சோதிடரிடம் எல்லோரும் கேட்கும் கேள்வியும் இதுதான், அதிகமாகக் கேட்கப்படும் கேள்வியும் இதுதான். வியாழ நோக்கம் இப்போது இல்லை, வருகின்ற குருப் பெயர்ச்சிக்குப் பின்னர் நடக்கும் என்றோ, ஏழரைச் சனியில் ஜன்மச் சனி நடக்கின்றது இது முடிந்தவுடன் திருமணம் நடக்கும் என்றோ சோதிடர் கூறுவார். மிகப் பெரிய கேள்விக்கு மிக இலகுவாக விடை கிடைத்த திருப்தியில் கேள்வி கேட்டவர்களும் சென்று விடுவர். இதுதான் தற்போதைய நடைமுறை.


தற்போது எந்தக் கிரகத்தின் தசையில் எந்தக் கிரகத்தின் புக்தி நடைபெறுகின்றது? எந்தக் கிரக புக்தியில் திருமணம் நடைபெறும்? ஏழுக்குடைய கிரகத்தின் புக்தி சமீபத்தில் வரப் போவதில்லையே, இதனால் திருமணம் தாமதமாகுமா? என்றெல்லாம் யாரும் கேட்பதில்லை. சோதிடம் பார்க்கப் போகின்றவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி இவைதாம். சோதிடருக்குத் தெரிந்ததெல்லாம் பரிகாரங்களும், குல தெய்வ வழிபாடும்தான். இதையெல்லாம் தாண்டி யாரும் சிந்திப்பது இல்லை. செயல்படுவதும் இல்லை.

கணிதம் தோன்றிய காலத்திலேயே வானவியலும், அதன் அடிப்படையில் சோதிடமும் தோன்றிவிட்டன. ஆனால் ஏனைய அறிவியல் துறைகளைப் போல இந்தச் சோதிடம் வளராமல் போனதற்கு அடிப்படைக் காரணம் புதிய சிந்தனைகளையும், சோதனைகளையும் மேற்கொள்ளாமல் போனதுதான். அறிவியல் துறைகளில் ஒவ்வொரு கால் நூற்றாண்டுக்கும் சில மேதைகள் தோன்றிப் பழைய கருத்துக்களில் தங்களது சிந்தனைகளால் புதியனவற்றைப் புகுத்தி பழையனவற்றோடு புதியவைகளையும் கலந்து சோதனைகள் மேற்கொண்டு அறிவியலை வளர்க்கின்றார்கள். இந்தியச் சோதிடர்களுக்கு இன்னும் பராசரரையும் வசிஷ்டரையும் விட்டு வெளிவர இயலவில்லை. அவர்களது கருத்துக்களின் அடிப்படையில் புதிய சிந்தனைகளை வளர்த்தெடுத்து சோதிட சாஸ்திரத்தின் இரகசியங்களை வெளிக்கொண்டுவர முடியாமல் பரிகாரக் கோயில்களின் பழமைக் கோட்டைகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றார்கள்.

பிருஹஜ் ஜாதகத்தின் பதினோராவது அத்தியாயமான ராஜயோகாத்யாயம் 19-வது சுலோகத்தில் பத்தில் இருக்கும் கிரகத்தின் தசை அல்லது லக்னத்தில் இருக்கும் தசையில் இராஜ்யப் பிராப்தி உண்டாகும் என்று வராகமிகிரர் கூறுகின்றார். இதை ஒட்டி ஏழில் இருக்கும் அல்லது லக்னத்தில் இருக்கும் கிரக தசைகளில் திருமணம் நடக்கும் என்று நாம் கூறினால் அதில் தவறேதும் இல்லை. லக்னத்திலோ ஏழிலோ எந்தக் கிரகமும் இல்லையென்றால் எந்தக் கிரகத்தின் தசையில் திருமணம் நடக்கும் என்று எப்படிக் கூறுவது? எல்லாப் பலன்களுக்கும் தசாபுக்தியைத் துணைக்கு அழைக்க வேண்டியதில்லை. அஷ்டவர்க்கப் பலன்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.

நாம் ஏற்கனவே எழுதியுள்ள அஷ்டவர்க்கம் என்ற கட்டுரையில் ஒவ்வொரு கிரகமும் லக்னத்துக்கு எந்த எந்த இடங்களில் வந்தால் பலன்களைத் தரும் என்று குறிப்பிட்டுள்ளோம். உதாரணத்துக்கு புதன் என்ற கிரகத்தை எடுத்துக்கொள்வோம். புதன் லக்னத்துக்கு 1, 2, 4, 6, 8, 10, 11 ஆகிய இடங்களில் பலன்களைத் தருவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் மீன லக்னத்தில் பிறந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அவருக்கு ஏழாமிடம் கன்னி. ஏழாமிடத்து அதிபதி புதன். இப்போது ஏழாம் பாவத்தை லக்னமாக வைத்துக்கொண்டால் ஏழாமிடமான கன்னியிலிருந்து 1, 2, 4, 6, 8, 10, 11 ஆகிய இடங்களான கன்னி, துலாம், தனுசு, கும்பம், மேஷம், மிதுனம் மற்றும் கடக ராசிகளில் புதன் வரும் போது திருமணத்தைக் கொண்டு வருவதாகக் கூறலாம்.

இதேபோல் மீனலக்னத்துக்கு அதிபதியான குரு ஏழாம்பாவமான கன்னியிலிருந்து 1, 2, 4, 5, 6, 7, 9, 10, 11 ஆகிய இடங்களான கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம், ரிசபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய 9 இடங்களில் வரும் போது திருமணத்தைக் கொண்டு வரும் என்று கூறலாம். மேற்குறிப்பிட்ட ராசிகளில் இந்த இரண்டு கிரகங்களும் கோசார ரீதியாக வரும் போது திருமணம் நடக்கும்.

இப்பொழுது ஒரு கேள்வியை எழுப்புவோம். ஒருவரது 20 வயது முதல் 32 வயது முடிய உள்ள 12 வருடங்களில் குரு பன்னிரண்டு ராசிகளிலும் சஞ்சரிப்பதாலும், புதன் 12 வருடங்களில் ஒவ்வொரு வருடத்திலும் எல்லா ராசிகளிலும் சஞ்சரிப்பதாலும் மேலே சொன்ன 9 இடங்களிலும் குரு வந்துவிடுவதால் 9 வருஷங்களில் திருமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளதே எந்த வருடம் என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்பதே அந்தக் கேள்வி.

குறிப்பிட்ட வருடத்தைக் கண்டுபிடிப்பது சிரமம்தான். எந்த வருஷம் எந்த மாதத்தில் இரண்டு கிரகங்களும் திருமணத்தைக் கொண்டு வரும் இடங்களில் இருக்கின்றனவோ அந்த வயதிற்கான வர்ஷப்பிரவேச ஜாதகம் தயாரிக்கப்பட வேண்டும். அந்த வர்ஷ ஜாதகத்தில் அந்த வருடம் திருமணம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்குமானால் அந்த வருடத்தைத் திருமண வருடமாக எடுத்துக்கொள்ளலாம். இல்லையெனில் மற்ற வருஷங்களுக்கான வர்ஷப்பிரவேச ஜாதகத்தைத் தயாரித்து இதே போல் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

மந்திரத்தால் மாம்பழம் பறிக்க இயலாது. மிகவும் சிரமப்பட்டுத்தான் ஜாதக பலன்களைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் பத்து ஜாதகங்கள் பார்க்கும் சோதிடர்களால் அந்த ஜாதகத்தில் ஏதும் தவறு இருந்தால்கூடக் கண்டுபிடிக்க இயலாது. பிறகு திருமண காலத்தை எங்கே கண்டுபிடித்துச் சொல்லப் போகின்றார்கள்?

திருமணம் பற்றிய கேள்வி எழும்போது உதயமாகும் பிரஸ்ன லக்னம் மூலம் திருமணம் உத்தராயணத்தில் அல்லது தட்சிணாயத்தில் நடக்கும் என்று அறிந்து கொள்ள முடியும். இப்போது ஒரு வருடத்தில் ஆறு மாதங்களைத் தள்ளி விடலாம். மீதமுள்ள ஆறு மாதங்களில் லக்னாதிபதியும் பாவாதிபதியும் சேர்ந்து திருமணத்தைக் கொண்டு வரும் இடங்களில் இருக்குமானால் அந்த ஆறு மாதங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான வாய்ப்பு இல்லையென்றால் அந்த வருடத்தையே தள்ளிவிடலாம். இப்படிப் பலவகையான ELIMINATION PROCESS மூலம் திருமண வருஷத்தைக் கண்டுபிடிக்கலாம்.

பலதீபிகை’யின் பதினாறாவது அத்தியாயத்தில் பாவாதிபதி இருக்கும் ராசி அம்சங்களுக்குத் திரிகோணத்திலாவது, பாவத்திலாவது லக்கினாதிபதி வரும் காலத்திலும் லக்கினாதிபதி இருக்கும் ராசி அம்சங்களுக்குத் திரிகோணத்திலாவது, லக்கினத்திலாவது பாவாதிபதி வரும் காலத்திலும் பாவ சித்தியுண்டு என்று கூறப்பட்டிருக்கிறது.

சோதிட சாத்திரத்தின் இரகசியங்களை அறியத் துடிப்பவர்கள் நண்பர்கள் உறவினர்களின் ஜாதகங்களை வாங்கி எப்போது திருமணம் முடிந்திருக்கின்றது திருமண நாளில் ஏழாம்பாவாதிபதி மற்றும் பாவாதிபதி எந்த ராசிகளில் சஞ்சரித்துள்ளார்கள் என்பதையெல்லாம் பார்த்துக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமணம் முடிந்த வயதுக்கான வர்ஷப்பிரவேச ஜாதகத்தைக் கணித்து அதன் மூலமும் பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

திரேக்காண சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் த்வாதசாம்ச சக்கரங்களின் உபயோகங்கள் இன்னும் சோதித்துப் பார்க்கப்படாமலேயே உள்ளன. இவற்றை எப்போது பயன்படுத்துவது என்பதைப் பற்றிய விஷயங்கள் பல்வேறு நூல்களில் பலவிதமாகக் கூறப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

நைசர்க்கிக தசை முறைப்படி 13 வயது ஆரம்பித்த நாளிலிருந்து 32 வயது முடியும் வரைக்கும் சுக்கிர தசை நடப்பதாகக் கூறப்பட்டிருப்பதால் சுக்கிரனுக்கும் ஏழாம் பாவத்துக்கும் உள்ள சம்பந்தமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

உதாரணத்துக்கு ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு திருமணம் எப்போது நடக்கும் என்று எவ்வாறு கண்டறிவது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.


 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 82 guests and no members online