திரும்பிப் பார்த்தல் மிக்க அவசியமான ஒன்று. செய்த பணிகளை ஒரு மீள்பார்வைக்கு (REVISION) உட்படுத்துதல் நம்முடைய சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துகிறது. இதுவரை இந்த இணையதளத்தில் பத்தொன்பது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பொதுவாகச் சோதிடப் பத்திரிக்கைகளில் வெளியாகும் கட்டுரைகளுக்கும், இங்கே வெளிவந்த கட்டுரைகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசங்களை வாசகர்கள் அறிந்திருப்பார்கள். இங்கே புராணக்கதைகளோ, பரிகாரக்கோயில்களின் பட்டியலோ இடம் பெறவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வானசாஸ்திரிகளாலும், சோதிடர்களாலும் படிக்கப்பட்டு வந்திருக்கும் ஒரு அறிவியலை அறிவியலாக மட்டுமே பார்க்க ஆசைப்படும் ஒரு ஆராய்ச்சியாளரின் கட்டுரைகள் இவை. ஆன்மீக புராணக் கலப்பில்லாத கட்டுரைகள் இவை. மறைந்து கிடக்கும் இரகசியங்களை வெளிக்கொண்டுவர விரும்பும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காகச் சோதிடத்தை அறிமுகப்படுத்துகின்ற கட்டுரைகள் இவை.
ஒரு சரியான பஞ்சாங்கம், கிரகங்களின் ஸ்புடங்கள், நவாம்ச, திரேக்காண, துவாதசாம்ச சக்கரங்கள் ஆகியவற்றின் அவசியம் - இவற்றை வலியுறுத்திய முதல் கட்டுரையிலிருந்து நோய்களைப் பற்றிய குறிப்புகளை வழங்கிய முந்தைய கட்டுரை வரை தொடர்ந்து படித்திருக்கும் வாசகர்கள் மற்றும் சோதிடத்தில் நாட்டமுள்ளவர்கள் சில முக்கியமான விஷயங்களைக் கவனித்திருக்கக் கூடும்.
- பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் உடுதசை பற்றி விபரமாக எதுவும் எழுதப்படவில்லை.
- கிரகங்கள் இருக்கும் நட்சத்திரங்கள் பற்றியும் எதுவும் கூறப்படவில்லை.
- திருமணத்துக்கு அவசியமானவை என்று கருதப்படும் பத்துப் பொருத்தங்கள் பற்றியும் பேசவில்லை.
- எல்லோராலும் பெரிதும் பேசப்படும் குரு பார்வையின் மகத்துவம் பற்றியும் நாம் எதுவும் கூறவில்லை.
இந்தியாவின் மிகச்சிறந்த வானசாஸ்திரியான வராகமிகிரர் எழுதிய பிருஹஜ் ஜாதகம் என்ற சோதிட நூலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அவர் குறிப்பிடும் ஆயுர்த்தாய கணிதம் (ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு என்று கணக்கிடும் முறை) அதை ஒட்டியே ஏற்படுத்தப்படும் கிரகதசைகள் இவற்றையெல்லாம் பற்றி விவரமாக எழுத ஆசைதான். ஆனால் ‘இந்தக் கட்டுரைகளே எங்களுக்குப் புரியவில்லை’ என்று கூறுபவர்களை இன்னும் சிரமப்படுத்த வேண்டாம் என்பதாலேயே மிக ஆழமான கட்டுரைகள் இன்னும் எழுதப்படவில்லை. எந்தச் சம்பவம் எப்போது நடக்கும் என்ற விவரங்கள் (TIMING OF EVENTS) எந்தக் கணக்குகள் மூலம் அறியப்படலாம் என்ற ஆராய்ச்சிக் கட்டுரையும் இன்னும் எழுதப்படாமல் இருக்கிறது.
உடுதசை முறைப்படி கால நிர்ணயம் செய்ய இயலாமல் போனதால்தான் காலச் சக்கரதசை, அஷ்டவர்க்கப்பரல்படியான தசை, ஜைமினி சூத்திரப்படியான சர தசை, ஸ்திர தசை, நவாம்ச தசை போன்ற பல்வேறு தசா முறைகளைப் பல்வேறு சோதிட ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இரகசியக் கதவு இன்னும் திறக்காமல்தான் இருக்கிறது. ஒரு ஜாதகத்துக்கு உடுதசை முறைப்படியும், ஒரு ஜாதகத்துக்கு ஜைமினி சூத்திரப்படியும், இன்னொரு ஜாதகத்துக்கு காலச் சக்கரதசை முறைப்படியும் திருமண காலத்தையோ, வேலைவாய்ப்பு உருவாகும் காலத்தையோ சொல்லுதல் நிறைய வடஇந்திய சோதிடர்களின் முறையாக இருக்கிறது.
அப்படி இல்லாமல் எல்லோருக்கும் பொதுவான ஒரு தசாமுறைப்படி காலநிர்ணயம் செய்யக்கூடிய சில வழிமுறைகள் பரிசீலனையில் இருக்கின்றன. முழுவதும் பரிசீலிக்கப்பட்ட பின்னர் அவை கட்டுரைகளாக வெளிவரக் கூடும்.
பதினெட்டு வயதுக்குமேல் முப்பத்தைந்து வயதுக்குள் இருக்கும் பருவத்தினர்தான் இந்தக் கட்டுரைகளை அதிகம் படிக்கின்றார்கள் என்ற தகவல் சந்தோஷத்தைத் தருகிறது. வெறுமனே வாசகர்களாக இராமல் மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்புகொண்டு தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வாசகர்கள் முயல வேண்டும்.
அடுத்த கட்டுரை ‘அஷ்டவர்க்கம்’ 6.3.2016ல் வெளிவரும்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.