இதற்கு முந்திய இரண்டு கட்டுரைகளில் ஆஸ்ரய யோகங்கள், ஆகிருதி யோகங்கள் முதலியவற்றைப் பார்த்தோம். இனி சங்க்யா யோகங்களைப் பார்ப்போம். வல்லகீ, தாமனீ, பாசம், கேதாரம், சூலம், யோகம், கோளம் என்று சாங்கிய யோகங்கள் ஏழு வகையாக அமைகின்றன.
வல்லகீ:
ஏழு கிரகங்களும் ஏழு ராசிகளில் இருக்குமானால் அது வல்லகீ யோகம் எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவன் கூர்மையான புத்தியுள்ளவனாகவும், சங்கீதம், நடனம் போன்ற நுண்கலைகளில் பற்றுள்ளவனாகவும் இருப்பான்.
தாமனீ:
ஏழு கிரகங்களும் ஆறு ராசிகளில் இருக்குமானால் அது தாமனீ எனப் பெயர் பெறும். தாமனீ யோகத்தில் பிறந்தவன் கொடையாளியாகவும், பிறர்க்கு உதவி செய்வதில் விருப்பமுள்ளவனாகவும், பசுக்களைப் போஷிப்பவனாகவும் இருப்பான்.
பாசம்:
ஏழு கிரகங்களும் ஐந்து இராசிகளில் இருக்குமானால் இந்த யோகம் பாசம் எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவன் நல்ல வழிகளில் நிறையப் பொருட்களைச் சம்பாதிப்பவனாகவும், சுற்றத்தார்கள், வேலையாட்கள் இவர்களுடன் கூடியவனாகவும் இருப்பான்.
கேதாரம்:
ஏழு கிரகங்களும் நான்கு ராசிகளுக்குள் இருக்குமானால் இந்த யோகம் கேதாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகத்தில் பிறந்தவன் பெரிய விவசாயியாகவும், எல்லோருக்கும் உதவுகின்ற குணமுள்ளவனாகவும் இருப்பான்.
சூலம்:
ஏழு கிரகங்களும் மூன்று ராசிகளுக்குள் இருக்குமானால் இந்த யோகம் சூலம் என்னும் யோகமாகும். சூல யோகத்தில் பிறந்தவன் சண்டைகளில் பிரியமுள்ளவனாகவும், காயமடைந்த உடலுடையவனாகவும், பணத்தின் மேல் ஆசையுள்ள ஏழையாகவும் இருப்பான்.
யுகம்:
எல்லாக் கிரகங்களும் இரண்டு ராசிகளுக்குள் இருக்குமானால் இந்த யோகம் யுகம் எனப் பெயர் பெறும். இந்த யோகத்தில் பிறந்தவன் செல்வம் அற்றவனாகவும், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளுக்குப் புறம்பான செயல்களைச் செய்பவனாகவும் இருப்பான்.
கோளம்:
எல்லாக் கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும் போது கோளம் என்னும் யோகம் கிடைக்கப் பெறுகிறது. இந்த யோகத்தில் பிறந்தவன் சோம்பேறியாகவும், பொது அறிவு குறைந்தவனாகவும், செல்வப் பெருக்கு இல்லாதவனாகவும், உணவுக்காக அங்குமிங்கும் அலைபவனாகவும் இருப்பான்.







1962ல் ஏழு கிரகங்களும் மகர ராசியில் ஒன்று சேர்ந்த போது உலகம் அழிந்து விடும் என்று போலிச் சோதிடர்கள் பயமுறுத்தினார்கள். இதுகுறித்து என் தந்தையாரிடம் வந்து சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டு போனவர்கள் ஏராளம். நான் அப்போது சிறுவன். ஆனால் இதே 05.02.1962ல் மிதுன லக்னத்தில் பிறந்து எல்லாக் கிரகங்களும் எட்டாமிடத்தில் இருக்கும் ஒருவரின் ஜாதகத்தை 2006ல் சிதம்பரத்தில் பார்க்க நேர்ந்தது. ஒரளவுக்குப் பலன்களும் இந்த யோகத்துக்குச் சொல்லப்பட்டது போலவே இருந்தன. இன்னும் திருமணம் செய்யாமல் தனித்தே வாழ்கின்றார் அவர்.
ஆகிருதி யோகமும், சங்க்யா யோகமும் ஒன்று சேரும் சில நிகழ்வுகளில் ஆகிருதி யோகத்தையே எடுத்துக் கொள்ள வேண்டும். லக்னம், நான்கு, ஏழு, பத்தாமிடங்களில் எல்லாக் கிரகங்களும் நின்றால் கமலம் என்னும் ஆகிருதி யோகம் கிடைக்கிறது. நான்கு ராசிகளில் எல்லாக் கிரகங்களும் நின்றால் கேதாரம் என்னும் சங்க்யா யோகம் கிடைக்கிறது. இப்போது எந்த யோகத்திற்கான பலனைச் சொல்வது? ஆகிருதி யோகத்துக்கான பலனையே சொல்ல வேண்டும்.
அப்படியானால் கேதாரம் என்ற யோகம் ஏன் சொல்லப்பட்டது? கிரேக்கர்களால் சொல்லப்பட்ட இந்த யோகங்கள் மொழி பெயர்ப்பாக இந்தியாவுக்கு வந்த போது சில முக்கியமான குறிப்புகள் விடுபட்டிருக்கலாம். எது எப்படியானாலும் இந்த யோகங்கள் வாழ்க்கை முழுமைக்கும் பலன் தருபவை.
ஆகிருதி யோகங்கள் நீண்டகால இடைவெளியில் மட்டுமே நேர்பவை. எனவே அவற்றின் வீர்யம் அதிகம். ஒவ்வொரு மாதத்திலும் பத்து நாட்கள் கிடைக்கும் கஜகேசரி யோகம், பொதுவாக 90 சதவீதம் பேருக்குக் கிடைக்கும் புத ஆதித்ய யோகம் போன்றவை அல்ல இவை. நிச்சயமாகப் பலன்தரக் கூடிய யோகங்கள் இவை.
அடுத்த கட்டுரை ‘ஆயுளைக் கணக்கிடும் முறை (ஆயுர்த்தாயம்)' 05.06.2016ல் வெளியாகும்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.