ராஜயோகம் யாருக்கு? (தொடர்ச்சி)


எளிய குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியாலும் சூழ்நிலைகளைத் தக்கவாறு பயன்படுத்தியும் உன்னத நிலைக்கு வருவோரின் ஜாதகம் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

சூர்யன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு கிரகங்களும் தத்தமது உச்ச ராசிகளில் இருக்கும் போது அந்த உச்ச கிரகங்கள் இருக்கும் ராசிகள் நான்கில் ஏதாவது ஒன்று லக்னமாக இருந்தால் இந்த ஜாதகர் ராஜாவாக ஆகின்றார். அல்லது பெருஞ்செல்வந்தனாக ஆகின்றார். மீதமுள்ள சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

sample horoscope

மேலே குறிப்பிட்ட நான்கு கிரகங்களில் ஏதாவது மூன்று கிரகங்கள் தத்தமது உச்ச ராசியில் இருக்கும் போது சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தில் இருக்க வேண்டும். இந்தக் கிரக அமைப்பில் உச்ச கிரகங்கள் இருக்கும் ராசியோ அல்லது கடகமோ லக்னமாக இருந்தாலும் ராஜயோகம் கிட்டும்.

 

sample horoscope

இந்த ஜாதகத்தில் சூர்யன், செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்களும் அவர்களது உச்சவீட்டில் இருக்கும் போது சந்திரன் கடகத்தில் உள்ளது. சனியின் உச்சவீடாகிய துலாம் லக்னத்தில் பிறந்த இவர் ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்தாலும் தன்முயற்சியால் கோடீஸ்வரன் ஆனார். லக்னம் வர்க்கோத்தமமாக இருந்து சந்திரனைத் தவிர்த்து மீதமுள்ள கிரகங்களில் நான்கு கிரகங்கள் லக்னத்தைப் பார்க்குமானால் ராஜயோகம் கிட்டும். ஜன்மலக்னம் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியே நவாம்ச லக்னமாகவும் வந்தால் இதற்கு வர்க்கோத்தமம் என்று பெயர். வேறு விதமாகச் சொல்வதென்றால் ஜன்மலக்னம் எதுவோ அதுவே நவாம்சத்தில் லக்னமாக இருப்பின் வர்க்கோத்தமம். இப்படியுள்ள லக்னத்தை நான்கு கிரகங்கள் பார்த்தால் ராஜயோகம் கிட்டும்.

சென்னையில் 21.05.2015 இரவு 7.00 மணிக்கு ஒரு குழந்தை பிறப்பதாக வைத்துக்கொள்வோம். அக்குழந்தையின் ஜாதகம் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

 

sample horoscope

லக்னம் விருச்சிகத்தில் 14 பாகையில் இருப்பதால் நவாம்ச லக்னமும் விருச்சிகம்தான். வர்க்கோத்தமமான லக்னத்தைச் சூர்யன், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நான்கு கிரகங்களும் பார்ப்பதால் இதை ராஜயோகமுள்ள ஜாதகம் எனக்கொள்ளலாம். இதே போன்று சந்திரனும் வர்க்கோத்தமமாக இருந்து நான்கு கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் ராஜயோகம் உண்டு.

 

 

 

 

 

 

sample horoscope

சந்திரன் விருச்சிகராசியில் 14 பாகையில் இருப்பதால் நவாம்ச சக்கரத்திலும் விருச்சிகத்திலேயே வந்து வர்க்கோத்தமமாக உள்ளது. இச்சந்திரனைச் சூர்யன், செவ்வாய், புதன், குரு பார்ப்பதால் ராஜயோகம் உண்டு.

மேலே சொல்லப்பட்டவை யாவும் அடிப்படையான சில விஷயங்கள்.ஆனால் அனுபவத்தில் இரண்டு அல்லது ஒரு கிரகம் முக்கியமான இடத்தில் இருந்தாலே அவர்கள் உயர்ந்த நிலைக்கு வந்து விடுகின்றார்கள். உச்சராசியில் இல்லாமல் வேறு இராசியில் கிரகங்கள் இருந்தாலும் அவை லக்னம் நான்கு, ஏழு, பத்து என்ற கேந்திரஸ்தானங்களில் இருந்தால் அவை ராஜயோகத்தைக் கொண்டு வருகின்றன. பூர்ண சந்திரனை மூன்று அல்லது நான்கு கிரகங்கள் பார்த்தாலும் அல்லது பூர்ணசந்திரனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்தாலும் ராஜயோகம் சம்பவிக்கின்றது. ஒன்பது பத்துக்குடையவர்கள் சேர்ந்தாலோ அல்லது நான்கு ஐந்துக்குடையவர்கள் சேர்ந்தாலோ அதுவும் ராஜயோகத்துக்குக் காரணமாக ஆகின்றது.

 

sample horoscope

இந்த ஜாதகர் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். வியாழன் மூலத்ரிகோண வீட்டில் கேந்திரத்தில் இருக்கிறது. திவிதியை சந்திரன் பத்தில் நான்கு கிரகங்கள் சந்திரனைப் பார்க்கின்றன.

 

 

 

 

 

 

 

 

sample horoscope

இந்த ஜாதகம் மத்திய அமைச்சர் ஒருவருடைய ஜாதகம். இங்கும் சந்திரன் பத்தாமிடத்தில், சூர்யன் நான்காமிடத்தில், ஒன்பது பத்துக்குடையவர்களான சுக்கிரனும் புதனும் சேர்க்கை. லக்னத்துக்கும் ஒன்பது பத்துக்குமுடைய சுக்கிர புதனுக்கும் வியாழ பார்வையுள்ளது.

 

 

 

 

 

 

 

sample horoscope

sample horosope

இந்த ஜாதகர் சராசரி மத்திய வர்க்கக் குடும்பத்தில் பிறந்து தொழில்நுட்பக் கல்லூரியின் உயர்பதவியை அடைந்தவர். இந்த ஜாதகத்தில் விசேஷமான அம்சம் என்னவென்றால் சுக்கிரனும் புதனும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருப்பதுதான். இருவருக்கும் இடையே 70 பாகை உள்ளது. 76 பாகைக்கு மேல் இக்கிரகங்கள் விலகமுடியாது. ஆனாலும் இப்படி 70 பாகை விலகி இருப்பது அபூர்வ நிகழ்வு. மத்திய அமைச்சர் ஒருவருக்கும் இவ்வாறு புத சுக்கிரர்கள் ஒருவருக்கொருவர் நான்கு பத்தில் இருக்கின்றார்கள். இந்த ஜாதகத்தில் சந்திரன், புதன், சனி ஆகிய மூன்று கிரகங்கள் வர்க்கோத்தமமாக உள்ளன. நவாம்சத்தில் சுக்கிரன் சொந்த வீட்டிலும், செவ்வாய் உச்சவீட்டிலும் உள்ளன. லக்கினாதிபதி சனி பாக்ய ஸ்தானத்தில் இருந்து குரு பார்வையைப் பெறுகின்றது. சனி வக்ரமாக இல்லையென்றால் இன்னும் உயர்நிலையை இந்த ஜாதகர் அடைந்திருக்கக் கூடும்.

மேலேயுள்ள உதாரணங்களிலிருந்து பெறப்படும் உண்மை என்னவென்றால் பலமான கிரகங்கள் கேந்திரஸ்தானங்கள் என்னும் 1, 4, 7, 10ல் இருந்தாலே போதும் என்பதுதான். பத்தாம் இடத்து அதிபதி, அவனது நவாம்சபதி இவர்களைக் கொண்டு ஒரு ஜாதகர் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பார் என்று சொல்ல முடியும். அத்துறையில் சுடர்விட்டுப் பிரகாசிக்கக் கிரகங்கள் மட்டுமே போதாது முயற்சியும் வேண்டும். ‘பலமற்ற கிரகங்கள் மூலம் சொல்லப்படும் பலோபதேசம் ஸ்வப்னம் மானஸ ஸங்கல்பம் இவைகளில் பலித்ததாக ஆகின்றது.’ என்று “பரிணமதி பலோக்தி ஸ்வப்ன சிந்தாஸ்அவீர்யை” என்ற சுலோகத்துக்கு உரை எழுதுகின்றார் கடலங்குடி நடேச சாஸ்திரிகள். எவ்வாறு பலமில்லாத கிரகங்கள் தங்களது பலனைக் கனவிலும் கற்பனைகளிலும் கொடுக்கின்றனவோ அவ்வாறே முயற்சியற்றவனும் ஜாதக பலன்களைக் கற்பனையிலும் கனவிலும் அனுபவிப்பானே தவிர நிஜத்தில் அனுபவிக்கப் போவதில்லை.

 

அடுத்த கட்டுரை ::: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஜாதகம் - ஒர் ஆய்வு


ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.