இதே தலைப்பில், நாம் 16.04.2017-ல் எழுதிய கட்டுரையை, இக்கட்டுரை எழுதும் நாள்வரை சுமார் 17000-த்துக்கும் மேலான வாசகர்கள் படித்துள்ளனர். அதில் ஒரு சதவீதம் பேராவது அக்கட்டுரையில் நாம் சொல்லியிருந்த விசயங்களைப் பரீட்சித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. மந்திரதந்திரக் கதைகளில் பேசப்படும் மாயக்கண்ணாடி ஒன்று நம் கைகளில் கிடைத்தால், நாளை என்ன நடக்கும் என்று பார்த்துத் தெரிந்துகொள்ளலாமே என நினைப்பவர்கள்தாம் மனிதர்கள். மனிதர்களின் இந்த உளவியல் பண்பைத் தெரிந்துகொண்டுதான் முகக்குறி சொல்பவர்களும், வெற்றிலையில் மை போட்டுப் பார்க்கும் மந்திரவாதிகளும் தங்கள் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள். எப்பொழுதுமே எந்த விஷயத்துக்கும் ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடிக்க முனைவதே மனிதனின் தாகமாக இருக்கின்றது. அது அவசியமும் கூட. அதனால்தான் இப்பொழுது தொட்டுப் பேசும் கைபேசி வரை மனிதனால் சாதிக்க முடிந்திருக்கின்றது. ஜாதகக் கட்டத்தைப் பார்த்தவுடனேயே நமது அதிர்ஷ்டமான வருடங்களும், கவலையைத் தரும் காலமும் நமக்குத் தெரிய வந்தால் எப்படியிருக்கும்? இன்று அதற்கொரு வழியை நாம் சொல்கின்றோம்.
சமீபத்தில் பிப்ரவரி 1891-ல் லண்டனில் வெளிவந்த The Astrologer’s Magazine என்ற சோதிட இதழ் இணையதளத்தில் கிடைத்தது. அதில் APHOREL என்பவர் கிறிஸ்தியன் அஸ்ட்ராலஜி என்ற புத்தகத்தின் 86ம் பக்கத்தில் உள்ள ஒரு தகவலைக் கொடுத்துள்ளார். (இப்புத்தகம் வில்லியம் லில்லி என்பவரால் 1647-ல் எழுதப்பட்டது) அத்தகவல் இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்களுக்குப் புதுமையாகவும், வியப்பைத் தருவதாகவும் இருக்கலாம். ஆனால் நமக்கு அப்படி இல்லை. ஏனெனில் இதேபோல நமது முன்னோர்களும் சிந்தித்துள்ளார்கள் என்பது, ஜைமினி சூத்திரம், காலச்சக்கரதசை போன்ற விஷயங்களை அறிந்தவர்களுக்குத் தெரியும்.
இப்போது விஷயத்துக்கு வருவோம். ஜன்ம லக்னத்துக்குப் பன்னிரண்டாம் இடத்திலிருந்து பதினொன்று, பத்து என்று கடிகாரச் சுற்றுக்கு எதிர்த்திசையில் சென்றால் மீண்டும் லக்னத்துக்கு வரப் பன்னிரண்டு கட்டங்களைத் தொட வேண்டும். ஒவ்வொரு கட்டத்துக்கும் 5 ஆண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே 12-ல் தொடங்கி லக்னம் வரைக்கும் 60 ஆண்டுகள். ஒருவர் பிறந்தது முதல் 5 வருடங்கள் முடியும் வரைக்கும் 12-ம் இடத்தையும், 6 வருடங்கள் முதல் 10 வருடங்கள் முடியும் வரைக்கும் 11-ம் இடத்தையும் லக்னமாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதில் பாபக்கிரகங்களின் இருப்பு, பார்வை இருந்தால் அந்த 5 வருடங்கள் கஷ்டமான காலம் என்றும், சுபக்கிரகங்களின் இருப்பு, பார்வை இருந்தால் அந்த 5 வருடங்கள் நல்லகாலம் என்றும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 60 வருடங்கள் கழிந்த பின்னர் இரண்டாவது சுழற்சி ஆரம்பமாகும்.
ஒருவர் கடக லக்னத்தில் பிறந்துள்ளார் என்றால் முதல் 5 ஆண்டுகள் முடிய மிதுனமும், அடுத்த 5 ஆண்டுகள் ரிசபமும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ராசிகளாகும்.இப்படியே பின்னோக்கிப் போனால் 55 முதல் 60 முடிய உள்ள ஆண்டுகளுக்குக் கடகம்தான் கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய ராசியாகும். எனவே லக்னத்தையும், குறிப்பிட்ட 5 ஆண்டுக்கான ராசியையும் நன்கு கவனித்து, அந்தக் குறிப்பிட்ட 5 ஆண்டுகளில் பெரிய கிரகங்களான குரு, சனி இவற்றின் கோசார நிலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அலசிப்பார்த்தால், குறிப்பிட்ட 5 ஆண்டுகள் நல்லவையா அல்லது கஷ்டமான கால கட்டமா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
எனவே இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் தங்களது ஜாதகம், நண்பர்களது ஜாதகம், உறவினர்களது ஜாதகம் என்று கிடைப்பனவற்றையெல்லாம் இந்த முறையில் பரிசீலனை செய்து பார்க்கக் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 10 ஜாதகங்களில் 5 ஜாதகங்களுக்கு இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விசயங்கள் ஒத்துப்போனால் இம்முறையைப் பின்பற்றலாம். இல்லையெனில் இதைத் தவிர்த்துவிடலாம். கோயில்களுக்கும், நதிகளுக்கும், நாடி ஜோதிடர்கள் வீட்டுக்கும் அலைவதைவிட இம்மாதிரிச் சிறு கணக்குகளில் நமது நேரத்தைச் செலவிட்டால் அதுதான் புண்ணியம். உண்மையைத் தேடுவதுதான் நல்வினை.
நாம் அடிக்கடி எழுதுவதுபோல் பிரபஞ்ச ரகசியங்கள் எளிய கணக்குகளுக்குள்ளேதான் புதைந்து கிடக்கின்றன. இசையைப் பிரபஞ்சமொழி என்று அழைப்பதுண்டு. ஆழ்ந்து சிந்தித்தால் இசையின் அடிப்படையே கணக்கு என்பது தெரிய வரும். தாளமும், ராகமும் கணக்கன்றி வேறென்ன? எனவே எம்மைப் பொறுத்தவரை கணிதம்தான் பிரபஞ்ச மொழி. காலம் கணிதத்துக்குள்ளும் கணிதம் காலத்துக்குள்ளும் எப்படிப் புதைந்துகிடக்கின்றன என்பதை அறிய முனைவோர்தாம் உண்மையான ஆன்மீகவாதி.
This Week’s Quote:
Experience without theory is blind, but theory without experience is mere intellectual play.
- Immanuel Kant
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.