சோதிடரைத் தேடிப் போகின்றவர்களுக்கு அட்டமத்தில் சூர்யன், ஆறில் செவ்வாய், ஏழில் கேது போன்ற வார்த்தைகள் பழகிப் போயிருக்கக் கூடும். ஆனால் அட்டமம், ஆறு, ஏழு என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தப் பன்னிரண்டு கட்டங்களும் என்னென்ன நிகழ்வுகள் அல்லது என்னென்ன பலன்களைக் கொடுக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் சில அடிப்படையான விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவரது ஜாதகத்தில் லக்னம் அல்லது ‘ல’என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ராசி அவரது லக்னமாகும். இந்த லக்னத்தின் மூலம் அவரது தோற்றம், ஆளுமைத்தன்மை என்னும் PERSONALITY, ஆயுள் போன்றவற்றைச் சொல்ல வேண்டும். லக்னத்தின் இரண்டாவது ராசி மூலம் (Clockwise) குடும்பம், பொருள் வரவு முதலியவற்றையும், மூன்றாமிடத்தால் மனத்துணிவு, இளைய சகோதரர்கள், சிறு பயணங்கள் இவற்றையும் நான்காமிடத்தால் தாய் வீடு, நிலங்கள், வாகனங்கள் இவற்றையும், ஐந்தாமிடத்தால் அறிவு, குழந்தைகள் இவற்றையும், ஆறாமிடத்தால் நோய்கள், எதிரிகள், கடன் இவற்றையும் சொல்ல வேண்டும்.

ஏழாமிடத்தால் மனைவி, இல்லறவாழ்க்கை, எட்டாமிடத்தால் மரணம், ஒன்பதாமிடத்தால் தந்தை, குரு, பத்தாமிடத்தால் தொழில், தலைமைப் பண்பு, பதினோராமிடத்தால் மூத்த சகோதரர்கள், எண்ணங்கள் நிறைவேறுதல், பன்னிரண்டாமிடத்தால் சிறைவாசம், நீண்டகால நோய்கள், செலவு ஆகியவை சொல்லப்பட வேண்டும்.

சூரியன், செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது ஆகியவை பாபக் கிரகங்கள் என்பதால் இக்கிரகங்கள் இருக்கும் இடம் கெட்டுப் போகும் என்றும், புதன், குரு, சுக்கிரன் ஆகிய  சுபக்கிரகங்கள் இருக்கும் இடம் வளர்ச்சியும், மேன்மையும் அடையும் என்றும் கூறுவது பொதுவான வழக்கம்.

 

sample horoscope

இந்த ஜாதகத்தைப் பார்க்கலாம். லக்னத்தில் சூர்யனும், புதனும். இரண்டாமிடத்தில் சுக்கிரன். மூன்றாமிடத்தில் குருவும், சனியும். ஐந்தாமிடத்தில் கேது. ஏழாமிடத்தில் சந்திரன். ஒன்பதாமிடத்தில் செவ்வாய். பதினொன்றில் ராகு. இப்படித்தான் 99 சதவித சோதிடர்கள் பார்க்கிறார்கள்.

ஆனால் பத்தாம் பாவம் மிதுனத்தில் 28 பாகை 49 கலையில் இருப்பதால் அதற்குச் சமீபத்தில் உள்ள செவ்வாயைப் பத்தாமிடத்தில் இருப்பதாகவும், 4ம் பாவமான தனுசு 28 பாகை 49 கலைக்குச் சமீபத்தில் இருக்கும் சனியை நான்காமிடத்தில் இருப்பதாகவும், சந்திரன் எட்டாமிடத்திலும், கேது ஆறாமிடத்திலும், சூர்யன், புதன் இரண்டாமிடத்திலும், சுக்கிரன் மூன்றாமிடத்திலும் இருப்பதாகவும்தான் பலன் சொல்ல வேண்டும். இந்திய வான சாஸ்திரிகளின் கருத்துப்படி லக்னத்தில் உதயமாகும் பாகை லக்னத்தின் மத்தி என்றும் அதிலிருந்து முன்னே 15 பாகை வரையும், பின்னே 15 பாகை வரையும் லக்ன பாவம் என்றும் கருத வேண்டும். அப்படிப் பார்த்தால் இந்த ஜாதகத்தில் துலாத்தில் 1 பாகை உதயமாகியிருப்பதால் துலாம் 16 பாகை வரைதான் லக்ன பாவம் என்றும், அதன் பிறகு இரண்டாம் பாவம் ஆரம்பித்து விடுவதால் சூரியனும், புதனும் இரண்டில் இருப்பதாகக் கருதி இரண்டாமிடத்துச் சூரிய புதன் பலன்களையே சொல்ல வேண்டும்.

இதுபற்றிக் கடலங்குடி திரு.நடேச சாஸ்திரிகள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். ‘ராசி ஒன்றிற்கு 30 பாகங்கள். இவற்றையே ஆங்கிலத்தில் டிகிரி (DEGREE) என்பர். ஆகவே மேஷாதி ராசிகளில் எத்துணையாவது பாகத்தில் ஒருவனுக்கு ஜனனமேற்பட்டதோ, அந்தப் பாகத்தையே நடுவாகக் கொண்டு அப்பாகத்திற்கு முந்தியுள்ள 14 ½ பாகங்களும், பிந்தியுள்ள 14 ½ பாகங்களும், ஜனனமான பாகம் 1ம் சேர்த்து மொத்தம் 30 பாகங்கள் கொண்டது லக்கின பாவமாக ஏற்படும் என்றும் இவ்விதம் எந்த ராசியில் எத்துணையாவது பாகத்தில் சூர்யாதி கிரகங்கள் இருக்கின்றனவோ அவர்களிருக்கும் அந்தப் பாகத்திற்கு முந்தியுள்ள 14 ½ பாகங்களும், பிந்தியுள்ள 14 ½ பாகங்களும் தற்காலம் கிரகமிருக்கும் பாகம் 1ம் சேர்த்து ஏற்படும் 30 பாகங்களும் முன் லக்ன பாவத்திற்குச் சொன்ன முறைப்படி எத்துணையாவது பாவமாக ஏற்படுகின்றதோ அந்தப் பாவத்திலேயே சூர்யாதி கிரகங்கள் இருக்கின்றனவென்றறிய வேண்டும் என்றும் இவ்விதம் பாவ நிர்ணயம் அந்தந்தப் பாவத்தில் கிரக ஸ்திதி நிர்ணயம் இவற்றைச் செய்து கொண்டு இவ்வத்தியாயத்திற்கு சொல்லிய பலன்களைக் கவனித்துப் பார்த்தால் அது அனுபவத்திற்கு ஒத்திருக்கும் என்பது சில நிபுணர்களின் கொள்கை. வேறு சிலர் மேஷாதி ராசிகளில் எத்துணையாவது பாகத்தில் ஜனனம் ஏற்பட்டதோ, அந்தப் பாகத்திற்கு முன்சென்ற பாகங்கள் எவ்வளவோ அவ்வளவு பாகங்களை அடுத்த ராசியில் சேர்த்துக்கொண்டு ஏற்படுகின்ற 30 பாகங்களையே லக்கினபாவமாக அறிய வேண்டும் என்று கூறுகின்றனர். நமது அனுபவத்தில் இரண்டாவது முறையே பல ஜாதகங்கள் விஷயத்தில் ஒத்து வருகின்றதாயினும், முதலாவது முறையும் இரண்டொரு ஜாதக விஷயத்தில் ஒத்து வருகின்றது. ஆகவே இரண்டாவது முறையைப் பூராவாக ஆதரிக்கின்றோமாயினும் முதலாவது முறையை அடியோடு தள்ளிவிடுவதற்கில்லை என்றும் எண்ணுகிறோம்.

கடலங்குடி திரு. நடேச சாஸ்திரிகளின் கருத்துப்படி மேலே உள்ள ஜாதகத்தில் துலாம் 1 பாகை உதயமாவதால் விருச்சிகம் 1 பாகை வரை லக்னம் என்றும் விருச்சிகம் 1 முதல் தனுசு 1 வரை இரண்டாவது பாவம் என்று எடுத்துக்கொண்டு பலன் சொல்ல வேண்டும். அப்படிப் பார்த்தால் நாம் முதலில் சொன்னது போல் 99 சதவீத சோதிடர்கள் சொல்வதுதான் சரி  என்று தோன்றும். ஆனால் இதே ஜாதகர் துலாத்தில் 25 பாகையில் பிறந்திருந்தால் புதனையும், சுக்கிரனையும் லக்னத்தில் இருப்பதாகவும், சூர்யனைப் பன்னிரண்டில் இருப்பதாகவும், சந்திரனை ஆறில் இருப்பதாகவும், செவ்வாயை எட்டில் இருப்பதாகவும் சொல்ல வேண்டும். ஆனால் அப்போதும் இதே 99 சதவீத சோதிடர்கள் சூர்யனை லக்னத்திலும், சுக்கிரனை இரண்டிலும், சந்திரனை ஏழிலும் வைத்துத்தான் பலன் சொல்வர்.

இந்த இரண்டுவிதமான கருத்துக்களை இங்கே குறிப்பிடுவதற்கான காரணம் என்னவென்றால் லக்னம் முதல் பன்னிரண்டு வரையான பாவங்களில் சூரியன் முதல் சனி வரையுள்ள கிரகங்கள் இருப்பதால் என்னென்ன பலன்களை வராகமிகிரர் சொல்லியிருக்கின்றார் என்பதைக் கீழே கொடுக்க உள்ளோம். வாசகர்கள் தங்களது ஜாதகத்தை வைத்து இந்த இரண்டு மாதிரியான வழிகளிலும் பொருத்திப் பார்த்துச் சரியான முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நீண்ட விளக்கம்.

சூர்யன்:

சூர்யன் லக்னத்தில் இருக்கப் பிறந்தவன் சண்டையிடுவதில் பிரியம் உள்ளவனாகவும், காரியங்களை மெதுவாகச் செய்பவனாகவும், கண்பார்வையில் குறைவுள்ளவனாகவும், இரக்கமற்றவனாகவும் இருப்பான். ஆனால் மேஷ லக்னத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவன் செல்வந்தனாகவும், கண்ணில் நோயுள்ளவனாகவும் இருப்பான். சிம்மம் லக்னமாகி அதில் சூரியனிருக்கப் பிறந்தவன் இரவில் கண்தெரியாதவனாக இருப்பான். துலா லக்னத்தில் சூரியனிருக்கப் பிறந்தவன் ஏழையாகவும், பார்வையற்றவனாகவும் இருப்பான். கடக லக்னத்தில் சூரியனிருக்கப் பிறந்தவனுக்கும் கண்பார்வைக் குறைவு உண்டு. எனவே எந்த லக்னமாயினும் சூர்யன் லக்னத்தில் இருப்பது கண்களைப் பாதிக்கின்றது என்பது தெளிவாகின்றது.

இரண்டாம் பாவத்தில் சூர்யன் இருக்கும் போது பிறந்தவன் பெருஞ்செல்வந்தனாக இருப்பான். அதே சமயத்தில் அரசுக்கு அபராதமாகவோ வரியாகவோ பணம் செலுத்துபவனாகவும் இருப்பான். முகத்தில் நோயுள்ளவனாகவும் இருப்பான். (B. சூர்யநாராயணராவ் தனது மொழிபெயர்ப்பில் that the face will not have a healthy appearance and probably there will be cutaneous eruptions, sores or boils or other skin diseases என்று கூறுகின்றார்)

மூன்றாம் பாவத்தில் சூர்யனிருக்கப் பிறந்தவன் புத்தி, பராக்கிரமம் இவையுள்ளவன்.

நான்காம் பாவத்தில் சூரியனிருக்கப் பிறந்தவன் சுகமற்றவன்.

ஐந்தாம் பாவத்தில் சூரியனிருக்கப் பிறந்தவன் புத்திரன் இல்லாதவனாகவும், ஏழையாகவும் இருப்பான்.

ஆறாம் பாவத்தில் சூரியனிருக்கப் பிறந்தவன் உடல் பலமுள்ளவனாக இருப்பான். அதே சமயத்தில் எதிரிகளிடம் தோற்றுப் போகின்றவனாகவும் இருப்பான். (ஆறாமிடத்தில் பாவர் இருப்பின் சத்ருக்களை அழிப்பர் என்றும் நோய்களும் கவலைகளும் அற்ற நிலையைக் கொண்டு வருவர் என்பது சத்யாசாரியார் கொள்கை. வராகமிகிரர் சத்யாசாரியரின் கொள்கைக்கு எதிர்நிலையை எடுக்கின்றார்.)

ஏழாம்பாவத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவன் பெண்கள் மூலம் அவமானத்தை அடைகின்றான்.

எட்டாம் பாவத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவன் குறைவான ஆண்குழந்தைகளையுடையவனாகவோ அல்லது எவ்வித நல்லகுணங்களுமற்ற ஆண் குழந்தைகளை உடையவனாகவோ இருப்பான்.

ஒன்பதாமிடத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவன் நல்ல குழந்தைகள், செல்வம், சுகம் இவற்றை அடைகின்றான்.   

பத்தாமிடத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவன் சுகமுள்ளவனாகவும் செயற்கரிய கார்யங்களைச் செய்கின்றவனாகவும் இருக்கின்றான்.

பதினோராமிடத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவன் பெருஞ்செல்வந்தனாக ஆகின்றான்.

பன்னிரண்டாமிடத்தில் சூரியனிருக்கப் பிறந்தவன் கீழான காரியங்களைச் செய்கின்றான்.


செவ்வாய்:

செவ்வாய்க்குப் பலன்களைக் குறிப்பிடும் போது ஒன்று இரண்டு ஒன்பது ஆகிய பாவங்களைத் தவிர்த்து மற்ற பாவங்களில் சூர்யனைப் போலவே பலன்கள் சொல்ல வேண்டும் என்றும் இந்த 3 பாவங்களில் மட்டும் வேறு பலன்களைச் சொல்ல வேண்டும் என்றும் வராகமிகிரர் குறிப்பிடுகின்றார்.

லக்னத்தில் செவ்வாயிருக்கப் பிறந்தவன் காயங்களோடு கூடிய உடலையுடையவனாகின்றான்.

இரண்டாம் பாவத்தில் செவ்வாயிருக்கப் பிறந்தவன் நல்ல உணவுகள் உண்ணாதவனாக ஆகின்றான்.

ஒன்பதாம் பாவத்தில் செவ்வாயிருக்கப் பிறந்தவன் எல்லோராலும் பழிக்கப்படும் பாபமான காரியங்களைச் செய்கின்றான்.

மீதமுள்ள பாவங்களில் சூரியனைப் போலவே பலன்கள் கொடுக்கின்றான்.
   

 

சந்திரன் புதன் குரு சுக்கிரன் சனி ஆகிய கிரகங்கள் லக்னம் முதல் பன்னிரண்டு முடிய உள்ள பாவங்களில் இருக்கப் பிறந்தவர்களைப் பற்றிய குறிப்புக்கள் இதன் தொடர்ச்சியாக 24.04.2016ல் வெளிவரும்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.