இங்கே நாம் ‘பாழாகும் மணவாழ்க்கை’ என்பதன் மூலம் திருமணத்துக்குப் பிந்திய வாழ்க்கையை மட்டுமல்ல, திருமணத்துக்கு முந்திய மணவாழ்க்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலத்தையும் குறிப்பிடுகின்றோம். இந்தப் பத்துப் பொருத்தங்கள் திருமணத்தைக் காலந் தாழ்த்துவதோடு மட்டுமின்றி மணவாழ்க்கையையும் கெடுக்கும் அம்சங்களாகவே மாறிவிட்டன. இந்தப் பொருத்தங்களில் எந்தவிதமான லாஜிக்கும் இல்லை. இதுபற்றிய ஒரு விரிவான அலசல் தேவைப்படுவதால் இந்தக் கட்டுரையை எழுதுகின்றோம்.

தினம், கணம், மாகேந்திரம், ஸ்திரீதீர்க்கம், யோனி, ராசி, ராசிஅதிபதி, வசியம், ரச்சு, வேதை என்பவையே பத்துப் பொருத்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆணின் நட்சத்திரம் வரை எண்ணும் போது 2, 4, 6, 8, 9 வந்தால் சுபம். 1, 3, 5, 7 வந்தால் அசுபம். ஒன்பதுக்கு மேலே 11, 13, 15, 17, 18, 20, 22, 24, 26, 27 வந்தால் சுபம். 10, 12, 14, 16, 19, 21, 23, 25 வந்தால் அசுபம்.

ஆசார்யாள் மடத்துப் பஞ்சாங்கத்தில் சிலர் தினப் பொருத்தத்திற்குப் புருஷ நட்சத்திரம் முதலாக எண்ணுவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டுவிதமாக எண்ணும் வழக்கமும் உண்டு என்று தெரிகிறது.

மாகேந்திரப் பொருத்தம் என்பது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் போது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வந்தால் கிடைக்கும் பொருத்தமாகும். இதில் 7, 19, 25 என்பவை தினப் பொருத்தத்தில் அசுப பலத்தைக் குறிப்பனவாக உள்ளன. ஒரு பொருத்தம் சுபத்தையும், ஒரு பொருத்தம் அசுபத்தையும் குறிப்பது நம்பும்படியாக இல்லை. ஆற்காடு பஞ்சாங்கத்தில் இந்த எண்ணிக்கை 1, 4, 7, 10, 16, 18, 19, 22, 25 என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பஞ்சாங்கங்களுக்குள்ளேயே வித்தியாசமான கருத்துக்கள் உள்ளன.

கணப்பொருத்தத்தில் பெண்ணும் புருஷனும் ஒரே கணத்தில் இருந்தால் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது. பெண் இராட்சஷ கணமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது ஒரு கருத்து. ஆனால் பெண் நட்சத்திரத்திலிருந்து எண்ணினால் புருஷனது நட்சத்திரம் 24க்கு மேற்பட்டாலும் நட்சத்திராதிபதிகள் நட்பு ஆட்சியாக இருந்தாலும் பெண் இராட்சஷ கணம் என்றாலும் பொருந்தும் என்று ஆசார்யாள் மடத்துப் பஞ்சாங்கம் குறிப்பிடுகின்றது.  திருநெல்வேலி மற்றும் ஆற்காடு பஞ்சாங்கங்களில் இவ்விவரம் இல்லை. மேலும் நட்சத்திரங்களுக்கான அதிதேவதைகளுக்கும் நட்சத்திரங்கள் குறிப்பிடும் கணங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வேதங்களில் அதிகமாகப் புகழப்படும் அக்னி, இந்திரன், வருணன் போன்ற தேவதைகளையெல்லாம் இராட்சஷ கணத்தில் சேர்த்திருப்பது வியப்புக்குரிய விஷயமாகும்.

யோனிப் பொருத்தத்தில் இரண்டிரண்டு நட்சத்திரங்களைக் குறிப்பிட்டு முன்னது ஆண் என்றும், பின்னது பெண் என்றும், ஒரே யோனிகள் கூடாது என்றும், புருஷன் ஆண் யோனியாகவும் பெண் ஸ்திரீ யோனியாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். ஒரு வாக்கியப் பஞ்சாங்கம் திருவாதிரை ஆண் நாய் என்றும், மூலம் பெண் நாய் என்றும் கூறுகிறது. இன்னொரு வாக்கியப் பஞ்சாங்கம் மூலம் ஆண் நாய் என்றும், திருவாதிரை பெண் நாய் என்றும் கூறுகிறது. எதை எடுத்துக்கொள்வது?

இராசிப் பொருத்தத்தில் பெண் ராசியிலிருந்து எண்ணினால் 6 ராசிக்கு மேற்பட்டால் உத்தமப் பொருத்தம் என்று கூறப்படுகிறது. ஆனால் சிலர் எட்டாம் ராசியை எடுப்பதில்லை. சிலர் 9க்கு மேல் வந்தால் மட்டுமே உத்தமப் பொருத்தம் என்பர்.

இராசி அதிபதிகள் மித்ருக்களாக இருந்தால் பொருத்தம் என்றும் சத்ருக்களாக இருந்தால் பொருத்தம் இல்லை என்றும் கூறப்படுகிறது. எந்தக் கிரகத்துக்கு எந்தக் கிரகம் நட்பு? எந்தக் கிரகத்துக்கு எந்தக் கிரகம் பகை? என்பதிலேயே பலவித கருத்துக்கள் உள்ளன.

அடுத்து ஒரு குறிப்பிட்ட ராசிக்கு இன்னொரு ராசி வசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் வசியப் பொருத்தம். இந்த வசியம் என்பதை எப்படிச் சொல்கின்றார்கள் என்றே தெரியவில்லை.  சுக்கிரனுக்குச் சந்திரன் பகை. எனவே ரிசபராசிக்கும் கடக இராசிக்கும் இராசியதிபதி பொருத்தம் இல்லை என்று சொல்கின்ற பஞ்சாங்கமே ரிசபராசிக்கு கடக ராசி வசியம் எனவே வசியப் பொருத்தம் உண்டு என்று சொல்வது அபத்தமாகப்படுகின்றது. சூர்யனுக்குச் சுக்கிரன் பகை. எனவே சிம்ம ராசிக்கும் துலா ராசிக்கும் அதிபதிப் பொருத்தம் இல்லை என்று சொல்கின்ற பஞ்சாங்கம் தான் சிம்மத்திற்குத் துலாம் வசியம். எனவே வசியப் பொருத்தம் உண்டு என்றும் கூறுகின்றது.

இப்படிக் கூர்ந்து நோக்கினால் முன்னுக்குப்பின் முரணான விஷயங்கள் இந்தப் பத்துப் பொருத்தங்களில் இருப்பது தெரியவரும்.

ஒரு பஞ்சாங்கம் ஸ்திரீதீர்க்கம், கணம், ரச்சு, நாடி, வசியம் என்ற இந்த ஐந்தும் கண்டிப்பாகப் பொருந்த வேண்டும் என்று சொல்கின்றது. ஆணும் பெண்ணும் ஒரே ராசியில் பிறந்திருந்தாலும், சமசப்தமம் என்னும் ஒன்றுக்கொன்று ஏழாம் ராசியில் பிறந்திருந்தாலும், ரச்சு, கணம், வேதை போன்ற பொருத்தங்கள் இல்லாவிட்டாலும் மணம் செய்யலாம் என்று இன்னொரு பஞ்சாங்கம் சொல்கின்றது. இப்படிப் பலவிதமான கருத்துக்கள் இருக்கும் போது எதைச்சரியென்று நாம் எடுத்துக்கொள்வது? உண்மையில் இந்தப் பத்துப் பொருத்தங்கள் எந்த அளவுக்குத் திருமண வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? அனுபவங்கள் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும்.

ரச்சுப் பொருத்தம், தினப்பொருத்தம், யோனிப் பொருத்தம் இல்லாத எத்தனையோ தம்பதிகள் இனிமையாகக் குடும்ப வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். பத்துப் பொருத்தத்தில் ஏழுக்குமேல் இருந்தும் எத்தனையோ விவாகங்கள் இடையிலேயே முறிந்து போயிருக்கின்றன.

பத்துப் பொருத்தங்களில் அதிகமான பொருத்தங்கள் இருந்தும் மண வாழ்க்கை கசப்பாகிப் போன ஒரு உதாரண ஜாதகத்தை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.