ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட வீட்டின் அதிபதி, சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ, நீச்ச வீட்டிலோ, நட்பு வீட்டிலோ அல்லது சத்ரு வீட்டிலோ இருந்துதான் ஆகவேண்டும். ஆனால் அந்த வீடு, லக்னத்துக்கு எத்தனையாவது வீடாக ஆகின்றது என்பதைப் பொறுத்துச் சில விச யங்கள் அமைகின்றன. இந்த வாரம் ஏழாமிடத்தைப் பற்றி நாம் சேகரித்த குறிப்புக்களைத் தருகின்றோம்.

ஏழாமிடத்து அதிபதி லக்னத்தில் இருந்தால் விரைவிலேயே திருமணம் நடக்கின்றது. சிலநேரங்களில் மணமகன் அல்லது மணமகள் அறிமுகமான குடும்பங்களில் இருந்து வருவதும் உண்டு. உபய ராசிகள் லக்னமாக இருந்து, ஏழுக்குடையவன் லக்னத்திலிருக்கும்போது, கணவன், மனைவி இருவருமே தீர்க்காயுள் வாழும் பாக்கியம் பெறுகின்றார்கள். ஏழுக்குடையவன் இரண்டில் இருக்கும்போது செல்வம் மிகுந்த மணமகளோ அல்லது வேலை பார்க்கும் மணமகளோ கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டு. பாபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இருக்கும்போது பிரிவு அல்லது மரணம் நேர்கின்றது.

ஏழுக்குடையவன் மூன்றில் இருக்கும்போது, பெண்களுக்குச் சீக்கிரமே திருமணம் நடக்கின்றது. ஆண்களுக்கு ஏழுக்குடையவன் மூன்றில் இருக்கும்போது, தாமதமாகத்தான் மணவாழ்க்கை அமைகின்றது. ஆனால் சுக்கிரன் கேந்திரத்தில் இருக்குமானால் ஆண்களின் திருமணம் சீக்கிரம் நடக்கின்றது. ஏழுக்குடையவன் மூன்றில் இருக்கும்போது பிறந்த பெண்களில் சிலர், வேண்டாத கிசுகிசுக்களில் சிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

ஏழுக்குடையவன் நான்கில் இருக்கும்போது, சொந்தத்தில் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம். இந்த ஜாதகர்கள் முந்தானை முடிச்சில் சிக்குபவர்களாக இருக்கின்றார்கள். செவ்வாய் ஏழுக்குடையவனாக நான்காமிடத்தில் இருக்கும்போது, தாரதோசம் அல்லது புத்திரதோசம் சம்பவிக்கின்றது.

ஏழுக்குடையவன் ஐந்தில் இருக்கும்போது, பெரும்பாலான ஆண்களுக்கு இரண்டு திருமணம் நடக்கின்றது. ஸ்திர லக்னங்களில் பிறந்தவர்களுக்கு ஏழாமிடத்ததிபதி ஐந்தில் இருந்தால் காதல்மணம் நடக்கின்றது. ஏழுக்குடையவன் ஆறில் இருக்கும்போது ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் சிக்கல் வருகின்றது. மனைவி நோயால் அவதிப்படுவதும், அல்லது ஜாதகரே மலட்டுத்தன்மையால் புழுங்கி வாடுவதும் நடக்கின்றன. ஆனால் ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரனைக் கவனிக்காமல், இந்தப் பலன்களைச் சொன்னால் அது தவறாக முடியும். பெண்களின் ஜாதகத்தில் ஏழுக்குடையவன் ஆறில் இருந்தால், மத்திம வயதில் கணவனை இழக்கின்றார்கள். 

ஏழுக்குடையவன் ஏழில் இருக்கும்போது, மணவாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இம்மாதிரி அமைவதில்லை. ஏழுக்குடையவன் ஏழில் இருக்கும்போது நிறைய திருமணங்கள் முறிந்து போகின்றன. ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும்போது இரண்டு தார யோகம் சம்பவிக்கின்றது. ஏழுக்குடையவன் ஒன்பதில் இருக்கும்போது திருமணத்துக்குப் பின் பொருளாதார நிலை உயர்கின்றது. ஏழுக்குடையவன் பத்தில் இருக்கும்போது ஸ்திர லக்னங்கள் உதயமானால் மணவாழ்க்கையில் பிரச்னை வருகின்றது. ஏழுக்குடையவன் பதினொன்றில் இருக்கும்போது ஆண்களின் ஒழுக்கம் சந்தேகத்துக்குரியதாகின்றது. சிலர் வயதில் மூத்த பெண்களைத் திருமணம் செய்கின்றனர். ஏழுக்குடையவன் பன்னிரண்டில் இருக்கும்போது அல்லது பன்னிரண்டுக்குடையவன் ஏழில் இருக்கும்போது மரபை மீறிய திருமணங்கள் நடக்கின்றன.

இவை எமது அனுபவங்களால் கிடைத்த குறிப்புக்கள். சுக்கிரனைத் தவிர்த்துவிட்டு ஆண்களின் ஜாதகத்தையும், வியாழனைத் தவிர்த்துவிட்டுப் பெண்களின் ஜாதகத்தையும், ஆராயப்புகுவது வீணாகத்தான் போகும். எல்லா நேரங்களிலும் லக்னாதிபதியின் இருப்பிடத்தையும் கவனிக்க வேண்டியதிருக்கின்றது. லக்னாதிபதி, பாவாதிபதி, பாவகாரகன் இவர்கள் மூவரையும் ஒன்று சேர்த்தே நமது ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டும். அப்படிச் செய்தோமானால் நிறைய விஷயங்கள் நமக்குத் தெளிவாகும்.

 

This Week’s Quote:

A real book is not one that we read, but one that reads us.

W. H. Auden

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 64 guests and no members online