சமீப நாட்களாக எந்தத் திசையிலிருந்து பெண் வரும் என்று சில வாசகர்களும், எந்தத் திசையிலிருந்து மணமகன் வரக்கூடும் என்று பெற்றோர்களும் தொடர்ந்து கேள்விகளை அனுப்புகின்றனர். சோதிடர் எந்தத் திசையிலிருந்து பெண் அல்லது மாப்பிள்ளை வரக்கூடும் என்று சொல்லிவிட்டால், மற்ற திசைகளிலிருந்து வரும் திருமணப் பேச்சுக்களைச் சிலர் புறக்கணித்து விடுவதும் உண்டு. சோதிடத்தில் இவ்வாறு திசைகளைக் கூறுவது சாத்தியமில்லை என்பதை விளக்கவே நாம் இந்தக் கட்டுரையை எழுதுகின்றோம்.
மேசம், சிம்மம், தனுசு ஆகிய இராசிகள் கிழக்குத் திசையையும், ரிசபம், கன்னி, மகரம் ஆகிய இராசிகள் தெற்குத் திசையையும், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய இராசிகள் மேற்குத் திசையையும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய இராசிகள் வடக்குத் திசையையும் குறிப்பதாகச் சோதிட நூல்கள் கூறுகின்றன. களவுப் பிரச்னத்தின்போது, திருடர்கள் இந்தத் திசையில் இருக்கக் கூடும் என்பதைச் சொல்லவே இவை உபயோகப்படுகின்றன என்பது சிலரது கருத்து. நமது கருத்தும் அதுவே. ஆனால் சில சோதிடர்கள் ஏழாம்பாவாதிபதி எந்த இராசியில் இருக்கின்றதோ, அந்த ராசிக்குரிய திசையிலிருந்து மணமகள் அல்லது மணமகன் வரக்கூடும் என்று சொல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றார்கள். இது தவறு என்பதைச் சில உதாரணங்களுடன் விளக்குவோம்.








முதல் ஜாதகத்தில் ஏழுக்குடைய புதன் வடக்குத் திக்கைக் குறிக்கும், மீனராசியில் இருக்கின்றது. இவரது திருமணம் தென்திசை மணமகளோடு நடந்தது. இரண்டாவது ஜாதகத்தில் ஏழுக்குடைய செவ்வாய் கிழக்குத் திசை இராசியில் இருந்தபோதிலும்,இவரது மனைவி மேற்குத் திசையிலிருந்து வந்தார். மூன்றாவது ஜாதகரின் ஏழாம்பாவாதிபதி வடக்குத் திசையைக் குறித்தபோது, இவரது திருமணம் மேற்குத்திசை மணமகனோடு நடந்தது. நான்காவது ஜாதகரின் திருமணம் மேற்குத் திசையிலும், (கிரகம் குறிப்பது தெற்குத் திசை) ஐந்தாவது ஜாதகரின் திருமணம் தென்திசை மணமகனோடும் , ஆறாவது ஜாதகரின் திருமணம் தென்திசை மணமகனோடும், ஏழாவது ஜாதகரின் திருமணம் கீழ்த்திசை மணமகளோடும், எட்டாவது ஜாதகரின் திருமணம் மேற்குத் திசை மணமகனோடும் நடந்தது. எமது அனுபவத்தில் பெரும்பாலும் இந்த ராசிகள் குறிக்கும் திசை சரியாகவே இருப்பதில்லை.
எனவே வாசகர்கள் இந்த மாதிரி அபத்தமான கேள்விகளைக் கேட்டுத் தங்களது அறியாமையை வெளிப்படுத்த வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். எந்தச் சோதிடராவது ஒரு குறிப்பிட்ட திக்கில்தான் திருமணம் முடியும் என்று சொன்னால் அதைத் தெய்வ வாக்காகக் கருதி அந்தத் திக்கிலேயே மணமகன் அல்லது மணமகளைத் தேடிக் காலத்தை வீணாக்க வேண்டாம். மகனுக்குப் பெண் தேடும் பெற்றோர்களிடம் சில சோதிடர்கள் உங்கள் மகனுக்கு ஆண் வாரிசு இல்லாத இடத்தில்தான் திருமணம் நடக்கும் என்று கூறிப் பேராசையைத் தூண்டுவது உண்டு. இப்படியெல்லாம் கூறுவதற்குச் சோதிட நூல்கள் வழிகாட்டவில்லை. எனவே இம்மாதிரி விசயங்களுக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று பெற்றோர்களை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
This Week’s Quote:
The more we study the more we discover our ignorance.
- Percy Bysshe Shelley
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.