ஒவ்வொரு ராசியும் 10 பாகைகள் அடங்கிய மூன்று திரேக்காணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. பன்னிரண்டு ராசிகளுக்கும் மொத்தம் 36 திரேக்காணங்கள் வருகின்றன. முதல் திரேக்காணத்துக்கு அந்த ராசி நாதனே அதிபனாகின்றான். இரண்டாவது திரேக்காணத்துக்கு ஐந்தாவது ராசியின் நாதனும், மூன்றாவது திரேக்காணத்துக்கு ஒன்பதாம் ராசியின் நாதனும் அதிபர்களாகின்றனர். 

மேஷத்தின் முதல் திரேக்காணாதிபதி செவ்வாய், இரண்டாம் திரேக்காணாதிபதி ஐந்தாவது ராசியான சிம்மத்தின் அதிபதி சூர்யன், மற்றும் மூன்றாம் திரேக்காணாதிபதி ஒன்பதாவது ராசியான தனுசின் நாதன் குரு எனக் கண்டுகொள்ள வேண்டும்.

இந்த முப்பத்தாறு திரேக்காணங்களுக்குச் சில பொருட்கள், சில தன்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பிரஸ்ன நேரத்திலும், ஜாதகனின் சரியான பிறந்த நேரத்தை நிச்சயிக்கும் சமயத்திலும், இவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வராகமிகிரர் தனது பிருஹஜ் ஜாதகத்தின் 27-வது அத்தியாயத்தில் சொல்லியிருக்கின்றார். கடலங்குடி திரு.நடேச சாஸ்திரிகளின் மொழி பெயர்ப்பின்படி இந்தத் திரேக்காண ஸ்வரூபத்தைச் சொல்லுகின்றோம்.

மேஷத்தின் முதல் திரேக்காணம்:

தன் உடலில் நல்ல வெண்மையான ஆடையை அணிந்தவனும், கறுத்த நிறமுள்ளவனும், கையில் கோடரி போன்ற ஆயுதத்தைத் தாங்கியவனும், சிவந்த கண்களை உடையவனும், ருத்ரனைப் போன்ற பயங்கரமான உருவமுள்ளவனாகவும் இருக்கின்ற ஓர் ஆணுக்குரிய திரேக்காணம் இது. 

மேஷத்தின் இரண்டாவது திரேக்காணம்:

மேஷத்தின் இரண்டாவது திரேக்காணம் ஒரு பெண்ணை உருவகப்படுத்துகின்றது. அவள் சிவந்த ஆடை அணிந்தவள். நன்றாக அலங்கரித்துக் கொள்பவள். தின்பண்டங்களில் விருப்பமுள்ளவள். குடம் போன்ற வயிற்றை உடையவள். தாகத்தால் பீடிக்கப்பட்டவள் போலத் தோன்றுபவள். ஒரு கால் இல்லாதவள். குதிரையின் முகம் போன்று தோற்றமளிக்கும் முகத்தை உடையவள்.

மேஷத்தின் மூன்றாவது திரேக்காணம்:

மேஷத்தின் மூன்றாவது திரேக்காணம் கொடுமையான மனங் கொண்ட ஒரு ஆணைச் சித்தரிக்கின்றது. அவன் நன்றாகக் கல்வி கற்றவன். சிவப்பு, வெளுப்பு இரண்டும் கலந்த நிறமுள்ளவன். தனது காரியத்தை ஒழுங்காகச் செய்பவன். சாஸ்திரங்களை மீறி நடப்பவன். உயரமாகத் தூக்கிய கம்பைத் தனது கையில் வைத்திருப்பவன். முன்கோபி. 

ரிஷபத்தின் முதல் திரேக்காணம்:

ரிஷபராசியின் முதல் திரேக்காணம் பெண்ணின் ஸ்வரூபமுடையது. அப்பெண் குட்டையான, ஆனால் சுருண்டிருக்கும், தலைமயிரை உடையவள். பெருத்த வயிறை உடையவள். தீப்பட்ட ஆடைகளை அணிந்திருப்பவள். அதிகமாக உண்பவள். நகைகள் மீது அதிக விருப்பம் உள்ளவள்.

ரிஷபத்தின் இரண்டாம் திரேக்காணம்:

ரிஷபராசியின் இரண்டாம் திரேக்காணம் ஒரு ஆணைக் குறிக்கின்றது. பயிர், நிலங்கள், தானியங்கள், வீடுகள், பசுக்கள் இவற்றோடு சம்பந்தமுள்ளவனும், பாட்டு, இசைக்கருவிகள், ஓவியம் இவற்றை அறிந்தவனும், அதிகப் பசியுள்ளவனும், ஆடு போன்ற முகத்தையுடையவனும், அழுக்குப்பட்ட துணிகளை அணிந்திருப்பவனும், காளை மாட்டுக்கொப்பான தோள்களை உடையவனும் என்று அவன் சித்தரிக்கப்படுகின்றான். 

ரிஷபத்தின் மூன்றாம் திரேக்காணம்:

இத்திரேக்காணம் ஒரு ஆணைச் சித்தரிக்கின்றது. அவன் யானை போன்ற உடல் கொண்டவன். வெண்ணிறப் பற்களை உடையவன். சரபம் என்ற மிருகத்துக்கு ஒப்பான பாதமுடையவன். (அதாவது பெரிய பாதங்களை உடையவன்) பொன் நிறம் கொண்டவன். செம்மறியாடு, மான் இவைகளில் பற்றுள்ளவன். அங்குமிங்கும் அலைபவன். (வேட்டைக்காரன் என்று பொருள் கொள்ளலாம்)

மிதுனத்தின் முதல் திரேக்காணம்:

இத்திரேக்காணம் பெண்ணைக் குறிக்கின்றது. இப்பெண் நல்ல அழகி. சந்ததியற்றவள். நகை, ஊசி வேலைகளில் விருப்பமுள்ளவள். (எம்பிராய்டரி செய்யக் கூடியவள் என்று பொருள் கொள்ளலாம்.) தீட்டுப்பட்ட பெண்.

மிதுனத்தின் இரண்டாம் திரேக்காணம்:

இத்திரேக்காணம் ஒரு ஆணின் திரேக்காணம். அவன் தோட்டங்களில் வசிப்பவன். கருடன் என்ற பறவைக்கொப்பான முகம் உடையவன். வில், அம்பு இவற்றைத் தரித்திருப்பவன். விளையாட்டு, பொன், குழந்தைகள் மீது பெரும் ஆசை கொண்டவன்.

மிதுனத்தின் மூன்றாவது திரேக்காணம்:

நன்றாக அலங்கரித்துக்கொள்பவனும், வருணன் என்னும் தேவனைப் போன்றவனும், ஆயுதம் தாங்கியவனும், நாட்டியம், இசை, ஓவியம் இவற்றைக் கற்றுத் தேர்ந்தவனும், காவியம் எழுதுபவனுமாகிய ஒரு ஆணைக் குறிக்கின்றது இந்தத் திரேக்காணம்.

கடகத்தின் முதல் திரேக்காணம்:

இலை, கிழங்கு, பழம் இவற்றோடு தொடர்புள்ளவனும், யானைக்கொப்பான உடலை உடையவனும், காட்டில் சந்தன மரத்தில் வசிப்பவனும், பெரிய கால்களை உடையவனுமாகிய ஒர் ஆணைக் குறிக்கின்றது இத்திரேக்காணம். 

கடகத்தின் இரண்டாம் திரேக்காணம்:

இது ஒரு பெண்ணின் தோற்றமுடையது. தலையில் தாமரை மலர் சூடியிருப்பவள். பாம்பைக் கையில் வைத்திருப்பவள். தனிமையில் இருப்பவள். பொரச மரத்தின் கிளைகளில் இருந்து அழுது கொண்டிருப்பவள். இவ்வாறு அந்தப் பெண் வர்ணிக்கப்படுகின்றாள். 

கடகத்தின் மூன்றாவது திரேக்காணம்:

இது ஒரு ஆணைக் குறிக்கின்றது. அவன் பொருள் தேடிக் கப்பலேறி வெளிநாடுகளுக்குச் செல்பவன். பாம்பினால் சுற்றப்பட்டவன். (சிறைப்பட்டவன் என்று பொருள் கொள்ளலாம்)

சிம்மத்தின் முதல் திரேக்காணம்:

சிம்மத்தின் முதல் திரேக்காணம் நரி, நாய் இவற்றைப் போலவும் அழுக்குத் துணியுடன் அலையும் மனிதனைப் போலவும் தாய், தகப்பனைப் பிரிந்த அழும் குழந்தையைப் போலவும் தோன்றும் என்று சொல்லப்படுகிறது.

சிம்மத்தின் இரண்டாவது திரேக்காணம்:

இத்திரேக்காணம் குதிரையைப் போன்ற ஒரு ஆணைச் சித்தரிக்கின்றது. அவன் வெண்ணிற மாலையைத் தலையில் சூடியவன். சிங்கத்தைப் போல யாராலும் எளிதில் நெருங்க முடியாதவன். நீண்ட நுனி மூக்கை உடையவன். ஆயுதம் தாங்கியவன். மான் தோல், கம்பளம் இவற்றை ஆடையாகத் தரித்திருப்பவன். 

சிம்மத்தின் மூன்றாவது திரேக்காணம்:

கரடியைப் போன்ற முகம் கொண்ட, குரங்குச் சேஷ்டைகளைச் செய்கின்ற, நீண்ட மீசையை உடைய, சுருட்டையான தலைமுடி கொண்ட ஒரு ஆணைக் குறிக்கின்றது இத்திரேக்காணம். அவன் கையில் மாமிசமும், பழங்களும் வைத்திருக்கின்றான். 

கன்னியின் முதல் திரேக்காணம்:

இத்திரேக்காணம் ஒரு பெண்ணைக் குறிக்கின்றது. அவள் புஷ்பங்கள் நிறைந்த கூடையை வைத்திருக்கின்றாள். அழுக்கான ஆடையைத் தரித்திருக்கின்றாள். ஆடை, ஆபரணங்களை விரும்புகின்ற அவள், தந்தையின் வீட்டையும் விரும்புகின்றவளாக இருக்கின்றாள். 

கன்னியின் இரண்டாவது திரேக்காணம்:

எழுதுகோலைக் கையில் வைத்திருப்பவன். கருமை நிறத்தவன். தலைப்பாகை அணிந்தவன். உடலில் அதிகமாக முடி அடர்ந்தவன். வரவு செலவு செய்கின்ற வியாபாரி. கையில் வில்லைத் தாங்கியிருப்பவன். இரண்டாவது திரேக்காணம் இப்படி வர்ணிக்கப்படுகிறது.

கன்னியின் மூன்றாவது திரேக்காணம்:

இது ஒரு பெண்ணைக் குறிக்கின்றது. அவள் உயரமானவள். வெண்ணிறமுள்ளவள். வெள்ளை நிறப் பட்டாடை உடுத்தியவள். கும்பத்தைக் கையில் வைத்துக்கொண்டு கோயிலை நோக்கிப் புறப்படுபவள்.

 

துலாம் முதல் மீனம் வரையுள்ள 18 திரேக்காணங்களின் சொரூபத்தை அடுத்த கட்டுரையில் காண்போம்.

  

This Week’s Quote:

Women. They are a complete mystery.

Stephen Hawking.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 101 guests and no members online