நவாம்சச் சக்கரம் ஏன் என்ற தலைப்பிட்டு 15.10.2017ல் நாம் எழுதியிருந்த கட்டுரையின் தொடர்ச்சியாக இக்கட்டுரையை எழுதுகின்றோம். ரிசபம் தொடங்கி மீனம் வரைக்கும் அம்சச் சக்கரத்தில் இடம் பெற்ற கிரகங்கள், முறையே ஒன்று முதல் பதினோரு வருடங்களைத் தத்தமது ஆயுளாகக் கொடுக்கும் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். அதாவது ரிசப நவாம்சத்தில் இருக்கும் கிரகம் ஒரு வருடமும், துலா நவாம்சத்தில் இருக்கும் கிரகம் ஆறு வருடங்களும், மகர நவாம்சத்தில் உள்ள கிரகம் ஒன்பது வருடங்களும், மீனத்தில் உள்ள கிரகம் பதினோரு வருடங்களும் கொடுக்கும். இந்த வருடங்களைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் நாம் செய்ய வேண்டிய விசயங்கள் சில உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.

ஒரு கிரகம் தனது உச்ச வீட்டில் இருக்குமானால், அந்தக் கிரகம் கொடுக்கும் வருடங்களை மூன்றால் பெருக்கினால் கிடைக்கும் வருடங்களே அக்கிரகம் கொடுக்கும் ஆயுளாகும். உதாரணமாகச் சூரியன் மேச ராசியில் சிம்ம நவாம்சத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். சிம்ம நவாம்சத்தில் இருப்பதால் சூரியன் நான்கு வருசங்களை ஆயுளாகக் கொடுக்கும். அந்தச் சூரியனே உச்ச ராசியில் இருப்பதால் கிடைக்கும் நான்கு வருசங்களை மூன்றால் பெருக்கக் கிடைக்கும் பன்னிரண்டு வருடங்களே சூரியன் கொடுக்கும் ஆயுளாகும். இதேபோல் ஒரு கிரகம் வக்ரகதியில் இருந்தாலும், அக்கிரகம் கொடுக்கும் வருசங்களை மூன்றால் பெருக்கக் கிடைக்கும் வருசங்களே அக்கிரகம் கொடுக்கும் ஆயுள் என்று தீர்மானம் செய்துகொள்ள வேண்டும்.

ஒரு கிரகம் தனது சொந்த வீட்டிலோ, அல்லது சொந்தத் திரேக்காணத்திலோ, அல்லது சொந்த நவாம்சத்திலோ இருக்குமானால், அந்தக் கிரகம் கொடுக்கும் வருசங்களை இரண்டால் பெருக்கி, அப்படிக் கிடைக்கும் வருசங்களையே, அக்கிரகம் கொடுக்கும் ஆயுளாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிரகம் வர்க்கோத்தமம் ஆக இருக்கும் போதும், அக்கிரகம் கொடுக்கும் ஆயுளை இரண்டால் பெருக்கிக் கொள்ளவேண்டும்.

ஓரு கிரகம் உச்சவீட்டிலிருக்கும் போது வக்கிரமாகவும் இருந்து, வர்க்கோத்தமமாகவும் இருந்தால் என்ன செய்வது? இரண்டாலும் பெருக்கி மூன்றாலும் பெருக்க வேண்டிய சமயங்களில் பெரிய பெருக்கலை மட்டுமே செய்ய வேண்டும். அதாவது மூன்றால் மட்டுமே பெருக்க வேண்டும். 

இவ்வாறு கிடைக்கப் பெற்ற வருசங்களை வைத்துக் கொண்டு, ஒரு பாவக்கிரகம் 12ல் இருக்குமானால் மொத்த வருசங்களையும், 11ல் இருக்குமானால் பாதி வருசங்களையும் கழிக்க வேண்டும். 10ல் இருந்தால் 1/3 பங்கும், 9ல் இருந்தால் 1/4பங்கும், 8ல் இருந்தால் 1/5 பங்கும், 7ல் இருந்தால் 1/6 பங்கும் குறைத்துக் கிடைக்கப் பெற்ற வருசங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விவரங்கள் ஆயுர்த்தாயம் - ஆயுளைக் கணக்கிடும் முறை என்ற எமது கட்டுரையில் விவரமாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சக்கரபாதஹரணம் செய்து கிடைக்கப் பெற்ற வருசங்களே அந்த ஜாதகரின் ஆயுளாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு கிடைக்கப் பெறும் ஆயுள் எல்லா ஜாதகர்களுக்கும் பொருந்தி வருவதில்லை. சில பேருக்குக் கூடுதலாகவும், சில பேருக்குக் குறைவாகவும் வருகின்றது. அறிவியல் சோதனைகளைப் போலத் தொடர்ச்சியாகப் பல்வேறு சோதிடர்களால் இந்த ஆயுர்த்தாயம் கணக்கிடப்பட்டு, உண்மையாகக் கிடைத்த ஆயுளோடு ஒப்பிட்டுப் பார்த்து, எங்கே தவறு இருக்கின்றது என்பதைக் கண்டுபிடித்து, அத்தவறை நீக்கும் பணியைச் சோதிடர்கள் பல நூற்றாண்டுகளாகச் செய்து வந்திருக்க வேண்டும். அதைக் செய்யத் தவறியதால்தான், முட்டுச் சந்துக்குள் போய் வழி தெரியாமல் தவிப்பது போல இந்த ஆயுர்த்தாயக் கணக்குகளோடு போராடும் நிலை வந்திருக்கின்றது. எது எப்படியிருந்தாலும், எத்தனையோ வர்க்கச் சக்கரங்கள் இருந்தாலும் தொடர்ச்சியாக நவாம்சச் சக்கரம் மட்டுமே ராசிச் சக்கரத்தோடு இடம் பெறுவதற்கு இந்த அம்சகாயுர்த்தாயம் பற்றிய சிந்தனையே காரணமாக இருக்க வேண்டும்.

 

This Week’s Quote:

Environment modifies life but does not govern life.

-  William James

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 204 guests and no members online