பத்தில் ஐந்து பொருத்தங்கள் இருந்தாலும், ஆண்களுக்கு இரண்டு மற்றும் ஏழாமிடங்களில் இருக்கும் பாபக் கிரகங்கள் போலவே, பெண்களுக்கு ஏழு மற்றும் எட்டாமிடங்களில் இருக்கும் பாபக்கிரகங்களால் ஏற்படும் பாபசங்கியை ஆண்களுக்குக் கொஞ்சம் கூட இருந்தாலும் திருமணம் செய்யலாம் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் முறையாகும். இது சரியல்ல என்பதுதான் என் கருத்து. மணவாழ்க்கை இடையில் முறிந்து போன பிறகுதான் இந்தப் பத்துப் பொருத்தங்களும், பாபக் கணக்குகளும் அபத்தம் என்பது பெரும்பாலோருக்குத் தெரிய வருகிறது. இந்தப் பொருத்தங்கள் இல்லாமலேயே சுகமான மணவாழ்க்கையில் ஏராளமானோர் கவலையற்று இருக்கின்றார்கள் என்பதும் சாமான்ய மக்களுக்குத் தெரிய வந்தால்தான் இந்தப் பொருத்தக் கணக்குகள் பிழையானவை என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வர்.
இப்போது உதாரண ஜாதகங்களைப் பார்ப்போம்.


பெண்ணின் நட்சத்திரம் உத்திராடம், ஆணின் நட்சத்திரம் அஸ்தம்.
- பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் போது 20-வது நட்சத்திரமாக வருகிறது. எனவே தினப் பொருத்தம் உண்டு.
- 20-வது நட்சத்திரமாக வருவதால் மாகேந்திரப் பொருத்தம் இல்லை.
- 13-க்கு மேலிருப்பதால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.
- பெண்ணின் நட்சத்திரம் மனுஷ கணம். ஆணின் நட்சத்திரம் தேவ கணம். ஆணின் நட்சத்திரம் தேவகணமாகவும் பெண்ணின் நட்சத்திரம் மனுஷ கணமாகவும் இருப்பதால் உத்தமமான கணப் பொருத்தம் உண்டு.
- உத்திராட நட்சத்திரம் கீரிப்பிள்ளை. பெண் யோனி. அஸ்த நட்சத்திரம் பெண் யோனி. எருது. இங்கே யோனிகளுக்குள் பகையில்லை. ஒரே யோனி. எனவே பொருத்தம் உண்டு. ஆனால் ஆணுக்கு ஆண் யோனியாக இல்லாமல் பெண் யோனியாக இருப்பதால் மத்திமப் பொருத்தம்.
- பெண்ணின் ராசியதிபதி சனியும், ஆணின் ராசியதிபதி புதனும் நட்புக் கிரகங்கள். எனவே ராசிப் பொருத்தம் உத்தமம்.
- மகர ராசிக்கு கன்னி வசியமில்லை. கன்னி ராசிக்கு மகரம் வசியம் இல்லை. எனவே வசியப் பொருத்தம் இல்லை.
- உத்திராடமும், அஸ்தமும் வெவ்வேறு ரச்சுக்கள். எனவே ரச்சுப் பொருத்தம் உண்டு.
- பெண் நட்சத்திரம் உத்திராடம். இதற்குப் புனர்பூச நட்சத்திரம் தான் வேதை. ஆண் நட்சத்திரம் அஸ்தம். இதற்குச் சதய நட்சத்திரம் தான் வேதை. எனவே வேதைப் பொருத்தம் உண்டு.
- பெண் நட்சத்திரம் உத்திராடம் வலப்பார்சுவநாடி. ஆண் நட்சத்திரம் அஸ்தம் இடப்பார்சுவ நாடி. ஒரே நாடியாக இல்லாமல் வேறு வேறு நாடிகளாக இருப்பதால் பொருத்தம் உண்டு.
ஆகப் பத்துப் பொருத்தங்களில் மாகேந்திரம், வசியம் தவிர ஏனைய எட்டுப் பொருத்தங்களும் இங்கே பொருந்தியுள்ளன.
இனி பாபக் கணக்குகளைப் பார்ப்போம்.
- ஆணின் ஜாதகத்தில் லக்ன பாவத்தில் கேதும், ஏழாம் பாவத்தில் ராகும் உள்ளன. பெண்ணின் ஜாதகத்தில் லக்ன பாவத்தில் ராகும், ஏழாம் பாவத்தில் கேதும் உள்ளன. எனவே இந்தத் தோஷம் நீங்கி விடுகிறது.
- பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் பாவத்தில் சூர்யன் உள்ளது. ஆணின் ஜாதகத்தில் இதைச் சரி செய்யும் அமைப்பு இல்லை.
- பெண்ணின் ஜாதகத்தில் சந்திர லக்னத்துக்கு எட்டில் செவ்வாய், சனி இருக்கின்றன. சிம்மச் செவ்வாய்க்குத் தோஷமில்லை என்பதால் சனியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
- ஆணின் ஜாதகத்தில் சந்திர லக்னத்துக்குப் பன்னிரண்டிலும், லக்னத்துக்கு நான்கிலும் செவ்வாய் இருக்கிறது. ஆனால் சிம்மச் செவ்வாய்க்குத் தோஷம் இல்லை என்பதால் இதை விட்டு விடலாம்.
ஆகப் பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு எட்டாமிடத்தில் சூர்யனுக்கு 1 புள்ளியும், சந்திரனுக்கு எட்டாமிடத்தில் சனிக்கு ½ புள்ளியும் ஆக 1½ புள்ளிகள் கொடுக்கலாம். எனவே பெண் ஜாதகத்தில் பாபக் கணக்குக் கூடுதலாக உள்ளது. எனவே தொன்று தொட்டுக் கடைப்பிடித்து வரும் நம்பிக்கைகளின்படி இந்தப் பெண்ணின் கணவருக்கு ஏதாவது கஷ்டங்கள் வரக்கூடும் என்பதே மையக் கருத்து. ஆணுக்குப் பாபம் கூடினால் பரவாயில்லை பெண்ணுக்குக் கூடுதலாக இருக்கக் கூடாது என்பதுதான் அடிப்படை.
இப்போது அனுபவத்துக்கு வருவோம். 27.11.1967ல் இவர்களுக்குத் திருமணம் நடந்தது. தொடர்ந்த கருச் சிதைவுகளுக்குப் பின்னர் செப்டம்பர் 1972ல் ஒரு குழந்தை பிறந்தது. டிசம்பர் 1972ல் இப்பெண்மணி ஒரு விபத்தில் காலமானார்.
இப்போது வாசகர்களுக்கு மனதில் எழக்கூடிய நியாயமான கேள்விகள் கீழ்க் கண்டவாறுதான் இருக்க வேண்டும்.
- பெண்ணுக்குப் பாபக் கணக்கு கூடும் போது ஏன் இந்தப் பெண்மணி இறந்து போக வேண்டும்?
- பல பொருத்தங்கள் இருந்தாலும் தொடர்ந்த கருச்சிதைவுகள் ஏன் ஏற்பட்டன?
- ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் மூலத்திரிகோண வீட்டில் பலமாக இருந்தும் ஏன் மணவாழ்க்கையில் இந்தச் சோகம் ஏற்பட்டது? (இங்கே சுக்கிரன் ஆறாமிடத்தில் மறைந்துவிட்டது என்பது பதிலாக வரக்கூடாது. ஏனெனில் சுக்கிரன் நீசமாக இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும் என்றும், உச்ச மூலத்திரிகோண வீடுகளில் இருந்தால் களத்திர சுகம் உண்டு என்றும் கூறுபவர்களைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது)
- ஆணின் ஜாதகத்தில் சந்திரனுக்கு ஏழாமிடமான மீனத்தின் அதிபதி சந்திர லக்னத்துக்கு மூன்றாமிடத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக மீனத்தைப் பார்ப்பதற்கு பலன் ஏதும் இல்லையா?
- ஆணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழுக்குடைய செவ்வாய் நான்காமிடத்தில் இருந்து நான்காம் பார்வையில் ஏழாமிடத்தைப் பார்ப்பதற்கும் பலன் ஏதுமில்லையா?
- இரண்டு ஐந்துக்குடைய புதன் தனது உச்ச வீட்டில் இருந்தும் இவ்வளவு விரைவில் ஏன் மனைவிக்குத் தோஷம் நேரிட்டது?
- என்ன காரணங்களால் இவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை?
மேற்கண்ட கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்கப் பெறுபவர்கள் சோதிட சாத்திரத்தை நன்கு கற்றுக் கரை கண்டவர்கள் என எடுத்துக்கொள்ளலாம்.
சந்திர லக்னத்துக்குக் குரு கேந்திராதிபதி எனவே கேந்திராதிபத்தியம் பெற்ற குரு சந்திர லக்னத்துக்கு ஏழாமிடத்தைப் பார்ப்பதால் இவ்வாறு நேர்ந்தது என யாராவது கூறினால் அவர்களுக்கு இரண்டு கேள்விகள்.
முதல் கேள்வி: கேந்திராதிபத்திய தோஷம் உண்டு என்றால் ஏன் திருமணம் நடந்தது?
இரண்டாவது கேள்வி: சந்திர லக்னத்தை மட்டும் பார்த்து முடிவு செய்தால் 14.10.1936ல் பிறந்த எல்லோருக்கும் இவ்வாறு மனைவி இறந்திருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தால் அது தவறா?
மேலே உதாரணமாகக் காட்டப்பட்ட ஜாதகங்கள் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் பத்துப் பொருத்தங்கள், பாபக் கணக்குகள் என்பவையெல்லாம் வெறும் பிதற்றல்கள் என்பதுதான். அவற்றைப் பார்த்துத் திருமணம் செய்து வைப்பது முட்டாள்தனமானதும் கூட.
தேர்ந்த ஒரு சோதிடர் இந்த இரண்டு ஜாதகங்களையும் கூர்ந்து நோக்கினால் இவர்களைச் சேர்த்து வைத்தது எவ்வளவு பிழையென்பது தெரிய வரும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது இங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் நம்மால் நுட்பமாக அலசப்படும்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.