ஆங்கில வருடத் துவக்கமான ஜனவரி பிறந்தாலும் சரி, தமிழ் வருடத் துவக்கமான சித்திரை பிறந்தாலும் சரி, தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்களும், தமிழ் வணிகப் பத்திரிக்கைகளும், புத்தாண்டுப் பலன்கள் என்று கோமாளித்தனமான வாசகங்களைக் கொட்டிக் கவிழ்க்க ஆரம்பித்து விடுகின்றார்கள். 

‘வருட ஆரம்பத்திலிருந்தே கவனமாகப் படித்து வந்தால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறலாம்’

‘மேலதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொண்டால் பதவி உயர்வு கிடைக்கும்’

‘உணவில் அதிகமாகக் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளல் உடல்நலத்திற்கு நன்று’

‘விருந்தினர் வருகையின்போது அவர்களிடம் வீண்விவாதத்தைத் தவிர்த்தால் நன்மை உண்டு.’

‘மாணவர்கள் பள்ளிப் பாடங்களில் மட்டுமே முழு கவனமும் செலுத்திவருவது அவசியம்.’

‘கூடுமானவரை தரமான பொருட்களை வழங்கி, வழக்கமான வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி, அவர்களைத் தக்க வைத்துக் கொள்வது தான் இப்போதைக்கு உங்கள் வியாபாரத்துக்கு நல்லது’ (துலாம் ராசிக்கும் தனுசு ராசிக்கும் இவ்வாறு ஒரு சோதிடர் பலன்கள் எழுதியிருக்கின்றார்) மற்ற ராசிக்காரர்கள் தரமற்ற பொருட்களை விற்கலாம் என்பது சோதிடரின் கருத்தாக இருக்குமோ என்னவோ?

‘வாகனப் பயணத்தின் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.’ (மகர ராசிக்கு)

‘வாகனங்களில் பயணம் செய்யும்போது சற்றே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.’ (மீன ராசிக்கு)

‘திருமணப் பொருத்தம் பார்க்கும் போது அனைத்துப் பொருத்தங்களையும் நன்றாகப் பார்த்து மணம் முடிப்பது நல்லது.’

‘வயதானவர்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் காட்டுங்கள்’

 

மேலே சொல்லப்பட்ட எல்லாமுமே பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கும் ராசி பலன்கள். இந்த மாதிரி அபத்தமானவற்றைப் படிப்பதற்கும், கேட்பதற்கும் தமிழ் மக்கள் ஆவலாக இருக்கின்றார்கள் என்பதை அறியும் போது சங்கடமாக இருக்கின்றது.

ஒரு பத்திரிக்கையில் தனுசு ராசிக்குச் சனி வருவதைப் பற்றி எழுதும் போது விருச்சிக ராசிக்கும் ஜன்மத்தில் சனி வருகிறது என்றும் தனுசு ராசிக்கும் ஜன்மத்தில் சனி வருகிறது என்றும் சோதிடர் எழுதியிருக்கின்றார். அதையும் அப்படியே பிரசுரம் செய்திருக்கின்றார்கள்.

ஒரு முக்கியமான சாத்திரத்தை எவ்வளவு தூரம் இவர்கள் கேவலப்படுத்துகின்றார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

சூர்யன் மேஷ ராசிக்கு வருவதுதான் புத்தாண்டாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட வேளையில் நடக்கும் இந்த ராசிப்ரவேசத்தை ஒவ்வொரு தனிநபர் வாழ்க்கையிலும் எவ்வாறு இவர்கள் சம்பந்தப்படுத்த முடியும்? அந்த நிமிஷத்தில் உள்ள கிரக நிலைகள் உலகத்துக்கே பொதுவாக இருக்கும்போது ஒவ்வொரு தனிநபர் வாழ்க்கையிலும், அவை எவ்வாறு வேறுவேறு பாதிப்பை உண்டாக்கும்? இந்தக் கேள்விகளை இந்த மாதிரி அபத்தங்களைப் பிரசுரிக்கும் பத்திரிக்கைகளும் கேட்பதில்லை. அதைப் படிக்கின்ற வாசகர்களும் கேட்பதில்லை. 

ஆனால் நாம் விதிவிலக்கு. கேட்கத் தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதே நமது வழக்கம். ஆராய்ச்சி மனப்பான்மையோடு இப்பலன்களை எவ்வாறு கணிக்கலாம் என்பதை எமது அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

This Week’s Quote:

Wisemen speak because they have something to say; fools speak because they have to say something.

Plato.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.