மேஷம் முதல் மீன ராசி முடியவுள்ள பன்னிரண்டு ராசிகளில் சந்திரன் இருக்கும் போதும், அவ்வாறு சந்திரன் இருக்கும் போது மற்ற கிரகங்களால் தனித்தனியே பார்க்கப்பட்ட போதும் ஏற்படும் பலன்களை முன்னர் பார்த்தோம். சந்திரனைத் தவிர்த்து மற்ற கிரகங்கள் மேஷம் முதல் மீனம் வரையுள்ள ராசிகளில் இருக்கும் போது ஏற்படும் பலன்களை இங்கு காண்போம்.

வியாழன்:

வியாழன், செவ்வாயின் வீடுகளான மேஷம் அல்லது விருச்சிகராசியில் இருக்கப் பிறந்தவர்கள் சேனாதிபதிகளாகவும், நிறைந்த செல்வம், அதிகமான குழந்தைகள் இவற்றையுடையவர்களாகவும், ஈகைக் குணம் கொண்டவர்களாகவும், நல்லவேலைக்காரர்களை உடையவர்களாகவும், பொறுமை மிக்கவர்களாகவும், அழகான உடலுடையவர்களாகவும், புகழையும் செல்வத்தையும் கொண்டு வரும் மனைவியை அடைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

வியாழன், சுக்கிரனின் வீடுகளான ரிசபம், துலாம் ஆகிய இராசிகளில் இருக்கப் பிறந்தவர்கள் சக்தி பொருந்திய தேகத்தையுடையவர்களாகவும், சுகம், செல்வம், நல்ல நண்பர்கள், குழந்தைகள் இவர்களுடன் கூடியவர்களாகவும், கொடையாளிகளாகவும், எல்லோருக்கும் ப்ரியமானவர்களாகவும் இருப்பார்கள்.

வியாழன், புதனின் வீடுகளான மிதுனம், கன்னி இராசிகளில் இருக்கப் பிறந்தவர்கள் அதிகமான வீடுகள், தோட்டங்கள் இவைகளையுடையவர்களாகவும், குழந்தைகள், சிநேகிதர்கள் இவர்களுடன் கூடியவர்களாகவும், அமைச்சர்களாகவோ அல்லது அமைச்சர்களுக்கு நிகரானவர்களாகவோ இருப்பார்கள்.

தனது சொந்த வீடான தனுசு அல்லது மீனத்தில் குருவிருக்கப் பிறந்தவர்கள் பல ஊர்களுக்கு அதிபதிகளாகவோ, அமைச்சர்களாகவோ, நிறைந்த செல்வமுடையவர்களாகவோ இருப்பார்கள்.

சனியின் வீடான மகரத்தில் வியாழன் இருக்கப் பிறந்தவர்கள் தாழ்ந்த காரியங்களைச் செய்பவர்களாகவும், குறைந்த செல்வம் உள்ளவர்களாகவும், சந்தோஷமும், சுகமும் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.

கும்பத்தில் வியாழனிருக்கப் பிறந்தவர்கள் நல்ல மனைவி, செல்வப் பெருக்கு, குழந்தைகள் இவர்களுடன் கூடியவர்களாக இருப்பார்கள்.

சூரியனின் வீடான சிம்மத்தில் குரு இருக்கும் போது பிறந்தவர்கள் அதிகாரம் மிக்க பதவியில் இருப்பார்கள்.

சந்திரனின் வீடான கடகத்தில் குரு இருக்கப் பிறந்தவர்கள் நிறைந்த செல்வம், நல்ல மனைவி, மக்கள் இவர்களுடன் கூடியவர்களாக இருப்பார்கள்.

சுக்கிரன்:

சுக்கிரன், செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம் ஆகிய இராசிகளில் இருக்கப் பிறந்தவர்கள் பிற பெண்டிர்களைச் சேருகின்றவர்களாகவும், அதன் மூலம் செல்வத்தை இழப்பவர்களாகவும், தங்கள் வம்சத்துக்கே களங்கத்தைக் கொண்டு வருபவர்களாகவும் இருப்பார்கள்.

சுக்கிரன் தனது சொந்த வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருக்கப் பிறந்தவர்கள் தங்களது சொந்த முயற்சியால் சம்பாதிக்கப்பட்ட செல்வத்தை உடையவர்களாகவும், அரசர்களால் கௌரவிக்கப்பட்டவர்களாகவும், பயமற்றவர்களாகவும், தங்களது குடும்பம், பந்துக்கள் இவர்களுக்குள்ளே புகழ் அடைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

புதனின் வீடான மிதுனத்தில் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள் அரசு ஊழியர்களாகவும், செல்வந்தர்களாகவும், இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகளை அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.

கன்னிராசியில் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள் மிகவும் தாழ்ந்த காரியங்களைச் செய்பவர்களாக இருப்பார்கள்.

வியாழனின் வீடான தனுசு இராசியில் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள் நல்ல குணங்களை உடையவர்களாக இருந்து அதனால் கௌரவிக்கப்படுபவர்களாகவும், பெருஞ் செல்வந்தர்களாகவும் இருப்பார்கள்.

மீனராசியில் சுக்கிரனிருக்கப் பிறந்தவர்கள் அதிகம் படித்தவர்களாகவும், செல்வந்தர்களாகவும், அரசர்களால் கௌரவிக்கப்பட்டவர்களாகவும், எல்லோருக்கும் பிரியமானவர்களாகவும் இருப்பார்கள்.

சனியின் வீடான மகர, கும்ப இராசிகளில் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள் புகழ் பெற்றவர்களாகவும், பெண்களுக்கு அடங்கியவர்களாகவும், கெட்ட நடத்தையுள்ள பெண்களைச் சேருபவர்களாகவும் இருப்பார்கள்.

சுக்கிரன் சந்திரனின் வீடான கடகராசியில் இருக்கப் பிறந்தவர்கள் இரண்டு மனைவிகளையுடையவர்களாகவும், அதிகமான கர்வம், துக்கம், பயம் இவைகளால் பீடிக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள்.

சூரியனின் வீடான சிம்மராசியில் சுக்கிரனிருக்கப் பிறந்தவர்கள் பெண்கள் மூலம் கிடைக்கப் பெற்ற செல்வம் உள்ளவர்களாகவும், அழகு, அதிர்ஷ்டம், நளினம், நற்குணங்கள் மிக்க பெண்களை மனைவியாக அடைபவர்களாகவும், குறைவான ஆண் வாரிசு உடையவர்களாகவும் இருப்பார்கள்.

சனி:

சனி மேஷத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கத் தெரியாதவர்களாகவும், பிறர் சொல்வதைக் கேட்காதவர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும், நண்பர்கள் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

சனி விருச்சிகத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள் நிலையான புத்தி இல்லாதவர்களாகவும், இரக்க குணம் இல்லாதவர்களாகவும், சிறையில் வாழ்நாளைக்  கழிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

சுக்கிரனின் வீடான ரிசபத்தில் சனி இருக்கப் பிறந்தவர்கள் கெட்ட நடத்தையுள்ள பெண்களை விரும்புபவர்களாகவும், செல்வப் பெருக்கு இல்லாதவர்களாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

துலாத்தில் சனி இருக்கப் பிறந்தவர்கள் புகழ் பெற்றவர்களாகவும், கிராமங்கள், நகரங்கள்   இவைகளுக்கு தலைவர்களாகவும் பெருஞ்செல்வந்தர்களாகவும் இருப்பார்கள்.   

சனி புதனுடைய வீடான மிதுனம், கன்னி ஆகிய இராசிகளில் இருக்கப் பிறந்தவர்கள் குழந்தைகள் இல்லாதவர்களாகவும், சுகமில்லாதவர்களாகவும், எழுத்துவேலையில் தவறு செய்பவர்களாகவும் (திரு.சூர்யநாராயணராவ் not knowing painting என மொழி பெயர்த்துள்ளார். அவரே one skilled in painting என்று ஒரு பாடமிருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார். இலிங்கன் என்பவரின் தமிழ் மொழி பெயர்ப்பு ‘எழுத வல்லன்’ எனக் கூறுகிறது), ஜனங்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள்.

சனி குருவின் வீடான தனுசு, மீனம் இவைகளில் இருக்கப் பிறந்தவர்கள் காசி முதலிய புண்ணியக்ஷேத்திரங்களில் மரணம் அடைபவர்களாகவும், அந்திம காலத்தில்  சுகம் அனுபவிப்பவர்களாகவும், நல்ல குழந்தைகள், மனைவி இவைகளை அடைந்தவர்களாகவும், கிராமம், நகரம், சேனை இவைகளுக்குத் தலைமை வகிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

சனி தனது சொந்தவீடான மகரம், கும்ப இராசிகளில் இருக்கப் பிறந்தவர்கள் பிறருடைய மனைவி, சொத்துக்கள் இவற்றை அனுபவிப்பவர்களாகவும், கிராமம், நகரம் முதலிய இடங்களில் தலைமைப் பதவியில் இருப்பவர்களாகவும், பார்வை குறைந்த கண்களை உடையவர்களாகவும், சுத்தமில்லாதவர்களாகவும், செலவாளிகளாகவும் இருப்பார்கள்.

சனி சூரியனது வீடான சிம்ம ராசியில் இருக்கப் பிறந்தவர்கள் துஷ்டர்களாகவும், சுகம், குழந்தைகள் அற்றவர்களாகவும், அதிக உடலுழைப்புச் செய்பவர்களாகவும்  இருப்பார்கள்.

சனி சந்திரனின் வீடான கடகத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள் ஏழைகளாகவும், பற்களில் நோயுள்ளவர்களாகவும், தாயில்லாதவர்களாகவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களாகவும், மூர்க்கர்களாகவும் இருப்பார்கள்.

சூர்யாதி கிரகங்கள் மேஷம் முதல் மீனம் வரையுள்ள ராசிகளில் இருக்கப் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் மேலே சொல்லப்பட்டன. இவற்றை வரிக்கு வரி அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. சனி ஒரு வீட்டில் சுமார் இரண்டரை வருடங்கள் இருக்கும். அந்த இரண்டரை வருடங்களில் எத்தனையோ ஆயிரக்கணக்கில் குழந்தைகள் பிறக்கின்றன. எல்லாக் குழந்தைகளுக்கும் அதே பலனைச் சொல்ல முடியாது. சனி இருக்கும் இராசி மட்டுமல்ல, சனியிருக்கும் நவாம்சம், சனியிருக்கும் த்வாதசாம்சம், சனியின் இராசிநாதனது பார்வை, சம்பந்தம் இவைகளைப் பொறுத்து இப்பலன்கள் மாறக் கூடியவை.

ஆனால் இவை பிரஸ்ன நேரத்தில் பெரும்பாலும் சரியான பலனைக் கொடுக்கின்றன. பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிப்பதைப் போலவே, பிரஸ்ன நேரத்திலும் கிரகஸ்புடங்கள், பாவஸ்புடங்கள் இவைகளைக் கணித்து ராசி, நவாம்ச, த்வாதசாம்ச ராசிகளைக் கவனித்துக் கூர்மையான மதிநுட்பத்துடன் அலசி ஆராய்பவர்களால் மட்டுமே மேலேயுள்ள குறிப்புக்களை வைத்துப் பலன்களைக் கணிக்க முடியும். வெறுமனே சோழிகளை உருட்டிக்கொண்டு கிரகஸ்புடங்களைப் பற்றிய எவ்வித அறிவும், ஆராய்ச்சியும் இல்லாமல் இருக்கும் சோதிடர்களால் கிரக பலன்களைச் சொல்ல முடியாது.                                                           

 

 

அடுத்த கட்டுரை ‘எட்டில் சனி ஒன்பதில் குரு' 17.04.2016ல் வெளியாகும்.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.