காலச்சக்கர தசை என்றொரு தசாமுறை உண்டு. சோதிடர்கள் யாரும் இதைப்பற்றிப் பேசுவதில்லை. 90களில் சோதிடர் R.சந்தானம் தனது Times of Astrology என்ற பத்திரிக்கையில் இத்தசை பற்றி விரிவான கட்டுரை எழுதியிருந்தார். பல விச யங்களில் படிப்பவர்களைக் குழப்பத்திலாழ்த்தும் தசாமுறை அது. எனவே சோதிடர்கள் இத்தசா முறையைப் புறந்தள்ளியதில் ஆச்சரியம் இல்லை.
காலச்சக்கர தசையின் முக்கியமான அம்சங்கள் மூன்று. கிரகங்களுக்குப் பதிலாக ராசிகளே தசையை ஏற்று நடத்தும். இது முதலாவதும் முக்கியமானதும் ஆன அம்சம். இரண்டாவது அம்சம் சந்திரன் இருக்கும் நவாம்ச ராசிதான் ஆரம்ப ராசி தசையாகும். மூன்றாவது அம்சம் இந்த ராசி தசை ஆரம்ப ராசியிலிருந்து கடிகாரச் சுற்றிலோ அல்லது அதற்கு எதிர்ப்பாகவோ நகர்ந்து செல்லும்.
மேச , விருச்சிக ராசிகளுக்கு 7 ஆண்டுகளும், ரிசப, துலா ராசிகளுக்கு 16 ஆண்டுகளும், மிதுன கன்னியா ராசிகளுக்கு 9 ஆண்டுகளும், கடக ராசிக்கு 21 ஆண்டுகளும், சிம்ம ராசிக்கு 5 ஆண்டுகளும், தனுசு, மீன ராசிகளுக்கு 10 ஆண்டுகளும், மகர, கும்ப ராசிகளுக்கு 4 ஆண்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
27 நட்சத்திரங்களில் முதல் மூன்று நட்சத்திரங்கள் வலவோடு என்றும், அடுத்த மூன்று நட்சத்திரங்கள் இடவோடு என்றும், மாறி மாறிப் பிரிக்கப்பட்டுள்ளன. அசுவினி, பரணி, கார்த்திகை இம்மூன்றும் வலவோட்டு நட்சத்திரங்கள். ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை இவை இடவோட்டு நட்சத்திரங்கள். பின் புனர்பூசம், பூசம், ஆயில்யம் இம்மூன்றும் வலவோட்டு நட்சத்திரங்கள். இப்படி மாறி மாறிப் பிரிக்கும்போது 15 நட்சத்திரங்கள் வலவோட்டு நட்சத்திரங்களாகவும், 12 நட்சத்திரங்கள் இடவோட்டு நட்சத்திரங்களாகவும் வரும். ஒருவர் அசுவினி முதல் பாதத்தில் பிறந்துள்ளார் என்றால்,சந்திரன் நவாம்சத்தில் மேச த்தில் இருக்கும். எனவே அவருக்கு முதலில் மேச ராசி தசை. அசுவினி வலவோட்டு நட்சத்திரமாக இருப்பதால் கடிகாரச் சுற்றில் அடுத்தது ரிசப ராசி தசை. அடுத்து மிதுனம். இவ்வாறு கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்துள்ள ஒருவருக்கும், சந்திரன் மேச நவாம்சத்தில் இருக்கும். ரோகினி இடவோட்டு நட்சத்திரமாக இருப்பதால், மேச ராசி தசை, பின் மீன ராசி தசை என்று இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் நிஜத்தில் மேச ராசியில் ஆரம்பிப்பதற்குப் பதிலாக, விருச்சிகத்தில் ஆரம்பித்துப் பின்னர் துலாம், கன்னி கடகம், சிம்மம் என்று செல்லும். அதுவும் கன்னிக்குப் பிறகு சிம்மம் வராமல் கடகம் என்று வந்து, அதற்குப் பின்னரே சிம்ம ராசி தசை வரும்.
கிரகங்களின் தசையில் மற்ற கிரகங்களின் புக்தி நடப்பதுபோல், இங்கேயும் ஒரு ராசியின் தசையில் மற்ற ராசிகளின் புக்தி நடக்கும். அவற்றைக் கூர்ந்து கவனித்தால் அங்கேயும் ஏராளமான சிக்கல்கள் உண்டு. இம்மாதிரிக் காரணங்களினால்தான் இத்தசாமுறை யாராலும் கவனிக்கப்படாமல் போயிற்று என்பது நமது அபிப்ராயம்.
இத்தசாமுறையின் முக்கியமான அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு நாம் நமது கற்பனையில் ஒரு தசாமுறையினை உருவாக்கியுள்ளோம். அடுத்த கட்டுரையில் ஒரு உதாரண ஜாதகத்தோடு அத்தசாமுறையினை விரிவாக ஆராய்வோம்.
This Week’s Quote:
Only one man ever understood me, and he didn't understand me.
- Johann Gottlieb Fichte
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
