வராகமிகிரர் தான் எழுதிய பிருஹஜ் ஜாதகத்தில் லக்னத்துக்குரிய பலன்களை எழுதவில்லை. லக்னாதிபதி, அவனிருக்கும் ராசி, அம்சம் முதலியவற்றாலும் நவாம்ச லக்னத்தாலும், லக்னத்துக்குரிய பலன்களை நிச்சயித்துக் கொள்ளலாம் என்பது அவர் கருத்தாக இருந்திருக்கலாம். ஆனால் சாராவளியை எழுதிய கல்யாணவர்மர், சத்தியாச்சாரி என்ற இன்னொரு ஆசிரியர் இவர்கள் லக்னத்துக்கும் சில பலன்களைச் சொல்கின்றார்கள். லக்னத்தை நிச்சயம் செய்வதற்கும், பிரஸ்ன நேரத்தில் பலன்களைச் சொல்வதற்கும் இவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பலன்களின் அவசியம் கருதி கடலங்குடி திரு.நடேச சாஸ்திரிகள், அவர் மொழி பெயர்த்த பிருஹஜ் ஜாதகத்தின் 18-வது அத்தியாயத்தில் அவற்றைக் கூடுதலாகச் சொல்லியிருக்கின்றார். மிகச்சுருக்கமாக அவற்றை இங்கு எழுதுவோம்.
மேஷ லக்னம்:
மேஷ லக்னத்தில் பிறந்தவன் முன்கோபி. விகாரமான நகம் உள்ளவன். (நகங்கள் சுத்தமில்லாமலும், ஒழுங்கில்லாமலும் இருக்கும்) திக்கிப் பேசுபவன். சிறு வயதில் தாய், தந்தையர்களை இழப்பவன். குறைந்த எண்ணிக்கையிலான புத்திரர்களைப் பெறுபவன். சுற்றத்தாருக்கும், சகோதரர்களுக்கும் நன்மையைச் செய்கின்றவன். நண்பர்களிடத்தில் பிரியமுள்ளவன். அங்கக்குறைவுள்ள, அல்லது இன்னொருவனுக்கு நிச்சயம் செய்யப்பட்டுத் திருமணம் தடைபட்டுப் பின்னர் இவனை மணக்கும் மனைவியை உடையவன் . உயர்ந்த இடங்களிலிருந்து விழுதலாலோ, ஆயுதத்தாலோ மரணமடையும் வாய்ப்பு உள்ளவன்.
ரிஷப லக்னம்:
ரிஷப லக்னத்தில் பிறந்தவன் தடித்த உதடு, கன்னம், மூக்கு இவைகளை உடையவன். பெரிய நெற்றியையுடையவன். வாதம், கபம் நிறைந்த உடலுடையவன். அதிகமாகச் செலவு செய்பவன். பிறர்க்கு உதவுபவன். தாய் தந்தையர்களுக்குத் துக்கத்தைக் கொடுப்பவன். (இவனது திருமணம், அல்லது உத்யோகம் பற்றிக் கவலைப்படும்படி அவர்களை வைத்திருப்பவன்) கொடுத்த வேலைகளை உற்சாகமாகச் செய்பவன். மனைவியின் மேல் மிக்க ஆசையுள்ளவன்.
மிதுன லக்னம்:
மிதுன லக்னத்தில் பிறந்தவன் அங்கக் குறையுள்ளவனாகப் பிறப்பான் அல்லது அதிக அங்கமுள்ளவனாக இருப்பான். (சிலருக்கு ஆறு விரல்கள் இருக்கும்) இனிமையாகப் பேசுகின்றவன். இரண்டு தாய்களிடத்தில் வளர்பவன். குறைந்த எண்ணிக்கையிலான சகோதரர்களை உடையவன். எதிரிகளை வெல்பவன். தனக்குக் கிடைக்கும் பலவிதமான லாபங்களையும் பல காரணங்களால் இழந்து விடுபவன். மருத்துவராக இருந்தால் ‘கைராசி டாக்டர்’ எனப் பெயர் பெறுபவன்.
கடக லக்னம்:
கடக லக்னத்தில் பிறந்தவன் பிறந்த இடம் விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்பவன். செல்வந்தன். பெருங் கூட்டங்களால் கௌரவிக்கப்படுபவன். சுற்றத்தார்களிடமும், சொந்தபந்தங்களிடமும் கர்வமாக இருப்பவன். ஒரு இலக்கை வைத்துக் கொண்டால் அதை அடையும் சாமர்த்தியமுள்ளவன். கபம், வாதம் இந்த நோய்களால் கஷ்டப்படுபவன்.
சிம்ம லக்னம்:
சிம்ம லக்னத்தில் பிறந்தவன் மாமிச ஆகாரங்களை அதிகம் விரும்புவன். பல வேலைகளை ஆரம்பித்து அனைத்திலும் நஷ்டமடைபவனாக இருப்பவன். உடன்பிறந்தவர்களால் கஷ்டங்களை அனுபவிப்பவன் அல்லது உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லாது தனியாளாக இருப்பவன். இரண்டு மனைவியரோடு வாழ்பவன். பற்களில் வியாதியுள்ளவன்.
கன்னி லக்னம்:
கன்னி லக்னத்தில் பிறந்தவன் இனிமையாகவும், சாதுர்யமாகவும் பேசுபவன். நீண்ட கை, கால்களையுடையவன். அதிகமான பெண் குழந்தைகளையுடையவன். உடன்பிறந்தவர்களிடம் நல்ல உறவுகள் இல்லாதவன். செல்வமுடையவன். ஆனால் கஞ்சன்.
துலாம் முதல் மீனம் வரையுள்ள லக்னங்கள் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.
This Week’s Quote:
Genuine tragedies in the world are not conflicts between right or wrong. They are conflicts between two rights.
- Hegel.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.