தமிழர்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் சொற்களாகக் காதல், கடவுள் என்ற இரண்டு சொற்களை நாம் குறிப்பிடுவதுண்டு. இப்போது செவ்வாய் தோஷம் என்பதையும் மூன்றாவதாகச் சேர்த்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு ஊடகங்களும், பத்திரிக்கைகளும் செவ்வாய் தோஷத்தைப் பிரபலப்படுத்தியுள்ளன. இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு அச்சத்திலேயே வாழ்கின்றவர்களுக்கும், பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து பரிகாரங்கள் செய்து நொந்து போகின்றவர்களுக்கும் இக்கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழு அல்லது எட்டாமிடத்தில் செவ்வாய் இருந்தால் அப்பெண்ணின் கணவராக வர இருப்பவரின் ஜாதகத்திலும் அதேபோல் ஏழு அல்லது எட்டாமிடத்தில் செவ்வாய் இருக்க வேண்டும் என்பது ஒரு சட்டமாகவே ஆகிவிட்டது. பாவக் கணக்குகளிலும், ஆணின் ஜாதகத்தில் கொஞ்சம் அதிகமாக பாவம் இருக்க வேண்டும் என்பதும், இன்னொரு சட்டமாக ஆகிவிட்டது. எமது தந்தையார் சேகரித்து வைத்திருந்த ஜாதகங்களிலிருந்து ஒரு தம்பதியரின் ஜாதகங்களை இங்கு தருகின்றோம்.

sample horoscope

sample horoscope

பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழில் செவ்வாய் இருக்கின்றது. சந்திர லக்னத்துக்கு ஏழில் சனி இருக்கின்றது. சந்திர லக்னத்துக்கு நான்கிலும், லக்னத்துக்கு ஏழிலும் உள்ள செவ்வாய்க்குச் சனியின் பத்தாம் பார்வை உள்ளது. ஆணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாமிடத்துக்கு இவ்வளவு தோஷம் இல்லை. பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்குப் பன்னிரண்டாமிடத்தில் ராகு இருக்கின்றது. ராகு செவ்வாயைப் போலவும் கேது சனியைப் போலவும் பலனளிக்கின்றார்கள் என்பது தொன்றுதொட்டு வரும் கருத்து. எனவே இந்தத் தம்பதிகளின் ஜாதகத்தில் ஆணின் ஜாதகத்தை விடப் பெண்ணின் ஜாதகத்தில்தான் கூடுதல் பாவம் இருப்பதாகக் கருதலாம்.

தற்போதுள்ள ஊடகச் சோதிடர்கள் இந்த ஜாதகங்களை இணைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். பன்னிரண்டில் உள்ள ராகு, செவ்வாயின் நட்சத்திரத்திலிருந்து அட்டமாதிபதி சனியின் பார்வையைப் பெறுவதால் 9 வயது, 10 மாதம், 15 நாளுக்குப் பின்னர் வரும் ராகுதசை ஆணுக்கு மாரகத்தைச் செய்யும் என்று அடித்துக் கூறினாலும் கூறுவார்கள். இல்லையென்றால் அடுத்து வரும் வியாழதசை கேந்திராதிபத்திய தோஷமும், பாதகாதிபதி தோஷ மும் உள்ள தசை என்பதாலும், ஏழாமிடத்தையும் செவ்வாயையும் பார்ப்பதாலும் ஆணுக்குக் கெடுதல் செய்யலாம் என்றும் கூறுவார்கள்.

ஆனால் நடந்தது வேறு. 09.02.1979-ல் இந்தப் பெண்மணியும் 06.01.1980-ல் இவரது கணவரும் காலமானார்கள். ஏழாமிடத்தில் செவ்வாய் இருந்தும், அச்செவ்வாய்க்குப் பாவக்கிரகமான சனியின் பார்வை கிடைத்தும் இந்தப் பெண்மணி சுமங்கலியாய்க் காலமானார் என்பது இப்போதைய செவ்வாய்த் தோஷச் சோதிடர்களுக்கு நம்ப முடியாத ஒன்றாக இருக்கக் கூடும். இவர்களது இல்லற வாழ்க்கையில் எந்தவிதக் குறையுமில்லாமலேயே இவர்களது வாழ்க்கை கழிந்தது.

நாம் அடிக்கடி குறிப்பிடுவதுபோல வெளிப்பார்வைக்கு மோசமான அம்சங்கள் மட்டுமே தெரியக்கூடிய ஜாதகங்கள் உண்மையில் நல்ல ஜாதகங்களாக அமையக் கூடும். எனவே செவ்வாய் தோஷம், நட்சத்திர சாரப்படியான தசைகள் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நிஜமான சோதிட சாத்திரத்தை நுட்பமாகப் பயின்று அச்சம், குழப்பம் இவை தவிர்த்த சிந்தனையோடு வாழ நமது வாசகர்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆசை.

 

This Week’s Quote:

Some rise by sin, and some by virtue fall.

-  William Shakespeare

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.