சென்ற கட்டுரையில் காலச்சக்கர தசை பற்றி ஒரு சிறிய அறிமுகம் செய்திருந்தோம். அத்தசாமுறையைப் பின்பற்றி நாம் கற்பனை செய்துள்ள புதிய தசாமுறைக்கு இராசிச் சக்கரதசை என்று பெயரிட்டுள்ளோம். எல்லா விசயங்களிலும் இத்தசாமுறை காலச்சக்கரதசை போன்றதுதான். ஆனால் அப்பெயர் முந்தைய ஆசிரியர்களால் வழங்கப்பட்டுத் தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அப்பெயரை நாம் உரிமை கொண்டாட முடியாது.
காலச்சக்கரதசையில் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் தசையைத் தீர்மானிக்கின்றது. நாம் சந்திரனுக்குப் பதிலாக லக்னாதிபதியை எடுத்துக் கொண்டுள்ளோம். இதைத் தவிர வேறு மாற்றங்கள் கிடையாது. ராசிகளின் தசை வருச த்திலும் மாற்றங்கள் இல்லை. காலச்சக்கர தசையில் இடவோட்டு நட்சத்திரங்களின் தசா வரிசையில் கன்னிக்குப்பின் சிம்மத்துக்குப் பதிலாகக் கடகம் வரும். வரிசை மாறி வரும் இந்த மாற்றத்துக்குப் பெயர்களும் சூட்டியுள்ளார்கள். நாம் இந்த மாற்றத்தைத் தவிர்த்துள்ளோம். இவ்வளவுதான் வித்தியாசங்கள் . இப்போது ஒரு ஜாதகத்தைப் பார்க்கலாம்.


லக்னாதிபதி வியாழன் உத்ராட நட்சத்திரத்தில் இருக்கின்றது. உத்திராட நட்சத்திரம் வலவோட்டு நட்சத்திரம். எனவே லக்னத்திலிருந்து தசை ஆரம்பித்து (அதாவது மீன குரு என்று ஆரம்பித்து) மேச ச் செவ்வாய் 7 ஆண்டுகள், ரிசபச் சுக்கிரன் 16 ஆண்டுகள் என்று கடந்து போகும். மீன குரு தசாவின் மொத்த வருசங்கள் 10. சந்திர ஸ்புடத்தை வைத்துத் தசா வருடங்களைக் கணக்கிடுவது போல், லக்னத்தில் சென்ற பாகை கலைகளை வைத்து ஆரம்ப தசையின் வருச ம், மாதம், நாட்களைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இங்கே மீன லக்னத்தில் 14 பாகை, 53 கலை உதயமாகின்றது. இன்னும் 15 பாகை, 07 கலை கடந்து போக வேண்டியுள்ளது. மீன குரு தசையின் மொத்த வருச ங்கள் 10. பத்து வருச ங்களை முப்பது பாகைகளுக்குப் பங்கிட்டுப் பார்த்தால் இன்னும் செல்ல வேண்டிய 15 பாகை 07 கலைகளுக்கு, 5 வருட ங்களும், 14 நாட்களும் வரும். எனவே ஆரம்பத்தில் மீனகுரு 5 வருச ம் - 0 மாதம் -14 நாட்கள். பின்னர் ஏழு வருடங்கள் மேச ச் செவ்வாய் தசை, அடுத்து ரிசப சுக்கிரன் பதினாறு வருடங்கள். பின்னர் மிதுன, புதன் ஒன்பது வருடங்கள். இவ்வாறு கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த ஜாதகத்தில் வியாழன் உத்திராட நட்சத்திரத்தில் உள்ளது. அதுவே திருவோண நட்சத்திரத்தில் இருந்தால் அது இடவோட்டு நட்சத்திரம் என்பதால் மீனத்திலிருந்து தசாமுறை பின்னோக்கி நகரும். இதே 14 பாகை 53 கலை இனியும் கடக்க வேண்டியதாகக் கணக்கிட்டு 10 வருட ங்களில் இன்னும் 4 வருட ம், 11 மாதம், 16 நாட்கள் இருப்பதாக எடுத்துக்கொண்டு 4 வருட ம், 11 மாதம், 16 நாட்கள் கடந்த பின்னர் கும்பச் சனி தசை 4 வருட ம், மகரச் சனி தசை 4 வருடம், பின்னர் தனுசு குரு 10 வருடம் என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். காலச்சக்கரதசையில் சந்திரனின் நட்சத்திரம் ராசிகளின் வலவோடு அல்லது இடவோட்டைத் தீர்மானிக்கின்றது. சந்திரனின் நவாம்ச ராசி முதல் தசாராசியாகின்றது. நாம் சந்திரனுக்குப் பதிலாக, லக்னத்தை ஆரம்ப ராசியாக எடுத்துள்ளோம்.
காலச்சக்கரதசையின் அடிப்படையை மாற்றாமல் சந்திரனுக்குப் பதிலாக லக்னாதிபதி இருக்கும் நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு, நாம் இந்த இராசிச் சக்கரதசை முறையைக் கற்பனை செய்துள்ளோம். சில ஜாதகங்களுக்கு இம்முறை சரியான பலனைத் தந்ததால் மட்டுமே, நாம் இதைச்சோதிட ஆர்வலர்களின் பார்வைக்குத் தருகின்றோம். சோதிட ஆர்வலர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களில் இதைச் சோதித்துப் பார்த்து இதன் பயன்பாடு பற்றி ஒரு முடிவுக்கு வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஜாதகரின் திருமணம் அவரது 18 வயது, 0 மாதம் 27வது நாளில், ரிசபச் சுக்கிரதசையில், துலாச் சுக்கிர புக்தியில் நடைபெற்றது. இவரது மரணம் 23 வயது, 01 மாதம், 27வது நாளில் ரிசபச் சுக்கிரதசையில், கடகச் சந்திர புக்தியில் நிகழ்ந்தது.
இந்த ராசி தசையில் புக்திகளை எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்தும், பலன்களை எப்படிக் கணிப்பது என்பது குறித்தும், பின்னர் ஒரு கட்டுரையில் காண்போம்.
This Week’s Quote:
A philosopher is a fool who torments himself while he is alive, to be talked of after he is dead.
- Jean le Rond d'Alembert
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.