சொந்தவீடு என்பது பெரும்பான்மை மக்களின் கனவு. இந்த இனிய கனவை எங்களால் மட்டுமே நிஜமாக்க முடியும் என்று வீட்டைக் கட்டி விற்கும் பெரிய கட்டுமான நிறுவனங்களும், வங்கிகளும் மக்களைக் கூவிக் கூவி அழைக்கின்றன. இந்த நிலையில் வீடு வாங்குவதற்கோ அல்லது சொந்தமாகக் கட்டிமுடிப்பதற்கோ சோதிடர்களின் ஆலோசனைகளை நாடுவதே பெரும்பாலோர் செய்யும் செயலாக இருக்கின்றது.
சரியான நேரத்தில் தொடங்கப் பெறாத எச்செயலுமே சரியாகத் தொடங்கி சரியாக முடியாது. மேலும் வீடு கட்டுதல் அல்லது வாங்குதல் என்பது பொருளாதாரத்தைச் சிக்கலாக்கும் விஷயம். எனவே சோதிடர்களைத் தேடிப் போகும் சாமான்ய மக்களுக்குக் கிரகங்களின் சாதகமான நிலைகளையும் பாதகமான நிலைகளையும் சொல்லுவது மட்டுமே சோதிடரின் முக்கியமான கடமையாகும்.
அவ்வகையில் எமக்குக் கிடைத்த சில அனுபவங்களையும் அஷ்டவர்க்கம் என்ற சோதிடக் கணக்குமுறையையும் சேர்த்து இங்கே சில குறிப்புகளைத் தருகின்றோம். ஏற்கனவே வீடு வாங்கிய அல்லது கட்டி முடித்த நண்பர்களைச் சந்தித்து, முடியுமானால் அவர்களது ஜாதகத்தை வாங்கிப் பார்த்து, இக்குறிப்புக்கள் அவர்களது ஜாதகத்தைப் பொறுத்தவரையில் சரியாக இருந்தால் இக்குறிப்புகளை எடுத்துக்கொள்ளலாம். இல்லையெனில் இவை சரியில்லையென ஒதுக்கிவிடலாம். அந்த உரிமை இதைப் படிப்பவர்களுக்கு உண்டு.
வியாழன், சனி என்ற இரண்டு கிரகங்களும் மெதுவாகச் சஞ்சாரம் செய்வதால் இந்த இரண்டு கிரகங்களுமே ஒருவரது முயற்சிக்குச் சாதகமாக இருக்கும் நேரத்தில்தான் எந்தப் புதிய செயலையும் செய்யத் தொடங்க வேண்டும். இந்த இரண்டு கிரகங்களின் கோசார நிலையைக் கூர்ந்து நோக்க வேண்டிய சோதிடர்கள் அந்தக் கிரகங்கள் ஒரு ராசியில் பிரவேசிக்கும் நாளில் பரிகாரங்கள் செய்தால் எல்லாக் காரியங்களும் சுபமாக நடக்கும் என்பதை மட்டுமே ஜனங்களுக்குச் சொல்லக் கற்றுக் கொண்டார்கள். எனவே தான் சோதிடர்களின் அனைத்துக் கூற்றுகளும் எப்பொழுதுமே பொய்களாகிப் போகின்றன.
வீடு என்பது நான்காமிடத்தைக் குறிக்கின்றது. நான்காமிடம், நான்காமிடத்து அதிபதி, சுக்கிரன் இம்மூன்றும் சேர்ந்துதான் வீட்டைக் குறிக்கின்றன. (செவ்வாய் பூமிகாரகன். எனவே செவ்வாயைப் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும் என்பது சரியல்ல. செவ்வாய் விவசாயத்தைக் குறிக்கின்றதே தவிர கட்டி முடித்த வீட்டை அல்ல) எனவே நான்காம் பாவத்துக்கும், நான்காம் பாவாதிபதிக்கும், சுக்கிரனுக்கும், அஷ்டவர்க்கப்படியான நல்ல இடங்களுக்குச் சனியும், வியாழனும் வரும் காலங்களில் வீடு கட்டுவதற்கான காரியங்களைத் தொடங்கினால் அவை தடங்கலின்றி நடைபெறும் என்பதுதான் அடிப்படையான உண்மை.
சனி லக்னத்துக்கு 1, 3, 4, 6, 10, 11 ஆகிய இடங்களில் நற்பலன்களைக் கொடுக்கின்றான். வியாழன் லக்னத்துக்கு 1, 2, 4, 5, 6, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் நற்பலன்களைக் கொடுக்கின்றான். எனவே ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு மேற்குறிப்பிட்ட இடங்களில் சனியும் வியாழனும் வரும் போது ஒருவர் வீடு கட்டும் அல்லது வாங்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். சுக்கிரன் லக்னத்துக்கு 1, 2, 3, 4, 5, 8, 9, 11 என்ற இடங்களில் நற்பலன்களைக் கொடுக்கின்றான். எனவே இந்த மூன்று கிரகங்களும் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ மேலே சொன்ன இடங்களில் வரும் போது வீடு கட்டும் அல்லது வாங்கும் செயல் நிச்சயமாக நடைபெறும். மேற்கூறியவாறு கிரக நிலைகள் அமையும் போது நான்காம் பாவாதிபதியும் லக்னத்துக்குச் சாதகமான இடங்களில் வந்தால் மிகவும் நன்று.
தசாபுக்திகள் எவையாகவும் இருக்கட்டும். மேலே சொன்ன காலங்களில் முயற்சிகள் மேற்கொண்டால் அவை நிச்சயம் பலன்தரும். சிலர் ஏழரைச் சனியில் அல்லது அட்டமச் சனியில் செலவு செய்யுங்கள். அவை சுபவிரயமாக இருக்கட்டும் என்று ஆலோசனை கூறுவார்கள். இது விதியை மதியால் வெல்லலாம் என்போரது சிந்தனையில் உதித்த கருத்து. நாம் இதை ஒப்பவில்லை.
33 வயதுக்கு மேல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அவர்களது ஜாதகத்தில் வியாழன் எந்த ராசியில் இருக்கின்றதோ அந்த ராசியிலிருந்து கோசார வியாழன் 1, 2, 3, 4, 7, 8, 10, 11 ஆகிய இடங்களுக்கு வரும் போதும் கோசார சனி ஜன்ம வியாழனுக்கு 5, 6, 11, 12 ஆகிய இடங்களுக்கு வரும் போதும் வீடுகட்ட அல்லது வாங்கத் திட்டமிடலாம்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.