இது நாம் எழுதும் 150-வது கட்டுரையாகும். இதுவரை வெளியான கட்டுரைகளின் மூலம் சோதிட சாத்திரத்தில் மறைக்கப்பட்ட சில விஷயங்களை நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம். நுட்பமான விஷயங்களை விட்டுவிட்டு, நுனிப்புல் மேய்வதைப் போலப் பரிகாரங்களையும், பொருளற்ற பாடல்களையும் சொல்லிச் சோதிடம் பார்க்க வருபவர்களை அச்சுறுத்தும் வணிகச் சோதிடர்களிடம் போவதற்குப் பதிலாக, வாசகர்கள் அவர்களே தங்களது ஜாதகங்களைப் பார்க்க வேண்டும் என்று நாம் பலமுறை எழுதி வந்திருக்கின்றோம். இதற்காகவே வருசப்ரவேச ஜாதகத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்.

ஆனால் நமக்கு வரும் கடிதங்களைப் படிக்கும்போதும், சில நண்பர்கள் நேரில் நம்மிடம் பேசும்போதும்தான், நாம் எதிர்பார்த்த அளவுக்கு ஒரு விழிப்புணர்வை நமது கட்டுரைகள் தரவில்லை என்று தெரிகின்றது. 2017 ஏப்ரலில் நாம் எழுதிய ‘நீங்களே ஜாதகம் பார்க்கலாம்’ என்ற கட்டுரையை 14000 வாசகர்கள் படித்திருக்கும்போது, அதன் சாராம்சத்தைக் கணக்குகள் மூலம் விளக்கிய ‘கிரகங்களின் முன் நகர்வு’ என்ற கட்டுரையை 1000 வாசகர்களே படித்திருக்கின்றார்கள். சிறிய கணக்குகளைக் கூடச் செய்து பார்க்கும் ஆர்வமும், உதாரண ஜாதகங்களை மீண்டும் மீண்டும் படிக்கும் துடிப்பும் இல்லாமல், தங்களுக்குப் படிக்கவும்,புரிந்து கொள்ளவும் இலகுவாக இருக்கும் கட்டுரைகளை மட்டும், வாசகர்கள் படிக்கின்றார்கள் என்பதே எமது கருத்து.

இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட விரும்புகின்றோம். எமக்கு வரும் மின்னஞ்சல்கள் பெரும்பாலும் காதல் மணம் பற்றிய கேள்விகளையே கொண்டு வருகின்றன. அதிலும் பெண்கள் மட்டுமே தங்களது காதல் வெற்றி பெறுமா, காதல் திருமணம் கைகூடுமா என்று கேட்கின்றார்களே தவிர, எந்த ஆணிடமிருந்தும் இப்படியொரு கேள்வி வந்ததில்லை. எனவே காதலில் விழுந்த பிறகு வரும் அச்சவுணர்வு, பெண்களுக்கு மட்டுமே இருக்கின்றது என்பது தெரிய வருகிறது. ஒரு ஜாதகத்தைப் பார்த்தால் மணவாழ்க்கை சிக்கலின்றிச் செல்லுமா என்பதைத் தான் நம்மால் கூற இயலுமே தவிர அந்த ஜாதகர் காதல் மணம் செய்வாரா இல்லையா என்பதையெல்லாம் நம்மால் கூற இயலாது. எனவே இந்த மாதிரிக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில்லையென்று நாம் முடிவு செய்துள்ளோம். 

‘எனது காதல் வெற்றி பெறுமா’ என்று ஒருவர் கேட்பதே காதலுக்கு இழுக்கு என்றே நாம் கருதுகின்றோம். சமீப காலத்திய இசை, சமீப காலத்திய திரைப்படங்கள், அரசியல் என்று யாவுமே கீழ்நோக்கிப் பாய்ந்து செல்லும்போது, காதல் மட்டும் எப்படி உயரத்துக்குப் போகும்? அதுவும் கீழ்நோக்கித்தான் போகும். எனவே காதல் மணம் பற்றிய வினாக்களை வாசகர்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். 

ஆனால் சோதிட சாத்திரத்தின் உண்மைகளை அறியத் தவிக்கும் ஆர்வலர்களுக்காக நாம் பல்வேறு தலைப்புக்களில் கட்டுரை தர இருக்கின்றோம். தொடர்ந்து கேள்விகளைக் கேட்பவர்களிடம் மட்டுமே இயற்கையின் இரகசியங்கள் போய்ச் சேருகின்றன. நூற்றுக் கணக்கான ஜாதகங்களைப் பார்த்து, ஆயிரக்கணக்கான கேள்விகளைத் தமக்குள் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே அபூர்வமான சில விடைகள் கிடைக்கின்றன. நமது வலைத்தளத்தில் வெளியாகும் கட்டுரைகளைப் படித்து, அதன் மூலம் யாராவது ஒருவர் சோதிட விற்பன்னர் ஆனால் அதுவே எமக்குக் கிடைக்கும் பரிசாகும். 

ஜாதக ரகசியங்களை அறிந்து கொள்வதற்குக் கேள்வி எழுப்பும் வாசகர்களுக்கு மட்டுமே நாம் இனி பதில் அளிக்க உள்ளோம். தொடர்ந்து பலமுறை கண்டிப்பாகச் சொன்ன பிறகும், ஜாதகக் கட்டத்தைப் படமெடுத்து அனுப்புவது, பிறந்த இடத்தைச் சொல்லாமல் விடுவது, கேள்வி என்ன என்பதை எழுதாமல், எதையாவது எழுதிக்குழப்புவது, பொருளற்ற சோதிடப் பாடல்களுக்கு விளக்கம் கேட்பது, நேற்றுப் பிறந்த குழந்தைக்கு இன்றைக்கே ஜாதகம் பார்க்கச் சொல்வது என்று நாம் எதையெல்லாம் தவிர்க்க விரும்புகின்றோமோ அதையெல்லாம் சில வாசகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாம் பதிலேதும் சொல்வதில்லை. இவ்வலைத்தளத்தைப் பயனுள்ளதாக்கிக் கொள்வது வாசகர்களின் கையில் இருக்கின்றது; எம்மிடம் இல்லை.

 

This Week’s Quote:

My powers are ordinary. Only my application brings me success.

-  Isaac Newton

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.