முந்திய கட்டுரையில் பன்னிரண்டு வகையான குழந்தைப் பாக்கியம் உண்டு என்றும், அப்பன்னிரண்டு வகைக் குழந்தைகளின் பெயர் யாவை என்பதையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் யார் யாருக்கு என்ன மாதிரியான குழந்தைப் பாக்கியம் உண்டு என்பதைப் பார்ப்போம்.
ஓளரஸன்:
லக்கினத்துக்கோ, சந்திரனுக்கோ ஐந்தாமிடம் சுபராசியாகவும் சுபக்கிரகங்களுடைய பார்வையைப் பெறும் ராசியாகவும் வந்து, ஐந்தாம் வீட்டுக்குடையவனாலும், குருவாலும் பார்க்கப்பட்டாலும், ஐந்தாம் பாவத்தின் வர்க்கங்கள் (அம்சம், திரேக்காணம், துவாதசாம்சம்) குருவோடு சம்பந்தப்பட்டாலும் ஒளரஸபுத்திரன் பிறப்பான்.
ஷேத்ரஜன்:
மகரம், கும்பம் என்ற ராசிகள் ஐந்தாம் பாவமாக வந்து, அந்த ராசிகள் புதனது பார்வையை மட்டும் பெற்றுச் சூரியன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் பார்வையில்லாமல் இருந்தால் ஷேத்ரஜன் பிறப்பான்.
இதேபோல் ஐந்தாம் பாவம் மிதுனம் அல்லது கன்னியாக வந்து, அந்த ராசிகள் சனியின் பார்வையை மட்டும் பெற்றுச் சூரியன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் பார்வையில்லாமல் இருந்தாலும் ஷேத்ரஜன் பிறப்பான்.
தத்தன்:
மகரம் அல்லது கும்பம் ஐந்தாமிடமாக வந்து அதில் சனியிருந்து சந்திரனின் பார்வையை மட்டும் பெற்றால் தத்த புத்திரயோகம் ஏற்படுகிறது.
கிரீதன்:
மிதுனம் அல்லது கன்னி ஐந்தாமிடமாக வந்து, அதில் புதனிருந்து, சந்திரனின் பார்வையை மட்டும் பெற்றால் கிரீதன் என்ற புத்திரயோகம் ஏற்படுகிறது.
கிருத்திருமன்:
ரிசபம் அல்லது துலாம் லக்னமாக வந்து, ஐந்தாமிடத்தில் சனியிருந்து எந்தக் கிரகத்தாலும் பார்க்கப்படாமல் இருந்தால் கிருத்திருமன் என்ற சுவீகாரப் புத்திரப்ராப்தி உண்டு.
அதமப்பிரபவன்:
ஐந்தாமிடம் சிம்மராசியாக வந்து, அதில் செவ்வாயின் பார்வையைப் பெற்ற சூரியன் இருந்தால் அதமப்பிரபவன் என்ற குழந்தைப் பாக்கியம் கிட்டும். இது மேஷ லக்னத்துக்கு மட்டுமே உள்ள யோகமாகும். வெவ்வேறு குலங்களைச் சேர்ந்த தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தை அதமப்பிரபவன் என்ற பெயரால் அழைக்கப்படுவதால், மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் மட்டுமே கலப்பு மணம் செய்கின்றார்களா என்ற கேள்வி எழும். இக்கேள்வி நியாயமானதுதான். ஆனால் ஐந்தாமிடம் என்பதை, ஐந்தாமிடத்தின் வர்க்கங்களான அம்சம், திரிக்கோணம், துவாதசாம்சம் என்பவற்றோடு பொருத்திப் பார்த்தால் எந்த லக்னத்துக்கும் இது பொருந்தும்.
கூடோத்பன்னன்:
சந்திரன் மேஷம் அல்லது விருச்சிக ராசியில் இருக்க வேண்டும். ஐந்தாமிடத்தில் உள்ள சனியால் அச்சந்திரன் பார்க்கப்பட வேண்டும். சந்திரனைச் சனியைத் தவிர வேறு யாரும் பார்க்கக் கூடாது. இப்படி அமையப் பெற்ற ஜாதகருக்குக் கூடோத்பன்னன் என்ற குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். ஐந்தாமிடத்தில் உள்ள சனியால் சந்திரன் பார்க்கப்பட வேண்டும் என்றால் சந்திரன் ஏழு, பதினொன்று, இரண்டு என்ற இடங்களில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் சனியின் மூன்றாம் பார்வை, ஏழாம் பார்வை, பத்தாம் பார்வை சந்திரனுக்குக் கிடைக்கும். சந்திரன் மேஷம் அல்லது விருச்சிக ராசியில் இருக்க வேண்டும் என்பதால் இந்த யோகம் துலாம், மிதுனம், மீனம், ரிசபம், மகரம் ஆகிய லக்னங்களில் பிறந்தவருக்கு மட்டுமே கிட்டும்.
அபவித்தன்:
ஐந்தாமிடம் மகரம் அல்லது கும்பமாக வந்து, அந்த ராசியில் செவ்வாயிருந்து, அச்செவ்வாய் சூரியனால் பார்க்கப்பட்டால் அபவித்தன் என்ற பெயருடைய குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.
பௌனர்ப்பவன்:
ஐந்தாம் பாவத்தில் சனியிருந்து, அந்தச் சனியைச் சூரியனும், சுக்கிரனும் சேர்ந்து பார்க்க வேண்டும். அதே சமயத்தில் சந்திரனும் மகர அல்லது கும்பராசியில் இருக்க வேண்டும். இப்படி இருக்கும்பட்சத்தில் பௌனர்ப்பவன் என்ற புத்திரனைப் பெறும் யோகம் உண்டாகின்றது. கணவனால் விலக்கப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண், இன்னொருவரைச் சார்ந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டால் பிறக்கும் குழந்தை பௌனர்ப்பவன் என்ற பெயரைப் பெறும் என்று சொன்னோம். ஆனால் இந்தக் குழந்தையைப் பெறும் யோகம் முதல் கணவனது ஜாதகத்தில் இருக்க வேண்டுமா அல்லது அந்தப் பெண் யாரைச் சார்ந்து வாழ்கின்றாளோ அவரது ஜாதகத்தில் இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழலாம். முதல் கணவனது ஜாதகத்தில் தான் இந்த யோகம் இருக்க வேண்டும் என்று சாராவளி சொல்கின்றது.
கானீனன்:
சந்திரன் சூர்யனுடன் சேர்ந்து அஸ்தமனமாகியிருக்கும் போது (அமாவாசை, பிரதமை ஆகிய திதிகள்) ஐந்தாமிடத்திற்குச் சூரியனின் சேர்க்கையோ, பார்வையோ ஏற்பட்டால் கானீனன் என்ற புத்திர யோகம் ஏற்படுகிறது. திருமணம் செய்வதற்கு முன்பே ஒரு பெண் தாய்மைப் பேறு அடைந்து குழந்தை பெற்றுக்கொண்டால் அக்குழந்தை கானீனன் என்ற பெயர் பெறுகிறது என்று சொன்னோம். இங்கே சில விஷயங்கள் தெளிவாக இல்லை. திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் உண்டாகி மணமானபின்பு பிறந்தால் அச்சிசு மணமகனுக்குக் கானீன புத்திரன் என்று சாராவளி குறிப்பிடுகின்றது. அப்படியானால் ‘கூடோத்பன்னன்’ என்றழைக்கப்படும் குழந்தை யோகம் யாருக்கு என்ற கேள்வி எழும். நம்மைப் பொறுத்தவரை திருமணம் செய்வதற்கு முன்னால் அப்பெண் யாரைச்சேர்ந்தாளோ அவருக்கே இந்த யோகம் இருக்க வேண்டும்.
சகோடன்:
ஐந்தாமிடம் கடகம், சிம்மம் ஆகிய இராசிகளாக இருந்து அல்லது சூரியன், சந்திரன் இவர்களுடைய வர்க்கங்களாகவோ ஆகி அதில் சூரியன் சந்திரன் இவர்களிருந்து அவர்களுக்குச் சுக்கிரனுடைய பார்வையிருப்பின் சகோடன் என்றழைக்கப்படும் புத்திரப்ராப்தி உண்டாகும். இங்கேயும் சில விஷயங்கள் தெளிவாக இல்லை. சூர்யனுக்குச் சுக்கிரனுடன் சேர்க்கைதான் உண்டாகுமே தவிரப் பார்வை ஏற்படாது. சுக்கிரனின் பார்வை சூரியனுக்கு ஏற்பட வேண்டுமென்றால் சுக்கிரன் சூர்யனுக்கு ஏழில் இருக்க வேண்டும். இது சாத்தியமில்லை. ‘சூரியன், சந்திரன் இவர்களிருந்து’ என்பதன் அர்த்தம் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்க வேண்டுமா அல்லது தனித்தனியே சூர்யன் அல்லது சந்திரன் இருக்க வேண்டுமா என்பதும் தெளிவுப்படுத்தப்படவில்லை.
தாசிப்ரபவன்:
ஐந்தாமிடம் சுக்கிர நவாம்சத்தோடும், சுக்கிரனுடைய பார்வையோடும் கூடி இருந்தால் தாசிப்ரபவன் என்ற புத்திரயோகம் கிடைக்கிறது. இங்கேயும் சில விஷயங்கள் தெளிவாக இல்லை. இச்சுலோகம் ஒரு பெண்ணின் நடத்தையைக் குறித்துச் சந்தேகம் எழுப்புகிறதா என்றும் தெரியவில்லை. இந்த யோகம் எந்த ஆணின் ஜாதகத்தில் இருந்தால் யாருக்குத் ‘தாசிப்ரபவன்’ என்ற பெயரில் குழந்தைப் பாக்கியம் கிட்டும் என்பதும் தெளிவில்லை.
பொதுவாகப் புத்திர பாக்கியம் கிட்டாதவர்களுக்கு ஐந்தில் சனி அல்லது புதன் சம்பந்தம் இருக்க வேண்டும் என்பது சோதிட விதி. ஏனெனில் சனி, புதன் இவை அலிக்கிரகங்கள் என்ற பெயர் பெறுபவை. சாராவளி குறிப்பிடும் இந்தப் பன்னிரண்டு வகைப் புத்திர யோகங்கள் பெரும்பாலும் சனி, புதன் சம்பந்தப்பட்டவையே. ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்களின் பார்வைக்காக மட்டுமே இந்த விஷயங்களைத் தொகுத்துச் சொன்னோம். ஆர்வமுள்ளவர்கள் ஆழ்ந்து யோசிக்கட்டும்.
This Week’s Quote:
To improve is to change; to be perfect is to change often.
- CHURCHILL.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.