தொடர்ந்து சில வாசகர்கள் பிரஷ்ன சோதிடம் பற்றி எழுதும்படி கேட்டுக் கொண்டதால், நாம் இந்த வாரம் இக்கட்டுரையை எழுதுகின்றோம். தங்களது தாய்மொழியைத் தவறாக எழுதுவதில் தமிழர்களை மிஞ்ச ஆளில்லை. தொலைக்காட்சியில் செய்திகள்  ஒளிபரப்பாகும் சமயத்தில், குறுக்கே ஓடும் வாக்கியங்களைப் படிக்கும்போது தமிழர்களாகிய நாம் தமிழை எப்படிக் கொலை செய்கின்றோம் என்று தெரிகின்றது. அப்படியிருக்கும் போது, நாம் வடமொழியை மட்டும் விட்டு வைப்போமா என்ன? பிரஷ்ன என்ற சொல்லுக்குக் கேள்வி என்பது பொருள். தன்னிடம் சோதிடம் பார்க்க வந்தவரைப் பார்த்து உன்னுடைய கேள்வி என்ன என்று கேட்டதுதான், காலப்போக்கில் உன்னுடைய பிரச்னை என்ன என்பதாக மருவிற்று. இப்போது பிரச்னை என்ற சொல்லுக்குத் தகராறு, தாவா என்பதே பொருளாகிவிட்டது. உன்னுடைய பிரஷ்னம் என்ன என்றால், உண்மையான அர்த்தம் உன்னுடைய கேள்வி என்ன என்பதுதான். ஆனால் இது தற்காலச் சோதிடர்களிடம் பிரசன்னம் என்று மாறி அர்த்தமில்லாமல் போய்விட்டது. பிரசன்னம் என்றால் முன்னால் தோன்றுவது என்ற அர்த்தம் போய், அது ஒரு வகைச் சோதிடம் என்ற பொருள் வந்துவிட்டது. இனி யாராவது நம்மிடம் பிரசன்ன சோதிடம் என்ற சொல்லை உபயோகித்தால் அவர்களுக்குச் சோதிடம் சொல்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம்.

ஜாதகம் இல்லாத ஒருவன் வந்து சோதிடரை அணுகிச் சில கேள்விகளைக் கேட்டால், அப்போது உதயமாகும் லக்னத்தையும், அந்தப் பொழுதின் கிரக நிலைகளை வைத்தும் அவனது கேள்விக்கு விடை அளிப்பதுதான் பிரச்ன சோதிடம். இந்தப் பிரச்னம் பல வகைப்படும். நோய்கள் குறித்த ரோகப் பிரச்னம், காணாமல்போன பொருளைக் கண்டு பிடிக்க உதவும் களவுப் பிரச்னம், திருமணம் பற்றிய கேள்விகளுக்கான விவாகப் பிரச்னம், யாத்திரை சென்றவர் திரும்பி வருவாரா, மாட்டாரா என்ற யாத்திரைப் பிரச்னம், அரசர்களுக்கான யுத்தப் பிரச்னம் என்று பலவகைப் பிரிவுகள் உள்ளன. ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைவது பிரச்ன நேரத்தின் உதய லக்னமே ஆகும். 

இந்த லக்னம் தவிர ஆரூட லக்னம் என்ற ஒன்றை முந்தைய நூலாசிரியர்கள் சொல்கின்றார்கள். பிரச்ன நூலில் குறிப்பிடும் ஆரூட லக்னமும், சோதிட நூற்களில் பேசப்படும் ஆரூட லக்னமும் வேறு. சோதிட நூல்களில், ஆரூடம் என்பது லக்னாதிபதி லக்னத்திலிருந்து சென்றுள்ள தூரத்தைக் கணக்கிட்டு, அதே தூரத்திற்கு இன்னும் முன்னே லக்னாதிபதியை நகர்த்தினால் கிடைக்கும் புள்ளியே ஆரூட லக்னம். பிரச்ன சோதிடத்தில் ஆரூட லக்னம் என்பது வேறு வகையில் கணக்கிடப்படுகிறது.

சோதிடர்களின் வீட்டில் பெரிய ராசிச் சக்கரம் ஒன்றை வரைந்திருப்பார்கள். அதில் ஏதாவது ஒரு ராசியைச் சோதிடம் கேட்க வந்திருப்பவரைத் தொடச் சொல்லி, அதை ஆரூட லக்னமாகக் கொள்வது சிலர் வழக்கம். சோதிட சாத்திரம் கொஞ்சம் கற்ற ஒருவர் வந்து கேள்வி கேட்கும்போது, அவரை இவ்வாறு தொடச் சொன்னால் அவர் எந்த ராசியைத் தொட்டால் ஆரூட லக்னம் நல்லது அல்லது கெட்டது என்ற நோக்குடன் தொடுவார் என்பதால், ராசிச் சக்கரத்தைப் பற்றிய எந்த அறிவுமில்லாத சிறு குழந்தையைக் கூப்பிட்டுத் தொடச் சொல்லி, அந்த ராசியை எடுப்பது சிலர் வழக்கம். சிலர் சோழிகளை உருட்டி, அச்சோழிகளின் எண்ணிக்கையை வைத்து ஆரூட லக்னத்தை நிச்சயிப்பதுண்டு. இப்படித்தான் நிச்சயம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை ஏதும் இல்லை. K.P பத்ததியைப் பின்பற்றுவோர் 249 எண்களுக்குள் ஒன்றைத் தேர்வு செய்யச் சொல்லி அதன் மூலம் பிரஸ்ன லக்னத்தைக் கண்டுபிடிக்கின்றார்கள். அவர்கள் உதய லக்னத்தை எடுத்துக்கொள்வதில்லை. 

இந்த ஆரூட லக்னம், அப்போதைய உதய லக்னம் இவை தவிர சத்ர லக்னம், அல்லது கவிப்பு லக்னம் என்ற ஒன்றையும் கண்டுபிடிக்கவேண்டும். ஆனால் நம்மைப் பொறுத்தவரை உதய லக்னத்தை மட்டுமே வைத்துக்கொண்டு பலன்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்புவதால் நாம் ஆரூட லக்னம், கவிப்பு லக்னம் பற்றி இங்கே எழுதப்போவதில்லை. ஏனெனில் இப்போது ஜாதகம் பார்க்க வருபவர்கள் அனைவருக்குமே ஜாதகம் இருக்கின்றது என்பதால் அதையும், பிரஸ்ன லக்னத்தையும் வைத்தே பலன்களைச் சொல்லலாம்.

பிரச்ன சோதிடத்தில் பிரச்னம் பார்க்கும் போது, சோதிடரின் கண்களில் படும் விஷயங்கள் , காதால் கேட்கப் பெறும் ஒலிகள் வார்த்தைகள் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குழந்தைப்பேறு உண்டாகுமா இல்லையா என்ற கேள்வி கேட்கப்படும் பொழுது புத்தகங்கள், பேனா, கர்ப்பிணிப்பெண், குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள், மணி, பட்டுப்பாய், மான்தோல், சிறு குழந்தைகள் இவைகளைப் பார்க்க நேரிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று சொல்ல வேண்டும் என்பது ஒரு குறிப்பு. நோய் பற்றிய கேள்வியின் போது யாராவது ஒருவர் குதிரை அல்லது யானை மீது ஏறிப் போவதையோ, அல்லது அழைத்துப்போவதையோ பார்த்தால் நோய் தீரும் என்றும், எள், தீ, புதிய ஆடை தர்ப்பைப்புல், தயிர், சட்டி, பானை இவற்றைக் காண நேரிட்டால் நோயாளி நோயிலிருந்து மீளாமல் மரணமடைவார் என்று சொல்ல வேண்டும் என்பது ரோகப் பிரச்னத்தில் உள்ள குறிப்பு.

பிரச்னம் பார்க்க வந்தவர் அவரது உடலில் எந்தப் பகுதியைத் தொட்டுக் கொண்டிருக்கிறார் என்பதற்கும் சில பலன்கள் சொல்லப்பட்டுள்ளன. சோதிடர் தனது நாசித் துவாரங்களில் விடும் மூச்சு வலப்பக்கம் அதிகமாக உள்ளதா, அல்லது இடப்பக்கம் அதிகமாக உள்ளதா என்பதைக் கவனித்து வர வேண்டும் என்றும் அந்த வாயு சஞ்சாரத்தை வைத்தும் பலன் சொல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதைச் ‘சரம் பார்த்தல்’என்பர். ஒருமுறை விடுமுறை நாள் ஒன்றில் ஒரு வட்டாட்சியர் எமது தந்தையாரைச் சோதிடம் பார்ப்பதற்காக அழைத்து வரும்படி தனது ஜீப் வண்டியை அனுப்பி வைத்திருந்தார். வண்டியில் ஏறியவுடன் எனது தந்தையார் நாம் வட்டாட்சியர் வீட்டுக்குப் போகும் போது அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்று எம்மிடம் கூறியது எமக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதேபோல் நாங்கள் அவரது வீட்டுக்குச் சென்று சேர்ந்த போது மாவட்ட ஆட்சியரின் அவசர அழைப்பின் பேரில் அவர் மாவட்டத் தலைநகருக்குச் சென்றிருந்தார். எப்படி நீங்கள் இதைக் கணித்தீர்கள் என்று எமது தந்தையாரிடம் கேட்ட போது ‘சரம் பார்த்துச் சொன்னேன்’என்றார் எமது தந்தையார். இச்சம்பவம் 1978ல் நடந்தது. 

காணும் பொருட்கள், கேட்கும் வார்த்தைகள், பிரச்னம் பார்க்க வந்தவரின் செயல்கள் இவையெல்லாம் எந்த அளவுக்கு விடையைச் சரியாகத் தருகின்றன என்பதையெல்லாம் சோதித்துப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை. எனவே இவை பற்றி விரிவாக எழுத எமக்குத் தயக்கமாக உள்ளது. ஆனால் விவாகம் சம்பந்தமான பிரச்னத்தில் எவ்வாறு விடையளிக்க வேண்டும் என்று பிரச்ன சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களையும், நாம் எவ்வாறு விடையளிக்கின்றோம் என்ற எமது அனுபவங்களையும் இன்னொரு கட்டுரையில் விளக்கமாக எழுதுவோம்.

 

This Week’s Quote:

Life is like riding a bicycle. To keep your balance, you must keep moving.

-  Albert Einstein

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.