பிருஹஜ் ஜாதகத்தின் பதினைந்தாவது அத்தியாயத்தில் ஒரு மனிதன் சன்னியாச வாழ்க்கை வாழ்வதற்கான யோகங்கள் சொல்லப்படுகின்றன.
யோகம்:1
ஏதேனும் ஒரு ராசியில் நான்கு கிரகங்கள் கூடியிருக்குமானால் அவ்வாறு இருக்கப் பிறந்தவன் சன்னியாச யோகத்தைப் பெறுகின்றான்.
இவ்வாறு சன்னியாச யோகத்தைக் கொடுக்கும் கிரகங்கள் சூர்யனோடு நெருக்கமாக இருந்து அஸ்தமனமாகியிருந்தால் சன்னியாசியாக வாழ விருப்பம் கொண்டு, ஆனால் சன்னியாசியாக தீட்சை அடையாதவர்களாக இருப்பர்.
சன்னியாச யோகத்தைக் கொடுக்கும் கிரகங்கள் யுத்தத்தில் ஜயிக்கப்பட்டும், வேறு கிரகங்களால் பார்க்கப்பட்டும், இருந்தால் சன்னியாசியாக மாறி வாழ ஆசை மட்டும் இருக்கும். ஆனால் அவர்கள் சன்னியாசியாக ஆவதில்லை. (ஒரு இராசியில் இரண்டு கிரகங்கள் ஒரே பாகை கலையில் இருந்தால் இரண்டுக்கும் யுத்தம் என்றும், அந்தக் கிரகங்களில் ஒன்று ஜயித்ததாகவும், ஒன்று தோற்றதாகவும் கருதப்படும்.)
யோகம்:2
ஒருவன் ஜாதகத்தில் சந்திரனிருக்கும் ராசிநாதன் வேறு கிரகங்களால் பார்க்கப்படாமல் இருந்து சனியைப் பார்க்கும்போதும்,
பலம் பெற்ற சனி பலமில்லாத சந்திரனிருக்கும் ராசிநாதனைப் பார்க்கும்போதும்,
சந்திரன் சனியின் திரேக்காணத்திலிருந்து சனி செவ்வாய் ஆகியோரின் நவாம்சத்திலுமிருந்து சனியால் பார்க்கப்படும்போதும், அந்த மனிதன் சன்னியாசி ஆகின்றான்.

இந்த ஜாதகர் குருகுலத்தில் வேதங்கள் கற்றவர். பன்மொழிப் புலவர். மேலைநாட்டுத் தத்துவங்களில் ஈடுபாடு உள்ளவர். கவிஞர். ஆனால் திருமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்தார். இவரது ராசியாதிபதி சுக்கிரன். பலமில்லாத நீசமான சுக்கிரனைப் பலம் பெற்ற சனி பத்தாம் பார்வையாகப் பார்ப்பதால் சன்னியாச யோகம் ஏற்படுகின்றது.

இந்த ஜாதகம் ‘ஜாதகம் பார்ப்போம்’ என்ற கட்டுரையில் உதாரணமாகக் காட்டப்பட்ட ஜாதகம்தான். சந்திரராசியாதிபதி புதன் சனியால் பார்க்கப்படுகின்றான். மேலும் ஐந்து கிரகங்கள் ஒரே ராசியில் இருக்கின்றன. இவர் ஆன்மீக நாட்டமுடையவராக இருக்கின்றார். ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை.
திருமணம் ஆகாதவர்களைச் சன்னியாசிகள் என்று அழைக்கலாமா என்ற கேள்வி எழலாம். பிருஹஜ் ஜாதகம் என்ற இந்த நூல் எழுதப்பட்ட காலத்தில் திருமண பந்தங்களில் இல்லாதவரைச் சன்னியாசி என்றுதான் அழைத்தார்கள். வீட்டைத் துறந்து வெளியே சுற்றித்திரிந்து உணவு கிடைத்தால் உண்டு, கிடைக்காவிட்டால் பட்டினி கிடந்து பழக்கப்பட்டவர்களைச் சாதுக்கள் என்றும் சன்னியாசிகள் என்றும்தான் அழைத்தார்கள். மேலும் இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்குக் காரணமே இந்த மாதிரி ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்குத் தங்களது பெண்களை யாரும் திருமணம் செய்து கொடுக்கக் கூடாது என்று சொல்வதற்குத்தான். இந்த மாதிரி அமைப்புள்ள ஜாதகர்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவை முறிந்து போகின்றன அல்லது குழந்தை இல்லாத குறையோடு வாழ்கின்றார்கள்.
யோகம்(2)ல் சந்திரன் சனியின் திரேக்காணத்திலிருந்து செவ்வாய் அல்லது சனியின் நவாம்சத்திலும் இருந்து அப்போது சனியால் பார்க்கப்பட்டால் சன்னியாச யோகம் உண்டு என்று சொல்லப்பட்டது. சந்திரன் சனியின் திரேக்காணத்தில் இருக்க வேண்டுமென்றால் மகரம் கும்பம் இந்த ராசிகளில் முதல் 10 பாகைக்குள் இருக்க வேண்டும். அல்லது ரிசப ராசியில் 20 பாகைக்கு மேல் 30 பாகைக்குள் இருக்க வேண்டும். அல்லது மிதுன ராசியில் 20 பாகைக்கு மேல் 30 பாகைக்குள் இருக்க வேண்டும். அல்லது கன்னியில் 10 பாகைக்கு மேல் 20 பாகைக்குள் இருக்க வேண்டும். அல்லது துலாத்தில் 10 பாகைக்கு மேல் 20 பாகைக்குள் இருக்க வேண்டும். இந்தக் குறிப்பிட்ட பாகைகளுக்குள் இருக்கும் சந்திரன் செவ்வாய் அல்லது சனியின் அம்சத்திலும் இருக்க வேண்டுமென்றால் சந்திரன் கீழ்க்கண்ட நட்சத்திர பாதங்களில் இருக்க வேண்டும்.
| புனர்பூசம் | 1ல் | சனியின் திரேக்காணம் செவ்வாயின் அம்சம் (மேஷம்) |
| அஸ்தம் | 1ல் | சனியின் திரேக்காணம் செவ்வாயின் அம்சம் (மேஷம்) |
| சுவாதி | 2ல் | சனியின் திரேக்காணம் சனியின் அம்சம் (மகரம்) |
| சுவாதி | 3ல் | சனியின் திரேக்காணம் சனியின் அம்சம் (கும்பம்) |
| உத்ராடம் | 2ல் | சனியின் திரேக்காணம் சனியின் அம்சம் (மகரம்) |
| உத்ராடம் | 3ல் | சனியின் திரேக்காணம் சனியின் அம்சம் (கும்பம்) |
| அவிட்டம் | 4ல் | சனியின் திரேக்காணம் செவ்வாயின் அம்சம் (விருச்சிகம்) |
எனவே மேற்கண்ட நட்சத்திர பாதங்களில் இருக்கும் சந்திரன் சனியால் பார்க்கப்பட்டால் இந்த ஜாதகர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது.
யோகம்:3
குரு சந்திரன் லக்னம் ஆகிய மூன்றுமே சனியால் பார்க்கப்பட்டு அதே சமயம் குரு ஒன்பதாமிடத்திலும் இருக்குமானால் ராஜ யோகத்தில் பிறந்த ஒருவன் ராஜாவாக ஆகாமல் சாஸ்திரங்களை உருவாக்கும் மனிதனாக இருப்பான்.
சனி ஒன்பதாம் வீட்டில் வேறு கிரகங்களின் சேர்க்கையும் பார்வையும் இல்லாமல் இருக்கும் போது ராஜ யோகத்தில் பிறந்த ஒருவன் ராஜாவாகவும் அதே சமயம் துறவியாகவும் இருப்பான்.
இந்த அத்தியாயத்தில் கிரகங்களின் நிலை பற்றிக் கூறப்பட்டுள்ளதே தவிர லக்னம் எதுவாக இருக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை. இந்தக் கட்டுரையில் உதாரண ஜாதகங்களாக இரண்டு ஜாதகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அன்றைய தேதியில் பிறந்த எல்லோரது ஜாதகத்திலும் சந்திர ராசியாதிபனைச் சனி பார்க்கத்தான் செய்யும். ஆனால் எல்லோருமே இப்படித்தான் திருமணம் ஆகாமல் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனவே 1.10.1931 மற்றும் 27.6.1968 தேதிகளில் பிறந்தவர்களின் ஜாதகங்கள் இன்னும் சில கிடைக்கப் பெற்றால் மட்டுமே லக்னத்தையும் இந்த ஆய்வுகளுக்குள் எடுத்துக்கொள்ள முடியும். லக்னத்தை விட்டுவிட்டு இந்த யோகங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அது தவறாகவே இருக்கும்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
