சமீபத்தில் ஒரு வாசகர் நம்மிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். நாம் எழுதும் விஷயங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத கேள்வி அது. எனவே நாம் அவருக்கு வித்தியாசமான பதிலை அனுப்பினோம். இருந்தாலும் அவர் விடுவதாக இல்லை. எனவே எங்களிடையே நடந்த கடிதப் போக்குவரத்தைக் கீழே தருகின்றோம்.

வாசகர்: ஐயா நானும், ஒரு பெண்ணும் இரண்டு வருடமாகக் காதலித்து வருகிறோம். அவளுக்கு ஜாதகப்படி இரு தாரம் என்று இருக்கிறது. அப்படி எனில் எங்கள் காதல் ஒரு தாரக் கணக்கென்று வந்து, அவள் என்னைப் பிரியவோ அல்லது நாங்கள் திருமணம் செய்தால் நான் இறக்கவோ நேருமா? எனது சந்தேகம் உடலுறவு கொள்ளாத, ஆனால் தீவிரமான காதல் தாரக் கணக்கில் வருமா? எனது சந்தேகத்தைத் தெளிவு செய்யுங்கள்.

நாம்: ஜாதகப்படி இருதாரக் கணக்கு உள்ளதாகச் சொல்கின்றீர்கள். இப்படிக் கணக்கிடும் முறையைச் சொல்லித் தந்தால் நானும் உங்களிடம் கற்றுக்கொள்கின்றேன்.

வாசகர்: மன்னிக்கவும். நான் பார்த்த இரு ஜோதிடர்களிடம் ஜாதகம் தந்து கேட்டதில் அந்தப் பெண்ணிற்கு மாங்கல்ய பாக்கியம் குறைவு, அதனால் இரண்டு தாரங்கள் இருப்பதாகச் சொல்கின்றனர். மேலும் எனது சந்தேகம் காதலிப்பது ஒரு கணவன் மனைவி அந்தஸ்தை தந்து அது ஒரு தாரம் என்ற கணக்கில் கொள்ளப்படுமா? அது சரியான கருத்தா?

நாம்: காதலிக்கவும் செய்வேன் , ஜாதகமும் பார்ப்பேன் என்றால் அதில் உள்ள நியாயம் எனக்குப் புரியவில்லை. அந்த இரு சோதிடர்களிடமும் மீண்டும் உங்கள் காதலியோடு சென்று என்னிடம் கேட்டதுபோல் விளக்கம் கேளுங்கள். நான் காதலர்களின் ஜாதகம் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில்லை.

வாசகர்: ஜாதகம் பார்க்கச் சென்றது உண்மைதான். அது தவறுதான். இது காதலர்கள் பற்றிய ஜாதகம் பற்றிய கேள்வி இல்லை. இது என் பொதுவான சந்தேகம். தெளிவுபடுத்துங்கள். நன்றி.

இத்தோடு நாம் நிறுத்திக்கொண்டோம். பதில் ஏதும் தரவில்லை. பொதுவாகச் சோதிடம் பற்றிய வலைத்தளங்களில் எந்த மாதிரியான ஜாதகஅமைப்புள்ள பெண்கள் கணவனை ஏமாற்றுவார்கள், கணவனைக் கொல்லத் துணிவார்கள் என்றெல்லாம் குறிப்புக்கள் கொடுக்கின்றார்கள். இந்தப் பெண்களைத் திருமணம் செய்தால் வாழ்க்கை நரகம்தான் என்றெல்லாம் பயமுறுத்துகின்றார்கள். சில கிரக அமைப்புகளைச் சொல்லி இவ்வாறு இருந்தால் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றெல்லாம் எழுதுகின்றார்கள். அவற்றைறெல்லாம் படித்துத்தான் இந்த மாதிரியான வாசகர்கள் குழப்பத்திலும், சந்தேகத்திலும் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.

எனவே நட்பு அல்லது காதலுணர்வோடு பழகும் பெண்கள் தங்களின் ஆண் நண்பர்கள் அல்லது காதலர்களுக்குத் தங்களது பிறந்த நாள் அல்லது நட்சத்திரம் இவற்றைத் தெரிவிக்க வேண்டாம் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். அதைக் கேட்டுப் பெற்றுச் சோதிடர்களிடம் போய் ஏடாகூடமான ஆலோசனைகளைப் பெறுவதற்கான வாய்ப்பும், இப்படிச் சந்தேகத்தில் குழம்பிக் கிடப்பதற்கான வாய்ப்பும் இருப்பதால் இவற்றையெல்லாம் ஆரம்பத்திலேயே தவிர்த்து விடுங்கள்.

பெண்களின் மனத்தை ஆழமான கடலோடு ஒப்பிட்டுச் சொல்வதுண்டு. இதன் அர்த்தம் அவர்களுக்கென்று சில ரஹஸ்யங்கள் இருக்க வேண்டும் என்பதுதான். வெளிப்படையான பெண்கள் வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை அதிகம். எனவே எக்காரணம் கொண்டும் தங்களது ஜாதகத்தை நண்பரிடம் கொடுக்க வெண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். அப்படியே ஜாதகம் பார்ப்பதாக இருந்தால் இருவரும் சேர்ந்து சோதிடரை அணுகலாம்.

நிம்மதியான, சுகமான மணவாழ்க்கை அமைய வேண்டும் என்பதைத் தவிர வேறு சிந்தனைகளில்லாத சராசரிப் பெண்களுக்கான கட்டுரைதான் இது. என்னால் ஒரு ஆணின் எந்தச் சாகசத்தையும் எதிர்கொள்ள முடியும், என் வாழ்க்கையை நானே அமைத்துக்கொள்வேன் என்ற துணிச்சலுடன் வாழும் பெண்கள் இக்கட்டுரையைத் தவிர்த்துவிடலாம்.

 

This Week’s Quote:

To live alone is the fate of all great souls.

-  Arthur Schopenhauer

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 44 guests and no members online