ஒரு பழத்தைச் சுவைத்துத் தின்பதைவிடப் பழச்சாற்றைக் குடித்துவிட்டுப் போவதை விரும்புவர்கள் நம் மக்கள். தன்னளவில் ஒரு பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியை மேற்கொள்ளாமல், அடுத்தவரின் அபிப்ராயத்தைக் கேட்பதிலேயே காலத்தைக் கழிப்பவர்கள் நம் மக்கள். மூல நூல்களைப் படிக்காமல், உரைகளைப் படித்துச் சோம்பித்திரிபவர்கள் நம் மக்கள். உரை நடைக்குக்கூட ’நோட்ஸ்’ தேடி அலைபவர்கள் நம் மக்கள். எனவே தான் எமது விரிவான கட்டுரைகளைவிட சின்னச்சின்னச் குறிப்புகளையே அதிகம் வாசிக்கின்றார்கள் நமது வாசகர்கள். இதில் எமக்கு வருத்தமே. ஆனாலும் கற்பித்தலே நமது பணி என்ற எமது கொள்கையில் மாற்றமின்றி நமது பணியைத் தொடர்கின்றோம்.
நமக்கு வரும் கேள்விகளில் பெரும்பாலானவை திருமணத்தைப் பற்றியதும்,உத்தியோகத்தைப் பற்றியதுமே. அரசு வேலை எப்போது கிடைக்கும், நிரந்தர வருமானம் எப்போது வரும் என்ற வினாக்களே அதிகம் வருகின்றன. இதற்கு விடையாக எமது அனுபவத்தில் சேகரித்த சில குறிப்புக்களைத் தருகின்றோம். வாசகர்கள் அவர்களது ஜாதகத்தை இக்குறிப்புக்களை வைத்துப் படித்துப் பார்த்து அவர்களே விடையைத் தெரிந்து கொள்ளலாம்.
வருமானத்தைக் குறிப்பது இரண்டாம் இடம். மாதம் என்பது சூரியனின் ஒரு ராசிப் பயண நேரம். எனவே இரண்டுக்குடைய கிரகமும், சூரியனும், சூரியனது ராசிநாதனும் எவ்வகையிலேனும் சம்பந்தப்பட்டிருந்தால், ஒவ்வொரு மாதமும் நிரந்தர வருமானம் வரும் என்று நாம் முடிவெடுத்துக் கொள்ளலாம். அது பெரிய தொகையா, சிறிய தொகையா என்பதைப் பின்னர் பார்க்கலாம்.
இரண்டுக்குடையவனும், சூரியனும் சேர்ந்து இருந்தாலும், எட்டுக்குடையவனும், சூரியனும் சேர்ந்து இருந்தாலும் இரண்டாமிடத்ததிபதி எட்டாமிடத்ததிபதி இவர்களின் நவாம்சபதியும், சூரியனும் ஒருவருக்கொருவர் 2, 3, 4, 10, 11, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும் மாத வருமானம் கிடைக்கின்றது. சூரியன் இருக்கின்ற ராசி, நவாம்சராசி, துவாதசாம்சராசி இவை லக்னத்துக்கு 3, 4, 5, 11, 12ம் ராசிகளாக வந்தாலும், அந்த ஜாதகர்கள் நிரந்தர வருமானம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
சோதிடத்தில் இரண்டுக்கும், எட்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. எட்டாமிடத்ததிபதியும், இரண்டாமிடத்ததிபதியைப் போல வருமானத்தைத் தரக் கூடிய கிரகமே. எனவே எட்டுக்குடைய கிரகம் இரண்டிலோ, அல்லது எட்டிலோ இருந்து சூரிய சம்பந்தம் பெற்றாலும் நிரந்தர வருமானம் கிடைக்கின்றது.
பத்தாம் பாவாதிபதியின் நவாம்சபதி, துவாதசாம்சபதி இவர்கள் சூரியனோடு சேர்ந்து இருந்தாலும், சூரியனோடு எவ்வகையிலேனும் சம்பந்தம் பெற்றாலும், அந்த ஜாதகர்கள் அரசு உத்யோகத்தைப் பெறுகின்றார்கள். சனி மேற்கண்ட யோகங்களில் சேரும்போது, தாமதமாக அரசு உத்யோகம் கிடைக்கின்றது. புதன் சம்பந்தப்படும்போது, சீக்கிரமே உத்யோகம் கிடைக்கின்றது. இராசிகளின் சரம், ஸ்திரம், உபயம் என்ற தன்மைகளும் பெருமளவில் உத்யோகத்தைப் பாதிக்கின்றன. இரண்டுக்குடையவன் உபய ராசிகளில் இருப்பவர்கள், அரசு உத்யோகம் மூலமும் பணம் சேர்க்கின்றார்கள். சொந்தமாகவும் தொழில் செய்கின்றார்கள். இரண்டுக்குடையவன் ஸ்திர ராசிகளில் இருப்பவர்கள் தொழில் முயற்சிகளில் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை.
மேற்கண்ட தகவல்கள் ஒருவர் தமது ஜாதகத்தைத் தாமே படித்துத் தெரிந்துகொள்வதற்கான குறிப்புக்கள்தாம். இவைகளே இறுதியான முடிவுகளல்ல. இந்தக் குறிப்புக்களை வைத்துக்கொண்டு மேலும் மேலும் சென்றால் நிறைய இரகசியக் கதவுகள் திறக்கும். விடாமுயற்சியும், ஆர்வமும் உள்ளவர்கள் இவைகளைச் சோதித்துப் பார்த்துச் சோதிடத்தின் மர்மங்களைக் கையகப்படுத்தலாம்.
This Week’s Quote:
God may exist, but science can explain the universe without the need for a creator.
- Stephen Hawking
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.