வராகமிகிரரின் பிருஹஜ்ஜாதகம், கல்யாணவர்மரின் சாராவளி, மந்த்ரேஸ்வரரின் பலதீபிகை போன்ற சோதிட நூல்கள் யாவுமே ராஜயோகம் பற்றிப் பேசுகின்றன. இந்நூலாசிரியர்கள் ராஜயோகத்தை இரண்டு விதமாகப் பிரிக்கின்றார்கள். முதல் வகை யோகம் ராஜவம்சத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே சொல்லப்படும் யோகம். அடுத்தது ராஜவம்சம் அல்லாத பிற வம்சங்களில் பிறந்தாலும் தனது முயற்சியால் ராஜ்யத்தைச் சம்பாதித்துக் கொள்பவர்களுக்காகச் சொல்லப்படும் யோகம்.
இந்த ஜனநாயக யுகத்தில் ராஜவம்சம் என்பது ஏது? அதனால் ஏற்கனவே மந்திரிகளாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் ஆகிவிட்டவர்களை ராஜவம்சம் என்று முத்திரை குத்தினால் அவர்களது சந்ததியர்களுக்கு மேலேயுள்ள யோகங்களில் முதல் வகை யோகத்தைச் சொல்ல வேண்டும் என்றும், மந்திரியின், சட்டமன்ற உறுப்பினரின், பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பிறக்காமல் முதல் தடவையாகத் தானே முயற்சித்து மேற்கண்ட பதவிகளில் அமர்வோருக்கு இரண்டாவது வகை யோகத்தைச் சொல்ல வேண்டும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.
முதல் வகை யோகம்: (இது பதவியில் இருப்போரின் சந்ததிகளுக்கு)
1. ஏதேனும் மூன்று கிரகங்கள் தங்களது உச்ச வீட்டையோ அல்லது மூலத்திரிகோண வீட்டையோ அடைந்தவர்களாய் இருந்தால் இவர்களும் பதவியைப் பெறுகின்றார்கள். இன்ன லக்னம் என்றில்லாமல் எந்த லக்னமாக இருந்தாலும் ஏதேனும் மூன்று கிரகங்கள் உச்சம் அல்லது மூலத்திரிகோண வீட்டில் இருந்தாலே போதும். நிச்சயம் இவர்களுக்கும் பதவியுண்டு. அந்தக் கிரகங்கள் ஷட்பலத்தில் பலம் குறைந்து இருந்தால் ராஜபதவியைத் தரமாட்டாது. ஆனால் விசேஷமான செல்வத்தைக் கொடுக்கும். மூன்று கிரகங்களில் ஒன்று உச்ச வீட்டில் இரண்டு மூலத் திரிகோண வீட்டில் என்று இருந்தாலும் சரி, இரண்டு உச்ச வீட்டில் ஒன்று மூலத்திரிகோண வீட்டில் இருந்தாலும் சரி, அல்லது மூன்றுமே மூலத்திரிகோண வீட்டில் இருந்தாலும் சரி இப்பலன் உண்டு. இந்த யோகத்தில் லக்னத்தைக் குறிப்பிடவே இல்லை.
2. சுக்கிரன் சொந்த வீடான ரிசபத்திலோ அல்லது துலாத்திலோ இருந்து அந்த சுக்கிரன் நான்காமிடத்திலும் இருக்க வேண்டும். சந்திரன் ஒன்பதாமிடத்தில் இருக்க வேண்டும். மற்ற ஐந்து கிரகங்கள் (சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி) லக்னம், மூன்றாமிடம், பதினொன்றாமிடம் இவைகளில் இருக்க வேண்டும். இந்த யோகமும் ராஜவம்சத்தின் சந்ததிகளை ராஜாவாக ஆக்குகின்றது. சுக்கிரன் ரிசபத்தில் இருந்து அது நான்காமிடமாக இருக்க வேண்டும் என்ற நியதி கும்பலக்னத்துக்கும், சுக்கிரன் துலாத்தில் இருந்து அது நான்காமிடமாக இருக்க வேண்டும் என்ற நியதி கடக லக்னத்துக்கும் பொருந்தும். எனவே மேற்சொன்ன யோகம் கும்ப லக்னத்தில் அல்லது கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உண்டு. சந்திரனைத் தவிர்த்த மற்ற கிரகங்களில் எந்தக் கிரகம் லக்னத்தில், எந்தக்கிரகம் மூன்றில், எந்தக் கிரகம் பதினொன்றில் என்பது சொல்லப்படவில்லை. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
3. பலம் பெற்ற புதன் லக்னத்தில் இருக்க பலம் பெற்ற குரு அல்லது சுக்ரன் ஒன்பதில் இருக்க மற்ற கிரகங்கள் யாவும் இரண்டு, மூன்று, ஒன்பது, ஆறு, பத்து, பதினோராமிடங்களில் இருக்கப் பிறந்தவன் ராஜபதவியை அடைவான்.
குறிப்பு: புதன் லக்னத்தில் இருக்கும் போது சுக்கிரன் ஒன்பதில் இருக்க முடியாது. எனவே குருவை மட்டுமே ஒன்பதில் இருக்க வேண்டிய கிரகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். புதன் லக்னத்தில் இருக்கும் போது சூரியன், சுக்கிரன் இரண்டில் இருக்க முடியும். எனவே மீதமுள்ள சந்திரன், செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள் மூன்றிலோ ஆறு பத்து பதினோறாமிடம் இவைகளில் இருக்க ராஜயோகம் கிட்டும். அவை தனித்தனியாகவும் இருக்கலாம். சேர்ந்தும் இருக்கலாம்.
4. ரிஷபம் லக்னமாகி அதில் சந்திரன் இருந்து இரண்டில் குரு, ஆறில் சனி, பதினொன்றில் மற்ற நான்கு கிரகங்களும் இருந்தால் ராஜயோகம் உண்டு. இந்த யோகத்தில் நிறைய conditons இருக்கின்றன. சந்திரன் ரிசபராசியில் இருக்க வேண்டும். அதுவே லக்னமாகவும் இருக்க வேண்டும். மிதுனத்தில் தான் குரு இருக்க வேண்டும். சனி துலாத்தில் இருக்க வேண்டும். மீதமுள்ள சூர்யன், செவ்வாய், புதன், சுக்கிரன் மீனத்தில் இருக்க வேண்டும்.
சனியும், வியாழனும் ஒரு குறிப்பிட்ட ராசியில்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை 60 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழும் 1953 செப்டம்பர் 2 முதல் டிசம்பர் 2 வரை வியாழன் மிதுனத்தில் இருக்கும் போது சனி துலாத்தில் இருந்தது. பின்னர் 1954 ஏப்ரல் 22 முதல் செப்டம்பர் 2 வரை வியாழன் மிதுனத்தில் இருக்கும் போது சனி துலாத்தில் இருந்தது.இந்தக் காலகட்டத்தில் மீதமுள்ள சூர்யன், செவ்வாய், புதன், சுக்கிரன் மீனத்தில் இருக்கும் நிகழ்வு நடக்கவில்லை. அதன் பிறகு 2013 மே 31 முதல் 2014 ஜீன் 19 முடிய வியாழன் மிதுனத்தில் இருக்கும்போது சனி துலாத்தில் இருந்தது. அப்போதும் சூர்யன், செவ்வாய், புதன், சுக்கிரன் மீனத்தில் சேர்ந்த நிகழ்வு நடக்கவில்லை. மேலும் இந்த நிபந்தனைகள் முதலாவது சொல்லப்பட்ட யோகமான (1)க்கு மாறாக உள்ளது. அதில் மூன்று கிரகங்கள் உச்ச வீட்டிலோ, மூலத்ரிகோண வீட்டிலோ இருந்தால் போதும் எந்த லக்னத்திலும் பிறக்கலாம் என்று உள்ளது. இந்த யோகத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சமாகவும், சனி துலாத்தில் உச்சமாகவும், சந்திரன் ரிசபத்தில் உச்சமாகவும் இருக்கும்போது மீதமுள்ள கிரகங்கள் பதினொன்றில் இருக்க வேண்டும். குரு மிதுனத்தில் இருக்க வேண்டும், ரிசபம் லக்னமாக இருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிப்பது முதலில் சொல்லப்பட்டதற்கு மாறாக உள்ளது. இது ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இந்த ராஜயோக சக்கரம் கீழே காட்டப்பட்டுள்ளது.

மேலே சொல்லப்பட்ட யோகங்கள் யாவும் வராகஹோரையில் உள்ளன. வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்துக்கு நிறைய மொழிபெயர்ப்புகள் உள்ளன. N.சிதம்பர ஐயர், பெங்களுர் சூர்யநாராயணராவ் இவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு, தஞ்சை சரசுவதி மஹால் நூலகத்தில் இலிங்கன் என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பெற்ற சுவடி, வைத்தியலிங்கப் பத்தர் என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மங்களேசுவரீயம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட நூல், கடலங்குடி நடேச சாஸ்திரிகளால் 1925ல் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளி வந்த பிருஹஜ் ஜாதகம் ஆகிய நூல்களை ஒப்பு நோக்கிய பின்னரே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.
பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் யோகங்களில் பிறவாத பலபேர் ராஜயோகத்தை அனுபவித்துக்கொண்டிருப்பதை இப்போது பார்க்க முடிகிறது. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் முன்னோர்கள் சொன்ன யோகங்களில் நிறைய ரஹஸ்யங்கள் இருப்பதாகத் தெரிகிறது. எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் படிப்போரின் யூகத்துக்கு விட்டுவிடுதல் என்பதையே அவர்கள் செய்திருக்கின்றார்கள். இதன் தொடர்ச்சியாக வெளிவரவுள்ள அடுத்த கட்டுரையில் தனது முயற்சியால் ஒருவன் செல்வந்தன் ஆவதற்கும் பெரிய பதவிகளில் அமர்வதற்கும் காரணமாக உள்ள யோகங்களைப் பற்றி எழுதப்படும். அவை பழைய நூல்களில் சொல்லப்பட விஷயங்களின் சாரமாக இருக்கும்.
இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட (1)வது யோகத்தில் உச்சவீடு மூலத்திரிகோண வீடு என்ற வார்த்தைகளுக்குப் பொருள் தெரியாதவர்களுக்காகக் கீழே உள்ள பட்டியல் தரப்படுகிறது.

கீழேயுள்ள குறிப்புக்கள் சோதிட சாஸ்திரத்தின் நுட்பங்களைத் தெரிந்துகொள்ளத் தவிக்கும் உண்மையான படிப்பாளிகளுக்காக.
- மத்திய அரசால் வெளியிடப்படும் ராஷ்ட்ரிய பஞ்சாங்கம் அல்லது லாஹிரி எபிமெரிஸ் இவற்றில் ஒன்றை வாங்கிக் கிரக நிலைகள் பார்ப்பதற்குப் பயன்படுத்துங்கள்.
- கணிணியை நம்பாமல் நீங்களே Tables of Ascendants ஒன்றை வாங்கி லக்னம் கணிக்கப் பழகிக் கொள்ளுங்கள். மேலேயுள்ள பஞ்சாங்கங்களைப் பயன்படுத்தினால் இருபது நிமிட நேரத்தில் ஒரு ஜாதகத்தைக் கணித்துவிடலாம்.
- கிரகங்களின் பாதசாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றன என்பதைவிட எந்த நவாம்சத்தில் எந்தத் திரேக்காணத்தில் இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.
- குடும்ப நண்பர்கள், சொந்தங்கள் மூலம் நிறைய ஜாதகங்களைச் சேகரியுங்கள். அவர்களது வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான சம்பவங்களை தேதிவாரியாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- மேலைநாட்டில் உள்ள சோதிட மேதைகளின் புத்தகங்களையும் தேடிப் படியுங்கள். வானசாஸ்திரத்தின் அடிப்படைகளைக் கொஞ்சமாவது கற்றுக்கொள்ளுங்கள்.
- கங்கையும், காவிரியும் மட்டுமே புனித நதிகள் அல்ல. நைல், தேம்ஸ், வால்கா எல்லாமே புனித நதிகள்தான்.
- இந்திய நாட்டில் மட்டும்தான் மகரிஷிகள் இருந்தார்கள் என்ற சிந்தனையை விட்டுவிட்டு யூக்லிட், நியூட்டன், ஐன்ஸ்டின், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற மகரிஷிகளையும் படியுங்கள். பிரபஞ்ச ரஹஸ்யத்தைச் சொல்லுகின்ற எல்லோருமே மகரிஷிகள்தான்.
- எல்லையற்ற பரப்பில் சுழலும் கிரகங்களைத் திருப்பதி, காளகஸ்தி, திருச்செந்தூர், திருநள்ளாறு போன்ற இடங்களுக்குள் அடக்க முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
- ‘கண்டிப்பாகத் தெரிந்துகொள்வேன்’ என்ற நினைப்புடன் செயல்படும் யாருக்காகவும் ரஹஸ்யக் கதவுகள் திறக்கத்தான் செய்யும்.
புதிதாகப் படிப்பவர்களுக்கு:
கோசாரம் என்றால் இன்றைய தினத்தில் கிரகங்கள் எந்த இராசியில் எத்தனையாவது பாகையில் இருக்கின்றன என்பதைச் சொல்வது. (ஒரு இராசிக்கு 30 பாகை வீதம் 12 இராசிகளுக்கும் 360 பாகை) ஜாதகர் பிறந்த தினத்தில் உள்ள கிரக நிலைகளுக்கும், ஜாதகர் எப்பொழுதெல்லாம் ஜாதகம் பார்க்கப் போகின்றாரோ அன்றைய நாளில் உள்ள கிரக நிலைகளுக்கும் உள்ள தொடர்புகளை வைத்துப் பலன்கள் சொல்வதே கோசார பலன் ஆகும். கிரகங்கள் வக்ரமாக இருக்கின்றது என்றால் அந்தக் கிரகம் முன்னோக்கிப் போகாமல் பின்னோக்கிப் போகின்றது என்று அர்த்தம். உதாரணமாக வரும் செப்டம்பர் 17 இரவு 11.30 மணிக்கு புதன் வக்கிரமாகிறது. கன்னிராசியில் 21 பாகை 49 கலையில் இருக்கும். புதன் 19ம் நாள் 21 பாகை 46 கலைக்கும், 20ம் நாள் 21 பாகை 34 கலைக்குமாகப் பின்னோக்கி நகர்கிறது. இதுவே வக்கிரம் எனப்படும். பின் அக்டோபர் 9ம் தேதியிலிருந்து முன்னோக்கி நகர்கிறது. இது வக்கிர நிவர்த்தி எனப்படும். வக்கிர கதியில் உள்ள கிரகங்கள் பலமாக இருக்கின்றன என்று அர்த்தம். ஆனால் அவை நல்ல பலன்களைச் செய்யுமா அல்லது கெட்ட பலன்களைச் செய்யுமா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சூரிய சந்திரர்களுக்கு வக்கிர கதி கிடையாது. செவ்வாய் முதல் சனி வரையுள்ள கிரகங்களே வக்கிரமாகும். சென்ற கட்டுரையில் கிரகங்களின் சத்துரு மித்ரு சமநிலைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சூர்யனுக்குச் சுக்கிரன் சத்ரு. எனவே சூரியன் சுக்கிரனின் வீடான ரிசபம் துலாத்தில் இருந்தால் சூர்யன் சத்ரு வீட்டில் இருப்பதாக அறிந்துகொள்ள வேண்டும். சத்ரு வீட்டில் இருப்பது பலக் குறைவு. அஷ்டவர்க்கம் பற்றிச் சிலர் கேட்டிருக்கிறார்கள். அது பற்றிய தனிக் கட்டுரை ஒன்று வெளிவர இருக்கின்றது.
இரண்டாமிடம், ஜந்தாமிடம், எட்டாமிடம் என்று சொல்லப்படுபவை யாவும் ஜாதகத்தில் லக்னம் என்று குறிப்பிட்டிருக்கும் இராசியிலிருந்து எண்ண ஆரம்பித்தால் கிடைக்கும் ராசிகளாகும். லக்னத்திலிருந்து Clockwise ஆக எண்ண வேண்டும்.
ஷட்பலம் என்பது கிரகங்கள் பெற வேண்டிய ஆறுவிதமான பலங்களாகும். ஸ்தான பலம், கால பலம், திக்கு பலம், சேஷ்டாபலம், நைசர்க்கிக பலம், த்ருக் பலம் என்பவை ஆறுவிதமான பலங்களாகும். இவை அனைத்தும் சேர்ந்த பலம் ஒவ்வொரு கிரகத்துக்கும் இவ்வளவு அளவு இருக்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது. அந்த அளவுக்குக் குறைந்தால் அந்தக் கிரகம் பலமில்லாத கிரகம் என்று கருதப்படும். ஷட்பலம் குறைந்த கிரகங்கள் சுபபலனைச் செய்யாது என்பது பொதுவான கருத்தாகும். ஷட்பலம் கணக்கிடத் தெரிந்த ஒரு சோதிடரை நீங்கள் கண்டுவிட்டால் அது உங்களின் பேரதிருஷ்டம்.
இது ஒரளவுக்காவது ஜோதிட ஞானம் உள்ளவர்களுக்கான இணையதளம் என்றுதான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் நிறைய வாசகர்கள் அடிப்படையான சில விஷயங்கள் பற்றி அறியாமல் இருக்கின்றார்கள். எனவே தான் மேலே உள்ள குறிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் தெரிந்தவர்கள் பெங்களுர் V.ராமன் எழுதிய ASTROLOGY FOR BEGINNERS என்ற புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.
அடுத்த கட்டுரை ‘ராஜயோகம் யாருக்கு? ...தொடர்ச்சி’
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.