ஒரு வார இதழில் ஒரு சோதிடர் ராகு, கேது பெயர்ச்சி பலன் எழுதியிருந்தார். அரசியல்வாதிகளுக்கு அவர் எழுதியிருந்த பலன் என்னை மிகவும் கவர்ந்தது. மேஷ ராசிக்காரர்களுக்கு திடீர் பெருமை, புகழ் கிட்டும் என்றும், ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு நிலைக்கும் என்றும், மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலக் காற்று வீசும் என்றும், கடக ராசிக்காரர்களுக்கு ஏற்றம் ஏற்படும் என்றும், சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும் என்றும், கன்னிராசிக்காரர்களுக்கு மேன்மைகள் வரத் தொடங்கும் என்றும் எழுதியிருந்தார். கிரகங்களை விடவும் அரசியல்வாதிகள் பலமானவர்கள் என்பது அவர் கருத்தாக இருக்கலாமோ என்னவோ?

பெங்களுரில் வசிக்கும் ஒரு நண்பர் ஒரு சமயம் என்னைக் கேட்டார், ‘தமிழ்நாட்டில் மட்டும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்கள் என்று ஏராளமான புத்தகங்கள் விற்பனை ஆகின்றனவே ஏன்?’ என்று. எனக்கு அப்போது பதில் சொல்லத் தெரியவில்லை. இப்போது தெரிகின்றது அனைத்துச் சோதிடர்களும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நல்ல பலனைத்தான் சொல்கின்றார்கள். அதனால்தான் எல்லோருமே அதை விரும்பி வாங்கிப் படிக்கின்றார்கள்.


2016 புத்தாண்டு பலன்கள் என்று ஒரு சோதிடர் வெளியிட்டிருக்கும் இதழில் பன்னிரண்டு ராசியில் பிறந்த பெண்களுக்கும் கீழ்க்கண்டவாறு பலன்கள் எழுதியிருக்கின்றார்.

மேஷம் கல்யாணம் ஆகாதவர்க்கு நல்ல வரன்கள் வந்து சேரும்
ரிஷபம் மங்கல ஒசை மனையில் கேட்கும்
மிதுனம் மாலை தேடும் பெண்களுக்கு மாலை கிடைக்கும்
கடகம் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்
சிம்மம் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவுக்கு வரும்
கன்னி இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்
துலாம் மணமாலை சூடுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன
விருச்சிகம் மனதிற்கினிய தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் ஆண்டு
தனுசு வரன்கள் வாயில் தேடி வரும்
மகரம் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும் ஆண்டு
கும்பம் திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்
மீனம் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உண்டு

 

 இப்படி எழுதிச் சந்தோஷப்படுத்தினால் பாமர ஜனங்கள் ராசி பலன் புத்தகங்களை ஏன் அள்ளிச் செல்லமாட்டார்கள்?


இவ்வாறு ராசி பலன்கள் எழுதுபவர்களுக்கு எந்தச் சோதிடநூலும் பரிச்சயமாகவில்லை என்றுதான் தெரிகின்றது. ஏனெனில் சோதிட நூல்களில் ராகுவைச் சனியைப் போன்று பலன் கொடுப்பவன் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. சனி ராசிக்கு மூன்று, ஆறு, பதினொன்று ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே சுபபலனைக் கொடுப்பவன். இதுபற்றி ஏற்கெனவே ராசி பலன்கள் என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. வெறும் கோசார பலனை மட்டுமே சொல்லக் கூடாது, அஷ்டவர்க்கம், வேதை ஆகியவற்றையும் பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும் என்று பழைய நூல்களில் குறிப்பிட்டிருந்தும் அவற்றை எந்தச் சோதிடரும் கவனத்தில் கொள்வதில்லை.

ஆற்காடு பஞ்சாங்கம் கோசார பலனை இவ்வாறு சொல்கின்றது:

ஜன்மராசியில் ராகு சோகம், புத்திக்குறைவு
இரண்டில் ராகு தேக பீடை, விரோதம்
மூன்றில் ராகு ஜெயம், லாபம்
நான்கில் ராகு வியாதி, பந்து விரோதம்
ஐந்தில் ராகு பலசேதம், செலவு
ஆறில் ராகு லட்சுமிகரம், தனலாபம்
ஏழில் ராகு தண்டனை, செலவு
எட்டில் ராகு மரண பயம், துன்பம்
ஒன்பதில் ராகு காரிய நஷ்டம், பீடை
பத்தில் ராகு பண விரயம், பகை
பதினொன்றில் ராகு தனலாபம், வரவு
பன்னிரண்டில் ராகு வியாதி, செலவு



ஆசார்யாள் மடத்துப் பஞ்சாங்கப்படி:

ஜன்மராசியில் ராகு புத்திக்குறைவு
இரண்டில் ராகு பிணி, சத்ரு
மூன்றில் ராகு திரவிய லாபம்
நான்கில் ராகு விரோதம்
ஐந்தில் ராகு பலசேதம்
ஆறில் ராகு லட்சுமிகரம்
ஏழில் ராகு சிறை, பயம்
எட்டில் ராகு மரண பயம்
ஒன்பதில் ராகு காரிய நட்டம்
பத்தில் ராகு பண விரயம்
பதினொன்றில் ராகு தனலாபம்
பன்னிரண்டில் ராகு வியாதி, செலவு

 

பிரபல சோதிடர் பெங்களுர் V.ராமன் தனது ‘Hindu Predictive Astrology’ என்ற புத்தகத்தில் கோசார பலன்கள் பற்றிக் குறிப்பிடும் போது ராகு, சனியைப் போன்று பலன் கொடுப்பான் என்று சொல்லியிருக்கிறார். சனி ஜன்மராசிக்குப் பன்னிரண்டு பாவங்களிலும் வரும் போது கிடைக்கப் பெறும் பலன்களைக் கீழ்க்கண்டவாறு சொல்கின்றார். அதை ராகுவுக்கும் எடுத்துக்கொண்டால்

ஜன்மராசியில் ராகு விஷம், தீயால் ஆபத்து, சிறைவாசம், பந்துக்களிடமிருந்து பிரிந்து செல்லுதல், வெளிநாடு செல்லுதல்
இரண்டில் ராகு அழகு, சுகம் இவற்றின் இழப்பு, உடல் பலவீனமாதல், அனுபவிக்க இயலாத செல்வத்தைப் பெறுதல்
மூன்றில் ராகு பல வகையான பொருட்கள், செல்வப் பெருக்கு
நான்கில் ராகு நண்பர்கள், மனைவியிடமிருந்து பிரிவு, பயம், கவலை
ஐந்தில் ராகு பிள்ளைகளிடமிருந்து பிரிவு, செல்வக்குறைவு, சண்டை
ஆறில் ராகு எதிரிகள் மற்றும் நோய்களிடமிருந்து விடுதலை
ஏழில் ராகு மனைவி மக்களிடமிருந்து பிரிவு
எட்டில் ராகு மேற்சொன்ன பலன்தான்
ஒன்பதில் ராகு மேற்சொன்ன மனைவி மக்கள் பிரிவுடன் கூடவே சிறைவாசம், இதய நோய்
பத்தில் ராகு பொருள், புகழ் இவற்றின் சேதம்
பதினொன்றில் ராகு பெண் மற்றும் பொருள் வரவு
பன்னிரண்டில் ராகு பெருங்கவலை

 

சாதகாலங்காரப் பாடல்:

இரவி ஐந்தில் மதி எட்டில் ஏழில் சேய்
பரவு மூன்றில் பொன் பார்க்கவன் ஆறிலும்
விரவு புந்திநான்கு ஒன்பானில் ராகுசுன்
உரவுசென்மமுறில் கடுங் கேடுறும்.

ஜன்மராசிக்கு ஐந்தில் சூர்யன் வரும் போதும், சந்திரன் எட்டில் வரும் போதும், செவ்வாய் ஏழில் வரும் போதும், குரு மூன்றாமிடத்தில் வரும் போதும், சுக்கிரன் ஆறாமிடத்துக்கு வரும் போதும், புதன் நான்காம் இடத்துக்கு வரும் போதும், ராகு ஒன்பதாமிடத்துக்கு வரும் போதும், சனி ஜன்மராசிக்கு வரும் போதும் கொடுமையான துன்பங்கள் உண்டாகும்.


கதிர் பதினொன்று மூன்று கருது பத்து ஆறில் நல்லன்
மதியொன்று மூன்று ஓராறு மன்னும் ஏழ் பது பன்னொன்றும்
பதிபுகழ் சேய் சுன் ராகு பதினொன்று மூன்று ஆறாகும்
மதிமகற் கிரண்டோராறு மன் எட்டுப் பது பன்னொன்றே.

சூர்யன் ராசிக்கு மூன்று, ஆறு, பத்து, பதினொன்றிலும், சந்திரன் ஒன்று, மூன்று, ஆறு, ஏழு, பத்து, பதினொன்றிலும், செவ்வாய், சனி, ராகு, மூன்று ஆறு, பதினொன்றிலும், புதன், இரண்டு, ஆறு, எட்டு, பத்து, பதினொன்றிலும் நற்பயன்களைத் தருவர்.


பொன்னவன் பதினொன்று ஒன்பான் பொருந்தும் ஏழ் ஐந்து இரண்டாம்
துன்னுசுக்கிரற்கு ஒன்றாதியைந்தும் ரெட்டு ஒன்பானும்
பன்னொன்றீராறு தன்னில் பற்றிடல் நல்லராவர்
அன்னமே வேதைக் கோட்கள் உறில் தீயவராவர் என்னே.

குரு ஜன்மராசிக்கு இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்றிலும், சுக்கிரன் ஜன்மராசிக்கு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, எட்டு, ஒன்பது பதினொன்று, பன்னிரண்டிலும் நல்லவர்கள். வேதை ஸ்தானத்தில் கோள்கள் நிற்பின் இவர்களும் தீயபலனைக் கொடுப்பவர்கள் ஆவார்கள்.

எனவே ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் என்று சோதிடர்களால் வெளியிடப்படும் புத்தகங்கள் யாவும் அபத்தக்களஞ்சியங்கள்தாம். கோசார பலன்களில் நல்லவை, தீயவை இரண்டும் சேர்ந்துதான் நடக்கும். தீயவை மட்டுமே நடவாது. நன்மைகள் மட்டுமே சேராது. ஜாதகருக்கு எந்த கிரகத்தின் தசை நடக்கிறது, எந்த இடத்திலிருந்து நடக்கிறது என்பதையெல்லாம் பொறுத்துத்தான் பலன்கள் நடக்கும். எனவே வாசகர்கள் இந்தப் பெயர்ச்சிகளை பொருட்படுத்தத் தேவையில்லை. பரிகாரங்கள் செய்கின்றோம் என்ற பெயரில் பணத்தை விரயஞ்செய்ய வேண்டிய தேவையில்லை.

ஒரு கும்பராசி ஜாதகருக்கு வியாழன் மீனத்தில் இருக்கும் போது (1939 செப்டம்பர்) ஒரு பெண் குழந்தை பிறந்தது. 13.12.1951ல் வியாழன் அடுத்த முறை மீனத்தில் இருக்கும் போது ஒரு பெண் குழந்தை இறந்தது. எனவே நேரெதிரான பலன்கள் நடக்கவும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இதே கும்ப ராசி ஜாதகருக்குச் சனி விருச்சிகத்தில் இருக்கும் போது ஒரு மகள் இறந்து போன நிகழ்வும், ஒரு மகனின் திருமண நிகழ்வும் நடந்தன. எனவே கோசார பலனைச் சரியாகச் சொல்ல ஒருவரும் இன்னும் பிறக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். 1977ல் மார்ச்சில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போன நாஞ்சில் கி.மனோகரன் ஜூன் 1977ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மந்திரியானார். சனி, குரு இரண்டுமே மார்ச் மாதத்திலும், ஜூன் மாதத்திலும் அதே ராசியில்தான் இருந்தன.

எனவே இராசியை வைத்துச் சொல்லும் கோசார பலன்கள் காலைவாரிவிட நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே சாஸ்திரப்படியும் எழுதப்படாமல், அனுபவ அறிவாலும் எழுதப்படாமல், விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதி வெளியிடப்படும் இந்தக் கிரகப் பெயர்ச்சிப் பலன்களை யாரும் நம்ப வேண்டாம். எட்டில் ராகு, இரண்டில் சனி என்று பயந்து பரிகாரங்கள் செய்யத் தேவையில்லை. நல்லனவும், தீயவையும் சேர்ந்துதான் வரும். இரண்டையும் சமமான மனநிலையில் ஏற்றுக்கொள்ளும் ஒரு பண்பட்ட மனத்தைத் தரும்படி ஆண்டவனிடம் கேட்பது மட்டுமே நமது செயலாக இருக்கட்டும்.
 

அடுத்த கட்டுரை 'ஜாதகம் பார்ப்போம்' 07.02.2016ல் வெளியாகும்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 231 guests and no members online