சோதிடர்கள், சோதிடத்தை நம்புகின்ற மக்கள் மனங்களில் எத்தனையோ தவறுதலான கருத்துக்களைப் பரப்பி வைத்திருக்கின்றார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று குருவைப் பற்றியது. தேவர்களுக்குக் குரு என்பதால் குரு என்று அழைக்கப்படும் வியாழன் பெரிய சுபக் கிரகம் என்றும், அதன் பார்வை கோடி நன்மையைத் தரும் என்றும் எல்லோரும் நம்புகின்றார்கள். அனைத்துத் தோஷங்களையும் நீக்கும் வல்லமை வியாழனுக்கு மட்டுமே உண்டு என்றும் சோதிடர்கள் கூறி வருகின்றார்கள். இது சரியானதுதானா என்று அலசிப் பார்ப்பதற்காகவே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.

வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்தின் முதல் அத்தியாயத்தில் பத்தொன்பதாவது சுலோகத்தில் லக்னம் லக்னாதிபதியாலோ, புதனாலோ அல்லது குருவாலோ பார்க்கப்பட்டால் மிகவும் வலிமையுடையதாக ஆகின்றது என்று சொல்லப்படுகிறது. இங்கே சுக்கிரன் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால் அரிஷ்டாத்தியாயத்தில் சுபக்கிரகங்கள் என்று புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களையும் குறிப்பிடும் வராகமிகிரர் வியாழனுக்கு எந்தத் தனி அந்தஸ்தையும் கொடுக்கவில்லை.

ஆனால் வேறு நூல்களில் கூறப்பட்டுள்ள அரிஷ்டத்தைப் போக்கும் யோகங்களைப் (இவை அரிஷ்ட பங்க யோகங்கள் என்றழைக்கப்படுகின்றன) பற்றிக் குறிப்பிடும் கடலங்குடி நடேச சாஸ்திரிகள் கீழ்க்கண்டவாறு எழுதுகின்றார். “புதன், குரு, சுக்கிரன் இவர்களுள் ஒருவர் பலமுள்ளவராய்க் கேந்திரத்தை அடைந்திருந்தால் எந்தெந்தப் பாபக்கிரகத்துடன் சேர்ந்திருந்தபோதிலும் ஸத்யோரிஷ்ட யோகத்திற்குப் பங்கமுண்டு.”

“சந்திரன் சத்துரு வீட்டிலிருந்தபோதிலும் குரு, புத, சுக்கிரன் இவர்களின் திரேஷ்காணத்திலிருந்தால் பாம்பால் கடிக்கப்பட்டவனை விஷ வைத்தியன் போல நிச்சயமாகக் காப்பாற்றுவான்” 

“மற்றெல்லாக் கிரகங்களுக்கும் மேலானவனும், அதிகப் பலம் பெற்றவனும், பிரகாசிக்கின்ற கிரணங்களையுடையவனுமான குரு லக்னத்திலிருந்தால் அந்தக் குரு ஒருவனே பக்தியுடன் செய்யப்பட்ட ஸ்ரீமந் நாராயணனுடைய நமஸ்காரம் போலத் தாண்டுதற்கு அரிதான எல்லாத் தோஷங்களையும் போக்கிவிடுவான்.” 

இப்படிச் சொல்லிக்கொண்டு போகும் அவர் எந்த இடத்திலேயும் குருவின் பார்வை அரிஷ்ட பங்கம் செய்யும் என்று கூறவில்லை. கேந்திரங்களில் சுபர்கள் இருந்தால் அரிஷ்டபங்கம் வரும் என்று சொல்லும் அவர் எல்லாச் சுபக் கிரகங்களையும் குறிப்பிடுகின்றார்.

ஆனால் குருவின் பார்வைக்கு மட்டும் விசேஷத்தன்மையை யார் எப்போது கொடுத்தார்கள் என்பது விளங்கவில்லை. சிறு வயதிலேயே  இறந்து போகும் யோகங்களைப் பெற்றவர்கள், நீண்ட நாட்கள் வாழ்வது குருவின் பார்வை அல்லது சேர்க்கையால் என்று விளக்கம் கொடுக்கும் சில உரையாசிரியர்கள், குருவின் பார்வையை அல்லது சேர்க்கையைப் பெற்ற லக்னம் அல்லது லக்னாதிபதியை உடைய ஜாதகர்கள் சீக்கிரம் இறந்து போவதற்கும் காரணங்கள் கூற வேண்டுமல்லவா?

நம்முடைய அனுபவத்தில் வியாழன் கேந்திரத்திலிருக்கும் போது பிறந்தவர்களும், வியாழனோடு லக்னாதிபதி சேர்ந்திருக்கப் பிறந்தவர்களும், லக்னாதிபதி, லக்னம் இவை வியாழனால் பார்க்கப்படும்போது பிறந்தவர்களும் சீக்கிரமே மரணத்தைத் தழுவியிருக்கின்றார்கள். சில உதாரணங்கள் தருகின்றோம்.

 

sample horoscope

இந்தக் குழந்தை பிறந்த அன்று மாலை 7.00 மணி அளவில் இறந்து போனது. லக்னாதிபதி செவ்வாய் வியாழனோடு சேர்க்கை. சந்திரனும் சந்திரனிருக்கும் எட்டாமிடமும் குருவால் ஒன்பதாம் பார்வையால் பார்க்கப்படுகின்றன. தனித்த புதன் பத்தாம் கேந்திரத்தில். ஆனாலும் மரணம் சம்பவித்துள்ளது. 

 

sample horoscope

எட்டுக்குடைய குரு உச்சம் பெற்று எட்டாமிடத்தையும், எட்டாமிடச் சந்திரனையும் பார்க்கின்றது. குருவும் சந்திரனும் பரிவர்த்தனை. சூர்யனும் புதனும் பரிவர்த்தனை. இக்குழந்தை 6 மாதத்தில் இறந்து போனது. 

 

sample horoscope

இந்தப் பெண் குழந்தை 19 நாட்களிலேயே இறந்து போனது. லக்னத்தைக் குரு பார்க்கின்றது. எட்டுக்குடைய புதனும் பன்னிரண்டுக்குடைய சனியும் பரிவர்த்தனை.

 

sample horoscope

லக்கினாதிபதி சனியையும், லக்னத்தையும் குரு பார்க்கின்றது. சந்திரனையும் குரு பார்க்கின்றது. லக்கினாதிபதி சனி (ஆயுஷ்காரகனும் கூட) உச்ச வீட்டில் இருக்கின்றது. சுக்கிரனுக்கு நீச பங்கம் கிடைத்திருக்கின்றது. ஆயினும் 29 வயது முடிவதற்குள் இறந்துவிட்டார்.

 

sample horoscope

லக்கினத்தையும், லக்னாதிபதி சனியையும் குரு பார்க்கின்றது. சனி வியாழனின் வீட்டிலிருந்து வியாழனால் பார்க்கப்படுவதாலும், லக்னத்தைச் சனி பார்ப்பதாலும் லக்னத்துக்கு மிக அதிகமான வலிமை கிடைத்திருக்கின்றது. ஆயினும் 29 வயதில் மரணத்தைக் கொண்டு வந்துள்ளது.

 

கடைசியாகக் குறிப்பிட்டிருக்கும் ஜாதகம் எனது மூத்த சகோதரியாருடையது. ஆங்கிலத் தத்துவமேதை டேவிட் ஹ்யூம் என்பவரின் Inquiry into human understanding என்ற புத்தகம், “தன்னை  மரபுச் சிந்தனைகள் என்னும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டது” என்று ஜெர்மன் தத்துவமேதை இம்மானுவேல் காண்ட் குறிப்பிட்டது போல எனது சகோதரியாரின் இளவயது மரணம் என் தந்தையாரையும் மரபுவழிச் சிந்தனைகளிலிருந்து மாற்றியது. அதன் பிறகே அவர் சோதிடத்தைப் புதிய பார்வையில் அணுக ஆரம்பித்தார். இன்னும் ஆழ்ந்து படிப்பதற்காக நிறைய ஜாதகங்களைச் சேகரித்தார். விம்சோத்தரிதசை பொய்த்துப் போகும், அதைப் பின்பற்றாதே என்று எனக்குச் சொன்னவரே அவர்தான்.

நூலாசிரியனின் எண்ண ஓட்டத்தைக் கவனிக்காமல் அந்நூலாசிரியர் இதைத்தான் சொல்ல வந்திருக்கின்றார் என்று தங்களது கருத்தை அந்நூலாசிரியரின் கருத்தாக மாற்றிப் பார்ப்பது இந்திய மண்ணில் பரம்பரையாக வரும் ஒரு நோய். அதைப் போலவே பாடம் சொல்லிக் கொடுக்கும் குருவை மீறிப் புதிதாக ஏதும் கற்கப் போனால், குருத்துரோகி, குருவை மதிக்காதவன் என்று சாபம் கொடுப்பதும் இங்கே உள்ள இன்னொரு நோயாகும். எல்லா வித்தைகளையும் சொல்லிக் கொடுத்தால் மாணவன் தன்னை மிஞ்சிவிடுவான் என்ற அச்சத்தில் பலவற்றை மறைத்து வைத்திருப்பவனே ஆசிரியன் என்பதற்குப் பலநூறு கதைகள் இங்கே உள்ளன.

“கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்றாள் அவ்வை. எல்லாவற்றையும் கற்று முடிக்க ஒரு ஆயுள் போதாது. ஆனாலும் படிக்கின்ற கொஞ்சத்தையும் ஆழ்ந்து படித்துப், பல கேள்விகளைத் தனக்குள் கேட்டு, அக்கேள்விகளுக்கு விடை காண முயற்சிப்பதே ஒரு மாணவனின் கடமை. இதையெல்லாம் விட்டுவிட்டு ஆசிரியர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும், புதியபார்வை, புதிய சிந்தனைகளை விலக்கி விட வேண்டும், மகரிஷிகளும் சித்தர்களும் வாழ்ந்த பூமி இதுதான், இது மட்டுமே ஞான பூமி என்றெல்லாம் பல போர்வைகளைப் போர்த்திக் கொண்டால்  ஞான சூரியனைத் தரிசிக்க முடியாது.

 

This Week’s Quote:

But all excellent things are as difficult as they are rare.

- Spinoza.

 

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.