ஓரளவுக்குப் படித்த சோதிடர்கள் மத்தியில் பலதீபிகை பிரபலமாக அறியப்படும் நூல். மந்த்ரேஸ்வரர் என்பவரால் ஆக்கப்பட்ட இந்த நூலில் குறிப்பிடப்படும் யோகங்களைப் பற்றியும் நாம் கொஞ்சம் அறிந்து கொள்ளலாம்.
வராகமிகிரர் பிருஹஜ் ஜாதகத்தில் குறிப்பிடும் சங்க்யா யோகங்கள், அனபா, சுனபா மற்றும் கேமத்ருமம், வேசி, வாசி ஆகிய யோகங்களையும் குறிப்பிடும் பலதீபிகை ஆசிரியர், வேறு சில யோகங்களையும் சொல்லுகின்றார்.
மகாபாக்ய யோகம்:
லக்னம், சூரியன், சந்திரன் இம்மூன்றும் ஒற்றைராசியில் இருந்து பகலில் ஆண் பிறந்தாலும், இம்மூன்றும் இரட்டை ராசியில் இருந்து இரவில் பெண் பிறந்தாலும் இந்த யோகம் கிட்டும். திருமதி.இந்திராகாந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு இந்த யோகம்தான் காரணம் என்பது பெரும்பான்மை சோதிடர்களின் நம்பிக்கை. செல்வம், செல்வாக்கு ஆகியவற்றைத் தருவது இந்த மகாபாக்ய யோகம்.
கேசரி யோகம்:
இந்த யோகத்தைக் கஜகேசரி என்றும் சொல்வதுண்டு. குருவிற்குக் கேந்திரத்தில் சந்திரனிருந்தால் இந்த யோகம் கிடைக்கும். தீர்க்காயுள், புகழ், சாமர்த்தியம் எக்காரியத்திலும் வெற்றியையே பெறுவது இவை யாவும் இந்த யோகத்தால் கிட்டும்.
அமலா யோகம்:
இலக்கினத்துக்காவது, சந்திரனுக்காவது பத்தாமிடத்தில் புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் அமையப் பெற்றால் அது அமலா யோகமாகும். பெருஞ்செல்வம் சேர்த்துப் பேருடனும், புகழுடனும் வாழ்வது இந்த யோகத்தின் பயனாகும். இதில் லக்னத்துக்குப் பத்தில் இருப்பதுவே அதிகப் பலனைத்தரும்.
வசுமத் யோகம்:
இலக்கினத்துக்காவது, சந்திரனுக்காவது 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் இருப்பது வசுமத் யோகம் எனப்படும். பெருஞ்செல்வந்தனாக ஒருவரை ஆக்கும் யோகம் இதுவாகும்.
புஷ்கல யோகம்:
இலக்கினாதிபதியும், இராசியாதிபதியும் சேர்ந்து கேந்திரத்திலிருந்து இலக்கினத்தைப் பார்க்கக் கிடைப்பது புஷ்கல யோகமாகும். இலக்கினாதிபதியும், இராசிக்குடைய அதிபதியும் சேர்ந்து ஏழாமிடத்தில் இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். செல்வம், அதிகாரம், புகழ் இவற்றைக் கொடுப்பது புஷ்கல யோகம்.
லட்சுமி யோகம்:
ஒன்பதுக்குடைய கிரகமும் சுக்கிரனும் சொந்த வீட்டிலாவது, உச்ச வீட்டிலாவது இருந்து அந்த இடம் 1, 4, 7, 10, 5, 9 என்ற இடங்களில் ஏதாவது ஒன்றாக வந்தால் அது லட்சுமி யோகமாகும். உயர் பதவி, செல்வம் பெரிய நிலப்பரப்புக்கு உரிமையாளராக இருத்தல் இவை லட்சுமி யோகப் பலனாகும்.
கௌரி யோகம்:
சந்திரன் சொந்த வீட்டிலாவது, உச்ச வீட்டிலாவது கேந்திர திரிகோணங்களில் இருந்து குருவால் பார்க்கப் பெற்றால் கௌரியோகம். ஆரோக்கியமான உடல், அழகு, பெரியோர்களின் நட்பு, நல்ல குழந்தைகள், எதிரிகளாலும் விரும்பப்படுபவராக இருத்தல் ஆகியவை இந்த யோகப் பலனாகும்.
ஸ்ரீகண்ட யோகம்:
லக்கினாதிபதி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் கேந்திர திரிகோணங்களில் உச்சம், ஆட்சி, நட்பு வீடுகளில் இருந்தால் ஸ்ரீகண்ட யோகமாகும். சைவ சமயத்தில் விருப்பம் கொண்டு சிவனைத் துதித்து வாழ்வது இந்த யோகப் பலனாகும்.
ஸ்ரீநாத யோகம்:
சுக்கிரன், புதன், ஒன்பதுக்குடையவன் ஆகிய மூன்று கிரகங்களும் கேந்திர திரிகோணங்களில் உச்சம், ஆட்சி, நட்பு வீடுகளில் இருந்தால் அது ஸ்ரீநாத யோகமாகும். ஸ்ரீமந் நாராயணமூர்த்தியின்பால் பேரன்புகொண்டு விஷ்ணுப் ப்ரியனாய் சங்குச், சக்கர முத்திரைகளைத் தாங்கி வாழ்வது இந்த யோகப் பலனாகும்.
விருஞ்சி யோகம்:
லக்கினாதிபதி, சனி, குரு ஆகிய மூவரும் கேந்திர திரிகோணங்களிலிருந்து அந்த இடங்கள் உச்சம், ஆட்சி, நட்பு வீடுகளாக இருந்தால் விருஞ்சி யோகம் கிட்டுகிறது. வேதஞானம், வைதீக கர்மத்தில் பிசகாமல் வாழ்வது, புகழ் பெற்ற சிஷ்யர்களைப் பெறுதல், தீர்க்காயுள், அரசருக்கும் மேலான கீர்த்தியைப் பெறுதல் இவை விருஞ்சி யோகப் பலனாகும்.
அகண்ட சாம்ராஜ்ய யோகம்:
இரண்டு, ஐந்து, ஒன்பதுக்குடையவர்களில் யாரேனும் ஒருவர் சந்திரனுக்குக் கேந்திரத்திலிருந்து சிம்மம் அல்லது விருச்சிக லக்னத்தில் பிறந்தால் அகண்ட சாம்ராஜ்ய யோகம் கிடைக்கிறது.
குறிப்பு: இது ஒன்றும் அரிதான யோகமல்ல. சந்திரனும், குருவும் ஒருவருக்கொருவர் கேந்திரத்திலிருக்கும் போது சிம்ம விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த யோகம் கிட்டுகிறது. மேலே சொல்லப்பட்ட யோகங்களில் அமலா யோகம் மட்டுமே மிக அரிதானது. மற்ற யோகங்கள் பெரும்பான்மையோர் ஜாதகத்தில் காணப்பெறுவனவே.
சில ராஜயோகங்கள்:
- மேஷம், சிம்மம், தனுசு இவைகளில் ஒன்று ஜன்மலக்னமாக வந்து அதில் செவ்வாயும் இருந்து நட்புக் கிரகத்தால் பார்க்கப்பட்டால் ராஜயோகம்.
- சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய நால்வரில் ஒருவர் 9ம் இடத்தில் மிகப் பலமாக இருந்து மித்ருக்கிரகத்தின் பார்வையைப் பெற்றால் ராஜயோகம்.
- பூரண சந்திரன் கடகத்தில் ராசியிலும், அம்சத்திலும் இருந்தால் ராஜயோகம்.
- லக்னத்துக்குப் 10ல் செவ்வாயும், 11ல் சனியும் இருக்கும் போது லக்னத்தில் குரு இருந்தால் ராஜயோகம்.
பொதுவாகச் சூரியன், சந்திரன், லக்னாதிபதி இவர்கள் அதிக பலமுற்றவராய் இருந்தால் ஆரோக்கியம், சந்தோஷமான மனநிலை, விடாமுயற்சியால் காரியஞ்சாதித்தல் ஆகியவை கிடைக்கப் பெறுகின்றன. இல்லையென்றால் உடல் நலக் குறைவு, எதற்கும் மனங்கலங்கி தன்னையே நொந்து கொள்ளுதல், முயற்சியின்றிச் சோம்பியிருத்தல் ஆகியவையே வாழ்க்கையாகி விடுகின்றன.
This Week’s Quote:
Talent hits a target no one else can hit; Genius hits a target no one else can see.
- Schopenhauer.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.