இந்த இணையதளத்தில் வெளியாகும் கட்டுரைகளைப் படிக்கும் வாசகர்களிடமிருந்து வருகின்ற சில கேள்விகள் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ‘என் ஜாதகத்தில் புத்திரஸ்தானாதிபதி நீச்சமடைந்திருப்பதால் எனக்குப் புத்திர பாக்கியம் கிடையாதா?’ என்று ஒருவர் கேள்வி அனுப்பியுள்ளார். சுக்கிரன் நீசமாக இருப்பதால் இல்லற வாழ்க்கை கிடையாதா? என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து ஆயிரம் வருடங்களாக எத்தனை அபத்தமான கருத்துக்களைச் சோதிடர்கள் இங்கே விதைத்துள்ளார்கள் என்பதை அறியும் போது பிரமிப்பாக இருக்கிறது. நீச்சவீட்டில் கிரகம் இருப்பதால் மட்டுமே பலங்குறைந்துவிடாது. சுக்கிரன் கன்னி ராசியில் 27 பாகையில் இருந்தால் மட்டுமே நீசமாகிவிட்டதாகக் கருத வேண்டும். சுக்கிரன் நீச்சமாக இருந்தும் ஐம்பது வருடத்தாம்பத்திய வாழ்க்கை அனுபவிக்கும் தம்பதிகளின் ஜாதகங்களைக் கூட நாம் இங்கே உதாரணமாகக் காண்பித்திருக்கின்றோம். அப்படியிருந்தும் இன்னும் வாசகர்களுக்குத் தெளிவு பிறக்கவில்லையென்றால் அவர்களது சிந்தனைக்கு இங்கே முட்டுக்கட்டைகள் உள்ளன என்றுதான் நாம் புரிந்து கொள்கின்றோம்.
திருமணம், பதவி உயர்வு, புதுமனை புகுதல் இவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள மட்டுமே சோதிடர்களை அணுகும் நமது மக்கள், தினப்பலன்களுக்குப் பத்திரிக்கைகளையும், தொலைக்காட்சியில் தோன்றி அபத்தங்களை அள்ளித் தெளிக்கும் சோதிடர்களையுமே நம்புகின்றார்கள். கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்தால் நாம் சோதிடர்களை அணுக வேண்டியதில்லை என்பதே எமது எண்ணம். மூலநூல்களை முறையாகப் படித்து, நிறைய ஜாதகங்களைச் சேகரித்து வைத்திருக்கும் எந்த ஒரு நபரும்இச்சாத்திரத்தைத் தமது அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொள்ள இயலும். ஆகையால்தான் விபத்துக்கள் மலிந்துவிட்ட தற்காலத்தில் ”பயணிகள் கவனிக்கவும்” என்ற கட்டுரையை எழுதினோம். ஆனால் அதைப் படித்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. என்றாலும் இச்சாத்திரத்தைப் புதிய பார்வையில் யாராவது பார்க்கக் கூடும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை எழுதுகின்றோம்.
நகம் வெட்டும் போது விரலையும் காயப்படுத்திக்கொள்ளுதல், முகச்சவரம் செய்யும் போது கன்னத்தையும் கீறிக் கொள்ளுதல்,பைக்கை நிறுத்தும் போது ஸ்டாண்ட் போட்டாகிவிட்டது என்ற நினைப்பில் காலின் மீது போட்டுக் காயம்படுதல், மிக்சியில் ஏதாவது அரைக்கும் போது விரலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுதல், மாடிப்படியில் இறங்கும் போது கடைசிப்படி என்று நினைத்துத் தவறி விழுதல் போன்ற சிறு சிறு விபத்துக்களைத் தவிர்க்க வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்படும் குறிப்புக்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
- உங்களது ஜாதகத்தில் நான்கு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகளாக எந்த ராசிகள் உள்ளனவோ அந்த ராசிகள் உதயமாகும் போது இவ்விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உண்டு.
- உங்களது ஜன்ம லக்னம் கன்னி என்றால்,நான்காமிடம் தனுசு, எட்டாமிடம் மேஷம் ,பன்னிரண்டாமிடம் சிம்மம் ஆக வரும். எனவே ஒரு குறிப்பிட்ட நாளில் தனுசு, மேஷம், சிம்மம் ஆகிய லக்னங்கள் உதயமாகும் போது இவ்விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உண்டு. எந்த வேளையில் எந்த லக்னம் என்று எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்காதீர்கள். இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிப் பழகவும், கணிணியில் பயிற்சி பெறவும், கைபேசியைக் குடைந்து கொண்டிருக்கவும் நேரம் ஒதுக்கும் உங்களால் ஒரு 24 மணி நேரம் (தினசரி அல்ல, வாழ்க்கை முழுவதுக்குமே) மட்டும் ஒதுக்க முடிந்தால் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரம் ,என்ன லக்னம் என்று கண்டுபிடிக்க முடியும். தாங்கள் வசிக்கும் இடத்தின் சூர்ய உதய நேரமும்,அஸ்தமன நேரமும் தெரிந்தால் போதும்.
- உங்களது ஜாதகத்தில் நான்கு, எட்டு, பன்னிரண்டாம் வீட்டு அதிபர்கள் எந்த ராசிகளில் இருக்கின்றார்களோ, அந்த ராசிகள் உதயமாகும் போதும் இவ்விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு இக்கட்டுரை வெளியாகும் 7.5.2017-ஐ எடுத்துக்கொள்வோம். இன்று காலை 10.00 மணிக்குப் பிறப்பவரின் ஜாதகம் இவ்வாறு இருக்கும்.

இந்த ஜாதகத்தில் மிதுன லக்னம் உதயமாகின்றது. இவருக்கு நான்கு, எட்டு, பன்னிரண்டாம் இடத்து அதிபதிகளாகப் புதன், சனி, சுக்கிரன் ஆகியோர் வருகின்றார்கள். எனவே புதன் இருக்கும் மேஷம், சனி இருக்கும் தனுசு,சுக்கிரன் இருக்கும் மீனம் ஆகிய மூன்று லக்னங்களில் இவருக்குச் சிறு சிறு விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உண்டு. எனவே இவரது பயண நேரங்கள், உடற்பயிற்சி செய்யும் நேரங்கள் ஆகியவை இம்மூன்று லக்னங்களில் அமையாதவாறு பார்த்துக்கொள்ளல் நலம் பயக்கும்.
சூர்யன் ஒவ்வொரு நாளும் உதயமாகின்ற வேளையில் சூர்யன் இருக்கின்ற ராசியும் பின்னர் அடுத்த அடுத்த ராசிகளும் உதயமாகும் என்ற விதியையும், சுமாராகத் தமிழ் மாதத்தின் தேதியை ஒட்டியே சூரியனின் பாகையும் இருக்கும் என்ற விதியையும் ஞாபகம் வைத்துக்கொண்டால் ஒரு சாதாரணக் கணக்கு மூலம் (இக்கணக்கைச் செய்ய இரண்டு நிமிடம் போதும்) தினசரி எந்தெந்த வேளையில் என்னென்ன லக்னங்கள் உதயமாகும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
எதையுமே சோதித்துப் பார்க்கவும் ,சொந்த அனுபவங்களோடு சேர்த்துக் கற்றுக்கொள்ளவும், துடிப்பும் ஆர்வமும் இல்லாததால்தான்C.V ராமனுக்கும், சந்திரசேகருக்கும் பிறகு இன்னும் நாம் நோபல் பரிசு வாங்காமல் இருக்கின்றோம். நாம் அடிக்கடி சொல்வது போலத் தினசரி நடைமுறை வாழ்க்கையில் பயன்படாத எதுவுமே அறிவியல் இல்லை. கலைஞனுக்கு நுட்பமான பார்வையும், கவிஞனுக்குப் புதிய சொற்களும், ஓவியனுக்கு வண்ணங்கள் பற்றிய ரசனையும் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு அறிவியலாளருக்கு நுட்பமான பார்வை, கற்பனை, விடையைத் தேடும் ஆவேசம் இருந்தால் மட்டுமே யாவும் வசப்படும்.
This Week’s Quote:
A man can be happy with any woman, as long as he does not love her.
- Oscar Wilde
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
