ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உன்னத நடிகன். மூன்றாம் தமிழ் தனக்குச் சூட்டிக்கொண்ட மணிமகுடம். உடல்மொழி என்னும் புதுமொழி கண்டு அம்மொழிக்கு இலக்கணம் தந்து, அவ்விலக்கணத்துக்கு இலக்கியமாய்த் திகழ்ந்த மெய்க்காப்பியன்.
வலக்கண்ணால் அழும்போது இடக்கண்ணால் சிரித்தவன். மூவினத்துச் சொற்களையும் மூவாயிரம் பாவங்களோடு உச்சரித்தவன்.
நாட்டிய சாஸ்திரத்துக்கு இலக்கணம் கண்ட பரதமுனிவரின் மறுபிறப்பாய் வந்து நடையழகுகளின் இலக்கணம் வகுத்தவன். கண்ணதாசனின் வரிகளில் சொல்வதானால் ஏழுகடல்சூழ் புவியில் எட்டாவதாய் வந்த கலைக்கடல்.
இத்தனை பெருமைக்கும் உரிய நடிகர் திலகத்தின் ஜாதகம் கலைத்துறையில் அவரது வெற்றிக்கும், அரசியல் வாழ்க்கையில் அவரது தோல்விக்கும் எவ்வாறு காரணமாக இருந்தது என்பதைப் பார்ப்போம்.
நடிகர் திலகம் பிறந்த நாள் 01.10.1928 திங்கட்கிழமை. மாலை மணி 4.30க்குப் பிறந்ததாக திரு.பா.தீனதயாளன் தனது ”சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிவாஜி பிறக்கும் போது அவரது தந்தையார் விடுதலைப் போராட்டத்தை ஒட்டிச் சிறைக்குப் போனதாக அவரது வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்து தெரிகிறது. இதையெல்லாம் வைத்துக் கணக்கிட்டால் அவரது ‘திருத்தப்பட்ட பிறந்த நேரம்’ (Rectified Birth time) 4.23 என வருகிறது.
அவரது ஜாதகம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.




லக்னத்துக்குப் பத்தில் சனி இருப்பதாலும், நான்காமிடத்துக்கு இரண்டில் செவ்வாயும், ஏழில் சனியும் இருப்பதாலும் பாலப்பருவம் மிகவும் சாதாரணமாய் இருந்ததில் ஆச்சரியமில்லை.
ஆனால் லக்னம் வர்க்கோத்தமமாக இருந்து லக்னாதிபதி சனி பத்தாவது கேந்திரத்தில் பத்தாம் பாவத்துக்கு மிகச் சமீபத்தில் இருப்பது எதிர்காலத்தில் ஒரு உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்பது ‘தலை எழுத்து’. ஆனால் அது ஏன் கலைத்துறையாக இருந்தது?
சுக்கிரன் சொந்த வீட்டில் ஒன்பதில் இருப்பதாலா? இல்லை. சுக்கிரன் கலைகளுக்கும், சுகவாழ்க்கைக்கும் காரணமாக இருப்பது உண்மைதான். ஆனால் இங்கே சுக்கிரன் புதனுக்கு மிகச் சமீபத்தில் இருப்பதும் சுக்கிரனுக்கும் புதனுக்கும் ஏழாமிடத்தில் இருந்து சந்திரனும் குருவும் புதசுக்கிரர்களைப் பார்ப்பதுமே மிக வலுவான காரணங்கள். புதன் புத்திகாரகன். ஒரு மனிதனின் intelligence புதனால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது. வியாழன் ஒன்றைப் பலவாக்கும் கிரகம். சந்திரன் உணர்ச்சிகளைத் தீர்மானிப்பவன். கலாரசனை, புத்தி, இவைகளை விஸ்தீரணமாக்கும் குரு, இவர்களோடு பல்வேறு மனநிலைகளைக் கொண்டு வரும் சந்திரனும் சேர்ந்திருப்பது ஒரு மிகச்சிறந்த கலைஞனாக இவர் உருவாகக் காரணங்கள். 01.10.1928ல் பிறந்த எல்லோருக்குமே இது பொருந்துமே! ஏன் ஒருவர் மட்டும் சிவாஜிகணேசன் ஆனார்? அதை மாலை மணி 4.23 தீர்மானிக்கிறது.
சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்னத்துக்கு ஆறு, ஒன்பது இடத்து அதிபதிகளாக வந்தாலோ அல்லது சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஆறு ஒன்பதாமிடத்தில் இருந்தாலோ நடிகர்களை உருவாக்குகின்றன. ஒருவர் மிக நீண்டகாலம் திரையுலக வாழ்க்கையில் இருக்க வேண்டுமானால் ஆறாமிடத்துக்கு அல்லது ஒன்பதாமிடத்துக்கு சந்திர சுக்கிர சம்பந்தம் இருக்க வேண்டும். சனியும் வலுவாக இருக்க வேண்டும். ஏனெனில் சனி என்பது மக்கள் கூட்டத்தைக் குறிப்பது. சனி கடக விருச்சிக மீனங்களில் இருக்கப் பிறந்தவர்கள் தங்களுக்கென்று பெருங்கூட்டத்தைச் சேர்ப்பார்கள். காந்தி, ஹிட்லர், நெப்போலியன் போன்ற பெருந்தலைவர்கள் எல்லோருமே சனி இந்த ஜலராசிகளில் இருக்கும் போது பிறந்தவர்களே. மூன்றாமிடம் பிறரோடு நாம் கொள்ளும் தொடர்புகளைக் குறிப்பது. ஒரு கலைஞனுக்கு மூன்றாமிடமும் நன்றாக அமைந்தால்தான் வசனம், உடலசைவு நன்றாக வரும். கடைசியில் நடிப்பு என்பது போலி. இயக்குனர் ‘கட்’ செய்தவுடன் நடிப்பை நிறுத்திவிட்டு அந்த மனநிலையிலிருந்து வெளி வரவேண்டும். இதற்குப் பன்னிரண்டாம் பாவம்தான் காரணம். எனவே ஒருவரது ஜாதகத்தில் 3, 6, 9, 12 ஆகிய இந்த இடங்களுக்கு சுக்கிர சந்திர சம்பந்தங்கள் வந்தாலோ அல்லது இந்த இடத்து அதிபர்களாக சுக்கிர சந்திரர்களே வந்தாலோ அல்லது இந்த இடத்து அதிபர்களோடு அவர்களுக்குச் சம்பந்தம் வந்தாலோ கலைத்துறையில் சாதனை படைக்க இயலும். நடிகர் திலகத்தின் ஜாதகத்தில் சந்திரன் ஆறாமிடத்துக்கு அதிபதி. சந்திரன் இருப்பது மூன்றாமிடத்தில். சுக்கிரன் ஒன்பதாமிடத்து அதிபதியாக வந்து ஒன்பதாமிடத்தில் மூலத்ரிகோண வீட்டில் இருந்து சந்திரனை ஏழாம் பார்வையாகப் பார்க்கிறார். சந்திர சுக்கிரர்களைப் போலவே புதனும் குருவும் ஒருவருக்கொருவர் ஏழில் இருந்து பரஸ்பரம் பார்த்துக்கொள்கின்றனர். இந்த நான்கு கிரகங்களின் சம்பந்தமும் மூன்று ஒன்பது ஆகிய இடங்களில். எனவே கலையுலகில் சிவாஜிகணேசன் பெருஞ்சாதனை செய்ததில் வியப்பில்லை.
இன்னுஞ்சில நுட்பமான குறிப்புகள்:
சந்திரன் நவாம்சத்தில் சொந்த வீட்டில் இருக்கிறார். இதுபோலவே சனியும் செவ்வாயும் நவாம்சத்தில் தத்தமது சொந்த வீட்டில் இருக்கின்றார்கள். சந்திரன் ஜன்மலக்னத்துக்கு ஆறுக்குடையவன். செவ்வாய் மூன்று பத்துக்கும் சனி லக்ன பன்னிரண்டாம் பாவத்துக்கும் உரியவர்கள். மேலைநாட்டவர்கள் Fortune point எனக் குறிப்பிடும் அதிர்ஷ்டப் புள்ளி (வடமொழியில் இதைப் புண்ய ஸஹம் என்று அழைக்கின்றார்கள்) கன்னி ராசியில் 12 பாகை 43 கலையில் இருக்கிறது. பொதுவாக இப்புள்ளி எட்டாவது ராசியில் இருப்பது நல்லதில்லை எனச் சொல்கின்றார்கள். ஆனால் கன்னிக்கு அதிபதியான புதன் பாக்கியஸ்தானாதிபதியான சுக்கிரனுடன் சேர்ந்து பாக்கியஸ்தானத்திலேயே இருப்பதும் இரண்டு பதினொன்றுக்குடைய குருவின் பார்வையைப் பெறுவதும் லக்கினாதிபதி சனி இப்புள்ளிக்கு மூன்றாவது ராசியான உபசயத்தில் இருப்பதும் இந்த ஜாதகரை அதிர்ஷ்டமுள்ளவராக ஆக்குகின்றன.
தீபாவளி – 1952:
17.10.1952 வெள்ளிக்கிழமை. பராசக்தி படம் வெளியான நாள். தமிழ்த் திரையுலகத்துக்கு ஒரு புதிய நடிகன் கிடைத்த நாள். ஏன் அது இவ்வளவு முக்கியமான நாளாக ஆகிப்போனது சிவாஜிகணேசனுக்கு? ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு புதிய ஜாதகம் எழுதப்பட்டு (அந்த ஒராண்டுக்கு மட்டுமே அது பலனைத் தரும்) அந்த ஜாதகத்தின் அடிப்படையில் அவ்வருட பலனைச் சொல்வது வடஇந்தியாவில் வழக்கமாக இருக்கிறது. இங்கே அந்த முயற்சிகள் கிடையாது. நாம் முயற்சிப்போம்.
01.10.1952ல் சிவாஜி கணேசனுக்கு 24 வயது முடிந்து 25வது வயது பிறக்கிறது. அதற்கான ஜாதகம் இங்கே தரப்பட்டிருக்கிறது.



வருஷ ஜாதகம் கணிக்கும் முறைகளும் ஒவ்வொரு கிரகத்திற்கும் எத்தனை நாட்கள், எத்தனை மணி நேரம் தசா நடைபெறும் என்ற விவரங்களும் வடமொழியில் உள்ள ‘நீலகண்ட தாஜிகம்’ என்ற நூலின்படி கணக்கிடப்பட்டுள்ளன.
இந்த வருஷ ஜாதகத்தைத் தனியே பார்க்கக் கூடாது. ஜன்ம ஜாதகத்தையும் வர்ஷ ஜாதகத்தையும் சேர்த்துத்தான் பரிசீலனை செய்ய வேண்டும். ஜன்மலக்னாதிபதி சனி வருஷ லக்னத்துக்கு ஆறாமிடத்திலும் வர்ஷ லக்னாதிபதி செவ்வாய் ஜன்ம லக்னத்துக்குப் பத்தாமிடத்திலும் இருப்பது விசேஷம். ஏனெனில் சனி ஆறாமிடத்திலும் செவ்வாய் பத்தாமிடத்திலும் இருப்பது மிக நல்லது எனச் சோதிட நூல்கள் எல்லாமும் கூறுகின்றன. சந்திரன் பதினோராமிடத்திலிருந்து ஏழுக்குடைய சுக்கிரனோடு நல்ல பார்வையில் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு ஒரு காரணமாக அமைகின்றது. (வர்ஷ ஜாதக சித்தாந்தப்படி கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஐந்தாமிடம் ஒன்பதாமிடங்களிலும் மூன்றாமிடம் பதினொன்றாமிடங்களிலும் இருப்பது நல்ல சிறப்பான பலன்களையளிக்கும்.) ஜன்மலக்னத்துக்கு இரண்டாமிடம் பதினொன்றாமிடத்துக்கு அதிபதியான குரு வர்ஷ லக்னத்தில் இருந்து நான்காம் பாவாதிபதியான சந்திரனோடு நல்ல பார்வையில் இருப்பதும் வர்ஷ லக்னாதிபதி செவ்வாய் வர்ஷ லக்னத்துக்குப் பத்தாமதிபதியான சனியோடு நல்ல பார்வையில் இருப்பதும் ஜாதகத்துக்கு வலு சேர்க்கின்றன. அதிர்ஷ்டப் புள்ளி விருச்சிகத்தில் 16 பாகை 45 கலையில் உள்ளது. இது ஜன்மலக்னத்துக்குப் பத்தாமிடத்தில் இருப்பதால் ஜாதகரின் வாழ்க்கையில் ஒரு சிறப்பான அங்கீகாரம் பெருமை இவை கிடைக்க உதவுகிறது.
படம் வெளியான நாளில் தசாபதி சுக்கிரன் விசாகம் 4ம் பாதத்தில் இருக்கிறது. அதாவது கடக நவாம்சத்தில். நவாம்சபதி சந்திரன் வர்ஷ லக்னத்துக்கு ஆறாமிடமான கன்னியில் . எனவே படம் சூப்பர் ஹிட் ஆனதில் ஆச்சரியமில்லை. சுக்கிரனுக்குப் பின்னர் வரும் சூர்ய தசை 23.02.1953ல் ஆரம்பிக்கிறது. அன்று சூர்யன் மகரத்தில் 11வது பாகையில் இருக்கிறது. அது வர்ஷ லக்னத்துக்குப் பத்தாமிடமாக அமைவதால் சூர்யதசையும் இந்த ஜாதகருக்குப் பெருமையையும், புகழையுமே சேர்க்கும். சூர்யதசை 9.04.1953ல் முடிகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவெனில் படம் வெளியான 17.10.1952லிருந்து 9.04.1953 முடிய கணக்கிட்டால் அன்று 175வது நாள். வருஷ ஜாதகத்தின் அஷ்டவர்க்கப் பிந்துகளைக் கணக்கிட்டால் 4,9,10,11 ஆகிய பாவங்களில் சுக்கிர பிந்து காணப்படுவதால் சுக்கிரதசை குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை அதிர்ஷ்டம் புகழ் கனவுகள் நனவாகுதல் போன்ற பலன்களை அளிக்கும். எனவே 25வது வயது சிவாஜிகணேசனுக்கு ஒரு முக்கியமான ஆண்டாக ஆகிவிட்டதில் வியப்பில்லை. ஆனால் பிறந்த ஜாதகத்தில் இல்லாத ஒன்றை வருஷஜாதகம் அளித்து விடாது. அப்படியானால் 25வது வயதில் சிவாஜிகணேசனின் ஜன்ம ஜாதகப்படி தசாபலன்கள் எவ்வாறு உள்ளன?
‘கிரகதசா பலன்கள்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டது போல நிசர்க்கிக தசை முறைப்படி 13வது வயது ஆரம்பித்த நாளிலிருந்து 32 வது வயது முடிய சுக்ரதசை நடக்கும். இச்சுக்ரதசையைப் பிரிவினை செய்தால்

எனக் கிடைக்கும். அதாவது 14.11.50 முடிய சுக்கிரபுக்தியும் 6.12.55 முடிய புதன் புக்தியும் 21.4.59 முடிய லக்ன புக்தியும் 1.10.60 முடிய சந்திர புக்தியும் நடைபெறும். சுக்கிரன் நீசவீட்டிலிருந்து உச்சவீட்டுக்குச் செல்வதால் ஆரோகண தசையென்றும் அச்சுக்கிரன் தற்காலச் சத்ருவான குருவின் நவாம்சத்தில் இருப்பதால் சுக்ரதசையில் சுக்ரபுக்தி ‘அதமா’ என்ற பெயருள்ளதாக ஆகி நற்பலன்கள் குறைவாக நடக்கும். புதன் உச்ச விட்டிலிருந்து நீச வீட்டுக்குச் செல்வதால் ஆரோகண தசையென்றும் அப்புதன் அதிமித்ருவான சனியின் நவாம்சத்தில் இருப்பதால் மத்யா என்ற பெயருள்ளதாக ஆகி பலன்கள் சமமாக இருக்கும். இதன் முழுமையான அர்த்தம் சுக்ரதசையில் சுக்ரபுக்தியைவிட புதபுக்தி அதிக நன்மையைத் தரும் என்பதுதான். ஆனால் புதன் மகர நவாம்சத்தில் சனியோடு சேர்ந்து அதிக பலம்பெறுவதாலும் பத்தாம் பாவத்தின் நவாம்சராசியான மகரத்தில் இருப்பதாலும் பத்தாம் பாவ சம்பந்தமான பலன்கள் விசேஷமாக இருக்கும். 25-வது வர்ஷ ஜாதகத்தில் புதன் ஜன்மலக்னத்துக்குப் பத்தாமிடமான விருச்சிகத்துக்குப் பதினொன்றில் உச்சமாக இருப்பதாலும் பத்தாம் பாவாதிபதி செவ்வாய்க்குப் பதினொன்றில் இருப்பதாலும் வர்ஷ லக்னத்துக்குப் பத்தாமிடத்ததிபதியான சனியுடன் வெகுசமீபத்தில் இருப்பதாலும் இந்த 25வது வருஷத்தில் ஜாதகரின் புகழ் பெருமை இவற்றைப் பெரிய அளவில் சேர்க்கும் கிரகமாக புதன் இருக்கும். ஒரு ராஜயோகத்தைக் கொடுக்கும் கிரகமாகப் புதன் 14.11.50 முதல் 6.12.55 முடிய தனது புக்தியை நடத்தும். ஆக தசாநாதன், புக்திநாதன் வர்ஷ பிரவேச ஜாதகத்தின் தசை எல்லாமுமே வலுசேர்ப்பதால் 17.10.1952ல் தமிழ்த்திரையுலகின் மிகப் பெருஞ்சாதனையாளர் சிவாஜிகணேசன் தமிழகத்துக்கு அறிமுகமானார்.
மேலை நாட்டுக் கணக்குகளின்படியும் இவை எல்லாமே பொருந்தி வருகின்றன. இந்தக் கணக்குகளே புரியாதவர்கள் இங்கே மிகப் பெரும்பான்மையாக இருக்கும்போது மேலை நாட்டுக் கணக்குகளை எங்கே புரிந்து கொள்வது?
இருந்தாலும் Alan Leo என்ற சோதிட நிபுணரின் The Art of Synthesis என்ற புத்தகத்தில் உள்ள சில வரிகளை இங்கு தருகிறேன். அவை நடிகர் திலகத்தின் திறமைகளை எப்படி வெளிக்கொண்டு வருகின்றன என்பதைப் பார்க்கலாம்.
The moon signifies imagination and intuition rather than logical reasoning; but when in any strong aspect to Mercury or Uranus it may considerably increase the intellectual power of those planets and give an active resourceful and fertile mind. Its imaginative and aesthetic side comes out when in aspect to Jupiter, Venus or Neptune, but the assistance of Mercury or Uranus or both, is necessary to raise this to genius.
சிவாஜிகணேசனின் ஜாதகத்தில் சந்திரன் அதிகமான பலத்தோடு வியாழன் சுக்கிரன் மற்றும் நெப்ட்யூன் (நெப்ட்யூன் சிம்மத்தில் 7 பாகையில் உள்ளது) ஆகிய கிரகங்களோடு பலமான பார்வையில் உள்ளதோடு மட்டுமின்றி புதனோடும் பார்வையில் உள்ளது. எனவே நடிப்புக் கலையின் உச்சத்தைத் தொட்ட ஒரே நடிகராக சிவாஜிகணேசன் நிலைத்து நிற்பதில் வியப்பில்லை.
….. (தொடரும்)
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.