை ஆராய்ந்து அதில் ராஜயோகத்துக்கான அம்சங்கள் இருக்கின்றனவா எனப் பார்ப்போம்.


நாம் முன்னர் எழுதியுள்ளது போல், ஜன்ம ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்கள் கேந்திரத்தில் அமைவது போல விருச்சிக லக்னம் உதயமாகின்றது. பத்தாம் பாவம் சிம்மராசியில் 15 பாகை 43 கலையில் அமைகின்றது. ஜன்ம ஜாதகத்தில் செவ்வாய் இதற்கு வெகு அருகாமையில் 16 பாகை 22 கலையில் உள்ளது. வருச லக்னத்துக்கு ஐந்தாம் பாவாதிபதியான வியாழனும்,லக்னாதிபதி செவ்வாயும் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்க்கின்றார்கள். வருச லக்னத்துக்குப் பத்துக்குடைய சூரியன் லக்னத்திலேயே இருக்கின்றது. ஜன்ம லக்னாதிபதியான சந்திரன் வருச லக்னத்துக்குப் பதினோராமிடத்தில் இருந்து நவாம்சத்தில் சூரியனின் வீட்டை அடைகின்றது. இக்காரணங்களே ஒரு உயர்வான பதவி பெறப் போதும். வருசதசா முறைப்படி வியாழனின் தசை நடக்கும் போது திருமதி.காந்தி பிரதமர் ஆனார். வியாழன் நவாம்சத்தில் விருச்சிகத்தில் உள்ளது.
ஆச்சரியப்படுத்தும் விசயம் என்னவென்றால் வருச ஜாதகத்தில் ராஜயோகத்தைக் கொடுக்கும் புள்ளி கும்பத்தில் 22 பாகை 3 கலையில் உள்ளது. திருமதி காந்தியின் ஜாதகத்தில் எட்டாம் பாவம் கும்பத்தில் 22 பாகை 59 கலையில் உள்ளது. வேறொருவர் மரணமடைந்து, அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் சொத்துக்கள், காப்பீட்டுப் பணங்கள் இவைகளை எட்டாமிடம் குறிக்கின்றது. எனவே திருமதி.காந்தியின் ஜன்ம லக்னத்துக்கு எட்டாமிடமான கும்பத்தில் வருச ஜாதகத்தின் ராஜயோகம் புள்ளி அமைவது, வேறொருவரின் மரணத்தால் இவருக்கு இந்த யோகம் சித்திக்கும் என்பதை உணர்த்துகின்றது. திரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் திடீர் மரணமே திருமதி.காந்தியைப் பிரதமராக உயர்த்தியது என்பதை எல்லோரும் அறிவர்.
எனவே மிகநுட்பமாகவும், ஆராய்ச்சி மனப்பாங்கோடும் ஜாதகத்தை அணுகினால் ஆச்சர்யமூட்டும் விசயங்கள் கொட்டிக் கிடப்பதை நாம் அறிய முடியும் என்பதே நமது நம்பிக்கை.
This Week’s Quote:
Superstition is to religion what astrology is to astronomy; the mad daughter of a wise mother.
- Voltaire
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.