நமக்கு வரும் கேள்விகள் பயத்தையும், குழப்பத்தையும் சுமந்து வருகின்றன என்று நாம் அடிக்கடி எழுதுகின்றோம். தனது மகனுக்கு எட்டில் ராகு இருப்பதால் தமக்குப் பயமாக இருக்கிறது என்று ஒருவர் எழுதியுள்ளார். நாம் பரிகாரம் சொல்வதை வன்மையாகக் கண்டித்து வருகின்றோம் என்பதைத் தெரியாமலேயே, ஒருவர் எம்மிடம் பரிகாரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வதென்றே எமக்குத் தெரியவில்லை.

ஆனால் எமக்கு நிறைய கேள்விகள் உள்ளன. இந்தக் கட்டுரையைப் படித்து முடித்தால் நிஜமான சோதிட ஆர்வலர்களுக்கும் அந்தக் கேள்விகள் வரக்கூடும். அவர்கள் தாங்கள் சந்திக்க நேரிடும் சோதிடச் சக்கரவர்த்திகளிடம் இந்தக் கேள்விகளைக் கேட்கலாம்.

  1. வளர்பிறையில் சந்திரஹோரையில் பிறந்தாலும், தேய்பிறையில் சூர்யஹோரையில் பிறந்தாலும் மட்டுமே பொருந்தக்கூடிய விம்சோத்தரி தசையை இப்போது எல்லோருக்கும் சொல்வதேன்?
  2. வளர்பிறையில் சூர்யஹோரையிலும், தேய்பிறையில் சந்திரஹோரையிலும் பிறந்தால் சொல்லப்பட வேண்டிய சோடசோத்தரி தசையை யாருமே சொல்லாதது ஏன்?
  3. சுக்கிர நவாம்சத்தில் பிறந்தால் த்வாதசோத்தரி தசையைப் பின்பற்ற வேண்டும் என்பதை ஏன் எல்லோரும் மறந்து போனார்கள்?
  4. கடக லக்னத்தில் அல்லது கடக த்வாதசாம்சத்தில் பிறந்தால் பஞ்சோத்தரி தசையைக் கணித்துச் சொல்லாதது ஏன்?
  5. லக்னம் வர்க்கோத்தமாக இருந்தால் சொல்லப்பட வேண்டிய சதாப்தி தசையும், பத்துக்குடையன் பத்தில் இருந்தால் சொல்லப்பட வேண்டிய சதுரஷீத்யப்திகா தசையும் ஏன் புதைகுழிக்குள் போயின?
  6. சூர்யன் ஜன்மலக்னத்தில் இருந்தால் சஷ்டியப்திகா என்ற தசையும், பகலில் சூர்யஹோரையிலும், இரவில் சந்திரஹோரையிலும் பிறந்தால் பின்பற்றப்பட வேண்டிய சட்திரிசதிகா தசையும் எங்கு போய் ஒளிந்துகொண்டன?

இவையெல்லாம் சோதிட மேதைகளிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள். இந்த வலைத்தளத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு வாசகர் ‘நீங்கள் ஏன் ராகு, கேதுவை எடுத்துக்கொள்வதில்லை’ என்று கேட்டிருந்தார். சோடசோத்தரி தசையில் ராகுவுக்குத் தசா வருடங்கள் இல்லை. த்வாதசோத்தரியில் சுக்கிரனுக்குத் தசா வருடங்கள் கிடையாது. அஷ்டோத்தரி தசையில் கேது கிடையாது. பஞ்சோத்தரி, சதாப்தி, சதுரஷீத்யப்திகா ஆகிய தசைகளில் ராகு கேதுக்கள் கிடையாது. த்விசப்தாதிகா, சஷ்டியப்திகா, சட்திரிசதிகா தசைகளில் கேது கிடையாது. ஆகவே எமது கட்டுரைகளில் ராசிச் சக்கரத்தில் ராகு கேதுக்கள் இடம் பெறாதது தவறில்லை.

எனவே எவ்வளவோ கேள்விகள் கேட்கப்படாமல் இருக்கின்ற இந்தச் சோதிட சாத்திரத்தில், அபத்தமான கேள்விகளை மட்டுமே கண்டுபிடித்து, எம்மிடம் அவற்றுக்கான பதில்களைக் கேட்கும் வாசகர்களுக்கு எந்த விடையும் கிடைக்காது.

 

This Week’s Quote:

History repeats itself, first as tragedy, second as farce.

-  Karl Marx

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.