தான் பிறந்த லக்னம் என்னவென்பது ஒருவருக்குத் தெரிகின்றதோ இல்லையோ பிறந்த நட்சத்திரம், ராசி என்னவென்பதை எல்லோருமே அறிந்திருக்கின்றார்கள். ராசி பலன் பார்ப்பதற்கு நட்சத்திரமும், ராசியும் தெரிந்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் இந்த இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த மாதிரியான குணங்கள் உள்ளவராக இருப்பார்கள் என்று பிருஹஜ் ஜாதகம் கூறுவதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதை இங்கு வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.
பொதுவாக ஒரு நட்சத்திரம் ஒரு நாள் முழுவதும் இருக்கும். அதாவது சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் சுமாராக 24 மணி நேரம் சஞ்சரிக்கும். எனவே குறிப்பிட்ட நாளில் உலகில் பிறந்த எல்லோருமே ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகவே இருப்பர். உதாரணத்திற்கு இன்று (28.08.2016) காலை 9.18 மணி முதல் நாளை (29.08.2016) காலை மணி 9.03 மணி வரை புனர்பூச நட்சத்திரம். எனவே இந்த நேரத்திற்குள் பிறந்த எல்லோருமே புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களே.
இவர்கள் எல்லோரது குண கர்ம சுபாவங்கள் ஒன்று போலவா இருக்கும்? இல்லை. பின் நட்சத்திரத்துக்குப் பலன் சொல்லுவதால் என்ன பிரயோஜனம்? ஒன்றும் இல்லைதான். ஆனால் சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தைப் பார்ப்பது போல, லக்னம் எந்த ராசியில், எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றது என்பதைப் பார்த்து அதற்குரிய நட்சத்திரப் பலன்களைச் சொன்னால் கொஞ்சம் பொருத்தமாகவே இருக்கும் என்பது என் கருத்து. சத்யஜாதகம் என்ற நூலில் தசாபுக்தியைக் கூட லக்னத்தின் நட்சத்திரம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருப்பதால் லக்ன நட்சத்திரத்தையும் பலன் கூற எடுத்துக்கொள்ளலாம். எனவே அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவருக்குச் சொல்லப்பட்டுள்ள பலன்களை மேஷ லக்னத்தில் முதல் 13 பாகை 20 கலைகளுக்குள் பிறந்தவருக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். பரணி நட்சத்திரப் பலன்களை மேஷ லக்னத்தில் 13 பாகை 21 கலை முதல் 26 பாகை 40 கலைகளுக்குள் பிறந்தவருக்கும் சொல்லலாம். இப்படியே எல்லா நட்சத்திரங்களுக்கும் அறிந்து கொள்ள வேண்டும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலங்காரம் செய்துகொள்வதில் பிரியமுள்ளவர்கள். அழகுள்ளவர்கள். பொது ஜனங்களால் விரும்பப்படுபவர்கள். புத்திசாலிகள்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எண்ணிய காரியத்தை எளிதில் செய்து முடிக்க வல்லவர்கள். உண்மையே பேசுபவர்கள். பொதுவாக நோயில்லாமல் ஆரோக்யமாக இருப்பவர்கள்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமாக உணவு உண்பவர்கள். பிற பெண்டிர் மீது விருப்பங் கொள்பவர்கள். அழகான தோற்றமுடையவர்கள். ஏதாவது ஒரு வகையில் யாவரும் அறியக் கூடிய புகழைச் சம்பாதிப்பவர்கள்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாகப் பேசுபவர்கள். எதற்கும் கலங்காதவர்கள். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட ஆசார அனுஷ்டானங்களைச் செய்பவர்கள். பிறரது செல்வம், பெண்டிர் மீது ஆசை வைக்காதவர்கள்.
மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாய்த்துடுக்காகப் பேசுபவர்கள். காரியஞ் சாதிக்கும் திறமையற்றவர்கள். பயந்த சுபாவம் கொண்டவர்கள். ஆனால் செல்வந்தராக இருப்பவர்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கர்வம்மிக்கவர்களாகவும், செய்நன்றி மறந்தவர்களாகவும், பிறர்க்குத் துன்பம் கொடுப்பவர்களாகவும், பாவ காரியங்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சத்வ குணம் மிக்கவர்கள். நல்ல ஒழுக்கமுடையவர்கள். சிறிதளவு லாபம் கிடைத்தாலும் அதில் சந்தோஷப்படுபவர்கள். தீராத தாகமுடையவர்கள். (உடலைப் பேணுவதற்காக அதிகமாக மருந்துகள் சாப்பிடுபவர்கள் என்று மங்களேஸ்வரீயம் கூறுகின்றது)
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காமம், குரோதம் என்னும் துர்க்குணங்களை நீக்கிய மனமுடையவர்கள். எல்லோருக்கும் பிரியமானவர்கள். சாஸ்திரங்களைப் படித்து அவற்றின் உண்மையான அர்த்தங்களை அறிந்தவர்கள். செல்வந்தர்கள். தர்மநெறிப்படி வாழ்பவர்கள்.
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறர்க்கு உதவி செய்யாதவர்கள். விதிவிலக்கு இன்றி இறைச்சி, கள் முதலியனவற்றை விரும்பி உண்பவர்கள். விலக்கப்பட்ட பாவங்களைச் செய்பவர்கள். செய்நன்றி மறப்பவர்கள். பிறரை ஏமாற்றுவதில் கெட்டிக்காரர்கள்.
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமான வேலையாட்கள், செல்வம் இவற்றை உடையவர்கள். சுகங்களை அனுபவிப்பவர்கள். தேவர்கள், முன்னோர்கள் மீது பக்தியுள்ளவர்கள். எப்பொழுதும் துடிப்பாக இருப்பவர்கள்.
பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாகப் பேசுபவர்கள். தான தருமம் செய்பவர்கள். அரசர்களுக்கு நெருங்கியவர்கள். அதிகமான பயணங்கள் செய்பவர்கள்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் பிரியமானவர்கள். கல்வி மூலம் சம்பாதித்த பொருளையுடையவர்கள். சுகவாசிகள். இன்பத்தை அனுபவிப்பவர்கள்.
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உற்சாகமுடையவர்களாக இருப்பார்கள். சமயோசித புத்தி கொண்டவர்கள். போதைப் பொருட்களில் விருப்பமுள்ளவர்கள். இரக்கம் அற்றவர்கள். பிறர் பொருளை ஏமாற்றிப் பறிப்பவர்கள்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் பெருவிருப்பம் கொண்டவர்கள். சிலை போன்று அழகானவர்கள். அழகிய கண்களை உடையவர்கள்.
மீதமுள்ள நட்சத்திரப் பலன்கள் 04.09.2016ல் வெளிவரும்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.