22.07.2016 மற்றும் 24.07.2016 தேதிகளில் வெளிவந்த ஒரு நாளிதழில் சங்கரன்கோயில் மற்றும் நெல்லையில், பிறந்து சில நாட்களே ஆன நிலையில் இரண்டு சிசுக்கள் ஒதுக்குப்புறமான இடத்திலும், முட்புதரிலும் கண்டெடுக்கப்பட்டதாகச் செய்தி வந்திருந்தது. இக்கதை மகாபாரத காலத்திலிருந்து இன்றுவரை தொடர்கிறது. இந்த மாதிரிச் சமூக அவலங்களுக்கான காரணம் எவையாகவும் இருக்கட்டும்: சோதிட ரீதியாக இக்குழந்தைகள் ஒதுக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
பிருஹஜ் ஜாதகத்தின் ஐந்தாவது அத்தியாயமான ஜன்மகால லட்சணாத்யாயம் 14வது மற்றும் 15வது சுலோகங்கள் மேற்கண்ட கேள்விக்கு விடையளிக்கின்றன.
ஆரார்க்கஜயோ த்ரிகோணகே சந்த்ரே அஸ்தே ச விஸுஜ்யதே அம்பயா
த்ருஷ்டே அமரராஜ்ய மந்திரிணா தீர்க்காயுசுகபாக் ச ஸ்மிருத:
இந்தச் சுலோகத்துக்குச் சனி, செவ்வாய் இவர்கள் ஒரே ராசியிலிருந்து அந்தச் சனி, செவ்வாய் இவர்களுக்கு 5, 9, 7 இந்தவிடங்களில் சந்திரனிருந்தால் அப்பொழுது ஜனித்தது தாயினால் விடப்படும். மேற்கூறிய யோகத்திலேயே சந்திரன், குருவினால் பார்க்கப்பட்டால் அப்பொழுது ஜனித்த சிசு தாயினால் விடுபட்ட போதிலும் ஆயுள் உள்ளதாகவும், சுகத்தையடைந்ததாகவும் இருக்கும் என்று கடலங்குடி நடேச சாஸ்திரிகள் பொருள் உரைக்கின்றார்.
மேலும் அஸ்தே என்ற சொல்லுக்கு ஏழு என்று பொருள் கொள்ளாமல் சூர்யனுடன் சேர்ந்த சந்திரன் என்று சிலர் அர்த்தப்படுத்துகிறார்கள் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு எண்.131 இலிங்கன் இயற்றிய வராகர் ஒரா சாத்திரம்
‘சேயின் சனியின் திரிகோணம்
திங்களுடனே பருதியுறில்
தாயும் மகவைத் தூசிக்கும்’
என்று குறிப்பிட்டு ‘அஸ்தே’ என்ற சொல்லுக்கு சூர்யனுடன் சேர்ந்த சந்திரன் என்றே பொருள் கொள்ளுகின்றது.
பெங்களுர் சூர்யநாராயண ராவ் தனது ஆங்கில மொழிபெயர்ப்பில் சூர்யனுடன் சேர்ந்த சந்திரன் என்றே குறிப்பிடுகின்றார். ஆனால் சந்திரனுக்கு ஏழில் என்ற பொருள் கொள்ளவும் இடமிருப்பதாகவும் கூறிவிட்டு வாசகர்கள் அவர்களே எந்த முடிவுக்கும் வரட்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.
ஆராய்ச்சிக்கென என் தந்தையார் சேர்த்து வைத்திருந்த நூற்றுக்கணக்கான ஜாதகங்களில் ஒன்றிரண்டு மேற்கண்ட யோகத்தைக் கொண்டிருக்கின்றன . அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.

| லக்னம் | 5 | 12 | 09 |
| சூர்யன் | 8 | 12 | 20 |
| சந்திரன் | 11 | 20 | 04 |
| செவ்வாய் | 9 | 19 | 30 |
| புதன் | 9 | 00 | 58 |
| குரு | 10 | 24 | 37 |
| சுக்கிரன் | 6 | 27 | 48 |
| சனி | 9 | 15 | 02 |
| ராகு | 5 | 09 | 31 |


இது ஒரு பெண்மணியின் ஜாதகம் . இவர் தாயினால் கைவிடப்பட்டடதாக என் தந்தையார் குறித்து வைத்துள்ளார். என் தந்தையார் ‘அஸ்தே’ என்ற வார்த்தையை லக்னத்துக்கு ஏழு என்ற பொருளிலும் ‘திரிகோணகே’ என்ற சொல்லுக்கு லக்னத்துக்குத் திரிகோணம் என்ற பொருளிலும் எடுத்துக்கொண்டு லக்னத்துக்குத் திரிகோணத்தில் செவ்வாய், சனி இருக்கும் போது ஏழில் சந்திரனிருந்தால் அக்குழந்தை தாயினால் கைவிடப்படும் என்று குறித்து வைத்திருக்கின்றார். வியாழன் சந்திரனையோ, செவ்வாய் சனியையோ பார்க்கவில்லை. ஆனாலும் இப்பெண்மணி 74 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து 23.10.1977ல் தான் மரணமடைந்தார்.
‘ஒரே ராசியில் இருக்கின்ற சனி, செவ்வாய் இவர்கள் லக்னத்துக்குத் திரிகோணஸ்தானத்தில் இருந்து சந்திரனும் ஏழில் இருக்குமானால் பிறந்த சிசு தாயினால் கைவிடப்படும்’ என்று பொருள் கொண்டாலும் குருவின் பார்வையில்லாதபட்சத்தில் இந்தக் குழந்தை இறந்துதானே போயிருக்க வேண்டும்? ஆனாலும் அப்படி எதுவும் நடக்காமல் 74 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது எப்படி?
சுலோகங்களை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பொருள் கொள்ளாமல் நுட்பமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது. குழந்தையின் ஆயுள் பாலாரிஷ்ட யோகங்களைப் பொறுத்தே அமைகின்றது. இங்கே சந்திரனைக் குரு பார்க்கவில்லையென்றாலும், லக்னத்தை வளர்பிறைச் சந்திரனான சுபக்கிரகம் முழுமையாகப் பார்ப்பதாலும், லக்னாதிபதி புதன் வர்க்கோத்தமமாக இருந்து அந்த வீட்டுக்குடைய சனி சொந்த வீட்டில் இருப்பதாலும், குருவின் பார்வையைப் பெற்ற சுபக் கிரகமான சுக்கிரன் ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பதாலும், லக்னமும் எட்டாமிடமும் மிகவும் பலம் பெறுகின்றன. மேலும் அட்டமாதிபதி செவ்வாய் உச்சமாக இருந்து அட்டமத்தைப் பார்க்கின்றபடியால் பாலாரிஷ்ட பங்கம் நேர்ந்து ஆயுளுக்கும் பலம் ஏற்படுகின்றது என்றே சொல்ல வேண்டும். சுக்லபட்ச நவமி திதியாதலால் சந்திரனுக்குப் பூரண சுபத்துவம் கிடைக்கிறது.
துவாதசாம்ச சக்கரம் இப்பெண்ணின் நீண்ட ஆயுளுக்குச் சான்று கூறுகின்றது. லக்னாதிபதி சனி ஏழிலிருந்து குருவின் பார்வையைப் பெறுவதும், அட்டமாதிபதி சூர்யன் உச்சமாக இருப்பதும், சந்திரனும் குருவும் செவ்வாயின் வீட்டிலிருந்து செவ்வாயின் பார்வையைப் பெறுவதும் லக்னத்தின் பலத்தைக் கூட்டுகின்றன என்றே சொல்லலாம்.
எனவே ஒரு ஜாதகத்தை நுட்பமாகப் பரிசீலனை செய்வதற்குக் கிரகஸ்புடங்கள், நவாம்ச த்வாதசாம்ச சக்கரங்களை ஆய்வு செய்யும் அறிவு, இவை மட்டுமன்றி சுலோகங்களின் உண்மையான பொருளை ஆராய்ந்து அறியும் விடாமுயற்சியும் தேவை என்பதைச் சொல்லவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.