மேஷம் முதல் கன்னி முடியவுள்ள 18 திரேக்காணங்களின் சொரூபத்தைச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். துலாம் முதல் மீனம் வரையுள்ள 18 திரேக்காணங்களைப் பற்றி இந்த வாரம் அறிவோம்.
துலாம் ராசியின் முதல் திரேக்காணம்:
இத்திரேக்காணம் ஒரு ஆணைக் குறிக்கின்றது. அவன் கடை வீதியில் இருப்பவன். தராசைக் கையில் வைத்திருப்பவன். பொருட்களை எடையிட்டு நிறுப்பவனும், படிகளால் அளப்பவனுமாக இருக்கின்றான். பொருட்களின் மதிப்பையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
துலாம் ராசியின் இரண்டாம் திரேக்காணம்:
இத்திரேக்காணமும் ஒரு ஆணைக் குறிக்கின்றது. அவன் கழுகைப் போன்ற முகமுள்ளவன். பசியோடும் தாகத்தோடும் இருப்பவன். மனைவி மக்களைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பவன். கீழே விழத் தயாராக இருக்கும் ஒரு பாத்திரத்தைக் கையில் வைத்திருப்பவன்.
துலாம் ராசியின் மூன்றாம் திரேக்காணம்:
தங்கத்தால் செய்யப்பட்ட வில், அம்பு இவைகளைத் தன்னகத்தே வைத்திருப்பவன். நவரத்தினங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்பவன். குரங்கைப் போன்றவன். கையில் பழங்களையும், இறைச்சியையும் வைத்திருப்பவன். துலாத்தின் மூன்றாம் திரேக்காணம் இவ்வாறு வருணிக்கப்படுகின்றது.
விருச்சிக ராசியின் முதல் திரேக்காணம்:
இத்திரேக்காணம் ஒரு பெண்ணைக் குறிக்கின்றது. அவள் ஆடை, ஆபரணங்களை விலக்கியவள். தனது இருப்பிடத்தை விட்டு வேறிடம் சென்றிருப்பவள். பாம்பால் சுற்றப்பட்ட கால்களையுடையவள். அழகானவள். கடலிலிருந்து கரையை நோக்கி வந்து கொண்டிருப்பவள்.
விருச்சிகத்தின் இரண்டாம் திரேக்காணம்:
இதுவும் ஒரு பெண்ணைக் குறிக்கின்றது. அவள் கணவனது மகிழ்ச்சிக்காகவும், தனது இல்லத்துக்காகவும் வாழ்பவள். ஆமை, மற்றும் குடம் போன்ற உடலுடையவள். பாம்பால் சுற்றப்பட்டிருப்பவள்.
விருச்சிகத்தின்; மூன்றாம் திரேக்காணம்:
இத்திரேக்காணம் சிங்கம் போன்ற தோற்றமுடையது. சந்தனக் காட்டில் வாழ்கின்ற அச்சிங்கம் காட்டிலுள்ள மற்ற மிருகங்களை அச்சுறுத்துகின்றது.
தனுசின் முதல் திரேக்காணம்:
மனிதனின் முகத்தையும், குதிரையின் உடலையும் கொண்ட ஒரு மிருகத்தைச் சித்தரிக்கின்றது இத்திரேக்காணம். நீண்ட வில்லைக் கையில் தாங்கியிருக்கின்றது. ஒரு ஆசிரமத்தில் தங்கி இருந்து, அங்கே தவம் செய்பவர்களையும், யாகத்துக்கான பொருட்களையும் பாதுகாத்து வருகின்றது.
தனுசின் இரண்டாம் திரேக்காணம்:
இது ஒரு பெண்ணைக் குறிக்கின்றது. அவள் பார்ப்பவர்களின் மனத்தைக் கவரக் கூடியவள். பொன்னையொத்த நிறமுடையவள். கடலில் கிடைக்கும் ரத்தினங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்பவள். பத்ராசனம் என்ற ஆசன முத்திரையில் இருப்பவள்.
தனுசின் மூன்றாம் திரேக்காணம்:
இது ஒரு ஆணைக் குறிக்கின்றது. அவன் நீண்ட தாடியுள்ளவன். பொன்னை ஒத்த நிறம் கொண்டவன். கையில் ஒரு தண்டம் வைத்திருப்பவன். வெண்பட்டு, மான் தோல் இவற்றைத் தரித்துக்கொண்டிருப்பவன்.
மகரத்தின் முதல் திரேக்காணம்:
இது ஒரு ஆணைக் குறிக்கின்றது. அவன் மயிர்களடர்ந்த உடம்பை உடையவன். அவனது பற்கள் மீன்களின் பற்களுக்கு ஒப்பானவை. பன்றியைப் போன்ற உடலுடையவன். மிருகங்களைப் பிணைக்கின்ற கயிறு, வில் போன்றவற்றை வைத்திருப்பவன். பயங்கரமான முகமுள்ளவன்.
மகரத்தின் இரண்டாம் திரேக்காணம்:
இது ஒரு பெண்ணைக் குறிக்கின்றது. அவள் ஆடல், பாடல் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றவள். தாமரையிதழ் போன்ற கண்களையுடையவள். கறுத்த நிறமுள்ளவள். விசித்திரமான கலைப் பொருட்களைத் தேடி வாங்குபவள். காதுகளில் பலவிதமான உலோகங்களாலான ஆபரணங்களைத் தரித்திருப்பவள். (இரும்பு என்று சூர்யநாராயணராவ் மொழி பெயர்க்கின்றார். இரும்பைப் போன்ற காதுகளையுடையவள் என்று கடலங்குடி நடேச சாஸ்திரிகள் மொழி பெயர்த்துள்ளார்).
மகரத்தின் மூன்றாம் திரேக்காணம்:
இது ஒரு ஆணைக் குறிக்கின்றது. அவன் கின்னரர்கள் போன்ற சரீரமுடையவன். கம்பளத்தை ஆடையாகக் கொண்டிருப்பவன். வில், அம்பு, கவசம் இவைகளைத் தாங்கியவன். நவரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட கும்பம் ஒன்றைத் தோளில் வைத்திருப்பவன்.
கும்பத்தின் முதல் திரேக்காணம்:
இது ஒரு ஆணைக் குறிக்கின்றது. அவன் கழுகுக்கு ஒப்பான முகமுடையவன். கம்பளம், பட்டு இவைகளாலான ஆடையை அணிந்திருப்பவன். மான் தோலையும் தரித்திருப்பவன். எண்ணெய், தண்ணீர், உணவுப் பொருட்கள், மது போன்றவற்றைச் சிந்தித்துக் கொண்டிருப்பவன்.
கும்பத்தின் இரண்டாம் திரேக்காணம்:
இது ஒரு பெண்ணைக் குறிக்கின்றது. அவள் அழுக்கான ஆடைகளை அணிந்திருப்பவள். தலையில் மண்ணாலான பாத்திரங்கள் வைத்திருப்பவள். பாதி எரிந்து போன நிலையில் உள்ள வண்டி ஒன்றில் காட்டிலிருந்து தாதுப் பொருட்களை எடுத்து வருபவள்.
கும்பத்தின் மூன்றாம் திரேக்காணம்:
இது ஒரு ஆணைக் குறிக்கின்றது. அவன் கறுத்த நிறமுள்ளவன். காதுகளில் முடிவளர்ந்தவன். தலையில் கிரீடத்தைச் சுமப்பவன். இலைகள், பழங்கள், மரப் பிசின் இவற்றைப் பலவகைப் பாத்திரங்களில் வைத்துச் சுமந்து செல்பவன். அங்குமிங்கும் அலைந்து திரிபவன்.
மீனத்தின் முதல் திரேக்காணம்:
இது ஒரு ஆணைக் குறிக்கின்றது. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்ளும் அவன் முத்துக்கள், ரத்னங்கள், சங்கு இவற்றைக் கையில் வைத்திருக்கின்றான். மனைவியை அலங்கரிக்கும் எண்ணத்தோடு கப்பலில் கடலைத் தாண்டிச் செல்கின்றான்.
மீனத்தின் இரண்டாவது திரேக்காணம்:
இது ஒரு பெண்ணைக் குறிக்கின்றது. சம்பகம் என்னும் பூவைப் போன்ற நிறமுடைய அவள் தோழிகள், வேலையாட்களோடு, கொடியைப் பறக்கவிட்ட ஒரு கப்பலில் சமுத்திரத்தின் நடுவே சென்று கொண்டிருக்கின்றாள்.
மீனத்தின் மூன்றாவது திரேக்காணம்:
இது ஒரு ஆணைக் குறிக்கின்றது. ஆடையின்றி நிர்வாணமாக இருக்கும் அவனது உடலை ஒரு பாம்பு சுற்றியிருக்கின்றது. திருடர்கள் மற்றும் நெருப்பு இவைகளை எண்ணிக் கவலைப்பட்ட மனத்தோடு, காட்டில் ஒரு குழியில் இருந்து கதறிக் கொண்டிருக்கின்றான் அவன்.
மேலைநாட்டுச் சோதிடர்கள் மேஷம் முதல் மீனம் முடியவுள்ள 360 பாகைகளுக்கும் குறிப்புக்கள் கொடுத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு பாகைக்கும் சில காட்சிகள், சில படிமங்கள் கொடுத்திருக்கின்றார்கள். இங்கே ஒவ்வொரு 10 பாகைக்கும் சில காட்சிகள் உருவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரஸ்ன நேரத்திலும், தசாபலன்களைக் கூறும் நேரத்திலும் இக்குறிப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது சோதிடர்களின் கடமை. மீனராசியின் முதல் இரண்டு திரேக்காணங்களில் கடல், கப்பல் இவை சொல்லப்பட்டிருப்பதால் கடற்பயணங்கள், வெளிநாடு செல்லுதல், கடற்படையில் பணியாற்றுதல் போன்றவற்றை ஊகித்துச் சொல்லலாம்.
பாம்பினால் சுற்றப்பட்ட உடலையும், பாதத்தையும் கொண்டவன் என்று வர்ணிக்கப்பட்ட திரேக்காணங்கள் சிறைவாசத்தைக் குறிப்பவை என்று எமது அனுபவத்தில் கண்டுள்ளோம். தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்பவர்களின் ஜாதகத்தைப் பார்த்ததில் அங்கே இத்திரேக்காணங்கள் மரணத்தோடு சம்பந்தப்பட்டுள்ளவை எனத் தெரிகின்றது.
எனவே மிக்க மதிநுட்பமும், தர்க்க ஞானமும் கொண்ட சோதிடர்கள் இத்திரேக்காண ஸ்வரூபங்களை நன்கு ஆராய்ந்து பிரஸ்ன நேரத்திலும், யாத்திரைகள் மேற்கொள்ளும் நேரங்களிலும், ஜாதக பலன்களைச் சொல்லும் நேரங்களிலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
This Week’s Quote:
Science never solves a problem without creating ten more.
- Shaw.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
