நமக்கு வரும் மின்னஞ்சல்களில் ‘எனக்குச் சோதிடராகும் வாய்ப்பு உள்ளதா? சோதிடராவதற்கான யோகம் என்ன’? என்ற கேள்விகள் அடிக்கடி வருகின்றன. இந்த வாரம் ஒரு பிரபல சோதிடரின் ஜாதகத்தையும், சில குறிப்புக்களையும் தருகின்றோம். இவற்றைப் படித்தும் , விரித்தும், பொருளறிந்து, சோதிடராகும் வாய்ப்பு உள்ளதா என்பதை வாசகர்களே தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஜாதகர் பழைய திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கீழப்புத்தனேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த அந்தணர் என்பதும், பரம்பரை பரம்பரையாகவே சோதிடம் மற்றும் பல கலைகளிலும் சிறந்து விளங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவர் உதாரண ஜாதகத்துடன் உரை எழுதிய ஸ்ரீபதி பத்ததி என்ற கணித நூலின் முன்னுரையிலிருந்து தெரிய வருகின்றன.
இவர் 192 பக்கங்களும், 158 அட்டவணைகளும் உள்ள ஒரு புத்தகத்தில் ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு, அதற்கு சட்பலம் என்று சொல்லப்படும் ஆறு வகையான பலங்களையும் கண்டுபிடித்து, இஷ்டபலம் , கஷ்டபலம் என்ற அளவுகளையும் கண்டுபிடித்து, ஆயுர்த்தாய கணிதமும் செய்திருக்கின்றார். அந்தப் புத்தகத்தைப் பார்த்தால் அவரது கடுமையான உழைப்பு தெரிகின்றது. சுமார் 42 வருடங்களுக்கு முன்னர் எட்டு அத்தியாயங்கள் அடங்கிய இப்புத்தகத்தின் முதல் மூன்று அத்தியாயங்களில் உள்ள கணக்குகளைச் செய்யவே நாம் முழுமையாக 50 நாட்கள் எடுத்துக்கொண்டோம். நாம் இன்னும் முழுமையாக அக்கணக்குகளைச் செய்யப் பழகவில்லை என்பதை வெட்கத்துடன் இங்கே பதிவு செய்கின்றோம்.
‘சாலிவாகன சகம் 1801-ம் ஆண்டில் கொல்லம் ஆண்டு 1055 பிரமாதி வருடம், ஆவணி மாதம், 6-ம் தேதி, புதவாரம், அஸ்த நட்சத்திரங்கூடிய சுபதினம் உதயாதி நாழிகை 46 ¼-க்கு விருசப லக்னத்தில் மிதுன புத நவாம்சையில் உதித்து’ என்பது அவருடைய பிறப்பைக் கூறுகின்ற முன்னுரையின் பகுதி. ஆங்கில ஆண்டின்படி பார்த்தால் 20.08.1879 புதன் என்பது தெரிய வருகிறது. நடுநிசிக்குப் பின்னர் பிறந்திருப்பதால்; 21.08.1879 வியாழன் அதிகாலை 12 மணி, 43 நிமிடங்களுக்குப் பிறந்ததாக நாம் கணக்கிட்டிருக்கின்றோம்.




இவர் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரனும், மூன்றுக்குடைய சந்திரனும் ஐந்தாம் பாவத்தோடு சரியான சேர்க்கையில் உள்ளன. சுக்கிரன், சந்திரன் சேர்க்கை கணித ஞானத்தைக் கொடுக்கும் என்பதை நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அச்சேர்க்கை ஐந்தாம் பாவத்தில் புதனது வீட்டில் இருப்பது இவர் பழைய மூல நூல்களுக்கு உரை எழுதிப் புத்தகங்களைப் பதிப்பித்ததற்குக் காரணமாக உள்ளது. கணித அறிவைக் குறிக்கும் புதன் நான்காம் கேந்திரத்தில் வக்ர பலத்தோடு இருப்பதோடு, வக்ர பலம் பெற்ற குருவின் ஏழாம் பார்வையிலும் உள்ளது. எனவே இவர் சோதிட ஞானம் மிக்கவராக இருந்ததில் ஆச்சரியமில்லை. ஒன்பதுக்கும் பத்துக்குமுடைய சனி பதினோராம் பாவத்தில் வக்ரமாக இருந்து லக்னத்தை மூன்றாம் பார்வையாகப் பார்ப்பது இவர் எதையும் முழுமையாகவும், பிழையின்றியும், நேர்த்தியாகவும் செய்பவர் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றது. நவாம்சத்தில் புதன், செவ்வாய், வியாழன் இவை கடக, மீன, விருச்சிக நவாம்சத்தில் இருப்பது நுட்பங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் கூர்மையான புத்தியை இவருக்கு அளித்திருக்கின்றது.
ஒரு அற்புதமான உரையை உதாரணங்களுடன் எழுதிய இப்பெரியவரின் பெயர் ஸ்ரீநிவாஸ திருமலாச்சாரியார். இவரது தந்தையாரின் பெயர் தேவநாயக ஸ்ரீநிவாஸாச்சாரியார். இவரது தாயாரின் பெயர் லட்சுமி. இவைகளைத் தவிர வேறு விவரங்கள் இவர் எழுதிப் பதிப்பித்த நூலின் முன்னுரையிலிருந்து தெரியவில்லை. எவ்வளவு அக்கறையோடு அவர் உதாரணம் கொடுத்திருக்கின்றார் என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணை தெரியப்படுத்தும். வராகமிகிரரின் சித்தாந்தப்படி ஒவ்வொரு கிரகமும் எவ்வளவு தசா வருடங்களைக் கொடுக்கும் (தசா வருடங்களின் மொத்தம்தான் ஆயுள்) என்பதையும், கிரகங்களின் தசா, அந்தர்ச்தசா எப்போது ஆரம்பிக்கும் என்பதையும் , கால்குலேட்டர் இல்லாத நூறு வருடங்களுக்கு முன்னால் அவர் கணித்திருக்கும் திறமையைப் பார்த்து வியந்து இதை நாம் வாசகர்களுக்குத் தருகின்றோம்.

This Week’s Quote:
Either be wholly slaves or wholly free.
- John Dryden
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.