24.04.2016 அன்று ஒரு தொலைக்காட்சியில் சோதிடர் ஒருவர் சூரிய, சந்திர கிரகண தோஷங்கள் என்ற அபத்தமான தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். திரையில் கிரகணங்களை விளக்கிச் சொல்வதற்காக ஜாதகக் கட்டம் ஒன்றை எழுதி சூரியனுக்கு ஏழாம் வீட்டில் சந்திரனைக் குறிப்பிட்டுக் காட்டி சூரியகிரகணம் என்றார். சூரிய, சந்திர கிரகணங்களின் அடிப்படை விதி கூடத் தெரியாமல் தொலைக்காட்சியில் தோன்றித் தானும் ஒரு சோதிடர் என்று பெருமை பேசும் இவர்களிடம் இந்தச் சாஸ்திரம் சிக்கிச் சீரழிவதைப் பார்த்தால் வேதனையாக இருக்கின்றது. இவர்களிடம் போய் தங்கள் ஜாதகங்களைக் காட்டிப் பலன் கேட்கும் பாமர மக்களை யார் காப்பாற்றுவது ?

இந்தச் சோதிடர்கள் இட்டுக்கட்டுகின்ற தோஷங்களும், அவற்றுக்கான பரிகாரங்களும் எண்ணில் அடங்காதவை. இவர்கள்தாம் சில தவறான கருத்துக்களைப் பாமர மக்களிடையே பரப்பியிருக்கின்றார்கள். ஆதாரமில்லாத அவற்றைக் குறித்து எழும் சந்தேகங்களைச் சில கேள்விகளாக்கி அவற்றுக்கான பதில்களையும் கீழே குறிப்பிட்டுள்ளேன். வாசகர்கள் படித்துத் தெரிந்து கொண்டு ஒரு தெளிவான சிந்தனைக்கு வரவேண்டும் என்பதே என் அவா.

வினா:    ஒரு வீட்டில் தந்தை, தாய், குழந்தைகள் எல்லோருக்கும் ஒரே கிரகத்தின் தசை நடைபெற்றால் பாதிப்புக்கள் எவையேனும் வருமா?
விடை:    இல்லை. கிரக தசைகளின் நற்பலன் அல்லது தீய பலன் அக்கிரகங்களின் ஷட்பலத்தைப் பொறுத்தும், அக்கிரகங்கள் இடம் பெற்றுள்ள பாவத்தைப் பொறுத்துமே அமைகின்றன.

வினா:    நட்சத்திரத்துக்குரிய எழுத்துக்களில் தொடங்கும் பெயரைத்தான் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டுமா? அப்படி வைத்தால் அல்லது வைக்காவிட்டால் என்ன பலன்கள்?
விடை:    பெயர் ஒரு அடையாளமே. எந்தப் பெயரையும் யாருக்கும் வைக்கலாம். நட்சத்திரத்துக்குரிய எழுத்துக்களில் பெயரை வைத்தால் அந்த நட்சத்திரத்தில் அந்தக் குழந்தை பிறந்திருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளலாமே தவிர வேறு பயன்கள் இல்லை.

வினா:    ஏழரைச் சனி, அட்டமத்துச் சனி என்றெல்லாம் சனியின் கோசார நிலையைச் சொல்லி மிகவும் பயமுறுத்துகின்றார்களே அவை என்ன மிகவும் பொல்லாத கால கட்டமா?
விடை:    இந்த ஏழரைச் சனி, அட்டமத்துச் சனி என்பனவெல்லாம் மூலநூல்களில் கிடையாது. இவை போலிச் சோதிடர்களின் கண்டுபிடிப்புக்கள். சந்திரனுக்கு மூன்று, ஆறு, பதினொன்று இந்த ராசிகளில் மட்டுமே சனி நற்பலன்களை செய்யும். மீதமுள்ள இடங்களில் தீயபலன்களையே செய்யும் என்பது கோசார பலனைச் சொல்லும் நூற்களில் உள்ள விதி. அதில் ராசி அதற்கு இரண்டு பன்னிரண்டாம் இடங்களை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்ல இந்த சோதிடர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி ஒருவர் ஏழரைச் சனியில் தான் கொடிகட்டிப் பறந்தார். ஏழரை நீங்கியவுடன் பதவியிலிருந்து இறங்கினார். திரு.மொரார்ஜி தேசாய் ஏழரைச் சனியில்தான் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார். எத்தனையோ பேர் ஏழரைச் சனியில் திருமணம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அரசு உத்தியோகத்தில் நுழைந்திருக்கின்றார்கள். எனவே இந்த ஏழரைச் சனி, அட்டமத்துச் சனி என்பனவெல்லாம் வெறும் பிதற்றல்கள்.  ஹிட்லர் 1933 ஜனவரி 30ல் ஜெர்மன் அதிபராகப் பதவி ஏற்கும் போது அவருக்கு ஏழரைச் சனி காலகட்டம்தான். சிம்மத்தில் குரு இருக்கும் போது (சிம்மம் தனுசுராசியில் பிறந்த ஹிட்லருக்கு ஒன்பதாமிடம்) பதவியில் ஏறிய அவர் 1945 ஏப்ரல் 30ல் தற்கொலை செய்து கொண்ட போதும் குரு சிம்மத்தில்தான் இருந்தது. இங்கே ஒன்பதாமிடத்துக் குருவுக்கு என்ன பலன்கள் சொல்வார்கள் இந்தப்  போலிச் சோதிடர்கள்? எனவே ஏழரைச் சனி, அட்டமத்துச் சனி, ஒன்பதாமிடத்துக்குரு என்பதெல்லாம் அபத்தம் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது முட்டாள்தனம்.

வினா:    பாதகாதிபதி கேந்திராதிபத்திய தோஷம் என்பவையும் அப்படித்தானா?
விடை:    அப்படித்தான். சர லக்னத்துக்குப் பதினோராமிடமும், ஸ்திர லக்னத்துக்கு ஒன்பதாமிடமும், உபய லக்னத்துக்கு ஏழாமிடமும், பாதக ஸ்தானங்கள் என்பவைவெல்லாம் வராக ஹோரையில் இல்லை. திரு.இந்திராகாந்தி அவர்கள் பாரதப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட போது கடக லக்னத்தில் பிறந்த அவருக்கு வியாழ தசை நடந்துகொண்டிருந்தது. வியாழன் பாதக ஸ்தானமாகிய பதினோராமிடத்தில்தான் இருந்தது. உபயலக்னங்களுக்கு ஏழில், பத்தில், குரு அல்லது புதன் இருந்து அவர்களது தசையும் நடந்து யாருக்காவது நல்ல பலன்கள் நடக்காமல் போயிருக்கலாம். அதன் காரணங்களை அறியாத, அறிய முனைப்பு இல்லாத சோதிடர்கள் இந்தப் பாதக ஸ்தானம் பற்றிய கொள்கையை வகுத்திருக்கலாம். கேந்திரங்கள்தான் மிக முக்கியமான இடங்கள். அப்படியிருக்கும் போது கேந்திரங்களில் புதன், குரு இவர்கள் நல்ல பலனைச் செய்யமாட்டார்கள் என்று சொல்வது சரியில்லை. குறிப்பாகக் குரு கேந்திரங்களில் நின்றால் சகல அரிஷ்டயோகங்களுக்கும் பங்கம் வரும் என்று எல்லாச் சோதிட நூல்களும் கூறும் போது இந்தக் கேந்திராதிபத்திய தோஷம் எங்கிருந்து வந்தது? லக்னத்துக்குப் பலம் சொல்லும் போது புதன், குரு, சுக்கிரர்களால் லக்னம் பார்க்கப்பட்டால் அல்லது அவர்கள் லக்னத்தில் இருந்தால் அதிக பலம் என்று சொல்லும் மூலநூல்கள் உபய லக்னத்துக்கும் அதே விதியைத் தானே சொல்கின்றன? பின் இந்தக் கேந்திராதிபத்திய தோஷம் எங்கிருந்து வந்தது? எனவே இவற்றைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

வினா:    பெண்களின் ஜாதகத்தில் ஏழு அல்லது எட்டாமிடத்தில் இருக்கும் செவ்வாய் இல்லற வாழ்க்கையில் பிரிவையோ அல்லது இழப்பையோ கொண்டு வருமா?
விடை:    இல்லை. ஏழு அல்லது எட்டில் செவ்வாயிருந்தால் ஒரு பெண் இல்லற வாழ்க்கையை இழப்பாள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. கீழேயுள்ள நான்கு வாக்கியங்களை நன்கு சிந்தித்துப் பாருங்கள்.

  1. புகை பிடிப்பவர்கள் அனைவருக்கும் புற்று நோய் வருகின்றது.
  2. புற்று நோய் வந்தவர்கள் அனைவரும் புகை பிடிப்பவர்கள்.
  3. புகை பிடிப்பவர்களில் பெரும்பாலோருக்குப் புற்றுநோய் வருகின்றது.
  4. புற்றுநோய் வந்தவர்களில் பெரும்பாலோருக்குப் புகைப் பழக்கம் இருந்திருக்கின்றது.

இதில் முதல் இரண்டு வாக்கியங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் அவை நூறு சதவிதம் உண்மையானவை அல்ல. ஆனால் மூன்றாவது நான்காவது வாக்கியங்களில் ஒரளவுக்கு உண்மையுள்ளது. ஆனால் பெரும்பான்மையாக ஒப்புக்கொள்ள வேண்டியது நான்காவது வாக்கியமே. ஏனெனில் புகைப்பழக்கம் உள்ளவர்கள் எல்லோரையுமே பரிசோதனைக்கு உட்படுத்துவது என்பது சாத்தியமில்லை. ஆனால் புற்று நோயாளிகளின் Case History-ல் அவர்களது பழக்க வழக்கங்கள் கேட்டுப் பதிவு செய்யப்படுவதால் நான்காவது வாக்கியம் மட்டுமே உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது.
இப்பொழுது செவ்வாய் தோஷம் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்.

  1. ஏழில் செவ்வாய் உள்ளவர்கள் அனைவரும் இல்லற வாழ்க்கையை இழக்கின்றார்கள்.
  2. இல்லற வாழ்க்கையில் இழப்பு ஏற்பட்டவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் ஏழில் செவ்வாய் இருக்கின்றது.
  3. ஏழில் செவ்வாய் இருப்பவர்களில் பெரும்பாலோர் இல்லற வாழ்க்கையை இழக்கின்றார்கள்.
  4. இல்லற வாழ்க்கையை இழந்தவர்களில் பெரும்பாலோருக்கு ஏழில் செவ்வாய் இருக்கின்றது.

நான்காவது வாக்கியம் மட்டுமே உண்மைக்குச் சமீபமாய் இருக்கிறது.
முடிவு: 1. புகைப் பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.
          2. ஏழில் செவ்வாய் இல்லற வாழ்க்கையைக் குலைக்கும்.
புகைப்பழக்கம் புற்றுநோயைக் கொண்டு வரும் என்பதில் எந்த அளவுக்கு உண்மையுள்ளதோ, அந்த அளவுக்கே ஏழு அல்லது எட்டில் செவ்வாய் உள்ள பெண்களுக்கு இல்லற வாழ்க்கை இல்லாமல் போகின்றது என்பதிலும் உண்மை உள்ளது.
இது ஒரு எச்சரிக்கை. அவ்வளவே.

வினா:    ஐந்தில் ராகு அல்லது கேது இருப்பவர்களுக்கு நாகதோஷம் என்றும் இதற்காகப் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதும் சரியா?   
விடை:    தவறு. ஐந்தில் ராகு அல்லது கேது இருப்பதால் எந்தத் தோஷமும் இல்லை. இப்படி இருப்பவர்களில் பெரும்பாலோருக்குக் குழந்தைகள் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். அதாவது பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கின்றன அல்லது ஆண் குழந்தைகள் மட்டுமே இருக்கின்றன. இதை ஒரு தோஷம் என்று கருத வேண்டியதில்லை. அதற்காகப் பரிகாரம் செய்ய வேண்டியதுமில்லை. கேரள தேசத்துச் சோதிடர்கள் ஐநூறு வருஷங்களுக்கு மேலாக இப்பரிகாரங்களைச் சொல்லித்தான் திருவனந்தபரம் பத்மநாபசுவாமி கோயிலில் இவ்வளவு தங்கம் சேர்ந்திருக்கிறது என்பது என் அபிப்ராயம்.

வினா:    மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்குச் சில தோஷங்கள் சொல்லப்பட்டுள்ளனவே அவை சரியானதுதானா?
விடை:    இல்லை. எல்லா நட்சத்திரங்களும் நல்லவைதான். வராகஹோரையில் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குப் பலன்கள் சொல்லும் அத்தியாயத்தில் மேற்கண்ட தோஷங்கள் சொல்லப்படவில்லை. வழிவழியாய் வரும் புராணக்கதைகளும், போலிச் சோதிடர்களுமே இம்மாதிரி அபிப்பிராயங்கள் உருவாகக் காரணம். மற்றபடி இதில் எள்ளளவும் உண்மையில்லை.

வினா:    இராஜயோகம் உள்ள ஜாதகர்கள் எல்லோருமே ராஜாக்களாக முடியுமா? எத்தனையோ ஜாதகங்களில் கிரகங்கள் உச்சமாக இருந்தும் நல்ல பலன்கள் நடக்கவில்லையே ஏன்?
விடை:    இராஜயோகம் உள்ள ஜாதகர்கள் எல்லோருமே ராஜாக்கள் ஆவதில்லை. ஆனால் ராஜாக்களாக இருப்பவர்கள் ஜாதகத்தில் ராஜயோகம் இருக்கின்றது. இது நான் முன்பு சொன்னது போல ஏழில் அல்லது எட்டில் செவ்வாய் உள்ள ஜாதகிகளுக்கும் பொருந்தும். ஏழு அல்லது எட்டில் செவ்வாய் இருப்பவர்கள் எல்லோருமே கைம்பெண்கள் ஆவதில்லை. ஆனால் கைம்பெண்களாக இருப்பவர்களின் ஜாதகத்தைப் பார்த்தால் ஏழு அல்லது எட்டில் செவ்வாய் இருக்கின்றது. எட்டில் செவ்வாய் இருக்கப் பிறந்த ஆண்கள் எல்லோருமே துர்மரணத்தைச் சந்திப்பதில்லை. ஆனால் துர்மரணம் அடைந்தவர்களின் ஜாதகத்தைப் பார்த்தால் எட்டில் செவ்வாய் இருக்கின்றது. இது புள்ளியியல் ஆய்வாளர்களின் பணி போன்றதுதான். நூறு ஜாதகங்களைப் பார்த்துச் சில யோகங்களை அடையாளம் கண்டு அந்த யோகங்கள் உள்ள எல்லோருமே அந்த பலனை அடையக் கூடும் என்றுதான் ஆரம்பகாலச் சோதிட வல்லுனர்கள் வகுத்திருக்கக் கூடும். எனவே எனக்குக் கிரகம் உச்சமாக இருப்பதால் நான் ஏன் ராஜாவாக ஆகவில்லை என்று யாராவது கேட்டால் அது நடக்க எவ்வளவு வாய்ப்பு உள்ளதோ அந்த அளவுக்கு நடக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். விஞ்ஞானம் எப்படி என்றுதான் ஒரு காரியத்தை விளக்கும். ஏன் என்று சொல்லாது. சோதிடர் மட்டும் ஏன் என்று கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியில்லை. ஒளி ஒரு வினாடிக்கு 186000 மைல்கள் பயணிக்கும் என்று ஒளியின் வேகத்தைக் கண்டுபிடித்துச் சொன்ன அறிவியலாளர்களுக்கு ஏன் ஒளியால் வினாடிக்கு 186100 மைல்கள் பயணிக்க முடியவில்லை என்று கேட்டால் விடை சொல்லத் தெரியுமா என்ன? வினாக்களைத் தொடர்ந்து கேட்பதுதான் விஞ்ஞானம். சோதிடர்களும் நிறையக் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டிருந்தால் சோதிட சாஸ்திரமும் நல்ல நிலைக்கு வந்திருக்கும். புதிலாக அவர்கள் பரிகாரங்களுக்குள்ளேயும் பூர்வ ஜன்மப் புண்ணியத்துக்குள்ளேயும் பதுங்கிக் கொண்டதால் இந்த அற்புதமான சாத்திரம் அழிவின் விளிம்புக்கு வந்திருக்கின்றது.
 

  
அடுத்த கட்டுரை ‘சில கேள்விகளும் பதில்களும் - தொடர்ச்சி' 08.05.2016ல் வெளியாகும்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.