பெண்களின் ஜாதகங்கள்:-
சோதிடம் சம்பந்தமான பத்திரிக்கைகளில் வெளிவருகின்ற வினாக்கள் விடைகளைப் படித்துப் பார்த்தால் வேதனையாக மட்டுமல்ல வேடிக்கையாகவும் இருக்கிறது. எத்தனையோ பரிகாரங்கள் செய்துவிட்டோம் இன்னும் எனது மகளுக்குத் திருமணம் ஆகவில்லை. எப்போது முடியும்? என்று வரும் கேள்விகள் வேதனைப்படுத்துகின்றன என்றால் அக்கேள்விகளுக்குச் சோதிடர் அளிக்கும் பதில்கள் வேடிக்கையாக இருக்கின்றன. சந்திரனோடு ராகு இருக்கின்றது, காலசர்ப்ப யோகம் இருக்கின்றது, இரண்டில் ராகு இருக்கின்றது, எட்டில் கேது இருக்கின்றது எனவே தான் விவாகம் முடியவில்லை. வியாழக்கிழமை அந்தக் கோயிலுக்குப் போங்கள் வெள்ளிக்கிழமை இந்தப் பரிகாரம் செய்யுங்கள் என்று மனம் போன போக்கில் எதையாவது கூறிவைக்கின்றார்கள்.
இதற்கெல்லாம் காரணம் நம்மில் நிறையப் பேருக்கு வான சாஸ்திரத்தின் அடிப்படை அறிவு கொஞ்சம்கூட இல்லை என்பதுதான். படித்தவர்கள் என்ற வட்டத்துக்குள் வருபவர்களும் கூட இவ்வறிவு கிடையாது. உதாரணம் ஒன்று கூற வேண்டும். என் தந்தையாரிடம் ஒரு சோதிடர் வந்து ஐயா நாம் ஏட்டில் எழுதுகின்றோமே சூர்யன், சந்திரன் என்று (முன்பெல்லாம் ஒலைநறுக்கில்தான் ஜாதகம் எழுதப்படும்) அந்தச் சூரியனும், சந்திரனும்தான் வானத்தில் உள்ளதோ? எனக் கேட்டாராம். என் தந்தையார் அடிக்கடி இதைச் சொல்லிச் சிரிப்பார். இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. 1995 அக்டோபர் மாதம் ஒரு முழுச் சூரியகிரகணம் நிகழ்ந்தது. இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் தெரிந்த கிரகணம் அது. டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது ஒரு கல்லூரியின் விரிவுரையாளர் (அப்போதே அவருக்கு விரிவுரையாளராக இருபது வருட அனுபவம் இருக்கும்) என்னிடம் நாம் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது சூர்யகிரகணம் சந்திரகிரகணம் என்று படித்தோமே அந்தச் சூர்யகிரகணம் சந்திரகிரகணம்தான் பஞ்சாங்கங்களிலும் உள்ளதா எனக் கேட்டார். இப்படித்தான் நிறையப் பேர்கள் இருக்கின்றார்கள். சந்திரன் ஒரு ராசியில் 2 ¼ நாட்கள் இருப்பதால் 2 ¼ நாட்களில் உலகில் பிறந்த எல்லோருக்கும் ஒரே ராசிதான் சந்திரன் ராகுவோடு இருக்கும்போது பிறந்த எல்லோருக்கும் ஒரே தோஷம்தான். ஆனால் எல்லோருக்குமா விவாகம் தடைப்படுகின்றது? அதே போலத்தான் இந்தக்கால சர்ப்பயோகம் வராகமிகிரரோ, மந்த்ரேஸ்வர முனிவரோ சாராவளி எழுதிய கல்யாணவர்மரோ இந்த யோகத்தைச் சொல்லவில்லை. யாரோ ஒருவர் இடைக்காலத்தில் எழுதியிருக்கிறார். உத்தரகாலாமிர்தம் என்று நினைக்கின்றேன். ராகு, கேதுக்கள் எப்பொழுதுமே ஒன்றுக்கொன்று ஏழில் இருக்குமென்பதால் சிலகாலங்களில் ராகு, கேதுக்களுக்கு இடைப்பட்ட 6 ராசிகளில் எல்லாக் கிரகங்களும் வருவதுண்டு. ஆனால் 15 நாட்கள் கழித்தால் சந்திரன் ஒரு பக்கமாகவும், மற்ற கிரகங்கள் ஒரு பக்கமாகவும் அமையும். இது ஒரு தோஷமே கிடையாது. இந்த நாட்களில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டக் குறைவானவர்கள் என்றும் திருமணம் தடைப்படும் என்றும் முப்பத்தாறு வயது வரை அதிர்ஷ்டமில்லா வாழ்க்கை என்றும் சோதிடர்கள் யாராவது கூறினால் அதை நம்பத் தேவையில்லை.

மேலேயுள்ளது எனது தந்தையாரின் ஜாதகம். எல்லாக்கிரகங்கள் மட்டுமல்ல லக்னமும் ராகு, கேதுகளுக்குள்தான் இருக்கின்றது. அவருக்கு 23 வயதில் திருமணம் நடைபெற்றது. 14.04.1986 இரவு 11.55க்கு மரணமடைந்த அவர் எண்பது வயது வரையும் எந்தக் குறைவில்லாமலும் தான் வாழ்ந்தார்.

மேலேயுள்ளது ஒரு பெண்ணின் ஜாதகம். கேதுவுக்கும், ராகுவுக்கும் மத்தியில் எல்லாக் கிரகங்களும் உள்ளன. இரண்டில் சனி, கேது. எட்டில் ராகு ராகுவுக்குச் செவ்வாயின் பார்வையுள்ளது. அமாவாசை திதி சந்திரன் சூர்யனோடு சேர்க்கை சுக்கிரனும் சூர்யனோடு சேர்க்கை. சாதாரணமாகச் சோதிடர்கள் விவாகம் தாமதமாவதற்குக் கூறும் எல்லாக் காரணங்களும் இங்கே பொருந்தும். ஆயினும் 19 வயதில் திருமணம் முடிந்து இன்றும் நல்ல வாழ்க்கை வாழ்கின்றார். எனவே காலசர்ப்பயோகம் இருக்கின்றதே என யாரும் கவலைப்படத் தேவையில்லை.

மேலேயுள்ள ஜாதகத்திலும் சாதாரணமாகச் சோதிடர்கள் சொல்லக் கூடிய தோஷங்கள் உள்ளன. காலச்சர்ப்ப யோகம் உள்ளது. ஏழுக்குடைய குரு ஆறாமிடத்தில் ராகுவுடன் சேர்ந்துள்ளது. லக்னத்தில் சனி. குடும்பாதிபதி சுக்கிரனுக்கு அஷ்டமாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை. சந்திரனுக்குச் சனி பார்வை. இருந்தும் இந்தப் பெண்ணின் திருமணம் 25 வயதில் நடைபெற்றது. முதலில் உதாரணமாகக் காட்டப் பெற்ற பெண்ணைவிட ஆறு வருடங்கள் கழித்தே இந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடைபெற்றது. காரணம் என்னவென்றால் முதல் பெண் குடும்பத்தில் மூத்தவர். இரண்டாவது பெண் குடும்பத்தில் இளையவர். இவருக்கு முன்திருமணமாகாத சகோதர, சகோதரியர் இருந்தனர்.
ஆனால் இப்போதெல்லாம் முப்பது வயதாகியும் மணம் முடிக்காமல் உள்ள பெண்களின் எண்ணிக்கை மிக அதிகம். முதல் காரணம் வீட்டிலுள்ள பெற்றோர்கள்; இவர்கள் பத்திரிக்கைகளில் படிக்கும் டி.வி.நிகழ்ச்சியில் கேட்கும் செய்திகளை வைத்துக்கொண்டு இவர்களாகவே நட்சத்திரப் பொருத்தம் பார்த்துக் கழிக்கின்ற ஜாதகங்கள் கணக்கில் அடங்காதவை. பெண்ணின் நட்சத்திரம் இதுவென்றால் பொருத்தமான மணமகனின் நட்சத்திரம் இவைதாம் என்று அட்டவணைப்படுத்தப்பட்ட புத்தகங்கள் ஏராளமாக விற்பனையாகின்றன. அவற்றை வாங்கி வைத்துக்கொண்டு இவர்களாகவே பொருத்தம் பார்க்கின்றார்கள். இந்த நட்சத்திரப் பொருத்தம் என்பதே அபத்தமானது. மூல நூல்களில் இவை இல்லை. அநேகமாக இது கேரள தேச சோதிடர்கள் கண்டுபிடித்ததாக இருக்கும் என்பது எனது அனுமானம். எந்தவித நட்சத்திரப் பொருத்தமும் பார்க்காமல் எனது தந்தையார் சேர்த்து வைத்த எத்தனையோ தம்பதிகள் இன்றும் சௌக்கியமாக ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். மேலேயுள்ள ஜாதகங்களில் இரண்டாவது பெண்ணின் நட்சத்திரம் அனுஷம். அவரது கணவரின் நட்சத்திரம் பூசம். தினப்பொருத்தம் வராது. ரச்சுப் பொருத்தம் கிடையாது. நாற்பது வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் நலமுடன் வாழ்கின்றார்கள். மூலம், ஆயில்யம், கேட்டை மற்றும் விசாகம் நட்சத்திரங்களுக்குச் சொல்லியிருக்கிற தோஷங்களுக்கும் மூல நூலில் ஆதாரமில்லை. எந்த நட்சத்திரத்தையும் தோஷமுள்ள நட்சத்திரம் என்று வராகமிகிரர் சொல்லவில்லை.
அடுத்து எல்லோரையும் பிடித்திருக்கும் ஒரு நோய் இந்தச் செவ்வாய் தோஷம். இதற்குப் பயப்படாதவர்களே கிடையாது. வராகமிகிரர் தனது பிருஹஜ் ஜாதகத்தில் ஸ்திரீ ஜாதகம் என்ற அத்தியாயத்தில் ஏழில் செவ்வாய் இருந்து பாபகிரகங்களால் பார்க்கப்பட்டால் இளவயதில் வைதவ்யம் வரும் என்று கூறியிருக்கிறார். அதேபோல எட்டாமிடத்தில் சூர்யன், செவ்வாய், சனி போன்ற பாபக் கிரகங்கள் இருந்தாலும் வைதவ்யம் வரும் என்று கூறியிருக்கின்றார். அவர் ராகு, கேதுக்களை எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் தற்போது இந்த ஏழாமிடம் எட்டாமிடத்தோடு லக்னம் நான்கு இரண்டு பன்னிரண்டு என்று நான்கு இடங்களை அதிகமாகச் சேர்த்துக்கொண்டு சோதிடர்கள் செய்யும் குழப்பங்களுக்கு எல்லையே இல்லை. இதுவும் தேவ கேரளீயம் என்ற நூலிருந்துதான் வந்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை, செவ்வாய் உச்சத்திலிருந்தால் தோஷமில்லை என்று சில விதிவிலக்குகள் கொடுத்திருக்கின்றார்கள். அவையும் அர்த்தமில்லாதவைதான். ஏனெனில் கடக லக்னத்துக்கு இரண்டில் (சிம்மத்தில்) செவ்வாய் இருந்து விதவைக் கோலம் பூண்டவர்கள் ஜாதகமும் செவ்வாய் உச்சமாக ஏழிலிருந்தும் கணவனை இழந்த கடக லக்ன ஜாதகமும் நான் பார்த்திருக்கின்றேன்.
ஏழில் செவ்வாய் இருக்கட்டுமே! அதனால் என்ன தவறு? அதன் உண்மையான அர்த்தம் ஏழில் செவ்வாயுள்ள ஒரு பெண்ணின் அந்திமக் காலத்தில் அவர் கணவர் இருக்க மாட்டார் என்பதுதான். Her husband may predecease her. அறுபது வயதுக்கு மேல் கணவரையிழப்பது என்பது மிகவும் கொடுமையான ஒன்றல்ல. திருமண நாளிலிருந்து முப்பது வருடம் இருவரும் ஆயுளோடு வாழ்வார்கள் என்று நிச்சயமாகத் தெரிந்தால் ஜாதகப் பொருத்தம் என்று சேர்த்து விடு என்பது தான் என் தந்தையார் எனக்குச் செய்த உபதேசம். அவர் ஜாதகங்களை வைத்துக்கொண்டு ஆயுள் கணக்குத்தான் போடுவாரே தவிர நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பதில்லை.
மேலும் அவ்வாறு ஒரு பெண்ணுக்கு மணவாழ்க்கையில் இழப்பு வருமென்றால் அது எப்போது வரும் என்று கண்டுபிடிப்பது தானே சோதிடரின் வேலை? இதற்கும் வராகமிகிரர் ஒரு குறிப்பு கொடுத்திருக்கின்றார்.
க்ரூரேஅஷ்டமே விதவதா நிதனேஷ்வராம்சே
யஸ்ய ஸ்திதோ வயஸி தஸ்ய சமே ப்ரதிஷ்டா
அதாவது குரூர கிரகங்கள் எட்டாமிடத்தில் இருந்தால் எட்டுக்குடையவன் நவாம்ச சக்கரத்தில் யாருடைய வீட்டில் இருக்கின்றானோ அந்த வீட்டின் அதிபதிக்குரிய வயதில் வைதவ்யம் வரும் என்பது இதன் பொருள். இந்த வயது என்பதைக் குறிக்கும் ‘வயஸி’ என்பதற்குப் பலவாறு பொருள் சொல்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலோரின் கருத்து எட்டாமிடாத்ததிபனின் நவாம்ச நாயகனின் தசை அல்லது அந்தர்த்தசையில் வைதவ்யம் வரும் என்பதே. இந்த தசை அந்தர்த்தசை என்பதை வராகமிகிரரின் சித்தாந்தப்படி கண்டுபிடிக்க வேண்டுமே தவிர இப்போது சோதிடர்கள் கடைப்பிடித்து வரும் நட்சத்திரதசை முறைப்படி அல்ல.
மேலும் ஏழு எட்டில் பாபக்கிரகங்கள் இருந்தால் மட்டுமே கெட்டது நடந்துவிடாது. அந்தப் பாபக்கிரகம் சத்துருவான இன்னொரு பாபக்கிரகத்தால் பார்க்கப்பட்டால் அந்தக் கிரகமும் தனது சத்ரு வீட்டிலிருந்தால் கெட்ட சம்பவம் விரைவாக நடக்கலாமே தவிர எந்தக் கிரகங்களாலும் பார்க்கப்படாமலிருந்தால் விரைந்து நடக்கச் சாத்தியமில்லை. அதேபோலக் கிரகங்களிலிருக்கின்ற ராசிகளுக்கும் கிரகத்தின் வீரியத்தைக் குறைக்கும் சக்தியுள்ளது. சில சமயங்களில் ஏழு அல்லது எட்டில் இருக்கும் கிரகங்கள் அந்தப் பெண்ணுக்கே கெடுதலைக் கொண்டு வரலாம். இதையெல்லாம் நன்கு ஆராய்ந்து பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். என் தந்தையாரிடம் வதூ வரன் இருவரின் ஜாதகங்களைக் கொடுத்து விட்டு ஒரு வாரம் கழித்து வந்து ஆலோசனை பெற்றுச் சென்றவர்களே அதிகம். குறைந்தது இரண்டு நாட்களாவது மனதுக்குள் அசை போட்டுக்கொண்டேயிருந்து அதன் பின்னரே அவர் தனது முடிவைச் சொல்வார். ஆனால் ஒரு நாளைக்கு ஐம்பது ஜாதகங்களைப் பார்க்கும் எந்தச் சோதிடராலும் வருங்காலத்தைக் கணிக்க முடியாது. இப்போது பெருகி வரும் விவாகரத்துக்களுக்கு இதுவும் ஒரு காரணம்தான்.
மேலும் காலத்துக்கேற்றபடியும் சில விஷயங்களைக் கிரகித்துக் கொள்ள வேண்டியது மனிதனுக்குரிய தர்மம். ஏழாமிடம் திருமணத்தை மட்டுமே குறிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. சமுதாயத்தோடு நாம் பல இடங்களில் கைகுலுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சில வேளைகளில் சமுதாயத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. செவ்வாய் 3, 7, 11 இவ்விடங்களில் இருந்தால் அந்தப் பெண் மிகச்சிறந்த நிர்வாகியாக வரவாய்ப்பு உள்ளது. எப்போது கைகுலுக்க வேண்டும். எப்போது கையை உதற வேண்டும் என மிக இலேசாக முடிவுக்கு வர வேண்டிய பெண்களுக்குச் செவ்வாய் ஏழாமிடத்தில் இருப்பது உத்தமம். ஏழாமிடம் பத்தாமிடத்துக்குப் பத்தாம் இடமாக இருப்பதால் திடமாகவும் தீர்க்கமாகவும் முடிவெடுக்கும் பெண்களுக்கு ஏழில் செவ்வாய் இருக்கக் கூடும்.
இல்லற வாழ்க்கையை ஏழாமிடம் மட்டுமே தீர்மானிப்பது இல்லை. இரண்டு ஒன்பதாமிடங்களும் இல்லற வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் சிறுசிறு சச்சரவுகளையும் தீர்மானிப்பதிலும் தீர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே ஏழுக்குடையவன் இரண்டுக்குடையவன் ஒன்பதுக்குடையவன் ஆகிய மூன்று கிரகங்களையும் பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். இதையெல்லாம் செய்யாமல் உங்கள் பெண்ணுக்கு ஏழில் செவ்வாய் உள்ளது. நான்கில் ராகு உள்ளது எனவே இதே போன்று தோஷமுள்ள மணமகனின் ஜாதகம் வரும் வரைக்கும் பொறுத்திருக்கவும் என்று ஒரு சோதிடர் சொன்னால் அதைக் கேட்கத் தேவையில்லை.
இதன் மூலம் நான் இளம்பெண்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால் செவ்வாய் தோஷம் என்ற வார்த்தையை அலட்சியம் செய்யுங்கள். ஏழில் செவ்வாய் இருப்பது திடமான மனம் வேண்டும் என்பவர்களுக்கு வரப்பிரசாதம். பரிகாரங்களைத் தவிர்த்து விடுங்கள். கிரகங்களை லஞ்சம் கொடுத்து ஏமாற்ற முடியாது.
பிரபல சோதிடர் கடலங்குடி நடேச சாஸ்திரிகள் தனது பிருஹஜ் ஜாதகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் இவ்வாறு கூறுகிறார்.
‘ஜாதகம் பார்த்துத்தான் விவாஹஞ் செய்ய வேண்டுமென்று எந்தச் சாஸ்திரக்காரருஞ் சொல்லவில்லை. அவ்விதம் பார்க்காமல் செய்ததற்காக பிரத்யவாயம் (தோஷம்) கிடையா. பிராயச்சித்தஞ் செய்து கொள்ளவும் வேண்டாம்.’
‘அக்ஜானமாகிற இருள் சூழ்ந்த இச்சம்சாரத்தில் நன்மை தீமைகளையறியாது பரிதவிக்கும் ஜீவராசிகளுக்கு ஊழ்வினையின் பயனாய் நேரப் போகின்ற நன்மை தீமைகளை அறிந்து தீமையற்பமானால் அதைச் சாந்தி பரிஹாரத்தால் போக்கிக் கொள்ளவும் அது அவசியம் வந்தே தீருமென்று தெரிந்தால் வரவேண்டியதுதான் வந்தது என்று மனத்தையொருவாறு தேற்றிக்கொள்ளவும் அவ்விதமே இனிவரும் நன்மையைத் தக்க சாதனங்களை யனுஷ்டித்தல் மூலம் பெருக்கிக் கொள்ளவும் சாதனமான அறிவைப் புகட்டுதல் மூலம் பல சவுகரியங்கள் ஏற்படுவதால் இந்தச் சாஸ்திரத்திற்கிட்ட ‘ஜ்யௌதிஷம்’ என்ற பெயரானது பொருத்தமானதாகவே ஏற்படுகிறது.’
இதில் தீமையற்பமானால் அதைச் சாந்தி பரிஹாரத்தால் போக்கிக் கொள்ளவும் என்ற வாக்கியத்தில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை. நடப்பது நடந்தே தீரும். ஜாதகம் பார்க்காமல் விவாகம் செய்தது தோஷம் எனக் கருதி அதற்காகப் பிராயச்சித்தம் செய்த வழக்கம் முன்னால் இருந்தது என்பது மேலே அவர் எழுதியிருப்பதிலிருந்து தெரிகிறது.
சிசேரியன் மூலம் நல்லநேரத்தில் குழந்தைகளை எடுப்பதும் வெகுகாலத்துக்கு முன்னமேயே இருந்திருக்கிறது . பக்கத்து ஊர் அக்ரஹாரத்தில் குழந்தை பிறக்கும் போது லக்னத்தில் வியாழன் இருக்க வேண்டுமென்பதற்காகப் பிரசவஸ்திரீக்குப் பட்டாலான ஆடை கட்டுவார்கள் என்று என் தந்தையார் சொல்வார். ஒரு பாட்டைச் சொல்லி அதில் லக்னத்தில் குரு இருக்கும் போது பிறந்த குழந்தையின் தாய் பட்டாலான ஆடையோடு பிரசவிப்பாள் என்றிருப்பதால் லக்னத்தில் குரு இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் பட்டாடை கட்டுவார்கள் என்று சொல்வார். எனவே இந்தக் கோமாளித்தனங்கள் எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன.
முற்காலத்தில் சீக்கிரமே திருமணம் செய்யும் பழக்கம் இருந்தது. இப்போது பெண்கள் எல்லோருமே படித்து உத்யோகம் பார்த்தபின்பு திருமணம் என்று முடிவெடுப்பதால் திருமணம் குறைந்தது 24 அல்லது 25 வயதுக்குப் பின்பே நடைபெறும் சாத்தியம் உள்ளது. அப்படியிருக்கும் போது நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது செவ்வாய் தோஷமுள்ள ஜாதகத்திற்காகக் காத்திருப்பது, நாடி சோதிடம் பார்த்துப் பரிகாரங்கள் செய்வது என்று மேலும் பத்தாண்டுகள் நீட்டிப்பது நல்லதல்ல.

மேலேயுள்ள ஜாதகத்தில் ஏழில் கேது லக்னத்தில் ராகு செவ்வாய் ஏழுக்குடைய சனி எட்டுக்குடைய குருவோடு சேர்ந்து ஆறில் அப்படியிருந்தும் நவம்பர் 1977ல் (16 வருடம் 4 மாதம்) திருமணம் முடிந்து இன்னும் சுகமாக வாழ்கிறார். எனவே ராகு, கேதுக்கள் லக்னத்தில் இருப்பதால் அஞ்சத் தேவையில்லை. ராகு தசை 15 வயது 1 மாதம் 6 நாள் முதல் 33 வயது 1 மாதம் 6 நாள் வரை நடைபெற்றது. ராகு தசை ராகு புத்தியில்தான் திருமணமும் நடைபெற்றிருக்கின்றது. கடைசியாகச் செவ்வாய் தோஷம் இருக்கும் ஜாதகத்துக்குச் செவ்வாய் தோஷம் இருக்கும் ஜாதகம்தான் சேர்க்க வேண்டும் என்பதும் கீழ்க்கண்ட ஜாதகங்களில் பொய்யாகிப் போயிருக்கின்றது.


தினப்பொருத்தம் கிடையாது, யோனிப்பொருத்தம் இல்லை. பெண்ணுக்கு ஏழில் செவ்வாய், எட்டில் கேது. சுபர் பார்வையில்லை. செவ்வாய்க்குச் சனியின் பார்வையுள்ளது. ஆணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் கிடையாது. இவர்களுக்கு 1984 ஏப்ரலில் திருமணம். இப்போது பேரக் குழந்தைகளைக் கண்டுவிட்டார்கள். 31 வருடத் தாம்பத்ய வாழ்க்கை முடிந்திருக்கிறது. 23 வயதிலிருந்து 30 வயது வரை பெண்ணுக்கு ஏழிலிருக்கும் செவ்வாய் தசை நடைபெற்றது. அதன்பிறகு 48 வரை ராகு தசை இரண்டிலிருந்து நடைபெற்று முடிந்துள்ளது. எனக்குக் கூட என் தந்தையார் இந்த ஜாதகங்களைச் சேர்க்கும் போது சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அவரது கணக்குகள்; தவறியதில்லை என்பதற்கு மேலேயுள்ள ஜாதகங்களே உதாரணம்.
எனவே 1, 2, 4, 7, 8, 12ல் செவ்வாயிருக்கின்றது, ஆகையால் 1, 2, 4, 7, 8, 12ல் செவ்வாயிருக்கும் ஜாதகமே வேண்டும் என்று காத்திருப்பது வீண் வேலையாகும். மேற்கண்ட உதாரணங்கள் மூலம் இந்தச் செவ்வாய் தோஷம் தினப் பொருத்தம் முதலிய விஷயங்கள் எவ்வளவு பொய்யானவை என்று தெரிந்து கொள்ளலாம். எனவே பெண்களைப் பெற்றவர்கள் இவைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு மனப்பொருத்தம் மட்டுமே பார்த்து விவாகம் செய்து வைக்க வேண்டும். என் தந்தையார் சொல்வார் சோதிடம் நமக்கல்ல ராஜாக்களுக்கு என்று. உண்மையில் பழைய சோதிட நூல்களை ஆழ்ந்து படித்தால் அவை ராஜாக்களுக்காக மட்டுமே எழுதப்பட்டது போலத்தான் தோன்றுகிறது. இராஜ யோகாத்யாயம் என்பது அவர்களுக்காகவே எழுதப்பட்டது.
இன்னும் சில குறிப்புகள்:
சில நண்பர்கள் ரொம்பவும் டெக்னிக்கலான சமாச்சாரங்களாக எழுதுகின்றீர்களே சோதிடம் அறவே பரிச்சயமில்லாத எங்களுக்கும் புரியும்படி எழுதுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். ஒருவர் பார்வைகளைப் பற்றியும் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவர்களுக்காக கீழேயுள்ள ஜாதகத்தைக் கொடுத்திருக்கின்றேன்.

லக்னத்துக்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்கள் கேந்திரங்கள் எனப்படும். மேலேயுள்ள ஜாதகத்தில் கடகம், துலாம், மகரம்,மேஷம் முதலிய ராசிகள் கேந்திரங்களாகும். ராகு, கேது, சூர்யன், சுக்கிரன் இவை கேந்திரங்களில் உள்ள கிரகங்கள் லக்னத்துக்கு 2, 5, 8, 11 ஆகிய இடங்கள் பணபரம் ஆகும். மேலேயுள்ள ஜாதகத்தில் சிம்மம், விருச்சிகம், கும்பம், ரிசபம் முதலிய ராசிகள் பணபர ராசிகள். சந்திரன், சனி, செவ்வாய், வியாழன் இவை பணபரத்தில் உள்ள கிரகங்களாகும். லக்னத்துக்கு 3, 6, 9, 12 ஆகிய இடங்கள் ஆபோக்லீம ஸ்தானங்களாகும். கன்னி, தனுசு, மீனம், மிதுனம் இவை இங்கே ஆபோக்லீம ராசிகள் புதன் ஆபோக்லீமத்தில் உள்ள கிரகமாகும். லக்னத்துக்குப் பார்ப்பது போல் கிரகங்களுக்கும் பார்க்க வேண்டும். சூரியனுக்குக் கேந்திரத்தில் சுக்ரன் லக்னம் ராகு, கேது உள்ளன. சந்திரனுக்குக் கேந்திரத்தில் சனி செவ்வாய் குரு உள்ளன. சேவ்வாய்க்கு ஆபோக்லீமத்தில் லக்னம் ராகு, கேது, சூர்யன், சுக்கிரன் உள்ளன. இப்படியே எல்லாவற்றுக்கும் பார்த்துக்கொள்க கேந்திரங்கள் மிகப் பலமானவை. அடுத்தபடியாகப் பணபரம். கடைசியாக ஆபோக்லீமம்.
சூர்யன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தாங்கள் இருக்குமிடத்திலிருந்து ஏழாம் இடத்தை மட்டுமே பார்க்கும். உதாரண ஜாதகத்தில் ஜாதகத்தில் சூர்யன் ஏழாம் பார்வையாகத் துலா ராசியையும், சந்திரன் ஏழாம் பார்வையாக சிம்மத்தையும், புதன் ஏழாம் பார்வையாகக் கன்னியையும், சுக்கிரன் ஏழாம் பார்வையாகத் துலாத்தையும் பார்க்கும்.
செவ்வாய்க்கு ஏழாமிடப் பார்வையுடன் நான்கு எட்டாமிடங்களையும் குருவுக்கு ஏழாமிடப் பார்வையுடன் ஐந்து ஒன்பதாமிடங்களையும் சனிக்கு ஏழாமிடப் பார்வையுடன் மூன்று பத்தாமிடங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலேயுள்ள ஜாதகத்தில் செவ்வாய் சிம்மம் விருச்சிகம் தனுசு ராசிகளையும் வியாழன் கன்னி விருச்சிகம் மகரம் ராசிகளையும் சனி மேஷம் சிம்மம் விருச்சிகம் ராசிகளையும் பார்க்கும்.
பின்குறிப்பு:
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு பெண்களின் ஜாதகங்களிலும் ஏழாமிடத்தையோ ஏழாமிடத்து அதிபதியையோ வியாழன் பார்க்கவில்லை என்பதை கவனித்துக்கொள்ளுங்கள். 19.07.1961ம் தேதிய ஜாதகத்தில் குரு ஏழுக்குடையவனோடு சேர்க்கை . ஆனால் இரண்டு கிரகங்களுக்கும் இடையே 6 பாகை உள்ளது.
அடுத்து … ராசி பலன் …
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.