வினா:    இரண்டாமிடம், ஏழாமிடம் இவை மாரக ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றனவே அதனால் இரண்டாமிடம் ஏழாமிடத்திலுள்ள கிரகதசைகள் மரணத்தைக் கொண்டு வருமா?
விடை:    இரண்டாமிடம், ஏழாமிடம் இவை மாரக ஸ்தானங்கள். எனவே இரண்டாமிடம், ஏழாமிடத்து அதிபர்கள் மாரகஞ் செய்வர் என்றொரு கொள்கையுண்டு. இல்லை இரண்டாம் இடத்து, ஏழாமிடத்து அதிபதிகளை விட இரண்டாமிடம், ஏழாமிடம் இவைகளில் இருக்கும் கிரகங்கள் தாம் மாரகஞ் செய்யும் என்று சொல்வாரும் உண்டு. இல்லை இரண்டாம் இடத்து ஏழாமிடத்து அதிபதிகளோடு சேரும் கிரகங்களே மாரகஞ் செய்யும் வலிமை படைத்தவை என்று சொல்வாரும் உண்டு. இரண்டு ஏழாமிடத்தில் ஏதேனும் கிரகம் இருந்து அந்தக் கிரகத்தின் நட்சத்திரத்தில் வேறு  இராசிகளில் கிரகங்கள் இருப்பின் அந்தக் கிரகங்களின் தசைகளில் மாரகம் வரும் என்று சொல்வாரும் உண்டு. ஆனால் வராகஹோரையில் இந்தச் சித்தாந்தங்கள் கிடையாது.

வினா:    கிரகங்களின் தசா பலன்கள் அக்கிரகங்கள் இருக்கும் நட்சத்திரங்களால் பாதிக்கப்படுமா?
விடை:    கிரக தசைகள் கிரகங்கள் இருக்கும் ராசி, நவாம்ச ராசி, த்வாதசாம்ச ராசி, அந்த ராசிகளின் அதிபர்கள் - இவைகளால் மட்டுமே பாதிக்கப்படும். கிரகங்கள் இருக்கும் நட்சத்திரங்களால் கிரக தசைகள் பாதிக்கப்படுவதில்லை. வியாழன் மகரத்தில் 5 பாகையில் பரம நீசமடைகின்றது. அது உத்ராட நட்சத்திரத்தில் மித்ரு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் தான் நீசமடைகின்றது. அப்படியானால் நல்ல பலனைத்தானே சொல்ல வேண்டும்? சந்திரன் விருச்சிக ராசியில் 3 பாகையில் வியாழனின் நட்சத்திரத்தில்தானே பரமநீசம் அடைகின்றது? அப்படியானால் நீச சந்திரனுக்கும் நல்ல பலனைத் தானே சொல்ல வேண்டும்? தங்கள் வசதிக்கேற்ப திரித்தும் மறைத்தும் பொருள் சொல்லக் கூடிய போலிச் சோதிடர்கள்தாம் இம்மாதிரி விஷயங்களைப் பரப்பியிருக்கின்றார்கள்.

வினா:    இரண்டு கிரகங்கள் ஒருவர் வீட்டில் ஒருவர் மாறியிருப்பதுதானே பரிவர்த்தனை என்று அழைக்கப்படுகிறது? இம்மாதிரி கிரகங்கள் ஒருவர் நட்சத்திரத்தில் ஒருவர் இருப்பதும் பரிவர்த்தனைதானே?
விடை:    இல்லை. இராசிப் பரிவர்த்தனை மட்டுமே உண்டு. வேறு மாதிரியான பரிவர்த்தனை கிடையாது. ஒருவர் நட்சத்திரத்தில் ஒருவர் இருப்பது நவாம்ச சக்கரத்தில் ஒருவர் வீட்டில் ஒருவர் இருப்பது இவையெல்லாம் பரிவர்த்தனை கிடையாது. நட்சத்திரப் பரிவர்த்தனையில் எதிர்பார்த்த பலன்கள் சொல்ல முடியாமல் போன போது புதிதாக உபநட்சத்திரப் பரிவர்த்தனை இருப்பதாகவும் சொல்ல ஆரம்பித்தது மேலே குறிப்பிட்ட சோதிடர்கள் தாம்.

வினா:    சுக்கிரன், செவ்வாய் ஆகிய இரு கிரகங்கள் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகர் அல்லது ஜாதகி ஒழுக்கம் கெட்டவர்களாக இருப்பார்கள் என்பது உண்மையா?
விடை:    சுக்கிரனைக் காதல் உணர்ச்சிக்கான கிரகம் என்றும், செவ்வாயை உணர்ச்சிகளைத் தூண்டும் கிரகம் என்றும் தவறாகப் புரிந்து கொண்ட போலிச் சோதிடர்களின் கருத்தாக்கம் இது. செவ்வாய், சனி சேர்க்கையை மிக ஆபத்தானதாகவும், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கையை ஒழுக்கமின்மையைச் சொல்லும் அளவு கோலாகவும் எடுத்துக்கொண்டது அரைகுறை ஆங்கிலம் படித்த சோதிடர்களின் குற்றம். மேலைநாட்டுச் சோதிடக் கணக்குகளில் துல்லியம் இருக்கலாம். ஆனால் அங்கேயும் போலிச் சோதிடர்கள் உண்டு. அவர்கள் பரப்பிய கருத்துக்களை இங்கேயும் சிலர் தலையில் வைத்துச் சுமந்து திரிகின்றார்கள். அதில் இதுவும் ஒன்று. செவ்வாய், சுக்கிரனுடன் சேரும் போது பசுக்களை வைத்துப் பாதுகாப்பவனும், மல்யுத்தத்தில் சிறந்து விளங்குபவனுமான மனிதனை உண்டாக்குகின்றான் என்று சொல்லும் வராகமிகிரர் அடுத்தவர் மனைவி மீது ஆசை வைக்கும் மனிதனையும், சூதாடுபவனையும் இச்சுக்கிர செவ்வாய் சேர்க்கை உருவாக்குகிறது என்றும் சொல்கின்றார். ஒரு  கிரக சேர்க்கை நல்ல பலனையும் கொடுக்கும், தீய பலனையும் கொடுக்கும் என்பதுதான்  இதன் அர்த்தம். குறிப்பிட்ட ஒரு ஜாதகத்தில் ஒரு கிரக சேர்க்கை நல்ல பலனைத் தருமா அல்லது கெட்ட பலனைத் தருமா என்பது பல்வேறு கணக்குகளையும், சோதிடரின் அனுபவ அறிவையும் பயன்படுத்திக் கண்டுபிடிக்க வேண்டிய விஷயம். கணித வாய்ப்பாடுகளை ஒப்பிப்பது போல படித்த எல்லாவற்றையும் மனம் போலச் சொல்வது சோதிடர்களுக்கு அழகல்ல. சந்திரன் செவ்வாயுடன் சேர்ந்திருந்தால் போலிப் பொருட்கள் விற்றுப் பணம் சேர்க்கும் பொய்யான வியாபாரி, பொருளுக்காக மனைவியை அடுத்தவருக்குத் தாரை வார்க்கும் நீசன் என்று சோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்குச் சந்திர மங்களயோகம் இருக்கிறது என்று ஜாதகரைப் பனி மழையில் நனைய வைத்துப் பணம் பறிக்கும் போலிச் சோதிடர்கள் மேற்கண்ட குறைகளையும் அவர்களிடம் சொல்ல வேண்டாமா? கிரகங்கள் இருக்கும் இராசிகளின் தன்மை, லக்னத்திலிருந்து அந்தக் கிரகங்கள் எத்தனையாவது பாவத்தில் இருக்கின்றன என்ற கணக்கு, அந்தக் கிரகங்களுக்கு இடையே உள்ள தூரம், இவற்றையெல்லாம் பார்த்துத்தான் சேர்க்கைப் பலனைச் சொல்ல வேண்டுமே தவிர மனம் போன போக்கில் சொல்வது சோதிடர்களுக்கு அழகல்ல.   

வினா:    தற்போது செவ்வாய், சனி விருச்சிகத்தில் சேர்ந்திருப்பது மிகக் கெட்ட பலன்களைத் தரும் என்று பயமுறுத்துகின்றார்களே . இது சரியா?
விடை:    இரண்டு பாவக் கிரகங்கள் சேர்ந்திருந்தால் மிகப்பெரிய தீங்கு வரும் என்று சொல்வதற்கில்லை. சூரியனும் பாவிதான். சூரியன் ஒரு வருடத்துக்குள் செவ்வாய், சனி, ராகு, கேது என்று எல்லாப் பாவக் கிரகங்களுடன் சேரத்தான் செய்கின்றது. இதனால் என்ன தீங்கு நேர்ந்து விடப் போகிறது? ஒன்றுமில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் இந்த அச்சங்கள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்கப் போதுமானது என்பது என் கருத்து.

sample horoscope

இந்த ஜாதகம் ஒரு பெண்மணியின் ஜாதகம். சூர்யதசையில் இருப்பு வருஷம் 3 மாதம் 6 நாட்கள் 17.   30.07.1959 முடிய சூர்யதசை. 30.07.1969 முடிய சந்திர தசை. 30.07.76 முடிய செவ்வாய் தசை. 30.07.94 முடிய ராகு தசை. 30.07.2010 முடிய குரு தசை. தற்போது சனி தசை நடக்கிறது. எல்லாப் பாபக் கிரகங்களும் ஏழிலும், எட்டிலும் தான். ராகு தசையின் ஆரம்பத்தில் திருமணம். 23 வயதில் திருமணம் என்பது இந்த ஜாதகத்தைப் பொறுத்தவரை சீக்கிரமாக நடைபெற்ற ஒன்றுதான். ஏழில் உள்ள செவ்வாய், ஏழில் உள்ள ராகு இந்தத் தசைகள் நடைபெற்று முடிந்துள்ளன. இல்லற வாழ்க்கையில் எந்தப் பிரச்னையும் இல்லை. 3 குழந்தைகள் மூவருக்கும் திருமணம் முடிந்து சுகமாக இருக்கின்றார்கள். லக்னத்தில் கேது, ஏழில் ராகு, செவ்வாய், சனி சேர்க்கை மாரக ஸ்தானத்தில் உள்ள தசைகள் என்று போலிச் சோதிடர்கள் பயமுறுத்தும் எல்லா விஷயங்களையும் பொய்யாக்கும் ஜாதகம் இது. ஏழில் செவ்வாய் சொந்த வீட்டில் இருக்கிறது என்று வேண்டுமானால் சமாதானம் கூறலாம். ராகு மற்றும் சனிக்கு என்ன விளக்கம் சொல்வார்கள் இவர்கள்? எனவே ஆராய்ச்சிக்கான அறிவும், ஆழ்ந்த படிப்பினால் வரும் அனுபவமும் இல்லாத போலிச் சோதிடர்கள் பரப்பி வரும் சில கருத்துக்களை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏதாவது சொல்லிப் பயமுறுத்திப் பரிகாரங்கள் செய்யச் சொல்லிப் பணம் சேர்ப்பதைத் தொழிலாக வைத்திருப்பவர்களிடம் சென்று பாடமும் கேட்க வேண்டாம். சோதிடம் ஒன்றும் கம்ப சூத்திரமல்ல. வடமொழியில் உள்ள அனைத்துச் சோதிட நூல்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றை வாங்கிப் படிப்பதன் மூலமும், தினம் ஒரு புது ஜாதகத்தைப் பார்ப்பதன் மூலமும் நாமும் சோதிட வல்லுனராக ஆக முடியும்.

 

sample horoscope

 

ஆராய்ச்சி மனப்பான்மையுள்ளவர்களுக்காக ஒரு ஜாதகம்.

 

ரோகினி நட்சத்திரம். சந்திர தசை இருப்பு வருஷம் 2 மாதம் 6 நாள் 0. இவருக்கு 23 வயதில் திருமணம். ஆறு மாதங்களுக்குள் கணவர் மரணம். ஏன்?

 

 

 

 

  
அடுத்த கட்டுரை ‘நாபஸ யோகங்கள்' 15.05.2016ல் வெளியாகும்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 56 guests and no members online