சோதிடரிடம் எல்லோரும் கேட்கும் கேள்வியும் இதுதான், அதிகமாகக் கேட்கப்படும் கேள்வியும் இதுதான். வியாழ நோக்கம் இப்போது இல்லை, வருகின்ற குருப் பெயர்ச்சிக்குப் பின்னர் நடக்கும் என்றோ, ஏழரைச் சனியில் ஜன்மச் சனி நடக்கின்றது இது முடிந்தவுடன் திருமணம் நடக்கும் என்றோ சோதிடர் கூறுவார். மிகப் பெரிய கேள்விக்கு மிக இலகுவாக விடை கிடைத்த திருப்தியில் கேள்வி கேட்டவர்களும் சென்று விடுவர். இதுதான் தற்போதைய நடைமுறை.

ஒரு உதாரண ஜாதகத்தை எடுத்துக்கொண்டு இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முயல்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் ஒரு பெண்மணியின் ஜாதகம்.

sample horoscope


   இராசி   பாகை   கலை 
 லக்னம்   11  14  53
 சூர்யன்   6  11  31
 சந்திரன்   9  08  27
 செவ்வாய்    4  07  38
 புதன்   5  26  37
 குரு   9  01  37
 சுக்கிரன்   7  27  14
 சனி   4  22  57
 ராகு  11  22  22
 கேது    5  22  22
 தசமம்   8  13  10

 

sample horoscope

sample horosope

sample horoscope

மீன லக்னம் உதயமாவதால் திருமணம் பற்றிய அனைத்து விபரங்களையும் ஏழாமிடமான கன்னி மூலமே அறிய வேண்டும். ஏழுக்குடைய அதிபதி புதன் சொந்த வீட்டில் இருக்கிறது. ஏழாமதிபதி புதன் துவாதசாம்ச சக்கரத்தில் கடக ராசியில் இருந்து அந்த வீட்டுக்குடைய சந்திரனும் இராசியிலும் துவாதசாம்சத்திலும் சரராசியான மகரத்திலும், மேஷத்திலும் இருப்பதால் சீக்கிரமே திருமணம் நடக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. திரேக்காண சக்கரத்திலும் ஏழாமதிபதி சனி மேஷத்தில் கேந்திரத்தில் இருக்கிறது. துவாதசாம்ச சக்கரத்திலும் ஏழாமதிபதி சனியாக வந்து பத்தாமிடமான ரிஷப ராசியில் இருக்கிறது. புதனும், சனியும் ஒருவருக்கொருவர் இரண்டு பன்னிரண்டாமிடங்களில் இருந்து தற்கால மித்திரர்களாகவும் இருப்பதால் திருமணம் வெகுவிரைவில் நடைபெறும்.

ஒரு கிரகம் இருக்குமிடத்திலிருந்து 2, 3, 4, 10, 11, 12 ஆகிய இடங்களில் இருக்கும் இன்னொரு கிரகம் முதலாவது கிரகத்துக்கு தற்கால மித்ருவாக ஆகின்றது. இந்தச் சித்தாந்தத்தைக் கொஞ்சம் மாற்றி ஒரு பாவத்துக்கு 2, 3, 4, 10, 11, 12 ஆகிய இடங்களில் இருக்கும் கிரகம் அந்தப் பாவத்துக்கு நன்மையைக் கொண்டு வரும் அதுவும் விரைவில் கொண்டு வரும் என்று மாற்றிக் கொண்டால் நமது வினாக்களுக்கு எளிதில் விடை கிடைக்கலாம்.

ஏழாம் பாவமான கன்னி ராசியின் 14 பாகை 53 கலையிலிருந்து ஏழாம் பாவாதிபதி புதன் 5  26 37  –  5  14  53  =  0  11 44 தூரத்தில் இருக்கிறது. எனவே புதனிடமிருந்து இன்னும் 0  11 44ஐக் கூட்டினால் 6  08 21 கிடைக்கின்றது. அதாவது 6 இராசி 8 பாகை 21 கலை என்பது ஏழாம் பாவத்தின் ஆரூடம் எனப்பெயர் பெறும். இந்த ராசிக்கு அதிபதி இந்த ஆரூடத்துக்கு இரண்டாமிடத்திலும், ஏழாம்பாவமான கன்னிக்கு மூன்றிலும் இருப்பதால் மேலே நாம் சொன்னபடி விரைவில் திருமணம் நடக்கும்.

இனி திருமணம் வியாழன் எந்த ராசியில் இருக்கும் போது நடைபெறும் என்பதைக் காண்போம். வியாழன் ஏழாம்பாவமான 5  14  43-ல் இருந்து (9  01 37  –   5 14 53)  3  16  44 தூரத்தில் உள்ளது. இத்தூரத்தைக் குருஸ்புடத்துடன் கூட்டினால் 9  01 37  +  3 16  44  =  0  18 21 கிடைக்கிறது. அதாவது வியாழனின் ஆரூடம் மேஷ ராசியில் இருக்கிறது. மேஷத்தின் அதிபதி செவ்வாய் சிம்மராசியில் இருக்கிறது. எனவே மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் குரு வரும் போது திருமணம் நடைபெறும்.

ஒரு பாவாதிபதி நவாம்சத்தில் எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசிக்குத் திரிகோணத்தில் குரு வரும் போது பாவ பலன் சித்திக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே ஏழாம் பாவாதிபதியான புதன் சிம்ம நவாம்சத்தில் இருப்பதால் சிம்மம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம் தனுசு ஆகிய இராசிகளில் குரு வரும் போது திருமணம் நடக்கலாம்.

துவாதசாம்சச் சக்கரத்தில் சிம்மம் லக்னமாக வருவதால் ஏழாமிடம் கும்பராசி ஆகும். துவாதசாம்சச் சக்கரத்தில் ஒரு பாவத்துக்காவது பாவத்தின் அதிபதிக்காவது கேந்திர ராசிகளில் குரு வரும் போது பாவ பலன் சித்திக்கின்றது. இங்கே ஏழாம் பாவத்வாதசாம்சமான கும்பத்துக்கு அதிபதி ரிசபத்தில் இருப்பதால் ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் என்ற இந்த இராசிகளில் குரு வரும் போது திருமணம் நடக்கலாம்.

இரண்டாம் பாவம் மேஷ ராசியில் இருப்பதாலும் மேஷத்தின் அதிபதி சிம்மத்தில் இருப்பதாலும் மேஷ, சிம்ம, தனுசு இராசிகளில் குரு வரும் போது திருமணம் நடக்கலாம்.

இவ்வாறு பார்க்கும் போது சிம்மமும் அதன் திரிகோணராசிகளான மேஷமும், தனுசும் அதிகமாக வாய்ப்புக்களைப் பெறுவதால் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய இராசிகளில் குரு வரும் போது திருமணம் நடக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.

ஜாதகி 1949ல் பிறந்திருப்பதால் மேஷ ராசியில் குரு இருந்த 1965, சிம்ம ராசியில் குரு இருந்த 1967 செப்டம்பர் முதல் 1968 செப்டம்பர் முடிய உள்ள ஒராண்டு, பின்னர் 1972 என்று இந்த மூன்று காலகட்டத்தையும் எடுத்துக்கொண்டால் மேஷத்தில் குரு மிக இளமையில் வருகிறது. சிம்மத்தில் 19 வயதில் வருகிறது. தனுசில் 24 வயதில் வருகிறது. இதில் நாம் சிம்மத்தை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் சிம்மம் அநேக இடங்களில் திருமணத்தைக் கொண்டு வரும் ராசியாக வருகிறது. எனவே நாம் சிம்மத்தில் குரு இருக்கும் வருஷத்தைத் தேர்வு செய்து இருக்கிறோம்.

மேலை நாட்டுச் சோதிடக் கொள்கைகளின்படி பத்தாம்பாவம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. பத்தாம் பாவ ஸ்புடத்தை வருடத்துக்கு ஒரு பாகையாகக் கூட்டி வரும் போது எந்தக் கிரகமாவது அந்த ஸ்புடத்துக்குச் சரியான 0, 120, 240 பாகைகளில் வந்தால் அந்த ஆண்டு முக்கியமான ஆண்டாகக் கருதப்படுகிறது. இங்கே பத்தாம் பாவம் தனுசு இராசியில் 13 பாகை 10 கலையில் இருக்கிறது. இதனுடன் 18 பாகை 27 கலையைக் கூட்டினால் அது குரு ஸ்புடத்தைத் தொடுகிறது. அதாவது 18 வயது முடிந்த சமயத்தில் பத்தாம் பாவமும் லக்னாதிபதி குருவும் ஒன்றாக இருக்கின்றன. பொதுவாக இது உத்யோகம், செல்வாக்கு இவை கிடைக்கின்ற காலமாக மேலை நாட்டுச் சோதிடர்களால் கருதப்படுகின்றது. 50 வருடங்களுக்கு முன்னர் படிக்காத ஒரு கிராமத்துப் பெண்ணுக்கு இந்த மாதிரியான கிரக அமைப்பு திருமணத்தைத் தவிர வேறு எதைக் கொண்டு வரமுடியும்? எனவே நாம் 19 வயதில் இந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடக்கும் என்று உறுதியான முடிவுக்கு வரலாம்.

ஏழாம் பாவத்தை ஏழாம்பாவதிபதியான புதனிடமிருந்து அளந்தால் பாவம் புதனுக்குப் பன்னிரண்டில் இருக்கிறது. அதாவது புதனிடமிருந்து பாவம் (5  14 53  –  5  26 37  =  11  18 16) 11 ராசி 18 பாகை 16 கலை தூரத்தில் இருக்கிறது. புதனுக்குப் பன்னிரண்டாமிடத்தில் கிரகங்களின் அஷ்டவர்க்கப்படி சூரியனும் புதனும், சனியும் தான் பலன்கள் கொடுப்பவர்கள். சூரியன், புதன், சனி என்ற இந்த மூன்று கிரகங்களில் சனிக்கு திரேக்காணம், துவாதசாம்சம் என்ற இரண்டு சக்கரங்கள்படியும் ஏழாம்பாவ ஆதிக்கம் கிடைத்திருப்பதாலும், ஏழாம் பாவத்துக்குப் பன்னிரண்டில் இருப்பதாலும் சனியை மட்டுமே திருமணம் கொண்டு வரும் கிரகமாக எடுத்துக் கொள்ளலாம். சனி லக்னத்துக்கு 1, 3, 4, 6 10, 11 ஆகிய இடங்களில் வரும் போது பலன் கொடுப்பவன். எனவே சனி ஏழாம் பாவமான 5 ராசி 14 பாகை 53 கலையிலிருந்து பாகை கலைப்படி அளக்கப்படும் போது கும்பத்தின் 14 பாகை 53 கலையிலிருந்து மீனத்தின் 14 பாகை 53 கலை முடிய ஆறிலிருப்பதாகக் கருதப்படும். வியாழன் சிம்மத்திலிருக்கும் போது சனி மீனத்தின் 14 பாகை 53 கலைகளுக்குள் அக்டோபர் 13 1967க்குப் பிறகு வருகிறது. எனவே இந்தப் பெண்மணியின் 19வது பிறந்த நாளான 28.10.1967க்குப் பின்னர் இத்திருமணம் நடக்கலாம் என்று நாம் முடிவு செய்கின்றோம். 19வது வருஷப் பிரவேச ஜாதகம் கணித்துத் திருமண நாளை அறிவது எப்படி என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.