நம்முடைய சில கட்டுரைகளில், ஒரு ஜாதகத்தில் சூர்யன் மற்றும் சந்திரன், தங்களது நிலையைவிட்டு முன் நகர்ந்து சென்று வேறு கிரகங்களைத் தொடும்பொழுது, அல்லது பாவ மத்தியைச் (cusp) சேரும்பொழுது நடக்கும் சில சம்பவங்களைப் பற்றி எழுதியிருந்தோம். சில வாசகர்கள் இந்த முன் நகர்வு பற்றி அடிக்கடி வினாக்களை எழுப்புவதால், அவர்களது சந்தேகங்களைப் போக்க வேண்டி இக்கட்டுரையை எழுதுகின்றோம்.
Progression of planets என்பதன் அடிப்படையே ஒரு நாளை ஒரு வருடமாகக் கணக்கிடுவதுதான். சூரியன் சராசரியாக ஒரு நாளில் ஒரு பாகை பயணிப்பதால், சூரியனை முன் நகர்த்தி அச்சூரியன் மற்ற கிரகங்களோடு சம்பந்தப்படும் வருடங்கள், ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகங்களோடு சம்பந்தப்படும் வருடங்கள், இவற்றை ஆராய்ந்து சில முடிவுகளுக்கு வருவதுதான் மேலைநாட்டுச் சித்தாந்தம். ஒரு வருடத்திற்குள் நடக்கும் பலன்களை இந்த முறையில் சொல்ல இயலாது என்பது ஒரு குறைதான். எப்படி இந்தியச் சோதிட சாத்திரங்களில் பன்னிரண்டு வயதுக்குள் மரித்துப் போகும் சிசுக்களின் மரணத்தைக் கிரகதசைகளால் சொல்ல இயலாது என்று கூறப்பட்டுள்ளதோ, அதைப்போலவே ஒரு வயதுக்குள் மரிக்கும் சிசுக்களின் ஜாதகத்தில் Progression அல்லது முன் நகர்வு மூலம் எதையும் கணிக்க இயலாது.
சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் நகர்வு மட்டுமே குறிப்பிடத்தக்க அளவு இருக்கும் என்பதாலும், சனி, குரு ஆகிய கிரகங்களின் பயணத்தில் மிகச்சிறிய அளவே மாற்றம் இருக்கும் என்பதாலும், முன் நகர்வு மூலம் ஜாதக பலன்களைச் சொல்வதற்கு மிகுந்த கவனமும், அக்கறையும் தேவை. ஒரு உதாரணம் மூலம் நாம் இந்தக் கணக்குகளை விவரிப்போம்.
இக்கட்டுரை வெளியாகும் இன்று (14.05.2017) நடுப்பகல் 12.00 மணிக்கு சென்னையில் ஒரு குழந்தை பிறப்பதாக வைத்துக்கொள்வோம். அக்குழந்தையின் ஜாதகம் இப்படி அமையும்.

இக்குழந்தையின் பத்தாவது வயதில் என்ன சம்பவங்கள் நடக்க உள்ளன என்பதை அறிய வேண்டும் என்றால் பத்தாவது நாளான 23.05.17 நடுப்பகல் 12.00 மணிக்கு உள்ள கிரகநிலைகளைப் பஞ்சாங்கம் மூலம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 23.05.17 தேதிய கிரக நிலைகள் கீழ்க்கண்டவாறு அமைகின்றன.

23.05.2017 தேதியில் 12.00 மணிக்குச் சிம்ம லக்னத்தில் 5 பாகை 22 கலை உதயமாகின்றது. இதைக் கவனத்தில் கொள்ள வேண்டாம் என்பதற்காக நாம் லக்னத்தைக் குறிப்பிடவில்லை. இப்போது இரண்டு கட்டங்களையும் நன்கு கவனிப்போம். நமக்குக் கீழ்க்கண்ட விஷயங்கள் கிடைக்கின்றன.
1. முன் நகர்ந்த சந்திரன்,மேஷ 2 ராசியில்2பாகை 11 கலையைச் சேர்ந்திருக்கின்றது. அதன் மூலம் ஜன்ம சனியோடு 5,9 பார்வையில் உள்ளது. சந்திரனிடமிருந்து சனி ஒன்பதாமிடத்திலும், சனியிடமிருந்து சந்திரன் ஐந்தாமிடத்திலும் உள்ளது. இதைத்தான் நாம் 5,9 பார்வையில் உள்ளது என்று குறிப்பிடுகின்றோம். கிரகங்களின் பாகைகள் சமமாகத்தான் இருக்க வேண்டும். இங்கே சந்திரனும் 2 பாகை, சனியும் 2 பாகையில் இருப்பதால் பரிபூரணமான பார்வை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
2. முன் நகர்ந்த செவ்வாய், ரிஷப ராசியில் 27 பாகை 36 கலையில் உள்ளது. இது லக்னத்துக்குப் பதினோராம் பாவத்துக்கு வெகு சமீபத்தில் இருக்கின்றது.
3. சந்திரன் ஒரு நாளைக்குப் 12 பாகை பயணிப்பதால் சந்திரனின் 1 பாகை முன் நகர்வு ஒரு மாதமாகக் கணக்கிடப்பட வேண்டும். அப்படியானால் மேஷத்தில் 2 பாகை 11 கலையில் உள்ள சந்திரன் ஜன்ம ஜாதகத்தில் புதனின் 4 பாகை 21 கலையை இரண்டு மாதத்தில் சேரும். ஆகையால் 10 வயது, 2 மாதத்தில் சந்திரன், புதன் சேர்க்கை ஏற்படும்.
இவைகளைத் தவிர வேறுவிதமான சம்பந்தங்கள் இல்லை. இப்போது பலன்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம்.
(1) சனி ஏழுக்கும், எட்டுக்குமுடையவன். சந்திரன் லக்னாதிபதி. லக்னாதிபதிக்கும், ஏழுக்குடையவனுக்கும் நல்ல பார்வை இருப்பதால் திருமணம் நடைபெறும். ஆனால் பத்து வயதில் இதற்குச் சாத்தியமில்லை. எனவே இதை நாம் ஒதுக்கிவிடலாம். ஆனால் ஏழாமிடம் தந்தையின் தொழிலையும், லக்னம் தந்தையின் வீடு, வாகனம் இவற்றையும் குறிப்பதால்தந்தையின் தொழிலில் முன்னெற்றமும், புதிய வாகனங்கள், வீடு வாங்குவதும் நடக்கக் கூடும்.
(2) முன் நகர்ந்த செவ்வாய் பத்துக்குடையவனாக வந்து 11ம் பாவத்தைச் சேருவதால் தந்தையின் பல விருப்பங்கள் பூர்த்தியாகும்.
(3) முன் நகர்ந்த சந்திரன் புதனோடு சேருவதாலும், புதன் மூன்று ஆறுக்குடையவனாய் இருப்பதாலும் சிறு பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.
இப்பொழுது முன் நகர்ந்த கிரக சேர்க்கைகளால் நமக்குத் தெரிய வரும் சம்பவங்கள் நடக்குமா என்பதை உறுதிப்படுத்த, பத்தாவது வயது பிறக்கும் நாளை ஒட்டிய கிரக நிலைகளைக் கவனிக்க வேண்டும். இச்சாதகனுக்கு பத்தாவது வயது 14.05.2026ல் பிறக்கும்.
அன்றைய கிரக நிலைகள் இப்படி அமைகின்றன.

(2) மேலே விவரித்த காரணங்களால் இது உறுதி செய்யப்படுகிறது.
(3) மே 2026 புதன் ஜன்ம காலச் சூரியனோடு நெருங்கிச் சம்பந்தம் பெறுவதால், சூரியன் இரண்டுக்குடையவனாக வந்து மூன்று பன்னிரண்டுக்குடைய புதனோடு சேருவதால் ,கல்விச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டு. ஒன்பதுக்குடைய வியாழன் மிதுனத்தில் 26 பாகை 42 கலையில் பன்னிரண்டாமிடத்தில் இருப்பதால் ஆசிரியர்களோடு சேர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
(4) மே 2026ல் கோசாரச் சுக்கிரன் மிதுனத்தில் 0 பாகை 3 கலையில் இருந்து ஜன்ம காலச் சனியை ஏழாம் பார்வையாகப் பார்ப்பது மேற்கண்ட காரியங்களைத் தாமதத்துடன் நிறைவேற்றும். மேலும் சுக்கிரன் 11ம் பாவத்துக்கு வெகு அருகே இருப்பதால் தடங்கல்கள் நீங்கிப் போகும்.
இப்படித்தான் நாம் முடிவுகளுக்கு வரவேண்டும். முன் நகர்த்தப்பட்ட கிரகக் கட்டத்தில் கிரகங்களின் சேர்க்கை என்பது 1 பாகை அளவில்தான் இருக்க வேண்டும். அதற்குமேல் போனால் அது சேர்க்கையில்லை. குறிப்பிட்ட வயதுக்குரிய கட்டத்தில் (இங்கே மே 2026 கட்டம்) இரண்டு பாகை அளவு வித்தியாசம் இருக்கலாம். அதற்கு மேல் இருக்கக் கூடாது. மே 2026 கட்டத்தில் சுக்கிரன் மிதுனத்தில் 0 பாகை 3 கலையில் உள்ளது. சனி ஜன்ம காலத்தில் தனுசில் 2 பாகை 34 கலையில் உள்ளது.கோசாரம் என்பதால் இந்த 2 பாகை வித்தியாசத்தை அனுமதிக்கலாம். இதுவே முன் நகர்ந்த கிரகங்களின் கட்டம் என்றால் இதைப் பார்வையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இன்னும் சில விவரங்கள் தரவேண்டியுள்ளது. கட்டுரையின் நீளம் கருதி அவை இடம் பெறவில்லை.
எனவே ஒரு குறிப்பிட்ட வயதில், ஒரு ஜாதகருக்கு என்ன நடக்கும் என்பதை அறிய 1) ஜன்ம ஜாதகம் 2) குறிப்பிட்ட ஆண்டுக்கான முன் நகர்ந்த கிரகங்களின் நிலை மட்டுமின்றி மூன்றாவதாகக் குறிப்பிட்ட அந்த ஆண்டின் கிரக நிலைகளும் தேவைப்படுகின்றன. தற்போது Advanced Ephemeris என்ற எதிர்காலப் பஞ்சாங்கங்கள் கிடைக்கின்றன. இவற்றை கணிணி மூலமும் நாம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் வரக்கூடிய ஆண்டுகளுக்கு கிரகநிலைகளைக் கணிக்கும் திறமை கைவரப் பெறுவது மிக அபூர்வமான ஒன்று. அதுவும் பாகை கலை அளவுக்குச் சுத்தமாகக் கணிப்பது சமுத்திரத்தில் நீந்துவதற்கு ஒப்பானது.
இவ்வளவு உழைப்பும், கணிதமும் தேவைப்படும் இச்சாத்திரம் இப்பொழுது யார் யார் கைகளில் இருக்கின்றது என்பதைப் பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கின்றது. கோயில்களின் பெயர்கள், புராணக் கதைகள் இவற்றை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டு பரிகாரங்களையும் பூஜைகளையும் செய்து வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்யும் போலிகளின் கையில் இந்தச் சாத்திரம் போய்ப் பதுங்கி இருக்கின்றது. கடுமையான உழைப்பு, கணித முறைகளைப் படிக்கும் ஆர்வம், படித்தவற்றை அனுபவங்களோடு பொருத்திப் பார்த்துச் சரியான விடை கண்டுபிடிக்கும் சாதுர்யம்- இவைகளில்லாமல் ஜாதகம் பார்ப்பது என்பது நீச்சல் தெரியாமல் கடலில் இறங்குவது போலத்தான். ஆனால் இன்றைய பெரும்பான்மை சோதிடர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களோடு சேர்ந்து சோதிட சாத்திரமும் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றது.
This Week’s Quote:
We only think when we are confronted with problems.
- John Dewey
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.