சென்ற கட்டுரையில் மேஷம் முதல் கன்னி முடியவுள்ள ராசிகள் லக்னமாக வந்தால் என்ன பலன்கள் என்பதைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் துலாம் முதல் மீனம் முடியவுள்ள ராசிகள் லக்னமாக வந்தால் என்ன பலன்கள் என்பதைப் பார்ப்போம்.
துலா லக்னம்:
துலா லக்னத்தில் பிறந்தவன் கபம், வாதம் முதலியவைகளால் பீடிக்கப்பட்ட உடலுடையவன். குட்டையான கழுத்தையுடையவன். அதிகம் சம்பாதித்து, அதிகம் செலவு செய்பவன். பெரியோர்கள் மீது மரியாதை வைத்திருப்பவன். தந்தை மற்றும் சகோதரர்களால் கௌரவிக்கப்படுபவன். அந்திம காலத்தில் மனைவி இல்லாதவனாக இருப்பவன்.
விருச்சிக லக்னம்:
விருச்சிக லக்னத்தில் பிறந்தவன் அகன்ற முகமும், வயிறும் உடையவன். பித்தத்தால் பாதிக்கப்படும் உடலுடையவன். பெரிய குடும்பம், அநேக சொந்த பந்தங்கள் உடையவன். சிவந்த கண்களையுடையவன். காரியங்களை மெதுவாகவே செய்பவன். பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுபவன். மனைவி மீது அதிகம் பாசம் இல்லாதவன். ஊராட்சி, நகராட்சி மன்றங்களில் உறுப்பினராகும் வாய்ப்பு அதிகமுள்ளவன். சொந்த பந்தங்களிலே இவனுக்கு எதிரிகள் இருப்பர்.
தனுசு லக்னம்:
தனுசு லக்னத்தில் பிறந்தவன் பெரிய பற்கள், உதடு, மூக்கு இவைகளையுடையவன். விடாமுயற்சியோடு பல காரியங்களைச் செய்பவன். சிற்பம், ஓவியம் போன்ற கலைகளால் புகழையும், பணத்தையும் சம்பாதிப்பவன். சகோதரர்களிடத்தில் சண்டையிடுபவன். (பெரும்பாலான தனுசு லக்னத்துக்காரர்களுக்குச் சகோதரர்கள் இருப்பதில்லை.) மோசமான அதிகாரிகளின் கீழ் வேலை செய்பவன். அடிக்கடி தனது சேமிப்பைத் திருட்டுக் கொடுப்பவன். (பங்குச் சந்தை, சூது, குதிரைப் பந்தயம் இவை மூலம் பணம் செலவழிப்பவனாக இருக்கலாம்).
மகர லக்னம்:
மகர லக்னத்தில் பிறந்தவன் நீண்ட கை, கால்களை உடையவன். சிறிய மூக்கை உடையவன். வாத நோயால் பாதிக்கப்படுபவன். பயந்த ஸ்வபாவமுள்ளவன். சிறை வாசத்தை அனுபவிப்பவன். பெண் குழந்தைகளை அதிகமாக உடையவன். தனது கௌரவத்துக்குத் தாழ்ந்த பெண்ணை மனைவியாக அடைபவன். ஆனால் அவள் மீது அதிகம் அன்பு வைத்திருப்பவன். தலை சீக்கிரமே வழுக்கையாகும் வாய்ப்புள்ளவன்.
கும்ப லக்னம்:
கும்ப லக்னத்தில் பிறந்தவன் கர்வம் கொண்டவன். தன் குடும்பத்தில் முக்கியமானவன். (சில குடும்பங்களில் மூத்தவர்கள் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களாக இருக்கின்றார்கள்) சம்பாதித்த பொருட்களை இழந்து விடுபவன். பொதுவாகப் பெண்கள் மீது அதிகம் மதிப்பில்லாதவனாக இருப்பான். மனைவியோடு அடிக்கடி மனஸ்தாபம் கொள்ளும் கணவனாக இருப்பான். உடன்பிறந்தவர்கள் நண்பர்கள் எல்லோரையும் எதிரிகளாக்கிக் கொள்பவனாக இருப்பான். பெண்கள் மூலம் மரணமடைவான்.
மீன லக்னம்:
மீன லக்னத்தில் பிறந்தவன் மீனுக்கு ஒப்பான கண்களையுடையவன். தோல் சம்பந்தமான நோய் உள்ளவன். கபம், வாதம் இவைகளால் கஷ்டப்படுபவன். பலவிதமான தொழில்கள் மூலம் பணம் சேர்ப்பவன். பெற்றோர்களிடத்தில் பிரியமுள்ளவன். அதனாலேயே சண்டை போடும் மனைவியைப் பெற்றிருப்பவன். ரத்த சம்பந்தமான நோய்களையுடையவன்.
இப்பலன்களை லக்ன நிச்சயம் செய்வதற்கும், பிரஸ்ன நேரத்தில் பலன் சொல்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பலன்களைப் பட்டியலிட்டபின் திரு.நடேச சாஸ்திரிகள் கீழேகண்டவாறு எழுதுகின்றார்.
“இவ்விதம் சத்தியாச்சாரியர் சொல்லியிருப்பதையும், வராகமிகிரர் பாவாத்தியாயம், ராசி சீலாத்யாயம், கிரக யோகாத்தியாயம், கிரக திருஷ்டி பலாத்தியாயம் முதலியவற்றில் சொல்லியிருப்பதையும் சேர்த்துக்கொண்டு, ஜாதி, தேசம், குலம், வித்தை இவற்றையும் கவனித்து ஊகித்துப் பலன் சொன்னால் அப்பலன் அனுபவத்தில் ஒத்தே நடக்கும் என்று கண்டு கொள்ள வேண்டும்.”
This Week’s Quote:
Parents wonder why the streams are bitter, when they themselves have poisoned the fountain.
- John Locke.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.