வழக்கம்போலச் சனிப் பெயர்ச்சிப் பலன்களுக்கான புத்தகங்கள் சந்தைக்கு வந்துள்ளன. சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள், காகத்துக்குச் சோறு வையுங்கள், குச்சனூர் சென்று வாருங்கள் என்றெல்லாம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பன்னிரண்டு ராசிகளையும் சுவர் கட்டித் தனித்தனியே வைத்திருப்பது போலவும், ஒரு அறையின் கதவைத் திறந்து கொண்டு இன்னொரு அறைக்குப் போவது போலக் கிரகங்கள் நுழைகின்றன என்பது போலவும், பாமர மக்கள் கற்பனையில் திளைக்கின்றார்கள். விருச்சிக ராசியில் 29 பாகை 59 கலையில் உள்ள சனி, 29 பாகை 60 கலைக்கு போவதால் ஒன்றும் பிரளயம் வந்துவிடாது. ஆனாலும் நம் தமிழ்நாட்டின் பெரும்பான்மைச் சோதிடர்களுக்கு இந்தக் கிரகப் பெயர்ச்சி மேல் அதிகமான காதல்!

சந்திரனிருக்கும் ராசியிலிருந்து மட்டுமின்றி, மீதமுள்ள ஐந்து கிரகங்கள் ஜன்ம ஜாதகத்தில் இருக்கும் ராசிகளிலிருந்தும், எத்தனையாவது ராசிக்குச் சனி வருகின்றது என்பதும் முக்கியம். ஆனால் அதையெல்லாம் யாரும் பொருட்படுத்துவது இல்லை. இவர்கள் இன்னொரு தவறையும் செய்கின்றார்கள். மேச ராசியில் 5 பாகையில் இருக்கும் சந்திரனுக்கு ஒன்பதில் சனி வரவேண்டுமென்றால் சனி தனுசின் 5 பாகையைக் கடந்து 6-வது பாகைக்கு வரவேண்டும். அதே போல் ரிசபத்தின் 28-வது பாகையில் இருக்கும் சந்திரனுக்கு எட்டாமிடம் என்பது தனுசின் 28 பாகையில்தான் ஆரம்பிக்கும். எனவே மிருகசீரிடம் 2ம் பாதத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவருக்குச் சனி ராசிக்கு ஏழாமிடத்தில் இருப்பதாகத்தான் கொள்ள வேண்டும். ஆனாலும் நமது சோதிடர்கள் சனி கிரகத்தைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய் எட்டில் வைத்துவிட்டார்கள். 

போகட்டும் நாம் நமது அனுபவத்தில் கிடைத்த, ஆனால் சோதிட சாஸ்திரத்தின் எந்த மரபையும் மீறாத பலன்களைச் சொல்வோம். 

  • சனி தனுசுக்கு வந்திருப்பதால் (சரியான கணக்குகளின்படி அக்டோபர் 26ம் தேதியே சனி தனுசுக்கு வந்துவிட்டது) தனுசு, மீனம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் ஜன்ம ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கப் பிறந்தவர்கள் மட்டும் புதிய அனுபவங்களைப் பெறுவார்கள். அனுபவங்கள் சந்தோசத்தையும் தரலாம், அல்லது துக்கத்தையும் தரலாம்.
  • மேற்கண்ட ராசிகளில் எந்தக் கிரகமும் இல்லாதவர்கள் சனிப் பெயர்ச்சியைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம்.
  • தனுசு, மீனம், மிதுனம், கன்னி லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் இது பொருந்தும். மற்ற லக்னங்களில் பிறந்தவர்கள் சனிப் பெயர்ச்சி பற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.
  • ஜன்ம ஜாதகத்தில் லக்னாதிபதி அல்லது அட்டமாதிபதி மேச, சிம்ம, தனுசு நவாம்சங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவர்களுக்குப் புதிய அனுபவங்கள் கிட்டும்.
  • ஜன்ம ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் மீன, மிதுன, கன்னி, தனுசு நவாம்சங்களில் இருக்கப் பிறந்தவர்களுக்கும் புதிய அனுபவங்கள் கிட்டும்.
  • ராசியிலும், நவாம்சத்திலும் மீன, மிதுன, கன்னி, தனுசு ராசிகளில் கிரகம் இல்லாதவர்கள் வழக்கம் போலத் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தலாம். இவர்கள் குச்சனூருக்கும் போக வேண்டாம், திருநள்ளாறுக்கும் போக வேண்டாம். 

ஒரு மனிதனுக்குத் தற்போது நடக்கும் கிரக தசை, அஷ்டவர்க்கப்படியான பலன்கள், இவை மட்டுமே நல்லதையோ, கெட்டதையோ கொண்டு வருகின்றனவே தவிர சனிப் பெயர்ச்சி அல்ல.

 

This Week’s Quote:

Fools are my theme, let satire be my song.

-  Lord Byron

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 231 guests and no members online