குழந்தைப்பேறு என்பது பெறற்கரிய பேறாகக் கருதப்படுகின்றது. குழந்தைகள் இல்லாதவர்கள் ‘புத்’ என்ற நரகத்துக்குப் போவார்கள் என்பதும், அவர்களுக்குச் சொர்க்கத்தில் இடமில்லை என்பதும் புராணக்கூற்றுக்கள். புத்ரகாமேஷ்டி யாகம் செய்து, நான்கு ஆண் குழந்தைகளைப் பெற்ற தசரதச் சக்ரவர்த்தி இராமனைப் பிரிந்த காரணத்தால், மனம் நொந்து மாண்டார் என்பது இதிகாசச் செய்தி. மகப்பேறு இல்லாத ஆண்களை முதுகுக்குப் பின்னரும், பெண்களை முகத்துக்கு நேரேயும் இழிவுபடுத்திப் பேசுவது, கழிசடைப் பிறவிகளின் வழக்கம். புத்திர தோச த்தை அனுபவிக்காத, ஆனால் புத்திர சோகத்தை அனுபவித்த ஒரு ஜாதகரின் ஜாதகக் குறிப்பை இந்த வாரம் தருகின்றோம்.




இந்தத் துலா லக்ன ஜாதகருக்கு, கும்பம் புத்திரஸ்தானமாக ஆகின்றது. புத்ரஸ்தானாதிபதி சனி லக்ன கேந்திரத்தில் உச்சமாகவும், வக்ரமாகவும் இருக்கின்றது. துலாத்தின் அதிபதி சுக்கிரனால் ஏழாம் பார்வையாகப் பார்க்கப்படுகின்றது. புத்திர ஸ்தானத்தில் பாபக்கிரகங்களோ, ஜந்தாமிடத்துக்குப் பாபக் கிரகங்களின் பார்வையோ இல்லை. இவருக்கு 1954-ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு வேறு குழந்தைகள் பிறக்கவில்லை. 1954-ல் பிறந்த அந்தப் பையன் வளர்ந்து, பெரியவனாகித் திருமணம் செய்து மூன்று குழந்தைகளையும் பெற்ற பின்னர், 1995-ல் தனது 41-வது வயதில் அகால மரணமடைந்தார். தனது 71-வது வயதில் தனது ஒரே மகனைக் காலதேவனுக்குக் காவு கொடுத்த இப்பெரியவரின் ஜாதகத்தில், புத்திர சோகத்துக்குக் கிரகங்கள் காரணமாக உள்ளனவா? நமக்குக் கிடைக்கும் குறிப்புக்களைக் கொஞ்சம் பார்ப்போம்.
பொதுவாகச் சுபர் பார்வையில்லாத பாபக் கிரகங்கள் ஐந்தாமிடத்துக்கு 4, 8, 12 இடங்களாக வரும் 8, 12, 4 ஆகிய இடங்களில் இருந்தால் அவர்களது தசாபுக்திகளில் குழந்தைகளுக்கு மரணம் ஏற்படும் என்பது ஒரு விதி. (தசா புக்தி என்று நாம் சொல்வது ஆயுர்த்தாய கணிதம் செய்து கிடைக்கப் பெற்ற கிரகங்களின் தசாபுக்தி வருட ங்கள்) இந்த ஜாதகத்தில் எட்டில் செவ்வாய் இருக்கின்றது. செவ்வாய் இரண்டுக்கும் ஏழுக்குமுடைய கிரகமாக வந்து எட்டில் இருக்கின்றது. தனது மகனை இழந்த 1995-க்குச் சில வருடங்கள் முன்னே இவர் தன் மனைவியையும் இழந்தார்.
புத்திரஸ்தானாதிபதி சனி வியாழனின் நவாம்சத்தில் இருக்கின்றது. வியாழனுக்குச் செவ்வாயின் எட்டாம் பார்வையும் , சனியின் மூன்றாம் பார்வையும் கிடைக்கின்றது. சனியின் த்வாதசாம்ச அதிபதி சுக்கிரன், சூரியனோடு மிக நெருக்கமாக இருந்து அஸ்தமனமாகின்றது. ஐந்தாம் பாவத்தின் அம்சம் மீனத்தில் விழுகின்றது. அம்சச் சக்கரத்தில் இதற்குக் கேந்திரங்களில் சனி செவ்வாய் உள்ளன. புத்திர பாவத்தின் த்வாதசாம்சம் கன்னியில் விழுகின்றது. த்வாதசாம்சச் சக்கரத்தில் கன்னியின் அதிபதி புதன், அதற்கு எட்டில் செவ்வாயோடு சேர்க்கையில் உள்ளது. ஆகக் குழந்தை இருப்பதற்கான காரணங்களும், அதேபோல் இல்லாமல் இருப்பதற்கான காரணங்களும் இங்கே கலந்து கிடக்கின்றன.

இவரது 71-வது வயதில் இந்த இழப்பைச் சந்தித்தது ஏன் என்பது இவரது 71-வது வயது பிறக்கும் நாளான 28.04.95-ல் உள்ள கிரக நிலைகள் மூலம் தெளிவாகின்றது.

ஜன்ம லக்னத்துக்கும் , வருசப்ரவேச லக்னத்துக்கும் ஐந்தாமிடத்து அதிபதியான சனி ஆறில் மறைவதும், அட்டமாதிபதி செவ்வாயின் எட்டாம் பார்வையைப் பெறுவதும் , சனியின் நவாம்சபதி புதன் லக்னத்துக்கு எட்டில் இருப்பதும், புத்திர சோகத்துக்குக் காரணங்களாகின்றன என்பது எமது கருத்து.
வேறு கிரகத்தின் பார்வையைப் பெறாமலும், சேர்க்கையைப் பெறாமலும் தனித்திருக்கும் சனி, ஐந்து, எட்டு, ஒன்பதில் இருக்கப் பிறந்த ஜாதகர்கள் புத்திர சோகத்தை அனுபவிக்க நேரிடுகிறது என்பது எமது கருத்து. இதை ஒரு விதியாக யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இது எமது அனுபவத்தில் நாம் கற்ற பாடம்.
This Week’s Quote:
Whence come I and whither go I? That is the great unfathomable question, the same for every one of us. Science has no answer to it.
- Max Planck
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.