சோதிடப் பத்திரிக்கைகளில் பிரபல அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், கலைஞர்கள் ஆகியோரின் ஜாதகத்தைப் பிரசுரம் செய்து இன்ன இன்ன யோகங்கள் உள்ளன, இன்னபிற காரணங்களால் இவர் பெரிய மனிதர் ஆனார் என்று எழுதுவதுண்டு. பெரும்பான்மையான மக்களின் ஜாதகங்களில் சோதிடர்கள் குறிப்பிடும் யோகங்கள் காணப்படுவதுண்டு. ஆனால் அவர்கள் எல்லோருமே பிரபலங்கள் ஆவதில்லை. ஏனென்று அவர்களுக்கும் தெரியாது, சோதிடர்களுக்கும்  தெரியாது. நிர்ப்பந்தம் செய்து கேட்டால் பெயர் சரியில்லை, குலதெய்வ வழிபாட்டை விட்டுவிட்டீர்கள், பூர்வபுண்யஸ்தானம் சரியில்லை என்று எதையாவது சொல்லி வாயை அடைத்து விடுவார்கள். ஆனால்  ஒரு உண்மையான சோதிடர் சரியான காரணத்தைச் சொல்ல வேண்டும். இன்று ஒரு பிரபலமான நபரின் ஜாதகத்தைப் பார்ப்போம்.

 

sample horoscope

இவர் மிதுன லக்னத்தில் பிறந்துள்ளார். லக்னாதிபதி புதன் லக்னத்தில் கேந்திரத்தில் உள்ளார். எனவே பத்ரயோகம் என்ற பஞ்சமகாபுருஷ யோகங்களில் ஒன்றான யோகம் ஏற்படுகின்றது. புதனும், சூர்யனும் சேர்ந்திருப்பதால் புதஆதித்ய யோகமும், சந்திரன், செவ்வாய் சேர்ந்திருப்பதால் சந்திரமங்கள யோகமும் காணப்படுகின்றன. பாக்யாதிபதி லாபஸ்தானத்தில் நீசமடைந்துள்ளார். ஆனால் நீசபங்க ராஜயோகம் பெற்றுள்ளார். (ஒரு கிரகம் நீசமாக இருக்கும் போது அந்த நீசராசி எந்த கிரகத்துக்கு உச்சவீடாக ஆகின்றதோ அந்தகிரகம் சந்திரனுக்கோ லக்னத்துக்கோ கேந்திரங்களில் இருந்தால் நீசபங்க ராஜயோகம் கிடைக்கின்றது.) இந்த ஜாதகத்தில் சனியின் நீசராசியான மேஷம் சூர்யனுக்கு உச்சவீடாக அமைகின்றது. சூர்யன் லக்னத்துக்குக் கேந்திரத்திலும் சந்திரனுக்குக் கேந்திரத்திலும் இருப்பதால் நீசபங்கராஜயோகம் கிடைத்திருக்கிறது. லக்னமும், சூர்யனும், சந்திரனும் ஆண் ராசியான மிதுனத்தில் இருந்து பகலில் பிறந்திருப்பதால் மகாபாக்ய யோகம் என்ற அபூர்வமான யோகமும் உள்ளது. பாக்கியாதிபதி லாபஸ்தானத்தில் இருந்து குருவின் ஒன்பதாம் பார்வையைப் பெற்றுள்ளார். லக்னாதிபதி புதனும் பஞ்சமாதிபதி சுக்ரனும் சேர்ந்து நல்ல யோகத்தைக் கொடுக்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டுக்குடைய சந்திரனும் லாபஸ்தானாதிபதி செவ்வாயும் சேர்ந்து லக்னகேந்திரத்தில் இருந்து லக்னாதிபதியும் லக்னத்தில் இருப்பதால் பெருஞ்செல்வந்தனாக வாழ்வதற்குரிய யோகம் ஏற்படுகின்றது. பாக்கியாதிபதியின் பார்வை குருவைத் தவிர அனைத்துக்கிரகங்களுக்கும் உள்ளது. லக்னாதிபதி பஞ்சமாதிபதி ஆகியோருடன் ஏழாமிடத்ததிபதி குருவின் பார்வையும் ஏழாமிடத்தில் விழுவதால் இளமையிலேயே திருமணமும், சுகமான இல்வாழ்க்கையும் அமையும். செவ்வாய், சூரியன் ஆகியோரின் பார்வையும் ஏழாமிடத்தில் விழுவதால் தடைகள் ஏற்பட்டாலும் குருவின் பார்வையால் எல்லாத் தடைகளும் நீங்கும். பாக்கியாதிபதி சனி அட்டமாதிபதியாக இருந்தாலும் குருவின் பார்வை பாக்கியஸ்தானத்திலும், பாக்கியாதிபதியான சனியின் மீதும் விழுவதால் அட்டமாதிபதிக்குள்ள தோஷங்கள் நீங்கி சனி நல்ல பலனையே செய்யும்.

இப்படியெல்லாம் எழுத ஆசைதான். ஆனால் எழுத முடியவில்லை. இவர் பிறந்த மறு வருடம் இவரது தந்தை தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். பிறகு திரும்ப வரவே இல்லை. உயர்நிலைப்பள்ளியில் இவர் மிகச் சாதாரண மாணவராகவே இருந்தார். கல்லூரியில் BCom., எடுத்துப் படித்தார். முழுவதுங்கற்று முடிக்கவில்லை. இவரது 18-வது வயதில் இவரது தாயாரும் இறந்துவிட்டார். ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் சிறிது காலம் வேலை பார்த்தார். பின் அதையும் விட்டுவிட்டார். திருமண வாய்ப்புக்கள் வரும் போதெல்லாம் தடைகளும் வந்தன. எனவே தனியாகவே வாழத் தொடங்கி இதுவரையும் அப்படியே வாழ்கின்றார். பூர்வீகச் சொத்தாகக் கிடைத்தவற்றை விற்றுக் காசாக்கி வங்கியில் இட்டுவைத்து அதன் மூலம் ஜீவனம் நடத்துகின்றார். மேற்கொண்டு தொழில் ஏதும் செய்து பணஞ் சேர்க்கவுமில்லை அதற்கான ஆர்வமும் இல்லை. சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட யோகங்கள் எல்லாம் என்னவாயின? இராசிக் கட்டத்தை மட்டும் பார்த்துச் சொன்னால் இப்படித்தான் ஆகும். இப்போது நமது பாணியில் இச்சாதகத்தைப் பார்ப்போம்.

 

table

 

table

 

 

sample horoscope

sample horosope

 

 

sample horoscope

லக்ன பாவம் மிதுனத்தில் 12 பாகை, 42 கலையில் ஆரம்பிக்கின்றது. எனவே சூர்யன் செவ்வாய் மற்றும் சுக்கிரன் பாவ ஆரம்பத்தில் இருப்பதால் பாவ பலனை முற்றிலுமாக இழக்கின்றன. 12ம் பாவ மத்தி ரிசபராசியில் 27 பாகை, 40 கலையில் இருப்பதால் அதற்கு 3 பாகை சமீபத்தில் உள்ள புதன் 12ம் பாவத்தில் இருக்கின்றான். 10ம் பாவத்தின் மத்தியான மீனராசியின் 27 பாகை, 34 கலைக்கு, 3 பாகை சமீபத்தில் இருப்பதால் சனி 10ம் பாவத்தில் இருக்கின்றான். சந்திரன் லக்னத்தில் இருக்கின்றான். எனவே லக்னாதிபதி பன்னிரண்டில் வக்ரமாகவும், சனி பத்தாமிடத்தில் நீசமாகவும் சந்திரன் லக்னத்தில் இருப்பதாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திரன் சூர்யனிடமிருந்து 12 பாகையே விலகியிருப்பதால் பக்ஷபலம் இன்றி இருக்கின்றான். மேலும் சந்திரனைத் தேய்பிறைச் சந்திரனாகவே கருத வேண்டும். எனவே லக்ன கேந்திரத்தில் பலமற்ற சந்திரனும், பத்தாமிடத்தில் பலமற்ற சனியும், பன்னிரண்டாம் இடத்தில் பலமான லக்னாதிபதி புதனும் இருப்பதாகக் கருதி அதற்குரிய பலனையே சொல்ல வேண்டும். பலமற்ற சனி பத்தாமிடத்தில் இருப்பதால் சீக்கிரமே தந்தை தாயை விட்டுப் பிரிய நேர்ந்தது. ஏற்கெனவே ஒரு கட்டுரையில் எழுதியதுபோல பலமற்ற பத்தாமிடச் சனி இளமைப் பருவத்தைக் கஷ்டம் மிகுந்த காலமாக ஆக்குகின்றது. குரு, சுக்கிரன், சனி ஆகியோரின் த்வாதசாம்ச அதிபதியான செவ்வாய், சூர்யனுடன் சேர்ந்து அஸ்தமனமாகிவிட்டபடியால் குரு, சுக்கிரன், சனி ஆகியோர் பலமிழக்கின்றார்கள். எனவே சுக்கிரன், வியாழன் இருவருமே நல்லபலனைச் செய்யமாட்டார்கள். ஏழாம்பாவம் தனுசில் 27 பாகை, 44 கலையில் இருப்பதால் குருவின் முழுமையான பார்வை அதில் விழாது. கணக்கிட்டுப் பார்த்தால் 51.49  சதவீதம் பார்வையே வருகின்றது. ஆனால் சனியின் பார்வையைக் கணக்கிட்டுப் பார்த்தால் 95 சதவீதப் பார்வை விழுகின்றது. எனவே ஏழாம் பாவத்துக்கு ஏழாம்பாவாதிபதியின் பார்வையைவிட அட்டமாதிபதி சனியின் பார்வையே அதிகம் இருக்கின்றது.

நவாம்ச சக்கரப்படி குடும்பம், படிப்பு, செல்வம் இவற்றைச் சேர்க்கின்ற குடும்பாதிபதி சந்திரன் பன்னிரண்டாம் இடத்தில் சென்று மறைய லாபாதிபதி செவ்வாய் எட்டில் மறைந்து இருக்கின்றான். லக்னமும், சனியும் வர்க்கோத்தமாக இருந்து அவரின் ஆயுளைக் கூட்டுகின்றனவே தவிர வேறு சிறப்பான அம்சங்கள் நவாம்ச சக்கரத்தில் தெரியவில்லை.

நான்கு அல்லது நான்குக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு இராசியில் இருக்குமானால் அப்படி இருக்கப் பிறந்தவர்கள் சன்னியாச யோகத்தை அடைகின்றார்கள். இங்கே சன்னியாசி என்ற வார்த்தைக்கு மனைவி,  குழந்தைகள் என்ற குடும்பப் பிணைப்பு இல்லாமல் தனியே வாழ்பவர் என்ற அர்த்தத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் சந்திர ராசியாதிபதி புதனுக்குச் சனியின் பார்வை விழுவதாலும் வேறு கிரகங்களின் பார்வை புதனுக்கு இல்லாததாலும் உற்றவரும், உறவினரும் இல்லாத வாழ்க்கை இவருக்குக் கிட்டியிருக்கின்றது.

த்வாதசாம்ச சக்கரத்தில் ஏழுக்குடைய செவ்வாய் ஆறில் இருக்க, எட்டுக்குடையவன் ஏழில் இருப்பதால் ஏழாமிடப் பலனான மனைவி, தொழில் முயற்சி இவை இவருக்கு இல்லை. ஒன்பது பத்துக்குடைய சனி பன்னிரண்டில் மறைவு. குடும்பாதிபதி புதன் குடும்ப ஸ்தானத்தில். ஆனால் புதன் வக்ரமாக இருப்பது திருமணத்தைக் கொடுக்காது.    ஆகவே பெரும்பான்மையான கிரகங்கள் (இங்கே சூர்யன், செவ்வாய், சுக்கிரன், வியாழன்) பாவத்தின் ஆரம்பத்திலோ, இறுதியிலோ இருந்தால் அந்த ஜாதகரின் வாழ்க்கை மிகச் சராசரியான வாழ்க்கையாகத்தான் இருக்குமே தவிர சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட யோகங்களோடு வாழும் வாழ்க்கை கிடைக்காது. இங்கே சந்திரன், புதன், சனி ஆகிய மூன்று கிரகங்கள் மட்டுமே பாவ பலனைப் பெறுகின்றன. ஆனால் புதன் பன்னிரண்டில் வக்ரமாகவும், சனி பத்தில் நீசமாகவும், சந்திரன் பட்ச பலமின்றி லக்னத்தில் வெகுபலவீனனாகவும் இருப்பதால் ஒரு ஏற்றமான வாழ்க்கை இவருக்கு கிடைக்கவில்லை.

தசாபுத்திகள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால் அதுவும் மேலே கண்ட பலன்களைத்தான் சொல்கின்றது. நிசர்கிக தசைமுறைப்படி 13 வயது ஆரம்பம் முதல் 32 வயது முடியும் வரை 20 வருடங்கள் சுக்ரதசை நடக்கும். இவருக்கு 27.06.1980  காலை மணி 9.04க்குச் சுக்ரதசை ஆரம்பிக்கின்றது. அதற்கான கிரக நிலைகள் இவ்வாறு அமைகின்றன.
 

sample horoscope

sample horosope

தசாநாதன் தசாப்ரவேச லக்னத்துக்குப் பதினொன்றாமிடத்தில் இருந்தாலும் ஜன்ம லக்னத்துக்குப் பன்னிரண்டாமிடத்தில் வக்ரமாக இருப்பது விசேஷமில்லை. லக்னாதிபதி சந்திரன் நீசமாக இருக்கின்றான். சுக்கிரனுக்கு நான்காமிடத்தில் செவ்வாய், சனி ஆகியோரும் சுக்கிரனுக்கு ஏழில் சந்திரனும் இருப்பதும் நல்லதில்லை. ஒரு கிரகத்துக்கு நான்கில் இருக்கும் பாபக்கிரகம் அக்கிரகத்துக்கு ஒரு தடைக்கல்லாகவே இருக்கும். தசாப்ரவேச காலத்திலும் சந்திர ராசியாதிபதி செவ்வாய், சனியுடன் சேர்ந்து சன்னியாச யோகத்தைக் கொடுப்பது ஒரு ஆச்சரியமான விஷயம். ஜாதகத்துக்குச் சொல்கின்ற பலன் பிரஸ்ன காலத்தில் மட்டுமின்றி தசாப்ரவேச காலத்திலும் நடைபெறுகின்றது என்பது இதன் மூலம் தெரிய வருகின்றது.

குரு தசாப்ரவேச காலமான 27.6.2000 12.08 Noon ஜாதகமும் இப்படித்தான் இருக்கின்றது.

 sample horoscope

தசாநாதன் இயற்கைச் சத்துருவான சுக்கிரனின் வீட்டில் சனியோடு சம்பந்தம் பெற்றுள்ளார். வியாழன் லக்னத்துக்கு ஏழாமதிபதியாக  வந்து ஐந்து ஆறுக்குடைய சனிக்கு வெகு  சமீபத்தில் இருப்பது மணவாழ்க்கைக்குப் பெரும் தடைக்கல்லாக இருக்கும். தசாப்ரவேச காலத்தில் சந்திரன் எட்டில் இருந்து அந்த வீட்டுக்குடைய செவ்வாய் சூர்யனோடு சேர்ந்து அஸ்தமனமாகியிருப்பது வீணான அலைச்சலையும் மனக்கஷ்டத்தையுமே கொடுக்கும்.

தசாநாதன் வக்ரமாகவோ அல்லது லக்னாதிபதி வக்ரமாகவோ இருப்பதே இந்த ஜாதகருக்கு ஒவ்வொரு தசாப்ரவேச காலத்திலும் நேர்கின்றது. இதைத்தான் விதி என்கின்றோம். ஆர்வம் காரணமாக இவருக்கு 51வது வயதில் ஆரம்பிக்கும் சூர்யதசை எவ்வாறு இருக்கும் என்று பார்த்தால் அங்கேயும் சில சிக்கல்கள்.

sample horoscope

லக்னாதிபதி செவ்வாய் தனது உச்ச வீடான மகரத்தில் 15 பாகையில் வக்ரமாக இருக்கிறது. அந்த வீட்டுக்குடையவன் ஒன்பதாமிடத்தில் வக்ரமாகவும், சனி நின்ற வீட்டுக்குடைய குரு ஏழாமிடத்தில் வக்ரமாகவும் இருப்பதைக் கவனியுங்கள். சந்திரன் சனியுடன் சேர்க்கை பெற்றிருப்பது சூர்யதசையில் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை இவருக்குக் கிடைக்காது என்பதை உறுதிப்படுத்துகிறது. சூர்யனுக்கு ஏழு எட்டாமிடங்களில் சனி, செவ்வாய் இருப்பதும் அதே பலனைத்தான் சொல்கின்றது.

இந்தக் கட்டுரையின் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் ராசிக் கட்டத்தை மட்டும் வைத்துப் பலன் சொல்லக் கூடாது என்பதுதான். ஒவ்வொரு கிரகத்தின் பாகை, கலைகள், நவாம்ச, த்வாதசாம்சக் கட்டங்கள், தசாப்ரவேச கால லக்னம், அன்றைய கிரக நிலைகள், பாவ ஆரம்ப, பாவ மத்ய, பாவ சந்தி ஸ்புடங்கள் ஆகிய பல விஷயங்களை எடுத்துக்கொண்டே ஜாதகம் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.

கலிபோர்னியாவின் SANDIEGO, POWAY கனடாவின் MISSISSAUGA போன்ற இடங்களில் இருந்து எனது கட்டுரைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் வசிப்பது பூமிப்பந்தின் மறுபக்கம். விஞ்ஞான வளர்ச்சியுற்ற நாடுகள் அவை. விஞ்ஞானத்துக்கும், மெய்ஞானத்துக்கும் வேறுபாடுகள் கிடையாது. உண்மையைத் தேடுகின்ற எல்லாருமே விஞ்ஞானிகள்தான். இந்திய மண்ணில் புதுமைக்கு என்றுமே வரவேற்பு கிடையாது. மேலைநாட்டு சோதிடப் புத்தகங்களை இங்கே ஆழ்ந்து படிக்கக்கூடியவர் யாருமில்லை. உங்களுக்கு அந்த வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன. ஆங்கில மற்றும் கிரேக்கச் சோதிட மேதைகளின் புத்தகங்களோடு உறவாடும் வாய்ப்புக்கள் உங்களுக்கு அதிகம் உண்டு. சோதிடத்தில் ஆர்வம் இருப்பின் அவைகளையும் விரும்பிக் கற்று உண்மையைத் தேடும் முயற்சிகளில் பங்கேற்று வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்குங்கள்.

 

அடுத்த கட்டுரை 'பயணிகள் கவனிக்கவும்' 14.02.2016ல் வெளியாகும்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.