எதிர்காலம் பற்றிய ஒரு ஆர்வம் எல்லோருக்கும் உண்டு. அதைத் தெரிந்துகொள்ள முயல்பவர்கள் சோதிடர்கள், குறிசொல்பவர்கள், நாடி சோதிடர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் சந்திக்க அலைவதால்தான், தற்போது சோதிடம் ஒரு முதலீடு இல்லாத தொழிலாக வளர்ந்து செழித்திருக்கின்றது. மாதப் பிறப்பு பலன்கள், வருடப் பிறப்பு பலன்கள், குருப் பெயர்ச்சிப் பலன்கள், சனிப் பெயர்ச்சிப் பலன்கள் என்று புத்தகங்கள் எழுதித் தள்ளுவதே சோதிடர்களின் வேலையாகிவிட்டது. பெரும்பான்மை மக்களைக் குறி வைத்து எழுதப்படும் இப்பலன்களைப் படித்துப் பார்த்தால், சோதிடர்கள் சாமான்ய மக்களைக் கேலியும், கிண்டலும் செய்வது போலத்தான் தெரிகின்றது. 

ஒரு சோதிடர், இந்த ஆண்டு ராசி பலன்களுக்காக ஒரு பத்திரிக்கையில் இணைப்பாக ஒரு புத்தகம் கொடுத்துள்ளார். அதில் எல்லா ராசிக்காரர்களுக்கும் எல்லா வகையான சுபபலன்களையும், அதேபோல் கெட்ட பலன்களையும் கொடுத்துள்ளார். ரிசபம், துலாம், கும்பம் ராசி தவிர்த்து மற்ற ராசிக்காரர்கள் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று எழுதியிருக்கும் அவர், ரிசபம், துலாம், கும்பம் ராசிக்காரர்களுக்குச் சீமந்தம், காதுகுத்து போன்ற பலன்களைக் குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் குழந்தை பாக்கியம் உண்டு என்று அவர் சொல்வதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அநேகமாகப் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும், கணவன், மனைவிக்குள் சிறு, சிறு சண்டைகள், தாயாரின் உடல்நலக் குறைவு, தந்தையோடு கருத்து மோதல் இவை வந்து போகும் என்றும் எழுதியிருக்கின்றார். 

இருந்தாலும் கிரக நிலைகளைக் கவனித்துக் கீழ்க்கண்ட பலன்களைச் சொல்வதுதான் மிகச்சிரமம். அச்சிரமமான காரியத்தை அவர் மிகவும் எளிதாகச் செய்திருப்பதால் கீழ்க்கண்ட பலன்களுக்கு அவருக்கு நோபல் பரிசு கொடுத்தாலும் தகும். 

  • கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம்.
  • மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வரக்கூடும்.
  • முன்கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
  • மகனின் உயர்கல்வி, உத்தியோகத்திற்காகச் சிலரின் சிபாரிசை நாட வேண்டி வரும்.
  • காசோலை தருவதற்கு முன் வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
  • காலாவதியான மாத்திரைகளைத் தவிர்ப்பது நல்லது. 

இப்படிப் பலன்களை எழுதிய அவருக்கும், அதைப் பிரசுரம் செய்த பத்திரிக்கைக்கும், விழுந்து, விழுந்து அதைப்படிப்பவருக்கும் வெட்கம் வருகிறதோ இல்லையோ நமக்கு வெட்கம் வருகிறது. போகட்டும். இதை நம்பவும், நம்பிப் படிக்கவும் பெருங்கூட்டம் இருக்கும்போது நாம் என்ன செய்ய முடியும்? ஆனால் சோதிடத்தை நம்புகின்ற – ஆனால் சோதிடர்களை நம்பாத - சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். அவர்களுக்காகத்தான் நாம் இந்தக் கட்டுரையை எழுதுகின்றோம்.

சந்திரன் பன்னிரண்டு ராசிகளையும் சுற்றிவரச் சுமாராக இருபத்தேழு நாட்கள் எடுத்துக்கொள்கின்றது. எனவே ஒருவர் பிறந்த நாளிலிருந்து 27 நாட்களுக்குள் சந்திரன் எந்த எந்தக் கிரகங்களுடன், எந்த எந்த நாளில் சம்பந்தப்படுகின்றதோ, அந்த அந்த வருடங்களில் அவருக்கு முக்கியமான சில சம்பவங்கள் நடக்கக் கூடும் என்பது மேலைநாட்டுச் சித்தாந்தம். அதாவது ஒரு நாளை ஒரு வருடமாகக் கணக்கிடுவது அவர்களது முறை. ஒரு உதாரணம் மூலம் இதை விளக்குவோம். 

sample horoscope

இது ஒரு கற்பனை ஜாதகம். சந்திரனிருக்கும் ராசி முதல் ஏழு ராசிகள் வரை கிரகங்கள் வரிசையாக இருப்பதால் நாம் இதைத் தேர்ந்தெடுத்துள்ளோம். கணக்கு எளிதாகப் புரிய வேண்டும் என்பதற்காகவே இந்த ஜாதகம் உதாரணத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. ராகு, கேது, யுரேனஸ், நெப்ட்யூன் போன்ற கிரகங்களின் ஸ்புடங்களை வேண்டுமென்றேதான் நாம் குறிப்பிடவில்லை. அவைகளையும் எடுத்துக்கொள்பவர்கள் 7.3.2002 தேதியில் உள்ள அக்கிரக நிலைகளைக் கணிணி மூலமாகவோ, இந்திய அரசின் வெளியீடாக வரும் ராஷ்ட்ரீய பஞ்சாங்கம் மூலமோ குறித்து வைத்துக்கொள்ளலாம். நாம் N.C. LAHIRI-யின் Indian Ephemeris மூலம் இவற்றைக் கணக்கிட்டுள்ளோம்.

கடிகாரச் சுற்றில் கிரகங்கள் சுற்றுவதால் சந்திரன் மகர ராசிக்கு 29 பாகை 11 கலைக்கு வரும் போது புதனையும், கும்பராசியில் 22 பாகை 36 கலைக்கு வரும் போது சூரியனையும், இவ்வாறே வரிசைக்கிரமமாகச் சுக்கிரன், செவ்வாய் சனி, லக்னம் மற்றும் குருவையும் தொட்டுச் செல்லும்.

புதனுக்கும், சந்திரனுக்கும் இடையே 52 பாகைகள். சராசரியாக ஒரு நாளில் 12 பாகை செல்லும் சந்திரன் 4 நாள் கழித்துப் புதனைச் சேரும். எனவே ஜாதகருக்கு 4 வயது கழித்து 5வது வயது நடக்கும் போது முக்கியமான சம்பவம் ஏதேனும் நடக்கலாம். அதுபோலவே சுக்கிரனுக்கும் சந்திரனுக்கும் இடையே 88 பாகை இருப்பதால் ஏழு நாட்கள் (12 x 7 = 84) கழித்து எட்டாவது நாளில் சந்திரன் சுக்கிரனைச் சேரும். எனவே எட்டாவது வயதில் முக்கியமான சம்பவம் நடக்கக்கூடும். இவ்வாறே ஒவ்வொரு கிரகத்தோடும் சந்திரன் சம்பந்தப்படும் நாளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அத்தனையாவது வயதுக்குப் பலனைச் சொல்ல வேண்டும். கிரகங்களைச் சந்திரன் சேருவது போல ஒவ்வொரு பாவத்தையும் தொட்டுச் செல்லும். அந்த வருடத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது மிகத்துல்லியமான கணக்கு அல்ல. சந்திரனின் சராசரி பயணம் 12லிருந்து 14 பாகை வரை செல்லக்கூடும். எனவே மிகச் சரியாகக் கணக்கிட வேண்டுமென்றால் பஞ்சாங்கத்தை வைத்துத்தான் கணக்கிட வேண்டும்.

மேலைநாட்டுச் சித்தாந்தப்படி சந்திரன் சுபரோடு சேரும் போது நல்ல பலன்களும், பாபரான செவ்வாய், சனியோடு சேரும் போது கெட்ட பலன்களும் நடைபெறுகின்றது. எனக்குத் தெரிந்த ஒரு ஜாதகத்தில் சந்திரன் சனியோடு சேர்ந்த வருஷத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் நல்லதோ கெட்டதோ ஏதேனும் ஒன்று நடைபெறும் என்பதில் ஐயமில்லை. சிலவேளைகளில் முதற்சுற்றில் நடக்காத பலன் இரண்டாவது சுற்றில் (28 வயது முதல் 54 வயது முடிய) நடக்கின்றது. 

இந்தக் கணக்குகளைச் செய்ய எவரிடமும் பாடம் கேட்க வேண்டியதில்லை. பழக்கமான நண்பர்கள், உறவினர்களின் ஜாதகங்களை வாங்கி  (ஜாதகத்தில் கிரகங்களின் ஸ்புடங்கள் இருக்க வேண்டும். நட்சத்திர பாதசாரம் இருந்தால் அது உதவாது) இந்தச் சித்தாந்தத்தைப் பிரயோகம் செய்து பார்ப்பதன் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும். சோதிடத்தில் ஆர்வமுள்ளவர்கள் இந்தச் சோதனையைச் செய்து பார்க்கலாம்

 

This Week’s Quote:

The production of too many useful things results in too many useless people.

-  Karl Marx

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.